Friday, May 21, 2021

கணவரின் ஓய்வூதிய பலன்: மனைவி மனு தள்ளுபடி

கணவரின் ஓய்வூதிய பலன்: மனைவி மனு தள்ளுபடி

Added : மே 20, 2021 22:18

சென்னை:கணவரின் ஓய்வூதிய பலன்களை, நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க கோரி, பிரிந்து வாழும் மனைவி தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரூரில் உள்ள புள்ளியியல் உதவி இயக்குனர் அலுவலகத்தில், சுப்ரமணியன் என்பவர் பணியாற்றுகிறார்.

சொத்துகள் விற்க முயற்சி

அடுத்த மாதத்தில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அவரது மனைவி ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு:கடந்த, 2005ல் எங்களுக்கு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டை விட்டு துரத்தப்பட்டேன். என் சகோதரர் வீட்டில், குழந்தைகளுடன் தங்கி இருக்கிறேன். குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளேன்.

சட்டப்படியான என் உரிமையை முறியடிக்கும் நோக்கில், அவரது சொத்துக்களை விற்பதற்கு முயற்சி செய்கிறார்.என் கணவருக்குரிய ஓய்வூதிய பலன்களை அளிக்கக் கூடாது என, புள்ளியியல் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். என் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:ஊழியர் வாழும் வரை, அவரிடம் தான் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும். விவாகரத்து கோரியும், மனுதாரர் வழக்கு தொடுத்துள்ளார். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழும் புகார் அளித்துள்ளார். உண்மையிலேயே பாதிக்கப்படும் பெண்களை பாதுகாப்பதற்கான இந்த சட்டம், துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. குடும்பத்தை விட்டு துண்டித்து செல்ல வேண்டும் என்பது, இந்த சட்டத்தின் நோக்கம் அல்ல.

உத்தரவு

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும், பெண் இருக்கிறார் எனக் கூறுவது உண்டு. அது, ஒரு பெண் மட்டும் அல்ல; தாயும், மனைவியும், ஆண்களுக்கு இரு கண்கள். குடும்பத்தில் மனைவி வேர் போன்றவர். வேரில் சேதம் ஏற்பட்டால், குடும்பமே பாதிக்கப்படும். சரிபாதியான மனைவிக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.சொத்துக்களை விற்பதற்கு கணவர் முயற்சிப்பதாலும், ஓய்வூதிய பலன்களையும் அளித்து விட்டால், தனக்கும், குழந்தைகளுக்கும் ஒன்றும் வழி இருக்காது என, மனுதாரர் கருதுகிறார்.

யூகத்தின் அடிப்படையில், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.பணியில் இருப்பதால், பணப் பலன்களை நிறுத்தி வைப்பது, விடுவிப்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரி தான் முடிவெடுக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024