Monday, October 11, 2021

சீரடிக்கு 19 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை துவக்கம்


சீரடிக்கு 19 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை துவக்கம்

Added : அக் 10, 2021 23:40

சென்னை-கொரோனா மற்றும் ஊரடங்கால், 19 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை - சீரடி விமான சேவை நேற்று மீண்டும் துவங்கியது.

மஹாராஷ்டிர மாநிலம் சீரடி சாய்பாபா கோவில் மிகவும் பிரபலமானது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விமானம் வாயிலாக பக்தர்கள் அங்கு செல்கின்றனர்.சென்னையில் இருந்து சீரடிக்கு இரண்டு தனியார் விமான நிறுவனங்கள், தினமும் மூன்று விமானங்களை இயக்கி வந்தன. கொரோனா ஊரடங்கால் 2020 மார்ச்சில் இந்த சேவைகள் நிறுத்தப்பட்டன.கொரோனா முதல் அலை ஓய்ந்த நிலையில், சீரடிக்கு விமான சேவை துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மஹாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா குறையாததால் விமான சேவை துவங்கவில்லை.தற்போது, மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், விமானங்களை இயக்க 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் முன்வந்தது. அதற்கு, சிவில் விமான போக்குவரத்து துறையும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு, 19 மாதங்களுக்கு பின் 165 பயணியருடன் சீரடிக்கு விமானம் புறப்பட்டது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்று, 48 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுகளை சரிபார்த்த பின், பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024