முன்னணி இன்ஜி., கல்லுாரிகளில் இடம் இல்லை அண்ணா பல்கலையில் தமிழ் வழியும் நிரம்பியது
Added : அக் 10, 2021 23:39
சென்னை- --இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், அண்ணா பல்கலை உள்ளிட்ட முன்னணி கல்லுாரிகளில், 99 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன.
இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், 31 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, ௪௪௦ இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., படிப்பில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதில், அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில், முதற்கட்டமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, பொது பாடப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு, செப்., 27ல்கவுன்சிலிங் துவங்கியது. இதுவரை இரண்டு சுற்று கவுன்சிலிங் முடிந்துள்ளது. முதல் சுற்றில், 11 ஆயிரத்து 224 பேர் இடங்களை தேர்வு செய்தனர். நேற்று முன்தினம் முடிந்த இரண்டாம் சுற்றில், 20 ஆயிரத்து 438 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதுவரை, 31 ஆயிரத்து 662 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கின் முடிவில், அண்ணா பல்கலையின் மூன்று கல்லுாரிகள் உட்பட பெரும்பாலான முன்னணி கல்லுாரிகளில், 99 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
வழக்கமாக அண்ணா பல்கலையின் தமிழ் வழி பிரிவில், சில இடங்கள் காலியாக இருக்கும். இந்த முறை தமிழ் வழி இடங்களும் நிரம்பியுள்ளன.3ம் சுற்றுக்கு இன்று உத்தேச ஒதுக்கீடு மூன்றாம் சுற்றில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, இன்று உத்தேச ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நாளை மாலை 5:00 மணிக்குள் இந்த ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். நாளை மறுதினம் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். நான்காம் சுற்று மாணவர்களுக்கு, நாளையுடன் கவுன்சிலிங் வைப்பு தொகை செலுத்தும் அவகாசம் முடிகிறது. நாளை மறுதினம் முதல் கல்லுாரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கான விருப்ப பதிவு கவுன்சிலிங் துவங்க உள்ளது.
No comments:
Post a Comment