Monday, October 11, 2021

'மாஜி' துணைவேந்தர் சுரப்பா மீதான புகார் விசாரணை அறிக்கை வெளியிட கோரிக்கை


'மாஜி' துணைவேந்தர் சுரப்பா மீதான புகார் விசாரணை அறிக்கை வெளியிட கோரிக்கை

Added : அக் 10, 2021 23:33

சென்னை- --'அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை அறிக்கையை, தமிழக அரசு வெளியிட வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசின் முக்கிய தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக அண்ணா பல்கலை செயல்பட்டு வருகிறது. இதில், துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் நியமனங்கள், பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் புகார்கள் எழுவது வழக்கம்.தற்போதைய துணைவேந்தர் வேல்ராஜ், புதிதாக பேராசிரியர்கள் நியமனங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு முன், பல்கலை துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் சுரப்பா பதவி வகித்தார். அவரது நிர்வாக சீரமைப்பு பணிகள் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாயின. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், சுரப்பாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன், சுரப்பாவின் நிர்வாகத்தில், 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி, தமிழக உயர் கல்வித்துறை சார்பில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான இந்த கமிட்டி, 2020 நவம்பர் முதல் எட்டு மாதங்களாக விசாரணை நடத்தி, இந்தாண்டு ஆகஸ்டில் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது, தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.அப்போது, பல்வேறு பிரச்னைகளில் சுரப்பா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

தற்போது ஸ்டாலினே முதல்வராக உள்ள நிலையில், சுரப்பா மீதான விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கூறியதாவது: உயர் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 'நீட்' தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு அமைத்த நீதிபதிகள் முருகேசன் மற்றும் ஏ.கே.ராஜன் கமிட்டிகளின் அறிக்கைகள், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன. அதேபோல, சுரப்பா மீதான விசாரணை அறிக்கையையும், தமிழக அரசு தாமதமின்றி வெளியிட வேண்டும். விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024