அதிகாரத்தின் கோர முகத்தையும் ஆக்கிரமிப்பின் பேரழிவையும் மட்டுமல்ல, மனித மனங்களில் மலர்ந்து கிடக்கும் பேரன்பையும் பெருங்கருணையையும் சேர்த்தே உலகறியச் செய்திருக்கிறது இந்தப் பெருமழை. சில நாட்களுக்கு முன்னால் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையில், திரும்பிய திசையெங்கும் அபயக் குரல்களும் மரண ஓலங்களும் ஏற்படுத்திய வேதனை சொல்லில் வடிக்க இயலாது. ஆனால், அந்த வேதனைக் குரல்கள் ஒலித்த திசையெங்கும் நீண்ட அன்பின் கரங்களை எத்தனை வணங்கினாலும் தகும்.
எங்கோ ஒரு மூலையில் விசும்புகிற குழந்தையின் பசி போக்கக் கழுத்தளவு நீரில் மிதந்தபடி பால் பாக்கெட் ஏந்திச் சென்ற கைகள் யாருடையவை? கைகள் முழுக்க உணவுப் பொட்டலங்களைச் சுமந்தபடி சுழற்றியடிக்கும் மழையிலும் சுற்றியிழுக்கும் சேற்றிலும் நடந்த கால்கள் எவருடையவை? அடித்துச் செல்லும் வெள்ளத்தை எதிர்த்துப் படகு செலுத்தி, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தவர்களை எல்லாம் இழுத்துவந்து கரைசேர்த்தவர்களின் இனம் என்ன? தன் வீடு மொத்தமும் மூழ்கிய பிறகும் தேவைப்படுகிறவர்களுக்கு எல்லாம் ஓடி ஓடி உதவியவரின் பெயர் என்ன? சென்னையின் கதறலைக் கேட்டு நொடியும் தாமதிக்காமல் வண்டி வண்டியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பிவிட்டு, அனைவரும் நலம் பெற பிரார்த்தனை செய்தவர்களின் மதம் என்ன? இப்படி முகம் தெரியாத, பெயரைச் சொல்லிக்கொள்ள விரும்பாத எத்தனையோ பேரின் கருணையினால்தான் சென்னை ஓரளவு கரைசேர்ந்திருக்கிறது.
சென்னையின் துயர் துடைக்கும் சேவையில் பெருவாரியான பெண்கள் தங்களை இணைத்துக்கொண்டனர். பள்ளிச் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், முதியவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் களத்தில் இறங்கிப் பணியாற்றியது, பெண்மையின் திண்மைக்குச் சான்று.
ஆசிரியரின் அறப்பணி
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பாதிப்பைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மனம் பதறியது ரமா பிரபாவுக்கு. வேலூர் மாவட்டம் திருவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரியும் இவர், தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையிலாவது உதவ வேண்டுமே என தவித்தார். தான் வசிக்கும் சிவானந்தா நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையிலிருந்து அரும்பாடுபட்டு வீடு திரும்பிய கதையைக் கேட்டதுமே ரமா பிரபாவின் தவிப்பு இருமடங்கானது. அந்த இளைஞர்களோடு தன் நகரில் இருக்கும் வீடுகளின் கதவைத் தட்டினார். மறு வார்த்தை பேசாமல் அனைத்து வீடுகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் குவிந்தன. தன் கணவரின் உதவியோடு நகர் மக்களை ஒன்றிணைத்து இரவோடு இரவாகச் சமையலைத் தொடங்கினார். ஆயிரம் பேருக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களுடன் மற்ற நிவாரணப் பொருட்களுடனும் சென்னைக்குக் கிளம்பினார்.
“சென்னையில நடந்த துயரத்தைப் பார்த்ததுமே வேதனையா இருந்துச்சு. ஏதோ ஒரு மூலையில இருக்கற என்னால என்ன உதவி செய்ய முடியும்னு மறுகிப் போனேன். ஆனா நிச்சயமா ஏதாவது செய்யணும்னு எங்க நகர்ல இருக்கறவங்ககிட்டே உதவி கேட்டேன். ஒருத்தரும் ஒரு வார்த்தைகூட மறுத்துப் பேசலை. அவங்க எல்லாரோட சார்பாவும் நானும் எங்க நகர் இளைஞர்களும் சென்னைக்குக் கிளம்பினோம். காஞ்சிபுரம் தாண்டினதுமே மழை வலுத்துடுச்சு. எப்படியோ தட்டுத் தடுமாறி மாநகரத்துக்குள்ளே நுழைஞ்சோம். திரும்பின பக்கமெல்லாம் தண்ணி மட்டும்தான் தெரிஞ்சது. முழங்காலுக்கு மேல ஓடற தண்ணியில இறங்கி, கூவம் கரையோரமா இருக்கற மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் நிவாரணப் பொருட்களையும் கொடுத்தோம். இந்த ஒரு வேளை உணவு போதுமா அவங்க மீண்டு வர்றதுக்குங்கற நினைப்பு என்னை ஒரு சிறு துரும்பா உணர வச்சது. இந்த மக்களுக்கு வேற எதுவும் செய்ய முடியலையேங்கற இயலாமையோடதான் திரும்பினோம்” என்று சொல்லும்போதே ரமா பிரபாவுக்குக் குரல் தழுதழுக்கிறது. கடலூருக்கும் தங்கள் நகர் மக்களிடமிருந்து நிவாரணப் பொருட்களைப் பெற்று அனுப்பிவைத்திருக்கிறார் இந்த நல்லாசிரியர்.
“நாங்க செய்யறது எல்லாமே தற்காலிக நிவாரணம்தான். பாதிக்கப்பட்ட மக்களோட வாழ்வை மீட்டெடுக்கறதுதான் இதுக்கு நிரந்தர நிவாரணம். ஆனா எந்தவொரு நிவாரணப் பணியிலும் எந்தக் கட்சியோட முத்திரையும் இருக்கக் கூடாது. அரசாங்க முத்திரை மட்டும்தான் இருக்கணும்” - எதையுமே அரசியலாக்கும் அற்பர்கள் மீதான கோபமும் கசப்புணர்வும் வெளிப்படுகின்றன ரமாவின் கணவர் பரந்தாமனின் வார்த்தைகளில்.
நிரந்தர நிவாரணமே தீர்வு
வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார் வானகரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி. வீட்டை நெருங்குவதற்கு முன்னாலேயே பல வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரில் மூழ்குவதைப் பார்த்துப் பதறினார். தன் கண் முன்னே மக்கள் அருகிலிருந்த தேவாலயத்திலும் பள்ளியிலும் தஞ்சம் புகுந்ததைப் பார்த்து உடைந்துபோனார். வீட்டுக்குச் சென்றவர் வீட்டிலிருந்த துணிகளைத் தன் காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்பினார். மாற்று உடை கூட இல்லாமல் உயிரை மட்டுமே வைத்திருந்தவர்களுக்கு உடைகளை வழங்கினார். பெரிய சாலைகளைத் தாண்டி உள்ளுக்குள் சென்றபோதுதான் பாதிப்பின் வீரியம் அவருக்குப் புரிந்தது. உடனே தன் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்று அங்கிருந்தவர்களிடம் நிவாரணப் பொருட்களைப் பெற்றுத் திரும்பினார்.
“மெயின் ரோட்டை ஒட்டியிருந்தவங்களுக்கு ஓரளவு உதவி கிடைச்சுது. ஆனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாம உள்ளே பலர் மாட்டிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு முதல்ல உதவணும்னு நினைச்சோம். என் கணவர் தன்னால முடிஞ்ச இடங்களுக்குப் போனார். சில இடங்களில் ஆட்களோட எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு. அதனால எங்ககிட்டே இருந்த நிவாரணப் பொருட்களை அங்கே இருந்த நிவாரண முகாம்ல கொடுத்து, அவங்களையே எல்லாருக்கும் பிரிச்சு கொடுக்கச் சொல்லிட்டோம்” என்று சொல்லும் விஜயலட்சுமி, சென்னை மக்களின் தேவை இதுபோன்ற தற்காலிக உதவிகள் மட்டுமல்ல என்பதையும் குறிப்பிடுகிறார்.
“வீடு, வாசல், உறவுகள்னு எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிற மக்களுக்கு இந்த உதவிகள் எம்மாத்திரம்? முதலில் அரசாங்கம் இவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடத்தையாவது அமைச்சு தரணும். எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கறவங்களுக்குத்தான் அதோட வலியும் வேதனையும் புரியும்” என்கிறார் விஜயலட்சுமி.
“என்னால வெள்ளம் பாதிச்ச இடங்களுக்கு நேர்ல போய் உதவ முடியாது. மக்களுக்கு நிவாரணம் போய்ச் சேர விடாம சிலர் தடுக்கறதாகவும் கேள்விப்பட்டோம். அதனால நிவாரணப் பொருட்கள் வழங்குற முகாம்ல என்னைத் தன்னார்வலரா இணைச்சுக்கிட்டேன். இங்கே என்கூட இன்னும் இருபது பெண்கள் தன்னார்வலரா இருக்காங்க” என்று சொல்லும் மீனாட்சிக்கு 62 வயது. கடலூர் நிவாரணப் பணிகளில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறார் இவர்.
மருத்துவ உதவி அவசியம்
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ருச்சி. வெள்ளத்தை மீறிய மக்களின் துயரமும் கண்ணீரும் ஸ்ருச்சியை கடலூருக்கு வரவழைத்தது. உணவு, பாய், உடைகள் போன்றவைதான் பெருமளவில் நிவாரணப் பொருட்களாகக் குவிவதைப் பார்த்த இவர், மருந்துப் பொருட்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.
“கடலூரில் நான் பார்த்த பகுதிகள் முழுக்கக் குடிசைகள்தான். மொத்தமும் நீரில் மூழ்கியிருந்தன. நிற்கக்கூட கூரையில்லாமல் அலைபாய்ந்தபடி நிவாரணப் பொருட்களுக்காகக் காத்திருந்தனர் பலர். இவர்களுக்கு ஏதோ ஒரு வகையிலாவது நிவாரணப் பொருட்கள் கிடைக்கும். ஆனால் தொழுநோயாளிகளுக்கு? சாதாரண நாட்களிலேயே இவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். மழையின் இந்தத் தாண்டவத்துக்குப் பிறகு இவர்களை யார் கைதூக்கிவிடுவார்கள்?” என்று கேட்கும் ஸ்ருச்சி, தொழுநோயாளிகளுக்கான மருந்து, மாத்திரைகளை கையோடு வாங்கிச் சென்றிருக்கிறார்.
“சிலர் மாட்டுக் கொட்டகையில இருந்தாங்க. காயங்கள் சரியா பராமரிக்கப்படாம பெரிய புண்ணாகியிருந்துச்சு. மூணு நாளா சாப்பிடாம இருக்குறோம்னு சொன்னதைக் கேட்டுப் பதறிட்டேன். அப்புறம் அங்கேயே தங்கியிருந்து பத்து நாளுக்கு சாப்பாடு கொடுத்தோம். இதோ நிவாரணப் பணி முடிஞ்சு ஊருக்குக் கிளம்பிட்டேன். இப்போ அந்த மக்களுக்கு யார் ஆதரவு தருவாங்க?” என்ற ஸ்ருச்சியின் கேள்வி நியாமானதே.
“இங்கே விவசாயம்தான் மக்களோட வாழ்வாதாரம். அவங்க வளர்த்த ஆடு, மாடு, கோழி எல்லாமே வெள்ளத்துல அடிச்சிக்கிட்டுப் போயிடுச்சு. அதனால அவங்க வாழ்வை மீட்டுத்தர வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கு. சொல்லப்போனா சின்ன உதவிகூட கிடைக்காம இன்னும் பல கிராமங்கள் கடலூருக்குள்ள இருக்கு” என்கிறார் ஸ்ருச்சி.
அன்னமிட்ட கைகள்
திருப்பூரைச் சேர்ந்த சசிகலா, ஸ்ரீபுரம் டிரஸ்ட் உதவியுடன் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
“எங்களுக்குச் சொந்தமா லாரி இருக்கறதால இங்கே திருப்பூர்ல சேகரிச்ச மளிகை பொருட்களை அதுல கடலூருக்கு அனுப்பினோம். அங்கே பஞ்சாயத்து ஆட்கள் உதவியோடு அங்கிருக்கற பள்ளியில் தினமும் உணவு சமைத்துத் தருகிறோம். இதுல என் பங்கு எதுவுமே இல்லை. நான் உதவின்னு கேட்டதுமே மறுகேள்வி கேட்காமல் உதவியவர்களுக்குதான் எல்லா நன்றியும் போய் சேரணும்” என்கிறார் சசிகலா.
கவனம் பெறாத பெண்களின் தேவை
கோயம்புத்தூரைச் சேர்ந்த காயத்ரி, சென்னையில் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகிறது. அதற்குள் வெள்ளம் அவருக்குப் புதியதொரு தரிசனத்தைக் கொடுத்திருக்கிறது.
“மழை அதிகமானதுமே எப்படியாவது சொந்த ஊருக்குப் போயிடணும்னு தோணுச்சு. எப்படியோ அடிச்சி புடிச்சி ஊருக்குக் கிளம்பிட்டேன். ஆனா அப்படிப் போகும்போதுதான் பாதிக்கப்பட்டவங்களுக்கு எதுவுமே செய்யாம இப்படி தப்பிச்சு ஓடுறமேன்னு குற்ற உணர்வா இருந்துச்சு. நடுராத்திரிக்கு மேலதான் ஊருக்குப் போனேன். தூக்கமே வரலை. மறுநாள் முதல் வேலையா சென்னை மக்களுக்கு எது அவசிய தேவைன்னு லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சேன். இங்கே தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அதனால அந்த நண்பர்களோடு சேர்ந்து நிவாரணப் பொருட்களை சேகரிக்கத் தொடங்கினேன்” என்று சொல்லும் காயத்ரி, பெண்களுக்குத் தேவையான பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.
“உணவும் தண்ணீரும்தான் அதிகமா விநியோகிக்கப்பட்டது. அதனால நாங்க மற்ற பொருட்களைச் சேகரிச்சோம். பெண்களுக்கு உள்ளாடைகளும் நாப்கின்களும் அவசியம்னு புரிஞ்சுது. நிவாரணப் பொருட்கள் சேகரிக்கறவங்கக்கிட்டே பலரும் இதைக் கேட்கத் தயங்கறாங்க. நாங்களே வீடு வீடா போய் பெண்களைச் சந்திச்சு அவற்றைக் கொடுத்தபோது பலரும் கூச்சப்பட்டாங்க. இந்தத் தயக்கமும் கூச்சமும் அவசியமில்லாதவை. பெண்களுக்கான தேவைகளும் அடிப்படைத் தேவைகள்தான்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும்” என்று நிதர்சனத்தைப் பகிர்ந்துகொண்டார் காயத்ரி.
சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மொத்தமாகச் சேர்த்து 55 லாரிகளில் இவர்கள் பகுதி மக்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.
“இந்த ஐந்து நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. ஆண், பெண் வித்தியாசமின்றி வயது வேறுபாடில்லாமல் அனைவரும் நிவாரணப் பொருட்களை சேகரிச்சோம். லாரியில இருந்து பொருட்களை ஏற்றி, இறக்கின புருஷோத்தமன் தாத்தோவோட அக்கறை என்னை பிரமிக்க வச்சுது. அறுவது வயசை தாண்டின அவரு, தன்னோட இழப்பையெல்லாம் பொருட்படுத்தாம பாதிக்கப்பட்டவங்களுக்காக ஓடி ஓடி உதவினாரு. அதே போல சாய் சித்ராவும் ஒவ்வொரு வீடா போய் டோக்கன் போட்டு நிவாரண பொருட்களைக் கொடுத்தாங்க. இவங்களோட பணிக்கு முன்னால என்னோட பங்களிப்பு எதுவுமே இல்லை” என்று உணர்வுபொங்கச் சொல்கிறார் காயத்ரி.
இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரக்கணக்கான ஈர இதயங்கள்தான் இருண்டிருந்த சென்னைப் பள்ளங்களில் வெளிச்சக் கீற்றை வாரியிறைத்திருக்கின்றன. இணைந்த கரங்களால் நிச்சயம் மீண்டெழும் தமிழகம்!