எம்ஜிஆர் 100 | 27 - மனிதரை மனிதராக மதிப்பவர்!
THE HINDU TAMIL
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. மனிதரை மனிதராக மதித்து நேசிப்பாரே தவிர, அவரது வாழ்க்கைத் தரம் என்ன? எந்த பதவியில் இருக்கிறார்? என்றெல்லாம் பார்த்து மரியாதை செய்ய மாட்டார். முக்தா சீனிவாசன் ஒருமுறை கூறியது போல, முதல் நாள் எம்.ஜி.ஆரின் காரில் ராஜீவ் காந்தியை பார்க்கலாம்; அடுத்த நாள் அதே காரில் ஒரு லைட் பாய் எம்.ஜி.ஆருடன் சென்று கொண்டிருப்பார். கடைநிலை ஊழியராக இருந்தால்கூட, அவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் எம்.ஜி.ஆர். மரியாதை அளிப்பார்.
எம்.ஜி.ஆரின் கார் டிரைவராக இருந்தவர் கோவிந்தன். மிகத் திறமையான டிரைவர். எந்த கூட்டத்திலும் சாமர்த்தியமாக காரை ஓட்டிச் செல்லும் திறன் கொண்டவர். எம்.ஜி.ஆருக்கு கோவிந்தனின் டிரை விங் பிடிக்கும். 1976-ம் ஆண்டு எம்.ஜி.ஆரிடம் டிரைவராக பணிக்கு சேர்ந்தார் கோவிந்தன். சென்னை லாயிட்ஸ் சாலையில் எம்.ஜி.ஆர். வசித்து வந்தபோது அங்கு காவலாளியாக பணி யாற்றி, எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக விளங்கிய தாமோத ரனின் மருமகன்தான் கோவிந்தன். பல ஆண்டுகளாக டூரிஸ்ட் கார் ஓட்டி வந்தவர். தாமோதரனின் சிபாரிசின் பேரில் கோவிந்தனை டிரைவராக பணிக்கு சேர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வ ராகிவிட்டார். அவர் தினமும் ராமாவரம் தோட்ட வீட்டில் இருந்து கோட்டைக்கு செல்லும்போது டிரைவர் கோவிந்தன் தான் காரை ஓட்டிக் கொண்டு செல்வார். முதல்வரின் டிரைவர் என்பதால் பணிக்கு தினமும் கோவிந்தனை அவரது வீட்டுக்கு வந்து போலீஸ் ஜீப்பில் அழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். வீட்டுக்கு செல்வார் கள். மாலையில் பணி முடிந்ததும் மீண்டும் வீட்டில் கொண்டுவிட்டு செல்வார்கள்.
ஒருநாள் பணிக்காக வீட்டில் இருந்து போலீஸ் ஜீப்பில் வரும்போது, சென்னை கத்திபாரா சந்திப்பு அருகே ஜீப் மீது எதிரே வந்த பெரிய லாரி மோதியது. போலீஸ் ஜீப் டிரைவர் பலத்த காயங்களோடு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். டிரைவர் கோவிந்தன் சம்பவ இடத்தி லேயே பலியானார். அவர் இறந்த செய்தி வயர்லெஸ் மூலம் எம்.ஜி.ஆருக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அதிர்ச்சி அடைந்தார். கோவிந்தனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தில் யாருக்கும் விருப் பம் இல்லை. பிரேத பரிசோதனை வேண் டாம் என்று அவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டபோதும், சட்டப்படி கோவிந்த னின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். பிடிவாதமாக இருந்தார். அதன்படி, பிரேத பரிசோதனை நடந்தது.
பின்னர், கோவிந்தனின் உடல் அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு சில மணி நேரம் வைக்கப்பட்டு, அங்கிருந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு ஒரு வேனில் கோவிந்தனின் உடல் ஏற்றப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இங்கே ஒரு முக் கியமான விஷயம். அந்த இறுதி ஊர்வலத் தில் முதல்வர் எம்.ஜி.ஆர். நடந்தே சென்றார். முக்கிய பிரமுகர்கள் பலரின் இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். நடந்து சென்றிருக்கிறார். இருந்தாலும், தன்னிடம் பணியாற்றிய டிரைவரின் இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்லாமல், அஞ்சலி மட்டும் செலுத்தி விட்டு சென்றிருந்தால் அவரை யார் கேட்க முடியும்? ஆனால், இறந்து போன தனது ஊழியருக்காக அவரது இறுதி ஊர்வலத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் நடந்து சென்றார் என்றால் அது எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
கோவிந்தனின் குடும்பத்தினரை அழைத்து பண உதவி செய்ததுடன், கோவிந்தன் பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணம் விரைவில் கிடைக்க ஏற்பாடுகளும் செய்தார். தாங்கள் வேண்டாம் என்று மறுத்தும் கோவிந்தனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். ஏன் பிடிவாதமாக இருந்தார் என்பது அப்போதுதான் கோவிந்தன் குடும்பத்தாருக்கே தெரிந்தது. விபத்தில் மரணம் ஏற்பட்டால் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தால்தான் இன்சூரன்ஸ் தொகையைக் கோர முடியும். கோவிந்தனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வீட்டு வசதி வாரியத்தில் பணி வழங்கியும் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
கோவிந்தன் இறந்த துயரத்தையும் மீறி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டும் அன்பையும் ஆதரவையும் கண்டு ஆனந் தக் கண்ணீருடன் அவருக்கு நன்றி தெரிவித்தது கோவிந்தனின் குடும்பம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே புதிய சுரங்கப் பாதை திறக்கப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு சுரங்கப் பாதையை திறப்பார் என அறிவிக்கப் பட்டிருந்தது. குறிப்பிட்டபடி விழாவுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். திறப்பு விழா நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உதவியாளர்களிடம் காதில் கிசுகிசுத்தார்.
அவர்கள் சென்று ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தவரை அழைத்து வந்து எம்.ஜி.ஆரிடம் நிறுத்தினர். அவர் பெயர் ஏழுமலை. எம்.ஜி.ஆரை வணங்கிவிட்டு ஏதும் புரியாமல் படபடப்புடன் நின்று கொண்டிருந்தவரின் கையில் கத்தரிக் கோலைக் கொடுத்து, சுரங்க நடைபாதை திறப்புவிழாவுக்கு அடையாளமாக ரிப்பனை வெட்டச் சொன்னார் எம்.ஜி.ஆர்.!
கண்களில் நீர் மல்க ரிப்பனை வெட்டி திறந்து வைத்த ஏழுமலைதான், அந்த சுரங்கப் பாதையை கட்டிய மேஸ்திரி!
எம்.ஜி.ஆரைப் பற்றி கவிஞர் வாலி ஒருமுறை இப்படி வாழ்த்திப் பாடினார். ‘‘மனிதர்களில் எத்தனையோ நடிகர்கள் உண்டு. நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீதான்!’’
படம் உதவி: ஞானம்
முன்பெல்லாம் சைக்கிளில் பின் னால் அமர்ந்து கொண்டு ‘டபுள்ஸ்’ செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சைக்கிளில் ‘டபுள்ஸ்’ சென்றால் போலீஸார் அபராதம் விதிப்பார்கள். எம்.ஜி.ஆர். முதல்வரானவுடன் ஏழை களின் வாகனமான சைக்கிளில் ‘டபுள்ஸ்’ செல்ல தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தார்.
- தொடரும்...