நுழைவுத் தேர்வு நுண்ணறிவுத் தேர்வல்ல!
By சா. பன்னீர்செல்வம் | Published on : 10th August 2017 02:32 AM |
மருத்துவம் பொறியியல் முதலிய தொழிற் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் போட்டியாளரை வடிக்கட்டுதற்கும் பலதரப்பினர்க்குச் சமவாய்ப்பு அளிப்பதற்குமாக நேர்முகத் தேர்வு என்பதே சென்ற நூற்றாண்டின் நடைமுறையாக இருந்தது.
நேர்முகத் தேர்வென்பது ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட மனப்பான்மை, பொது அறிவு சிந்தனைத்திறன் என்பவற்றை அவரவரின் குடும்பம் மற்றும் சமூகப் பின்னணி எனும் அடிப்படையில் வெவ்வேறு கேள்விகளால் கண்டறியப்படுவதாக இருந்தது.
ஆனாலும், நேர்முகத் தேர்வு ஊழல் மயமாகிவிட்டதெனும் காரணத்தின் பேரில் அதற்கு மாற்றாக, தொழில் முறைப் படிப்புகளுக்கெனத் தனியான நுழைவுத் தேர்வு எனும் முறை தமிழக அளவில் 1984-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, பலத்த எதிர்ப்பின் காரணமாக 2005-இல் கைவிடப்பட்டது.
அதே சமயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில் முறைக் கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி நுழைவுத்தேர்வு முறை தொடக்கம் முதல் இன்றளவும் நீடிக்கின்றது. இந்த நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில் முறைக்கல்லூரிகளுக்கும் அனைத்திந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்பதை காங்கிரசுக் கூட்டணி அரசு கடந்த 2010-இல் அறிமுகப்படுத்தியது.
அது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடை 2013-இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி செய்த மறு சீராய்வு மனுவின் விளைவாக 2016-இல், நுழைவுத் தேர்வு சரியே என்பது உச்சநீதிமன்றத்தின் மறுதீர்ப்பாயிற்று. மறு சீராய்வு மனுவுக்கும், மறுபடியும் மாற்றுத் தீர்ப்புக்கும், மத்திய அரசு தானாகவே திட்டத்தைக் கைவிடுதற்கும் வாய்ப்பிருப்பதால் நுழைவுத் தேர்வு விவாதம் தொடர்தல் அவசியமாகிறது.
முதலாவது, பள்ளியிறுதித் தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஒரே மாநிலத்தில் மாநில அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., நவோதயா பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என வெவ்வேறு பாடத்திட்டத்துடன் நடைபெறும், பள்ளிகளாகின்றன.
வெவ்வேறு பாடத்திட்டத்துடன் படிக்கும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. என்னும் குறிப்பிட்ட பாடத்திட்டப் படியான தேர்வென்பது எள்ளளவும் நேர்மையற்ற செயலாகிறது.
நுழைவுத் தேர்வு என்பதென்ன? பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சியும், கூடுதல் மதிப்பெண்ணும் பெற்ற மாணவர்கள் மீண்டும் அனைத்திந்திய அளவிலான ஒரு பொதுத்தேர்வு எழுதுதல். பள்ளிப் பொதுத்தேர்வு எழுத்து முறைத்தேர்வு.
அதாவது வினாவுக்குரிய விடையைத் தான் படித்த பாடத்திலிருந்து சற்று நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்து எழுதுதல். நுழைவுத் தேர்வாவது, வினாவுக்கெனக் கொடுக்கப்பட்டுள்ள பதில்களில் எது சரியான விடையென்பதை டிக் செய்தல். இது எப்படிக் குறிப்பிட்ட தொழில் படிப்புக்குரிய தகுதியைத் தெரிவு செய்தலாகிறது?
குறிப்பிட்ட தொழிற் படிப்புக்குத் தகுதியாளரைத் தேர்வு செய்ய என்ன செய்ய வேண்டும்? குறிப்பிட்ட தொழிற்படிப்பிற்கும், அதன் வழிக்குறிப்பிட்ட பணிக்கும் தேவையான குணநலன்கள், தனித்திறன்கள் என்னென்ன எனப்பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும்.
அவை ஒவ்வொரு மாணவனிடமும், எந்தளவு அமைந்திருக்கின்றன என்பதைக் கண்டறியும் முறையில், ஒவ்வொரு வினாவுக்கும் அவரவர் மனப்பான்மை, சிந்தனைத்திறன் என்பவற்றிற்கேற்ப ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையாக விடையளிக்கும் முறையிலேயே வினாக்கள் அமைய வேண்டும்.
நேர்முகத் தேர்வின் போது முதலில் மாணவனின் வாழ்வியல் பின்னணி தொடர்பான கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவரவர் சூழலுக்கேற்பக் கேள்விகளை எழுப்புவார்கள். அதுதான் சரியான தேர்வுமுறை.
நேர்முகத் தேர்வில் மாணவன் கூறும் விடையை அவனது வாழ்வியற் சூழலொடு பொருத்தி அதன் வழி விடையின் தகுதிப்பாட்டைப் புரிந்து கொள்ளுதல்போல நுழைவுத் தேர்வில் மாணவர்களின் வெவ்வேறு விடைகளின் தகுதிப்பாட்டைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. எனவே, அனைவரும் ஒரே வகையான விடையளிக்கும் நுழைவுத் தேர்வின் வழி மாணவனின் தகுதியை மதிப்பிடுதல் உண்மையிலிருந்து முற்றிலும் விலகுவதாகிறது.
பொது நுழைவுத் தேர்வு நுண்ணறிவுத் தேர்வு என்கிறார்கள். என்ன நுண்ணறிவு? எழுத்து முறைத்தேர்வில் வினாவுக்குரிய விடையைத் தான் படித்த பாடத்திலிருந்து சற்று நிதானமாகச் சிந்தித்து எழுதுகிறான். நுழைவுத் தேர்வில் அதே வினாவுக்கு அதே விடையை கொடுக்கப்பட்ட பட்டியலில் நொடிப்பொழுதில் இனங்கண்டு டிக் செய்கிறான்.
ஆக நுண்ணறிவுத் தேர்வு என்பது ஏற்கெனவே படித்ததை நொடிப் பொழுதில் நினைவிற்கொணரும் நினைவுத்திறன் வெளிப்பாடன்றிச் சுய சிந்தனைத்திறன் வெளிப்பாடென்பதற்கு என்ன இருக்கிறது? எவ்வளவு கெட்டிக்கார மாணவனாயினும் நுழைவுத் தேர்வுக்கெனத் தனிப்பயிற்சி பெறாமல் நுழைவுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுதல் இயலாதென்பது வெளிப்படை.
ஆக, பயிற்சி வகுப்புக்களில் வினா - விடையாக அளிக்கப்படும் பயிற்சியை நினைவிறுத்தி நுழைவுத் தேர்வில் சரியான விடையை நொடிப் பொழுதில் டிக் செய்தல் பழக்கப்படுத்தப்படியே சுற்றுகிற செக்கு மாட்டுத் திறமையன்றிச் சுய அறிவுத் திறனாகாது.
பயிற்சி வகுப்புகளில் இடம் பெறாது நுழைவுத் தேர்வில் இடம் பெறும் வினாக்களுக்கு எத்தனை விழுக்காட்டினர் சரியான விடைகளை டிக் செய்வர்?
தில்லி-எய்ம்சு, புதுச்சேரி - சிப்மர், சண்டிகர் - பி.ஜி.அய், இராணுவக்கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே நுழைவுத் தேர்வின் வழி இடம் பிடித்து, அங்கே தரப்படும் பயிற்சி முடித்துப் பட்டம் பெற்று, அந்த மருத்துவமனைகளிலும், பிற மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்கள் அவ்வளவு பேர்களிடமும் வரும் அவ்வளவு நோயாளிகளும் முழுமையாகக் குணமடைகிறார்களா?
நுழைவுத் தேர்வென்பது ஒரு வடிக்கட்டல் முறை - அவ்வளவுதான். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்துதல் என்பதே வடிக்கட்டலன்றி வேறல்லவே? மீண்டுமொரு வடிக்கட்டல் என்பது அரைத்த மாவையே அரைக்கின்ற வெட்டித்தனமல்லவா?
இவையெல்லாவற்றிற்கும் மேலாகப் பொது நுழைவுத்தேர்வு என்பதன் உள்வயணத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. சுதந்திரப் போராட்டத்தின்போது, சுதந்திர இந்தியா சுயாட்சியுடைய மாநிலங்களின் கூட்டாட்சியாக அமையும் என்று அன்றை தேசியத் தலைவர்கள் கூறினார்கள்.
ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் பிரிவினையைக் காரணங்காட்டி இந்திய அரசியலமைப்பை, வலுவான மத்திய அரசுக்குட்பட்ட மாநில அரசுகள் என்னும் முறையில் அமைத்து விட்டார்கள்.
ஒரு விலக்காக, கல்வி என்பது மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது. மனித வாழ்வியலின் அடிப்படையாகின்ற கல்வியை மத்திய அரசின் வரம்புக்குட்படுத்தும் முயற்சியாக, நெருக்கடிநிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி அன்று பொதுப் பட்டியலுக்கு மாற்றினார் இந்திரா காந்தி.
இன்று கல்வி என்பதை பழையபடி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். மிகப்பெரும்பான்மையான மக்களின் மொழியும், மதமும் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவில் பள்ளிக்கல்வி முற்றிலும் மாநில அரசின் பொறுப்பாகவும், அதிலும் தொடக்கக்கல்வி உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகவும் அமைகின்றன. பலமொழியினங்களைக் கொண்ட இந்தியாவில் பள்ளிக்கல்வியில் மத்திய அரசின் குறுக்கீடு முற்றிலும் தவறானது.
எனவே ஒரு மாநிலத்தில் அந்த மாநில அரசின் வரம்புக்குட்பட்ட பாடத்திட்டப்படியான பள்ளிகள் மட்டுமே இயங்க வேண்டும். சி.பி.எஸ்.இ. - இ.பி.எஸ்.இ. - ஓ.பி.எஸ்.இ. என ஒரே ஊரில் நான்கு விதமான பள்ளிகள் ஆகவே ஆகாது.
மாநிலப் பாடத்திட்டப் படியான தனியார் பள்ளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
இரண்டாவது, மாநில அரசுத் தொழிற்கல்லூரிகளிலும், மத்திய அரசுத் தொழிற்கல்லூரிகளிலும் மாநில அரசின் ஒதுக்கீடாகும் இடங்கள் மாநில அரசுப் பாடத்திட்டப்படியான பள்ளியிறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்படியே நிரப்பப்பட வேண்டும்.
இரு வகையான கல்லூரிகளிலும் மத்திய அரசு ஒதுக்கீடாகும் இடங்களை அந்தந்த மாநில அரசுப்பள்ளியிறுதித் தேர்வுத்தரவரிசைப் பட்டியலில் முதல் வரிசை மாணவர்களுக்கு வழங்கலாம். அல்லது அந்த இடங்களுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம். எல்லா இடங்களுக்கும் மத்திய நுழைவுத் தேர்வென்பது எக்காரணங்கொண்டும் எவ்வகையாகவும் ஏற்கத்தக்கதல்ல.
தற்போது இழுபறியாகும் நுழைவுத் தேர்வுச் சிக்கலுக்கு என்னவழி? மாநிலப் பாடத்திட்டப்படிப் படித்து நுழைவுத் தேர்வெழுதியோரின் விழுக்காட்டிற்கேற்ப அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுத்தல் இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொண்டிருக்கும் இட ஒதுக்கீடு எனும் கோட்பாட்டின் அடிப்படையை மறுப்பதாகி, இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும் அல்லவா?
அண்மையில் 'தினமணி' தலையங்கத்தில் குறிப்பிட்டவாறு, நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் பள்ளியிறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் கூட்டி அவற்றின் சராசரி அடிப்படையில் அனுமதித்தலே தற்போதைய இழுபறிச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும்!