Thursday, August 10, 2017


நீட்' தேர்வு விலக்கு விவகாரம்: விசாரித்து அறிக்கை அளிக்க மத்திய அமைச்சர்களின் மூவர் குழு

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) விலக்கு விவகாரம்
குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அமைச்சர்கள் அடங்கிய மூவர் குழுவை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் ('நீட்') இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக தமிழக சட்ட ப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இந்நிலையில், நீட் தேர்வுகள் முடிகள் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் 'நீட்' தேர்வால் பாதிப்புக்கு உள்ளாவதாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட ஐந்து துறைகளின் அமைச்சர்கள் இருமுறை தில்லியில் முகாமிட்டு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வலியுறுத்தினர். மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை அமைச்சர்களை அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தில்லி வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினார். எனினும், இந்த விவகாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதமானது.

இந்நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்மொழிவை மத்திய உள்துறையிடம் தமிழக அரசு அளித்தது. இதைத் தொடர்ந்து, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கரும், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரையும் நேரில் சந்தித்து பேசினர்.

இச்சூழலில், இந்த விவகாரத்தில் உள்ள சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜித்தேந்தர் சிங், மத்திய வர்த்தகத் தொழில் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஓரிரு தினங்களில் தங்களது அறிக்கையை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் இடம் பெற்றிருப்பதால், அவருக்கு தமிழகத்தின் கல்விச்சூழல், கிராமப்புற மாணவர்களின் நிலைமை ஆகியவை குறித்து நன்கு தெரியும் எனக் கூறப்படுகிறது.

அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஏறக்குறைய முடிந்து விட்டது.

இந்நிலையில், தமிழகம் மட்டும் 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா மற்றும் தாற்காலிக விலக்குப் பெறும் அவசரச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருப்பதால் அது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்பிருப்பதாக தகவலறிந்த தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024