Wednesday, August 9, 2017

ஊழலை கண்டித்து ராஜினாமா : கொதித்தெழுந்த அரசு ஊழியர்
பதிவு செய்த நாள்09ஆக
2017
00:01


மூணாறு: சர்வே மற்றும் நில ஆவணங்கள் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறி, அதில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்தார். கேரளா, இடுக்கி மாவட்டம் ராஜாக்காட்டில் உள்ள சர்வே கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிரேடு சர்வேயராக பணியாற்றியவர் அனஸ்,37. மாநில தேர்வாணைய போட்டித்தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு தேர்வானார். இவர் சர்வே மற்றும் நில ஆணவங்கள் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறி, தனது பணியை ராஜினாமா செய்தார்.அதற்கான கடிதத்தை சர்வே உதவி இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

தொடுபுழாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:2011 மார்ச் 13ல் அரசு பணியில் சேர்ந்த நான், தேவிகுளம் தாலுகா அலுவலகத்திலும், ராஜாக்காடு சர்வே கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பணியாற்றினேன். இங்கு சாதாரண விஷயத்திற்கு கூட, மக்களை பிழிந்து எடுக்கும் வகையில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். தேவிகுளம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றியபோது, அதிகாரிகள் லஞ்சம் பெற்றதை நேரடியாக பார்த்துள்ளேன். அதனை எதிர்க்க முயன்று பலமுறை அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். சிறிய விஷயங்களுக்குக்கூட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர். பத்திரப் பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் பெறப்படுகின்றது. அதற்கு ஆதாரங்கள் உள்ளன.
உயர் அதிகாரி ஒருவர் என்னை பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டதால், விடுமுறை கோரி விண்ணப்பித்த கடிதம் மறைக்கப்பட்டு, ஆறு மாதம் சம்பளம் கிடைக்கவில்லை. ஊழல் அதிகரித்த இத்துறையில் மனசாட்சி உள்ளவர்கள் பணி செய்ய முடியாது.ஆகவே எனது பணியை ராஜினாமா செய்தேன். அடுத்து சமூக நல பணிகளை செய்ய முடிவு செய்துள்ளேன், என்றார்.

இடுக்கி சர்வே துறை உதவி இயக்குனர் ராஜன் கூறியதாவது,'அனஸின் ராஜினாமா கடிதம் கிடைத்தது. அது சர்வே இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கூறிய குற்றச்சாட்டு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை,' என, தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024