'இதே நிலை நீடித்தால் அரசு ஸ்தம்பிக்கும்': எச்சரிக்கும் அரசு ஊழியர்கள்!
ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடுஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளருமான முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது...
"சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் இயக்கங்களும் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பின் மூலம் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு மாற்றத்தை அமுல்படுத்திடவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக, கடந்த மாதம் 18-ம் தேதி மாவட்ட தலைநகரில் ஆரப்பாட்டம் நடத்தினோம், அதன் பின் கடந்த 5-ம் தேதி காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, சென்னை புற நகரில் காவல் துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் மீறி சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு கூடி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
ஆர்ப்பாட்டம் முடிந்துள்ள நிலையில் மாநில நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேசாமல் மௌனம் காப்பது என்பது எங்களை அரசே போராட்டக்களத்திற்கு தள்ளுகிறது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் காலம் கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில், அக்குழுவிடமிருந்து அறிக்கையை பெறாமல் மீண்டும் நவம்பர் வரை கால நீட்டிப்பு செய்திருப்பது எங்களது போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்தும் செயலாகும்.போராடும் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டக்களத்திற்கே வராத ஆளும் அரசுகளின் ஏவலாளியாக செயல்படும் அமைப்புகளோடு தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது போராட்டக் களத்தில் கோபாவேசத்தோடு போராடிய ஆசிரியர் அரசு ஊழியர்களை கோபப்படுத்தியுள்ளது.
மேலும் தமிழக அரசு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லையென்றால் திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் செப்டம்பர் 7ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதில் நூறு சதவிகிதம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள். இவ்வேலை நிறுத்தத்தின் மூலம் தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடும் ஸ்தம்பிக்கும்' என அவர் எச்சரித்தார்.
Posted by kalviseithi.net
No comments:
Post a Comment