Thursday, August 10, 2017

மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழை: கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெரும்பாலான கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 09, 2017, 03:30 AM


சிவகங்கை,

தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் வறட்சி தாக்கம் அதிகமாக இருந்தது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை என மாவட்டம் முழுவதும் எங்கும் பெண்கள் குடங்களுடன் தண்ணீருக்காக அலைந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் மாவட்டத்தில் கடந்த மாதம்(ஜூலை) பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் இளையான்குடி தவிர மற்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்துள்ளது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை, சிங்கம்புணரி, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024