நண்பர்களை நம்பர்களாக்கும் வாட்ஸ்ஆப் வாழ்க்கையைத் துறந்த தருணம்!
Published : 07 Oct 2015 15:57 IST
அனுபுதி கிருஷ்ணா
(
"ஹலோ எழுத்தாளரே, எப்படி இருக்கிறீர்கள்?"
பழைய நண்பன் ஒருவனின் குரலை, காலையிலேயே கேட்க ஆச்சரியமாக இருந்தது. எனக்கும் பேச ஆசைதான். ஆனால் அதிகாலை நேரத்தில், பல மாதங்களுக்குப் பின்னர், பழைய நண்பனின் குரலைக் கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் வருடத்துக்கு ஒரு தடவை (என்னுடைய பிறந்தநாளுக்கோ அல்லது அவனுடைய பிறந்தநாளுக்கோ), அதிகபட்சமாய் மூன்று நிமிடங்கள் பேசும் நண்பனின் குரல் அது!
பேராவலுடன் என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தேன். பெரியதாக ஒன்றுமில்லை. அவன் க்ரூப் அழைப்பை அனுப்பியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் கூப்பிட்டிருக்கிறான். சீரியஸான பல கேள்விகள் மற்றும் பதில்களுக்குப் பிறகு, அது 'வாட்ஸ்ஆப் க்ரூப்' என்பது புரிந்தது. அதில் என்னைத்தவிர எல்லா முன்னாள் வகுப்புத் தோழர்களும் இருக்கிறார்களாம். ''நீ மட்டும் அதில் இல்லை, அதன் சந்தோஷங்களில் கலந்துகொள்ளவில்லை" என்றான் அவன். என்னால் சிரிக்கமட்டுமே முடிந்தது.
முதன்முதலாக நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன்; அதுவும் துளிகூட விருப்பமே இல்லாமல். தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதால், புதிதாக வரும் விஷயங்களைத் தெரிந்து கொள்வது கடினமாகி விடுகிறது. எனக்கு ஆர்க்குட் அறிமுகமான சமயத்தில், உலகமே ஃபேஸ்புக்கை நோக்கி நகரத்தொடங்கி இருந்தது. கஷ்டப்பட்டு ஃபேஸ்புக் அக்கவுண்டைத் திறந்தபோது, கூகுள் ப்ளஸ் வந்திருந்தது. அதுசரி டிவிட்டருக்கு என்ன ஆனது என்கிறீர்களா? கொஞ்ச நாளைக்கு அந்தப்பக்கம் போகாமலே இருப்போமே. அதனால் இயல்பாகவே வாட்ஸ்ஆப்பைப் பற்றிய எந்த அறிகுறியும் எனக்கு வரவில்லை. உறவுக்காரி ஒருத்தி அதை அறிமுகப்படுத்தி வைத்த பின்னரும், வாட்ஸ்ஆப் பற்றி பெரிதாக எதையும் யோசிக்கவில்லை.
>சகாக்களின் நெருக்கடியை எந்த வயதிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. 35 வயதே ஆனாலும் கூட. என்னுடைய மருத்துவர், செவிலி, டெய்லர் என எல்லாருமே 'இதை வாட்ஸ்ஆப் பண்ணி விடுங்கள்' என்கின்றனர். அவர்கள் யாருமே வழக்கமான குறுஞ்செய்திகளை கண்டுகொள்வதாகக் கூடத் தெரிவதில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பல மாத வற்புறுத்தலுக்குப் பின்னர், என்னுடைய மருத்துவரையும், கடைக்காரர்களையும் நோக்கி ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு, வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன். ஒரு அழகான காலையில், உலகத்தையே பெருந்தன்மையுடன் பார்த்த தருணம் அது.
ஆரம்பத்தில் வாட்ஸ்ஆப்பில் எதுவுமே எனக்குப் புரியவில்லை. அது என்ன என்று தெரிந்துகொள்ளவே பல நாட்களானது. நிலத்தை, உடையை, ஏன் அழகை வாங்கச் சொல்லிக் கூவும் விளம்பரங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. சம்பந்தமே இல்லாத க்ரூப்புகளில் இணைக்கப்பட்டேன். நாய்க்குட்டிகள், பூனை, குழந்தை, சமயத்தில் பன்றிக்குட்டிகளின் படங்கள் மட்டுமே அதில் பகிரப்பட்டன. நான் புதிதாகச் சேர்ந்ததற்கான எந்த அடையாளமும் அதில் காண்பிக்கப்படவில்லை.
''உன்னுடைய வருகையை முதலில் அறிவிக்க வேண்டும்'' என்றாள் ஒருத்தி. எனது முதல் நிலைத்தகவலை அதில் இட்டேன். "தவலை இப்போது கிணற்றின் வெளியே வந்துவிட்டது!" என்று. அந்த யுக்தி பலித்தது. ''பைத்தியம், அது தவலை இல்லை; தவளை'' என்று ஏராளமான செய்திகள் வந்து குவிந்தன. தொடர்ந்த சில நாட்களில் வருடக்கணக்காக என்னுடைய நண்பர்களாக இருந்தவர்கள், போனில் வெறும் நம்பர்களாகிப் போனார்கள். செல்பேசியின் திரையை விட்டு கண்ணை எடுக்காத போதை, என்னை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது.
ஸ்மார்ட் போனையோ அல்லது சமூக ஊடகங்களையோ நான் எதிர்த்ததற்கான முக்கியக் காரணமே, உள்ளங்கையில் மறைந்துவிடும் ஒற்றைச் சாதனம் நம்மை அடிமையாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான். உண்மையான உலகத்தை விட்டுவிட்டு மெய்நிகர் உலகத்தில் வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை. ஆனால் எதை நினைத்து பயந்தேனோ அது நன்றாகவே நடந்தது.
ஒரு சில மாதங்களிலேயே, எதுவும் பேசுவதற்கு இல்லாத நிலையிலிருந்து, பேசுவதற்கும், எழுதுவதற்கும், டைப்புவதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் குவிந்தன. வீட்டு வேலைகளை தள்ளிப்போட்டேன். தூக்கம் குறைந்தது; கணவரையும், வீட்டையும் சேர்த்து குழந்தைகளையும் புறக்கணித்தேன். செல்பேசியோடு சேர்ந்து உறங்கி, அதனுடனேயே எழுந்தேன். சில நேரங்களில் தூக்கத்திற்கு இடையில் விழித்து போனைப் பார்க்கத் தொடங்கினேன். செல்பேசியை விட்டுத் தள்ளி இருக்கும் சமயங்களில்கூட, அதன் ஞாபகமாகவே இருந்தது. இவைகளோடு இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்தது.
குறுஞ்செய்தி அனுப்புவது, பகிர்ந்துகொள்வது, பேசுவது, அழுவது, சிரிப்பது என எல்லாமே மெய்நிகர் உலகத்தில் மட்டுமே நடந்தது. அன்றாட வாழ்க்கைப் பேச்சுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. இனி இதைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை என்றுதான் நினைக்கிறேன்.
ஒருமுறை, நெடு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய நண்பனைப் பார்த்தேன். வெகு நேரம் இருவரும் எதுவுமே பேசவில்லை. அவன் போனையே நோண்டிக் கொண்டிருக்க, நான் வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன். அந்த நொடியில்தான் இந்த வலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. வாட்ஸ்ஆப்பினுள் நுழையாமல், தனியாக அமர்ந்து, சுவர்களையே கொஞ்ச நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். 'அங்கே அவர்கள் எல்லோரும் பேசுவார்கள்; சிரிப்பார்கள்; சண்டை போட்டு ரசிப்பார்கள்' என்று தோன்றியது. உண்மையே இல்லாத மெய்நிகர் உலகம் என்னைக் கவர்ந்து இழுத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம், புத்தகம் படித்தேன்; கேக் தயாரித்தேன்; பேசாமல் தவறவிட்டிருந்தவர்களிடம் பேசினேன். அடிக்கடி அம்மா, மாமியாரின் நலம் விசாரித்தேன். கிசுகிசு பேசத் தோன்றிய போதெல்லாம், என் பெண்களுடன் கதை பேசினேன்.
ஒரு வழியாக அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என எல்லோரிடமும் இயல்பாகப் பேச முடிந்தது. வழக்கமான அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருந்தது. முன்னர் பேசியதைவிட இன்னும் தெளிவாக, ஆழமாக, அழகாக பேச முடிந்தது. அன்று தொடங்கி இப்பொழுது வரைக்கும், எல்லா சந்தோஷங்களையும் நிஜ உலகத்திலேயே பெற்றுக் கொள்கிறேன்.
தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி