Sunday, October 8, 2017


2 வயது குழந்தை யார் வசம் இருப்பது? ஐகோர்ட்டில் நடந்த உணர்வுபூர்வ விசாரணை

பதிவு செய்த நாள்08அக்
2017
00:20

சென்னை, ஒரு குழந்தைக்கு, இருவர் உரிமை கொண்டாடிய போது, அந்தப் பிரச்னையை தீர்த்து வைப்பது தொடர்பாக, அரசன் சாலமனின் தர்பார் மண்டபத்தில் நடந்த விசாரணை, இன்றும் பேசப்படுகிறது. அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திலும், 2 வயது குழந்தையை, யார் வசம் ஒப்படைப்பது என்பது குறித்து, உணர்வுபூர்வமான விசாரணை நடந்தது.

புகார்

அதன் விபரம் வருமாறு:

அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர், விஜயா; இவரது மகனுக்கும், கனகவள்ளி என்பவருக்கும், ௨௦௧௪ல், திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்தனர்.

இதற்கிடையில், கனகவள்ளி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். கனகவள்ளியின் சகோதரி லதா, போலீசில் புகார் அளித்தார். கொலை வழக்கில், கனகவள்ளியின் கணவன், அவரது தந்தை கைது செய்யப்பட்டனர். கனகவள்ளியின், 2 வயது குழந்தையை, லதா வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், பேரனை வலுக்கட்டாயமாக பறித்து சென்றதாகவும், தன்னிடம் ஒப்படைக்கும்படியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜயா மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், சதீஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன்
பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. குழந்தையுடன் லதாவும், நீதிமன்றத்தில்
ஆஜரானார்.

அப்போது, லதாவின் மடியில் இருந்த குழந்தையை, பெண் போலீசார் துாக்கினர். உடனே, அந்த குழந்தை அழுது அடம் பிடித்தது; யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், வழக்கு விசாரணையை, சிறிது நேரத்துக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அடம் பிடித்த குழந்தையை, நீதிமன்ற அறைக்கு வெளியில் துாக்கி வந்தனர். 

அங்கும், குழந்தையின் கதறல் ஒலித்தது. குழந்தையின் பாட்டி விஜயாவுக்கும், குழந்தையின் பெரியம்மா லதாவுக்கும் இடையே சண்டை
ஏற்பட்டது.

உத்தரவு

நீதிமன்ற பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த, மத்திய தொழிலக பாதுகாப்பு படையான சி.ஐ.எஸ்.எப்.,புக்கு, என்ன செய்வது என தெரியவில்லை. ஹிந்தி பேசும், சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கு, இவர்களின் மொழி புரியவில்லை. ஆனால், சண்டை நடப்பது மட்டும் புரிந்தது. கடைசியில், நம் ஊர் போலீசார்
வந்து, இருவரையும் விலக்கி விட்டனர்.

அரை மணி நேரத்துக்கு பின், இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அனைவரும், நீதிபதிகள் முன் ஆஜராகினர். அப்போது, தன் சகோதரி கொலை பற்றி, நீதிபதிகளிடம் லதா தெரிவித்தார்; குழந்தை, தன் பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். 

விசாரணை நடக்கும் போது, லதா வசம் இருந்த குழந்தையை, விஜயா பறித்தார்.

உடனே, குழந்தை மீண்டும் கதற துவங்கியது. அதைப் பார்த்த நீதிபதிகள், குழந்தையை, லதாவிடம் கொடுக்கும்படி கூறினர். லதா வசம் குழந்தை வந்ததும், அழுகை நின்றது. பெரியம்மா வசம் குழந்தை, வசதியாக இருப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, 'வழக்கை வாபஸ் பெறுகிறீர்களா அல்லது உத்தரவு பிறப்பிக்கட்டுமா' என, நீதிபதிகள் கேட்டனர். வழக்கை வாபஸ் பெறுவதாக, விஜயா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, பெரியம்மாவின் பாதுகாப்பில் குழந்தை இருக்கட்டும். குழந்தைக்கும், பெரியம்மாவுக்கும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Govt probing how cost of secretariat doubled in 4 years

Govt probing how cost of secretariat doubled in 4 years Koride.Mahesh@timesofindia.com 19.10.2024 Hyderabad : With allegations of abnormal i...