Sunday, October 8, 2017


திரையரங்குக் கட்டணங்கள் 25 சதவீதம் உயர்வு
By DIN | Published on : 08th October 2017 04:11 AM




திரையரங்குக் கட்டணங்களை 25 சதவீதம் உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் எந்த அளவுக்கு திரையரங்குக் கட்டணங்கள் வசூலிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட மாநகராட்சிப் பகுதிகளில் ஏ.சி. வசதி கொண்ட திரையரங்குகளில் (ஒரே ஒரு திரையரங்கு) குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.62.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஏ.சி. வசதியில்லாத திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.37.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.150-ஆகவும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ஆகவும் இருக்கும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை முதல்...மேலே குறிப்பிட்ட கட்டணங்களுடன் 10 சதவீத கேளிக்கை வரி, 28 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் திங்கள்கிழமை (அக். 9) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழகத்தில் திரையரங்கக் கட்டணங்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக உயர்நிலைக் குழுவை மாநில அரசு அமைத்தது. இந்தக் குழுவின் கூட்டத்தில் திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறினர். குறிப்பாக, திருட்டு சி.டி.யால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, திரையரங்குகளை நடத்துவதில் அதிகரித்து வரும் செலவு, கேளிக்கை வரி உயர்வு போன்ற பல்வேறு விஷயங்களைச் சுட்டிக் காட்டினர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திரையரங்கக் கட்டணங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருந்தால் பல திரையரங்குகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர். 

எனவே, திரையரங்கக் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

25 சதவீதம் உயர்வு: திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் அளித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்ட கட்டணம் மிக அதிகம் என தமிழக அரசு கருதுகிறது. பொது மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும், அதேசமயம், திரைப்படத் துறையினர் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு திரையரங்கக் கட்டணங்களை இப்போதுள்ள அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

மல்ட்டி-பிளக்ஸ் கட்டணம் எவ்வளவு?

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.150 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம் என்பது அனைத்து வகையான மல்டி-பிளக்ஸ் திரையரங்குகளிலும் ரூ.15 ஆக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: 

மல்ட்டி-பிளக்ஸ் திரையரங்குகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளாக இருந்து இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவையாகவும், வீட்டுக்கே டிக்கெட்டுகளை கொண்டு அளிக்கும் வசதியுடன் 800 இருக்கைகளுக்கு மேற்படாதவையாக இருந்தால் அந்தத் திரையரங்குகள் ஒரு பிரிவாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகவும் அதேசமயம் இணையதள முன்பதிவு வசதி போன்றவை இல்லாமல் இருந்தால் அது மற்றொரு பிரிவு மல்டி-பிளக்ஸ் திரையரங்குகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

மூன்று திரையரங்குகளுக்கு மேலாக இருந்து அனைத்து சகல வசதிகளையும் (இருக்கைக்கே திண்பண்டங்களைக் கொண்டு வருவது போன்ற வசதிகள்) கொண்டிருக்கக் கூடிய மல்ட்டி-பிளக்ஸ்கள் தனி பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில், முதல், இரண்டாம் பிரிவில் திரையரங்கக் கட்டணங்கள் அதிகபட்சமாக ரூ.118.80 மற்றும் ரூ.106.30- ஆக இருக்கும்.
அனைத்து சகல வசதிகளையும் கொண்டிருக்கக் கூடிய திரையரங்குகளின் அதிகபட்ச கட்டணம் ரூ.150-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வகையான மல்ட்டி-பிளக்ஸ் திரையரங்குகளிலும் குறைந்தபட்ச கட்டணம் என்பது ரூ.15-ஆகவே இருக்கும். இந்தக் கட்டணங்களுடன் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி ஆகியவையும் சேர்த்து வசூலிக்கப்படும்.

கட்டண விகிதங்கள் எவ்வளவு?

தமிழகத்தில் 25 சதவீத அளவுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட இடங்களுக்கு கட்டணங்கள் குறித்த விவரங்கள்:

மாநகராட்சிகள்:

குளிர்சாதன வசதி திரையரங்கு

குறைந்தபட்ச கட்டணம் ரூ.15.
அதிகபட்ச கட்டணம் ரூ.62.50.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம்: ரூ.10. அதிகபட்சம் ரூ.37.50.

நகராட்சிகள்:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10.
அதிகபட்ச கட்டணம் ரூ.50.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.37.50.

பேரூராட்சிகள்:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10.
அதிகபட்ச கட்டணம் ரூ.31.25.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.25.

ஊராட்சிகள்:

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10.
அதிகபட்ச கட்டணம் ரூ.18.75.

குளிர்சாதன வசதி இல்லாதவை:

குறைந்தபட்சம் ரூ.10, அதிகபட்சம் ரூ.15.

குறிப்பு: இது அடிப்படை திரையரங்கக் கட்டணம் மட்டுமே ஆகும். இதனுடன் கேளிக்கை வரி போன்றவை சேரும் போது திரையரங்கக் கட்டணம் மேலும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Govt probing how cost of secretariat doubled in 4 years

Govt probing how cost of secretariat doubled in 4 years Koride.Mahesh@timesofindia.com 19.10.2024 Hyderabad : With allegations of abnormal i...