Sunday, October 8, 2017


திருப்பதிக்கு செல்ல இயலாதவர்கள் இங்குச் செல்லலாம்!
Published on : 07th October 2017 01:08 PM |



திருப்பதி செல்ல இயலாதவர்களும், சென்று திருவேங்கடவனை திருப்தியாய் தரிசனம் செய்யாதவர்களும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை அதே உருவில் மூலவராகத் தரிசனம் செய்ய உகந்த தலம் திருமலைவையாவூர்.

ராமாயண யுத்தம் நடந்த 14-ம் நாளில் ஸ்ரீ லக்ஷ்மணர் காயம்பட்டு விழ, ராமபிரானின் கட்டளைப்படி ஸ்ரீ அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து தூக்கி வந்தார், சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்த போது சற்று இளைப்பாற எண்ணி, மலையைக் கீழே வைக்காமல் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டு நின்றார். அச்சமயம், சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி சிதறி விழுந்தது. மலையை கீழே வைக்காத ஊர் என்பதே மருவி வையாவூர் ஆகி, திருமலைவையாவூர் எனப் பெயர் வழங்கத் தொடங்கியது.

முன்னையகோன் என்பவன், அந்தப்பகுதி மக்களின் தலைவனாக இருந்தான். அந்த மலை மற்றும் ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் தினமும் பசுக்களை மேய்த்து வந்தான். ஒருநாள், அந்த மலைமீதிருந்த ஒரு பெரிய கற்பாறை அவனுக்கு தெய்வத் திருமேனியாகத் தெரிந்தது. தினமும் மாடுகளை மேய விட்டு உச்சிப்போதில் அவனுடைய மனைவி பிராட்டிகோன் கொண்டுவரும் கேழ்வரகுக் கூழை அந்தக் கல்லின் முன்னே வைத்து, நைவேத்தியம் செய்துவிட்டு, பிறகு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனுடைய பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய பெருமாள், புனை வேடமிட்டு அவன் முன்னே வந்தார்.

"பிருகு மகரிஷி இருக்கும் மலைக்குச் செல்லும் பாதை தெரியவில்லை. உங்களைப் பார்த்ததும் இங்கு வந்தேன்'' என்றவர், கேழ்வரகு நைவேத்தியத்தைப் பார்த்துவிட்டு "'கோன் குலத்தில் பிறந்த நீ பகவானுக்கு, பால் நைவேத்தியம் செய்யாமல், கேழ்வரகு கூழ் வைத்து நைவேத்தியம் செய்கிறாயே! இருந்தாலும் உன் உழைப்பின் மூலம் உருவான சுத்தமான, பால் நைவேத்தியம் செய்து வழிபடு'' என்று சொல்லிச் சென்றார். அன்று முதல், முன்னையகோன் தன் மனைவியுடன் வந்து, உரிய முறையில் பால் நிவேதனம் செய்து பின்னர் கூழையும் நிவேதனம் செய்து வழிபட்டு வந்தான்.

ஒருநாள், நேரில் தோன்றிய பெருமாள் "என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்க, அதற்கு, "தாங்கள் இங்கேயே நிரந்தரமாக இருந்து வேண்டுவோருக்கு வேண்டுவதைத் தரும் வேங்கடவனாக நித்ய வாசம் செய்ய வேண்டும். நானும் என் மனைவியும் நின் காலடிக்கீழ் கிடந்து உன் வடிவழகை சதா சேவித்துக் கொண்டிருக்கும் நிலை வேண்டும்'' என வேண்டினான். பெருமாளும் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்துடன் அருள்செய்வதாகவும் இது ஆதிவராக க்ஷேத்திரம் என்பதால் அவ்வுருவிலும் தாம் அருள்வதாக வாக்களித்தார்.

காலங்கள் உருண்டோடின.. முகலாயப் பேரரசர் அக்பருடன் இருந்த ராஜா தோடர்மால் திருப்பதி திருத்தலத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறார். பெருமாள் சொன்னதின் பேரில் இம்மலைக்குத் தரிசிக்க வந்த போது, முன்னையக்கோன், பிராட்டிகோன் பணியை அறிந்து கோயில் முழுவதையும் கருங்கல்லால் கட்டி பெருமாளின் திரு முன்பு அவர்கள் சதா சேவை செய்யும் வகையில் கிடத்தினான். அதோடு இந்தப் பெருமாளை தான் தினமும் வணங்கும் வகையில் தன் விக்ரகத்தைச் செய்து இறைவனை வழிபடும் வகையில் கோயிலில் நிறுத்தினான்.

ராஜாதோடர்மாலுக்கு இங்கு மட்டுமே உருவச்சிலை இருப்பதாக அறிய முடிகிறது! ஆதிவராக ஷேத்திரம் என்பதற்கு ஏற்ப, கொடி மரத்திற்கு எதிரில் லட்சுமி வராகர் சந்நிதி உள்ளது. பிரதான மூர்த்தியான இவருக்கே முதல் தீபாராதனை நடைபெறும். பிரசன்னவெங்கடேசருக்கு விழா நடக்கும் போதும் கூட, இவரது சந்நிதியில் தான் கொடி ஏற்றப்படும். மேலும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. பெரிய நம்பியைச் சந்திக்க ஸ்ரீராமாநுஜர் மதுராந்தகம் செல்லும் வழியில் இப்பெருமாளை கண்டு வணங்கி ஆசி பெற்றுச் சென்றதாகத் தகவல்கள் இருக்கின்றன.

மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை, அஷ்டலட்சுமி ஆரம், ஸ்ரீலட்சுமி ஆரம், தசாவதார திருக்கோலங்கள் கொண்ட ஆபரணத்தை மாலையாகவும் ஒட்டியாணமாகவும் அணிந்தபடி ஆதிசேஷன் குடை பிடிக்க நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகள் என்றும் நீங்காது அருள் புரிகின்றனர். இங்கு, ஒரே வளாகத்துக்குள் தனித்தனி சந்நிதியில் பெருமாளையும் அலர்மேல்மங்கைத் தாயாரையும் தரிசிக்கலாம். நேமியோன் என்னும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் இங்கு தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில் வணங்குவதால் சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பதால் மக்கள் வரத்து அதிகம்! பங்குனி உத்திரத்தில் தாயாருக்கும்; ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ ஆண்டாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது. கலந்து கொள்ளும் கன்னிகளுக்குத் திருமணம் கைகூடுகிறது. புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இங்கே நடைபெறும் திருப்பாவாடை உற்சவம் சிறப்பானது. சித்திரை மற்றும் புரட்டாசியில் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். புரட்டாசி பிரம்மோத்சவம் துவங்கியதும் திருப்பதி போலவே ஐந்தாம் நாள், கருடசேவை நடைபெறும்.

ஆதிசேஷன் பல்வேறு தலங்களில் ஆசனமாகவும் படுக்கையாகவும் இருந்து திருமாலுக்கு சேவை செய்வார். இத்தலத்தில் பிரசன்னமாகி நின்ற கோலத்தில் அருளுவதால் இத்தலம் தென் திருப்பதி எனப்படுகிறது.

ஆதிசேஷன் இம்மூலவருக்குக் குடைபோல் கவிழ்ந்து காட்சி தருகிறார். அதனால் இத்திருக்கோயிலில் எங்கும் இல்லாத சிறப்பாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பெருமாள் குடையுடன் நடந்து வந்து புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனம் செய்துவிட்டுச் செல்லும் வழக்கம் உண்டு.

கோயில் அமைவிடம்: திருமலைவையாவூர், செங்கல்பட்டு- படாளம் கூட்டுரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு 94432 39005/ 99940 95187 - செங்கை .பி. அமுதா

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024