Sunday, October 8, 2017


ஆம்னி பஸ் கட்டணத்தை விஞ்சும் தீபாவளி சுவிதா ரயில் கட்டணங்கள்!
By ஆர்.ஜி.ஜெகதீஷ் | Published on : 08th October 2017 02:30 AM |




தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில்களை இரு தினங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே அறிவித்தது. இதில், முதலில் சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் எர்ணாகுளத்துக்கு சுவிதா மற்றும் சிறப்புக் கட்டண ரயில்களை அறிவித்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து கோவைக்கும் சிறப்பு சுவிதா ரயில் அறிவிக்கப்பட்டது.

பொதுவாக பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில்தான் மக்களின் தேவையைப் பயன்படுத்தி கட்டணங்களில் வசூல் வேட்டையை நடத்துவது வாடிக்கை. இப்போது, ரயில்வே நிர்வாகமும் இதே நடைமுறையை அதிகாரப்பூர்வமாக சுவிதா சிறப்பு ரயில் என்ற பெயரில் மேற்கொண்டு வருகிறது. ஆம்னி பஸ் கட்டணமும், சுவிதா ரயில் பயணச் சீட்டு கட்டணமும் ஒப்பீட்டளவில் பெரிய வித்தியாசங்களைக் கொண்டுள்ளதாக தெரியவில்லை. ஆம்னி பஸ்கள் தனியாருக்கு சொந்தமானவை. அவை அதிக லாப நோக்கில் மக்களிடமிருந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை அரசு ஓரளவு தலையிட்டு தடுக்க முடியும். ஆனால், ரயில்வேயை பொருத்தவரை அரசாங்கமே அதிக கட்டண வசூல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுவும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குதான் அதிகளவு மக்கள் செல்கின்றனர் என்பதால் திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்களை வாரி வழங்குயிருக்கிறது தெற்கு ரயில்வே நிர்வாகம்.
2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம்: சுவிதா என்ற புதிய பெயரில் அதிக கட்டண ரயில்களை ரயில்வே துறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. சுவிதா ரயில் முழுவதும் ஏசி பெட்டிகள் கொண்ட ரயில், நிறுத்தங்கள் ஏதுமில்லை என்பதால் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான அடிப்படை கட்டணத்துடன் தட்கல் கட்டணமும் சேர்த்து அடிப்படை கட்டணமாக வசூலிக்கப்படும்.





ஏசி பெட்டிகளுடன் இதர பெட்டிகளும் சேர்க்கப்பட்டு, நிறுத்தங்கள் ஏதும் இல்லாத சுவிதா சிறப்பு ரயிலுக்கான கட்டணம், துரந்தோ ரயிலுக்கான கட்டணத்துடன் தட்கல் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
ஏசி, வழக்கமான பெட்டிகளுடன் நிறுத்தங்களும் இருந்தால் அந்த சுவிதா ரயிலுக்கு வழக்கமான மெயில்/விரைவு ரயில் கட்டணத்துடன் தட்கல் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் தவிர முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் கட்டணம், உணவு கட்டணம், சேவை வரி ஆகியவை தனி. 

கட்டணப் பிரிவு: இந்த சிறப்பு ரயில்களில் ஒரு பெட்டியில் இருக்கும் 100 இடங்களும், தலா 20 வீதம் 5 பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் 20 இடங்களுக்கு ஒரு கட்டணம், அடுத்த 20 இடங்களுக்கு இன்னும் அதிக கட்டணம். 80 முதல் 100 வரை உள்ள இடங்களுக்கு மிக, மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுவிதா குறைந்த ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க உறுதி செய்யப்பட்டுள்ள பயணச் சீட்டை மட்டும்தான் பெற முடியும். இதில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எதுவும் இல்லை. இந்த ரயில்களில் சாமானியர்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளது. 

வடமாநிலங்களில் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதில் உள்ள பெட்டிகள் எல்லாம் முன்பதிவு செய்யப்படாதவை. இது போன்ற ரயில்கள் ஏன் தமிழகத்தில் இயக்கப்படுவதில்லை என்பதே தெரியவில்லை. அதேபோல மூத்த குடிமக்கள், சிறுவர், நோயாளிகள், ரயில்வே ஊழியர்களுக்கான சலுகைகள் உட்பட எந்த சலுகையும் இந்த ரயில்களில் கிடையாது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
இது குறித்து தெற்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியது: மக்களின் தேவையை அடிப்படையாக கொண்டுதான் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், சுமார் 25 சதவீத இடங்கள் இந்த ரயில்களில் காலியாக உள்ளன. இப்போது தீபாவளி பண்டிகை என்பதால் வழக்கமான விரைவு ரயில்களின் முன்பதிவு முடிந்துவிட்டது. 

எனவே சுவிதா போன்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்போது சுவிதா சிறப்பு ரயில்களில் கூட சாதாரண படுக்கை வசதி இடங்கள் நிரம்பிவிட்டன, இன்னும் முதல், இரண்டாம் வகுப்புகள்தான் நிரம்பவில்லை என்றார் அவர்.

இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர், ரஞ்ஜித் கூறியது: சென்னையில் இருந்து கோவைக்கு விமானக் கட்டணம் ரூ.2700, ஆனால் இப்போது அறிவித்துள்ள சுவிதா ரயிலில் ரூ.2790 என்பது இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணமாகும். விமானத்தில் கோவைக்கு 1 மணி நேர பயணம், அப்போது நான் எதற்கு அவ்வளவு பணம் கொடுத்து 8 மணி நேரம் பயணம் செய்து கோவைக்கு போகவேண்டும் ? "போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் விமான நிறுவனங்கள் 6 மாதங்கள் அல்லது 3 மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு கட்டண சலுகையை வழங்கி வருகிறது. ஆனால், ரயில்வே துறையில் போட்டியாளர்கள் இல்லாத சூழலில் இந்தக் கட்டண முறையை புகுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரயில்வே நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை, ரயில் சேவையையும் மேம்படுத்தாத நிலையில், சுவிதா போன்ற சிறப்பு ரயில்களில் கட்டணத்தை மட்டுமே பல மடங்கு உயர்த்தி ரயில்கள் இயக்குவது எந்த விதத்தில் நியாயம்? என்றார் ரஞ்ஜித்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024