Sunday, October 8, 2017

கொத்துக் கொத்தாய் டெங்கு மரணங்கள்-கொந்தளிக்கும் மக்கள்!
vikatan
சே.த.இளங்கோவன்



சேலம், களரம்பட்டி மெயின் ரோடு பாரதியார் நகரில், தமது வீட்டின் முன் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருக்கிறார், முகமது மொய்தீனின் 5-ம் வகுப்பு பயிலும் 9 வயது மகள் ஆயிஷா. சில நிமிடங்களில் அசதி நிலை அடைந்தவர், அப்படியே வீட்டுக்குள் சென்று படுத்து உறங்குகிறார். அதிகாலையில், காய்ச்சல் அனலடிக்க பதறியடித்துக்கொண்டு மகளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள் பெற்றோர். நான்கு நாள்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலனில்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக மலர வேண்டிய பாரதியார் நகர் ஆயிஷாவை, பறித்துக்கொண்டு சென்றது 'டெங்கு'.


தமிழ்நாட்டையே புரட்டியெடுக்கும் டெங்கு காய்ச்சலுக்கு சேலம் ஆயிஷா மரணம், ஒரு சோறு பதம். அவரைப்போல தமிழ்நாட்டு வீதிகளில் துள்ளித்திரிய வேண்டிய மழலைகளை, சிறுவர் - சிறுமியர் முதற்கொண்டு பெரியவர்கள், முதியவர்கள் வரை அனைத்துப் பிரிவினர் மீதும் போர் தொடுக்கிறது 'டெங்கு'. பல நூறு பேர்களைக் காவு வாங்கிய டெங்கு, பல்லாயிரக்கணக்கானோரை மருத்துவமனையில் அனுமதிக்க வைத்துள்ளது. டெங்கு காய்ச்சலினால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டெங்கு' என்றால் என்ன?

‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் ஆகும்.‘ஏடிஸ் எஜிப்தி’ ( Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும். இது தொற்று வியாதி அல்ல... ஆனால், ஏடிஸ் கொசுக்கள் மூலம் எளிதில் பரவக்கூடிய நோயாகும். டெங்குவை உண்டாக்கும் கொசு மழைநீர் மற்றும் சுத்தமான நீரில் மட்டுமே உருவாகிறது. டெங்கு கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். ஒரு டெங்கு கொசு 21 நாள்கள் மட்டுமே உயிர்வாழும். அதற்குள் 3 முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 200 முதல் 300 முட்டைகள் வரை இடும். டயர் - தேங்காய்க் கூடு - டீ கப் - குடம் - தண்ணீர் தொட்டி போன்றவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதாலும் அதில் டெங்கு கொசுக்கள் முட்டையிடுகிறது. அதனால் டெங்குக் கொசுக்கள் வேகமாக உருவாகிறது.



மக்கள் மீதே நடவடிக்கையா ?

"தேக்கி வைக்கும் தண்ணீரின் மூலம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே, தண்ணீரை பாத்திரங்களில் தேக்கி வைக்க வேண்டாம். தேங்காய் கூடுகள், டயர்கள் வீட்டின் முன் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்." என நாள்தோறும் எச்சரிக்கை செய்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதில் உச்சபட்சமாக, தற்போது 'குடியிருப்புப் பகுதிகளில், டெங்கு புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால், பொதுச்சுகாதார சட்டப்பிரிவுகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என சுகாதாரத்துறை அறிவிக்க... இது மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது எந்தவகையில் நியாயம்? என கேள்வி எழுப்புகிறார் தி.மு.க மருத்துவ அணி மாநிலச் செயலாளர் மருத்துவர் கனிமொழி சோமு. அதோடு தமது பாதிப்பையும் விளக்கத் தொடங்குகிறார்.

கடமையைச் செய்யாத அரசு

"மிகவும் சுத்தபத்தமாக மருத்துவத் தொழில் செய்யும் மருத்துவரான நான், நேரடியாக டெங்குக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, 10 நாள்களுக்குப் பிறகு உயிர்ப் பிழைத்து வந்துள்ளேன். எங்கள் வீட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதில்லை, மிகுந்த விழிப்பு உணர்வோடு இருந்தவர்களே நாங்கள். பிறகு எப்படி டெங்கு தாக்கியது? வீட்டில் தண்ணீர் தேக்குவது போன்றவை ஏடிஸ் கொசுக்கள் உருவாகக் காரணம் என்றாலும் அது மாத்திரமே பிரதான காரணமல்ல என்பதையே சொல்ல வருகிறேன். குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீர் ஓர் பிரதான காரணம். மேலும் ஆண்டுதோறும் மழைக்காலங்களின்போது டெங்கு உள்ளிட்ட நோய் குறித்த எச்சரிக்கைகள், அதை எதிர்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறையினர், சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்துவர். இந்தாண்டு வழக்கம் போல் இல்லாமல், மே மாதத்திலேயே மழை பொழியத் தொடங்கிவிட்டது. அப்போதே பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் அரசு பார்த்துக்கொண்டிருந்தால், இந்தளவுக்கு டெங்கு பரவியிருக்காது. எனது பாதிப்பிலிருந்தே ஓர் உதாரணம் கூறுகிறேன். ஒருவருக்கு டெங்கு உறுதியானால், சிகிச்சை கொடுக்கும் மருத்துவமனை, உடனடியாக மாநகராட்சிக்குத் தகவல் கொடுக்கும். மாநகராட்சி அதிகாரிகள், பாதிக்கப்பட்டவரிடம் பேசி டெங்குவை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு அவர் குடியிருக்கும் வீட்டின் அருகாமை வீடுகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் சென்று, அங்கெல்லாம் கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஏனெனில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் மற்றவர்களுக்கு டெங்கு பரவிவிடக் கூடாதல்லவா. இதுதான் நடைமுறை. ஆனால், என் அருகில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி எந்த தகவலும் சொல்லவில்லை, கொசு மருந்து அடிக்கும் தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. செயல்படாத, மக்கள் மீது அக்கறையில்லாத அரசாக உள்ளது. 'பைரெத்ரின்' ( Pyrethrin) என்ற மருந்தை ஒரு லிட்டர் மண்ணெண்ணெயில் 0.5% விழுக்காடு கலந்து, வாரம் ஒருமுறை அனைத்துப் பகுதிகளிலும் மருந்தடிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதெல்லாம் செய்வதேயில்லை. எதையும் தடுக்கக்கூடிய இடத்தில் ஆளும் அரசு உள்ளது. ஆனால், அதைவிடுத்து நீங்கள் பாத்திரங்களில் தண்ணீர் தேக்காதீர்கள் என்றெல்லாம் மக்களையே குற்றம் சொல்வது எப்படி சரியாகும்...'' என்றவர் தொடர்ந்து "பரிசோதனைகளில் டெங்கு உறுதியானாலும், வைரஸ் காய்ச்சல் என்றே பதிவு செய்யும்படி எழுதப்படாத உத்தரவை மருத்துவமனைகளுக்கு இந்த அரசு வழங்கியுள்ளது. நாள்தோறும் பிஞ்சுக் குழந்தைகள் டெங்குவால் மரணத்தை சந்தித்தாலும் அதைத் தடுக்க முழுமையான முயற்சி எடுக்காமல், கணக்கைக் குறைத்துச் சொல்வதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது ஆளும் அரசு. நிலவேம்புக் கஷாயம் கொடுப்பதோடு கடமை முடிந்துவிடுவதாக கருதுவது நல்ல அரசுக்கு அழகல்ல." என்றார்.

முதல்வர் மாவட்டத்தில் பெருகும் டெங்கு :

டெங்கு தமிழ்நாடெங்கும் பரவினாலும் திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் அதன் பாதிப்பின் வீரியம் அதிகம் என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத சுகாதாரத்துறையினர். 5.10.17 அன்று முதல்வரின் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10-ம் வகுப்பு மாணவி சுவேதா டெங்குவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர் என வேதனைக் குரலை வெளிப்படுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஏன் சேலத்தில் பாதிப்பு அதிகம்?

"சேலம் முழுக்கவே சாலைகள், மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. பல்வேறு திட்டங்களுக்காக ஆங்காங்கே குழிகளைத் தோண்டியுள்ளனர். யாராவது ஏரியல் வியூவில் பார்த்தால் சேலம் முழுக்க குண்டும் குழியுமாகவே காட்சிதரும். வழக்கத்தைவிட இம்முறை சேலத்தில் கடுமையான மழைப்பொழிவு இருந்ததால், இந்தக் குழிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கின. பல இடங்களில் இதைச் சரி செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடவில்லை. இங்கெல்லாம் கொசுக்கள் உருவாகின. கொசு மருந்து முறையாக அடிக்கப்படுவதில்லை. மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டால், 'ஒரு கிலோமீட்டருக்கு அடிக்க வேண்டிய மருந்து தண்ணீரை கொடுத்து 17 கி.மீ -க்கு அடிங்கன்னு சொல்றாங்க. வெறும் மண்ணெண்ணெயை அடிச்சுக்கிட்டு வரோம். நாங்க என்ன செய்ய ?' என்கின்றனர். இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தால் புரியும். எங்கு திரும்பினாலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள். போதிய படுக்கைகள், மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவர்களிடம் கேட்டால் , '40 மருத்துவர்கள் பார்க்க வேண்டிய சிகிச்சையை, 4 மருத்துவர்கள் பார்க்க வேண்டிய நிலை. போதிய மருத்துவர்கள் இல்லை' என்கின்றனர். இப்படி தமிழ்நாட்டின் அத்தனை துறையும் பாதிப்பில் இருக்கின்றன. அத்தனையும் சேர்ந்து மக்களைப் பாதிக்க, இவை அத்தனையையும் வேடிக்கைப் பார்க்கிறது அ.தி.மு.க அரசு " என்கிறார் தி.மு.க மாணவரணி மாநில துணைச் செயலாளர் ரா.தமிழரசன்.

ஏன் குழந்தைகளைத் தாக்குகிறது ஏடிஸ் கொசு ?

மக்கள் தேசம் கட்சியின் மாநில கொ.ப.செ. சுலைமான் பார்வை வேறுவகையில் உள்ளது.

"சேலம் மாவட்டத்தில் நெருக்கமான வகையில் வீடுகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பலர் வசிக்கும் சூழலே சேலத்தின் முகமாகும். இது ஏடிஸ் கொசுக்கள் மூலம் டெங்கு பரவ ஒரு காரணமாகிறது. ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய ஏழை மக்கள் இங்கு அதிகம். ஏடிஸ் கொசுக்கள் இரண்டு அடி உயரம் வரை பறக்கும். பெரியவர்கள் பேண்ட், புடவை, சுடிதார் போன்றவற்றை அணிவதால் நேரடியாக கொசுக்கள் உடலைக் கடிக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால், குழந்தைகள் வெற்று உடம்புடன் அல்லது சின்ன உள்ளாடை அணிந்து இருப்பதால் எளிதில் அவர்களை இவ்வகை கொசுக்கள் கடிக்கின்றன. குழந்தைகளுக்கு பல்வேறு துணிமணிகளை வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பற்றவர்கள் விளிம்புநிலை மக்கள். எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் டெங்குவால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதை டெங்குவுக்கான பிரச்னையாகப் பாராமல் சமூக, அரசியல்,பொருளாதாரப் பின்னணியோடு அணுகி சரி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். வறுமையை ஒழித்து, வாழ்வாதாரத்தை வளர்த்தெடுக்கும் சூழலை அரசு உருவாக்கும்போது டெங்கு போன்ற நோய்களால் ஏற்படும் மரண அளவையும் குறைக்கலாம் " என்கிறார் அக்கறையோடு.

'டெங்குவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், புதிதாக யாரும் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம்' என்கிறது தமிழ்நாடு அரசு.

டெங்குவுக்கு என்னதான் மருந்து ?

"டெங்கு குறித்து பீதியடையத் தேவையில்லை. டெங்கு குறித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்புகளை முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும். டெங்குவுக்கு முன்கூட்டியும், முதலிலேயும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் இதிலிருந்து மீளலாம்" என்கிறார் அரசு ஹோமியோபதி மருத்துவர் வீ.மு. சசிகுமார். தொடர்ந்து "நிறைய தண்ணீர் மற்றும் பழச்சாறு அருந்துவதன் மூலம் ரத்தத் தட்டுக்கள் (platelets) குறையாமல் பார்த்துக்கொள்ளமுடியும். இவையில்லாமல் ஹோமியோவில் டெங்குவுக்கு மருந்தும் உள்ளது'' என்றவர் அதையும் பட்டியலிட்டார்.

"அக்கோனைட்,

ஆர்ஸ் ஆல்ப்,

சைனா,

ஈபடோரியம், ஜெல்சீமியம்,

பாஸ்பரஸ்,

ரஸ் டாக்,

போன்ற மருந்துகள் டெங்குவின் தாக்கத்தை குறைப்பதோடு, ரத்தத் தட்டுக்கள் (platelets) குறைவதையும் சரி செய்யும் ஆற்றல் படைத்தவை. மேலும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவதினால் தடுப்பு மருந்தாகக் கூட செயல்படும். 100 விழுக்காடு பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் ஹோமியோபதி" என்கிறார் நம்பிக்கையான குரலில். டெங்கு பாதிப்பில் இருந்து தப்பிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்கவேண்டியது மக்களின் கடமை. டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து காப்பாற்ற வேண்டியது அரசு மற்றும் மருத்துவமனைகளின் கடமை!

துரிதமாக இயங்கவேண்டியது டெங்கு ஒழிப்பு மருந்து மட்டுமல்ல, தமிழக அரசும்தான் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.






No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024