எம்பிபிஎஸ் படிப்பை முடித்த தார்ச்சாலை தொழிலாளி: சொந்த ஊர் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு
By DIN | Published on : 20th April 2018 01:30 AM
சாலை பணியில் ஈடுபட்ட முருகானந்தம் - 27.6.12 தினமணி செய்தியில் பிரசுரமானது. (உள்படம்) டாக்டர் முருகானந்தம்.
'பாதை வகுத்த பின்பு... பயணம் நடத்தி விடு' என்ற தலைப்பில் எம்பிபிஎஸ் கட் ஆப் 199.5 எடுத்த ஏழை மாணவர் முருகானந்தம், வறுமை காரணமாக தார்ச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது தினமணியில் கடந்த 27.6.2012 அன்று சிறப்பு செய்தியாக வெளியானது.
இதையடுத்து, உதவும் உள்ளமுடையோர் பலரும் முன்வந்து அளித்த நிதியுதவியுடன், எம்பிபிஎஸ் படிப்பை முடித்து டாக்டராகி சொந்த ஊர் திரும்பிய முருகானந்தத்துக்கு அனைத்துத் தரப்பினரும் அளித்த வரவேற்பும், பாராட்டும் நெஞ்சை நெகிழச் செய்வதாய் அமைந்துள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சிக்குள்பட்ட லிங்கத்தடி கிராமத்தைச் சேர்ந்தவர் இ. பக்கிரிசாமி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு லாப்டி (உழவனின் நில உரிமை இயக்கம்) அளித்த சிறிய அளவிலான ஓட்டு வீடு மட்டுமே சொந்தம்.
இவரது மகன் முருகானந்தம், தலைஞாயிறு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, தாயார் காலமாகிவிட, அந்த இக்கட்டான மனநிலையிலும் பொதுத் தேர்வெழுதி 2010-இல் பத்தாம் வகுப்பில் 451 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலாவது மாணவனாகத் திகழ்ந்தார்.
அதோடு மட்டுமல்லாமல், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றதால், அப்போதைய தலைமையாசிரியர் நரேந்திரன் உதவியுடன், ஆதிதிராவிடர் நலத்துறையின் பரிந்துரையில் பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். முருகானந்தத்தின் கடின உழைப்பின் பலனாக 2012-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவில் 1,140 மதிப்பெண் பெற்றார். மேலும், கட்-ஆப் மதிப்பெண் 199.5 பெற்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான பட்டியலில் 4-ஆம் இடத்தையும், பொதுப் பிரிவில் 83-ஆம் இடத்தையும் பிடித்தார்.
மருத்துவம் பயில வாய்ப்புப் பிரகாசமாக இருந்த போதிலும், குடும்பச் சூழல் காரணமாக கூலிவேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். கட்-ஆப் பட்டியல் வெளியான நாளில் ஓடாச்சேரி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியில் முருகானந்தம் ஈடுபட்டிருந்தார். இது கடந்த 27.7.2012-இல் தினமணியில் சிறப்புச் செய்தியாக புகைப்படத்துடன் வெளியானது.
உதவிய உள்ளங்கள்: இந்த செய்தி வெளியான அன்றைய தினமே பல்வேறு தரப்பினரும் திருச்சி தினமணி அலுவலகம் உள்ளிட்ட அதன் கிளை அலுவலகங்களையும், செய்தியாளர்களையும் தொடர்புகொண்டு முருகானந்தத்துக்கு உதவ முன்வந்தனர்.
இவர்களில், தோப்புத்துறை ஆரிப்பா குழுமத்தின் தலைவர் சுல்தானுல் ஆரிப்பின் ரூ.25 ஆயிரம், அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த தற்போதைய தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் ரூ.50 ஆயிரம், முருகானந்தம் படித்த பட்டுக்கோட்டை லாரல் பள்ளி நிர்வாகம்- ஆசிரியர்கள் இணைந்து ரூ.50 ஆயிரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தவிர திருச்சி ஒப்பந்ததாரர் சங்கம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் என மேற்கொண்டு பலரும் உதவ முன்வந்தனர். லாப்டி இயக்கத் தலைவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், முருகானந்தத்தின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று உதவ முன்வந்தார். இன்னும் சிலர் முழு செலவினங்களையும் ஏற்று படிக்க வைக்க முன்வந்ததும் நன்றியோடு கூட நினைவுக் கூரப்படுகிறது.
இதன் பலனாக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகானந்தம் எம்பிபிஎஸ் சேர்ந்தார்.
சாதாரண ஏழை கூலித் தொழிலாளி மகனாக சென்னை சென்ற அவர், 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஒரு டாக்டராக அண்மையில் (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர் திரும்பினார். இதையொட்டி, அவருக்கு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டாக்டர் முருகானந்தனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும், பாராட்டும் நெஞ்சை நெகிழச் செய்வதாக அமைந்தது.
விழாவுக்கு சமூக ஆர்வலர் சோமு இளங்கோ தலைமை வகித்தார். அமைச்சர் ஓ.எஸ். மணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று முருகானந்தத்தை பாராட்டியதோடு, அவர் உயர் படிப்புகளைத் தொடர்ந்து படிக்கவும், அதற்குத் தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முருகானந்தத்துக்கு பத்தாம் வகுப்பில் பாடம் நடத்தி, பின்னர் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று அண்மையில் ஓய்வுபெற்ற நரேந்திரன், லாரல் பள்ளி உதவி தலைமையாசிரியர் ராசேந்திரன், வகுப்பாசிரியர் சோமு, அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வணிகர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வுபெற்ற அலுவலர்கள் என பலரும் வாழ்த்தினர். கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திக்கற்று நின்றபோது திசைகாட்டிய தினமணி விழாவில் ஏற்புரை நிகழ்த்திய டாக்டர் முருகானந்தம் கூறியது:
அப்பா, அம்மா, 3 சகோதரிகள் என எனது குடும்பத்தினர் வறுமையைப் பொருட்படுத்தாமல் அளித்த ஊக்கத்தால்தான் என்னால் படிக்க முடிந்தது. எம்பிபிஎஸ் படிக்க விருப்பமும், வாய்ப்பும் இருந்தும் குடும்பச் சூழ்நிலையால் திக்கற்று நின்ற எனக்கு தினமணி திசைக்காட்டியாக இருந்ததையும், தினமணி செய்திக்குப் பின்னர் எனது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டதையும் உணர்கிறேன்.
ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதன் மூலம், நான் எம்பிபிஎஸ் படிக்க பல்வேறு நிலைகளில் உதவியாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார் டாக்டர் முருகானந்தம்.