Thursday, April 19, 2018

ஏர்டெல் நெட்வொர்க் 'ஜாம்': வாசகர்களே எழுதுங்கள்

Updated : ஏப் 18, 2018 12:42 | Added : ஏப் 18, 2018 12:30 |

  கோவை: தமிழகத்தில், சில வாரங்களாக, ஏர்டெல் மொபைல்போன் நெட்வொர்க் கிடைக்காமல் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் மொபைல்போன் நெட்வொர்க் சேவை, 20 நாட்களுக்கு மேலாக சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கில் உள்ள மொபைல் எண்ணுக்கு அழைக்க வேண்டுமெனில், பலமுறை முயற்சி செய்த பின்னரே இணைப்பு கிடைக்கிறது; சில சமயம் அதுவும் கிடைப்பதில்லை. மேலும், 4ஜி சிம்மில், 2ஜி சேவை தான் கிடைக்கிறது என்று 'நெட்டிசன்'கள் தரப்பிலும் கடும் அதிருப்தி கிளம்பி வருகிறது. சிக்னல் முழுமையாக இருந்தும் கால் செய்ய முடியவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, கோவை தொலைத்தொடர்புத்துறை கண்காணிப்பு மற்றும் புகார் பிரிவு இணை இயக்குனர் குப்புசாமி கூறியதாவது: தற்போது, ஏர்செல் வாடிக்கையாளர்கள், 32 லட்சம் பேர் ஏர்டெல்லில் இணைந்துள்ளனர். வோடபோன் நெட்வொர்க்கிற்கு, 27 லட்சம் பேரும், பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கிற்கு 8 லட்சம் பேரும் மாறியுள்ளனர்.

குறுகிய கால இடைவெளியில் பெருவாரியான வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கிற்கு மாறும் போது இத்தகைய நெட்வொர்க் பிரச்னை ஏற்படுவது வழக்கம். தமிழகத்தில், 27 ஆயிரம் மொபைல் போன் டவர்கள் உள்ளன. இதில், 9 ஆயிரம் டவர்களில், பிற ஆபரேட்டர்கள் அவரவர் ஆன்டனாவை பொருத்தி, கூட்டாக நெட்வொர்க் சேவை வழங்குகின்றனர்.

இவ்வாறு பகிர்ந்து அளிக்கும் நெட்வொர்க் வழியே ஒரு குறிப்பிட்ட அளவு அழைப்புகள் மட்டுமே செல்ல முடியும். தவறும்பட்சத்தில் நெட்வொர்க் நெரிசல் ஏற்படுகிறது. இந்த சமயங்களில், அழைப்புகளுக்கு உடனடியாக இணைப்பு கிடைக்காது; பலமுறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஒரு குறிப்பிட்ட ஏரியாவில், 'சர்க்யூட்' செயலிழக்கும் போதே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. நெட்வொர்க் சிக்னல் முழுமையாக இருக்கும். ஆனால் அழைப்புக்கு இணைப்பு கிடைக்காது.

இதற்கு மாற்றாக, டவர் ஆன்டனாக்களில் கூடுதல், 'கார்ட்ஸ்' இணைத்து நிலைமையை சரி செய்யலாம். ஆனால், ஒரே நாளில் ஆர்டர் செய்து, கார்டை பொருத்தி, டிராபிக்கை மீட்டெடுப்பது மிகவும் சிரமம்.இது தற்காலிக பிரச்னைதான். அதிகபட்சம், இரண்டு முதல் மூன்று வாரங்களில் சீராகிவிடும். ஒவ்வொரு நெட்வொர்க்கும் தினசரி கண்காணிக்க வேண்டும் என தனியார் மொபைல் போன் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். எந்த ஏரியாவில், எந்த டவர்களின் வாயிலாக செல்லும் அழைப்புகளில் இதுபோன்ற பிரச்னை என்பதை ஆராய வேண்டும். நெட்வொர்க் ஜங்ஷன்களை தனியார் நிறுவனங்கள் அதிகரித்தால் இதுபோன்ற பிரச்னையை தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூறுகையில், 'பிற மொபைல் போன் நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது, அதன் வாடிக்கையாளர்களை கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறி ஈர்க்கும் ஏர்டெல் நிறுவனம், அதற்கான அடிப்படை தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தவில்லை. இதனால், மொபைல் போனில் தொடர்பு கொள்ளும்போது, 'நெட்வொர்க் பிசி' என்று வருகிறது. இதன் காரணமாக, வேறு நிறுவனத்துக்கு மாறும் முடிவில் உள்ளோம்' என்றனர்.

'சிக்னல் பிரச்னையா?'

தனியார் மொபைல்போன் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஜியோவை தொடர்ந்து, மற்ற தனியார் மொபைல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களும், இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் வசதிகளை அளித்து வருகின்றன. இதனால், வாய்ஸ்கால் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை, மாலை, இரவு சமயங்களில் டிராபிக் அதிகமாகும்போது அழைப்பு இணைக்கப்படுவதில் பிரச்னை உள்ளது. இவற்றை சீராக்கும் முயற்சியில், தனியார் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. சிக்னலில் பிரச்னை என்றால் மொபைலை, 'ரீ- ஸ்டார்ட்' செய்து பயன்படுத்த வேண்டும்,' என்றார்.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...