Monday, December 22, 2014

திக்குமுக்காடும் ஜி.எஸ்.டி. சாலை!- நாள்தோறும் 5 லட்சம் வாகனங்கள்.. திணறுகிறது சென்னை

Return to frontpage




சென்னை நகரில் அன்றாடம் உள்ளே நுழைந்து வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கை 5 லட்சம். தென் மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வரக்கூடிய ஒரே நெடுஞ்சாலை ஜி.எஸ்.டி. சாலை (கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலை) எனப்படும் என்.எச்.45. தேசிய நெடுஞ்சாலை. சென்னை கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தொடங்கி தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், பெரியகுளம் ஆகிய பிரதான ஊர்களைக் கடந்து தேனி வரை நீண்டிருக்கிற இந்த ராட்சத சாலை சுமார் 470 கி.மீ. நீளம் கொண்டது. தமிழகத்தின் பிரதான சாலைகளில் ஒன்றாக- சென்னை மாநகரை இணைக்கக்கூடிய சாலையாக - சென்னை நகரப் போக்குவரத்தின் பிரதான ரத்த நாளமாக உள்ளது. இதில் ஆங்காங்கே உள்ள அடைப்புகள் காரணமாக, அரை மணி நேரத்தில் கடக்கவேண்டிய தூரத்தை கடக்க குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆவதால், வாகன ஓட்டிகளின் ரத்த அழுத்தத்தை எகிறவைத்துவிடுகிறது.

சென்னையில் கடந்த 20 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 900 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையின் 6 பிரதான சாலைகளில், தென் சென்னை புறநகர் பகுதியினர் பயன்படுத்தும் ஜிஎஸ்டி சாலை முக்கியமானது. இதில் கிண்டி கத்திப்பாரா முதல் காட்டாங் கொளத்தூர் வரை வாகன நெரிசல் அதிகம். தாம்பரம் ரயில் நிலைய சந்திப்பு, சென்னை விமான நிலையம் அமைந்திருப்ப தாலும் மெட்ரோ ரயில் நிலைய பணிகள், வண்டலூரில் தொலை தூர பஸ்கள் நின்று செல்வது, மறைமலை நகரில் தொழிற்சாலை கள் பெருக்கம் போன்ற காரணங்களாலும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகிவிட்டது.

வடசென்னையைவிட தெற்கு புறநகர் பகுதிகள் வேகமாக வளர்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடு வாஞ்சேரி, சிங்கபெருமாள்கோவில், ஊரப் பாக்கம், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய பகுதிகள் படுவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. ஜிஎஸ்டி சாலை வழியாக செல்லக்கூடிய முடிச்சூர், மண்ணிவாக்கம், பொழிச்சலூர், அனகாபுத்தூர், சேலையூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளும் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. இப்பகுதி களில் கடந்த 10 ஆண்டுகளில் குடியேற்றம் பலமடங்கு அதிகரித்துள்ளதும், ஜிஎஸ்டி சாலை திணறுவதற்கு முக்கிய காரணம். பல்லாவரம், ஆதம்பாக்கம், தாம்பரம், வண்டலூர், கிழக்கு தாம்பரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவை ஜிஎஸ்டி சாலையில் இணைவதால், வாகன நெரிசல் கூடிக்கொண்டே போகிறது.

இருவழிப் பாதையாக இருந்த இச்சாலை 2004ம் ஆண்டு நான்குவழிப் பாதையாக மாற்றப் பட்டது. வாகனப் பெருக்கத்தை சமாளிக்க முடியாமல் இப்போது அதுவும் திக்குமுக்காடு கிறது. ஜிஎஸ்டி சாலையில் சராசரியாக 14 கி.மீ. வேகத்தில்தான் பேருந்துகள் செல்ல முடிகிறது என்கின்றன ஆய்வுகள்.

'தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை' தென்சென்னையின் பிரபல சமூக சேவகர் வி.சந்தானம் கூறியதாவது: ஜிஎஸ்டி சாலை அதன் முழுக் கொள்ள ளவையும் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்பு, பிராட்வேயில் இருந்து தாம்பரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதுபோன்ற ஏதோ ஒன்றை அரசு செய்தாலன்றி ஜிஎஸ்டி சாலைக்கு விடிவு ஏற்படாது.

ஒரகடம், மறைமலை நகர், மஹிந்திரா சிட்டி என தொழிலகங்கள் பெருகுவதால் ஜிஎஸ்டி சாலை எந்நேரமும் பரபரப்பாக உள்ளது. அதற்கேற்ப திட்டங்களை வேகமாக வகுத்து, அரசு செயல்படுத்துவது இல்லை. ஆக்கிரமிப்புகளால் ஜிஎஸ்டி சாலை சுருங்கி விட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, திட்டமிட்ட பார்க்கிங் வசதி செய்து தந்தால், வாகனங்கள் செல்வது எளிதாகும். ஆதம்பாக்கம், முடிச் சூர், பொழிச்சலூர், சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை போன்ற உட்புறப் பகுதிகளுக்கு இணைப்பு வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு சந்தானம் கூறினார்.

2 கோடி வாகனங்கள்

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டில் 50.12 லட்சம். கடந்த நவம்பர் மாத நிலவரப்படி 1.95 கோடி. இதில், இருசக்கர வாகனங்கள் 1.59 கோடி, ஆட்டோக்கள் 2.25 லட்சம், லாரிகள் 6.34 லட்சம். தமிழகம் முழுவதும் உள்ள வாகனங்களில் 30 சதவீதம் சென்னையில் ஓடுகின்றன. ஆண்டுதோறும் சென்னையில் 11 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கின்றன. சராசரியாக, தினமும் 1,500 புதிய வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. இதுதவிர, தமிழக அளவில் தினமும் சுமார் 3800 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப் படுகின்றன. தினந்தோறும் 3600 பேர் ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். புதிய வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 சதவீதம் அதிகரிக்கிறது.

வரும்.. வராது.. வண்டலூர் பஸ் ஸ்டாண்டு

ஜிஎஸ்டி சாலையில் உள்ள பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரியில் காலை, மாலை நேரங்களில் 1.5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் வால்பிடித்து நிற்பது வாடிக்கை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களைப் பிரித்து இயக்க வண்டலூரில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அது விவசாய நிலம் என்று கூறி அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருவதால், 'வண்டலூர் புது பஸ் ஸ்டாண்ட்' திட்டம் வெறும் அறிவிப்போடு நிற்கிறது. வாகன எண்ணிக்கைப் பெருக்கம், பார்க் கிங்கிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. சாலை, தெரு, சந்து, பொந்துகளைக்கூட வாகன ஓட்டிகள் விட்டுவைப்பதில்லை. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுவதாவது: சென்னை கோயம்பேடு பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையங்களில் இருந்து மதுர வாயல், வடபழனி வழியாகவே புறநகர் பகுதிக்குச் செல்லமுடியும். காலை, மாலை நேரங்களில் வடபழனி வழியாக வெளியூர் பேருந்துகள் செல்ல அனுமதியில்லை. மெட்ரோ ரயில் பணிகளும் நடப்பதால், பெரும் பாலான பஸ்கள் மதுரவாயல் வழியாகவே இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சாதாரண நாட்களில் 1,500 பேருந்து கள், முக்கிய விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் 3,500 பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கப்படாததால் வாகனங்கள் தேங்குகின்றன.

* செங்கல்பட்டு, திண்டிவனம் சுங்கச் சாவடியில் வாகனங்கள் வந்து, போக தலா 8 வழி தடங்கள் உள்ளன. போரூர் சுங்கச் சாவடியில் மொத்தமே 8 வழிகள்தான் இருக்கின் றன. இதனால், கோயம்பேடு எல்லை வரை வாகனங்கள் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு தேங்குகின்றன.

* கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் சென்னை நகருக்குள் நுழைய அனுமதி இல்லை. இதனால், புறநகர் பகுதிகளில் சாலையோரமாக பல கி.மீ. தூரத்துக்கு வரிசையாக நிறுத்தி வைக் கின்றனர். இவை ஒரே நேரத்தில் புறப்பட்டுச் செல்வதால், போக்குவரத்து ஒரேயடியாக ஸ்தம்பிக்கிறது. இந்த வாகனங்களை ஒழுங்குபடுத்தி நிறுத்திவைக்க தனியாக லாரி நிறுத்தும் இடம் அமைக்கப்பட வேண்டும்.

    சசிதரன்
    சிவா
    ஜெயப்பிரகாஷ்
    கோ.கார்த்திக்


கர்மயோகம் அறிவோம்

Dinamani

செய்யும் தொழிலே தெய்வம்...ஒவ்வொரு மனிதனின் உளமனதில் ஆழமாகப் பதிய வேண்டிய தாரக மந்திரம் இது. எந்தத் துறையில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல. செய்கின்ற வேலையை ஆத்மார்த்தமாகச் செய்கிறோமா என்பதே முக்கியம்.

சில நாள்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பிரபல ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர், தனது மனக் குமுறல்களை இப்படிக் கொட்டித் தீர்த்தார்:

அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் என்னால், மரச் சாமான்களைத்தான் பார்க்க முடிகிறது. மனிதர்களைக் காணவில்லை. அந்தளவுக்கு மனிதப் பண்பு செத்துக் கிடக்கிறது. சாமானியனுக்கு உதவி செய்வதற்காகத்தானே நாம் சம்பளம் வாங்குகிறோம் என்ற மனோபாவம் சிறிதும் இல்லை.

பெரும்பாலான இடங்களில் செய்யும் தொழிலே தெய்வம் என்ற வாசகம் எழுதப் பட்டிருக்கிறதே.. அது யாருக்காக? நாம் தொழிலை தெய்வமாக நினைக்கிறோமா என ஒரு நிமிடமாவது சிந்திக்கத் தவறுவது ஏன்? இப்படி இருந்தால், நாடு வல்லரசாக முடியுமா?

அவரது பேச்சில் சமூக அக்கறை இருந்தது. இப் பேச்சைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதில் அரசு அலுவலர்களும் இருந்தனர்.

அவர் பொத்தாம் பொதுவாகக் கூறியிருந்தாலும், அரசு அலுவலகங்களில் கடமை தவறாத அலுவலர்கள் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். பெரும்பாலானோரின் செயல்களைத்தான் அவர் அப்படி வேதனையாகக் குறிப்பிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அரசு அலுவலகங்களில் மட்டும் இந்த நிலைமை இல்லை. அரசு, தனியார் என எந்தத் துறையாக இருந்தாலும், இதே நிலைதான் இருக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்பது வெறும் வார்த்தை ஜாலமாகவே பெரும்பாலான அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

அவர்கள் தாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கிறோம் என்பதை உணராமல் இருப்பது வேதனை. தன்னை நாடி வரும் ஒரு நபரை அலட்சியம் செய்து, பணியைச் செய்யாமல் காலம் கடத்தும் ஊழியர், ஓய்வுக்குப் பின் அதே அலுவலகத்துக்கு வந்தால் பணியில் இருக்கும் ஊழியரால் அலட்சியப்படுத்தும் போக்கும் தொடர்கிறது.

அப்போதுதான் அவருக்கு தான் தொழிலை தெய்வமாக கருதாமல் இருந்ததை உணருகிறார். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்தால் என்ன பயன்?

செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதாத பலரும் பக்திமான்களாக காட்டிக் கொள்வதில் முன்னணியில் இருக்கின்றனர்.

பக்தி யோகத்தைப் போதிக்கும் ஆன்மிகவாதிகள், உண்மையை உரைக்கும் கர்மயோகத்தை விரிவாகச் சொல்ல மறப்பதாலேயே, பக்தி தவறாகப் பின்பற்றப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் ஆன்மிகவாதிகள்.

எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை நேசிக்கப் பழக வேண்டும். தன்னை நாடி வருபவர்களுக்கு உதவும் மனப் பக்குவம் வளர வேண்டும். நேசிக்கும் மனோபாவம் தான் வாழ்வில் வெற்றியைத் தேடித் தரும்.

பகவத்கீதையில் கிருஷ்ணர் உபதேசித்ததை வாசகங்களாக அலுவலகங்களிலும், வீடுகளிலும் தொங்க விட்டிருக்கும் நம்மில் பலரும், அவர் மனித சமுதாயத்துக்கு உணர்த்திய கர்மயோக விதிகளை மக்களிடம் தெளிவுபடுத்த தவறியிருப்பதாக, வேதனை தெரிவிக்கின்றனர் அவர்கள்.

எல்லா மதங்களிலும் இறை பக்தியுடன், கர்மயோக கருத்துக்கள் ஆழமாக சொல்லப்பட்டுள்ளன. ஆனால், சமய உலகில் பக்தியை பெரிதாக்கி கர்மயோகத்தை சுருக்கி விடுவதன் விளைவைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பக்தியுடன் செய்யும் தொழிலே தெய்வம் என்ற கர்மயோகத்தை அதிகளவில் பின்பற்றுவதுதான் சமுதாயத்துக்கு நல்லது என்பதை மனிதகுலத்துக்கு உணர்த்த வேண்டும்.

எந்த மதத்தினராக இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணரும்போது, நாடு வல்லரசாக மாறும். எங்கும் நல் இதயமுள்ள மனிதர்களைக் காணமுடியும். மனிதநேயமும் நிலைத்து நிற்கும்.

மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும்

பணவீக்கம் அல்லது விலைவாசி என்பது ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவையெல்லாமே ‘டிமாண்டு அண்டு சப்ளை’ அதாவது, தேவை மற்றும் சப்ளை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பண்டங்கள் உள்பட அனைத்து பொருட்களின் சப்ளையும், தேவைக்குமேல் அதிகமாக மார்க்கெட்டில் கிடைத்தால், நிச்சயமாக பணவீக்கம் அதாவது விலைவாசி குறையும். தேவைக்கு குறைவான அளவில் சப்ளை இருந்தால் கண்டிப்பாக விலைவாசி, அதாவது பணவீக்கம் உயரும். பணவீக்கம் எந்த அளவில் இருக்கிறது? என்பதை 3 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கணக்கிட்டு, நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்ணையும், மொத்த விலைவாசி குறியீட்டு எண்ணையும் அறிவிக்கிறது. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பணவீக்கம் மற்றும் ஏற்றுமதி அளவு விவரம் பெரும் மகிழ்ச்சியையும், முதலீடு மற்றும் வளர்ச்சிப்பாதையில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண், அதாவது பொதுமக்கள் அன்றாடம் சில்லறையாக தங்கள் தேவைக்கு வாங்கும் பொருட்களின் விலையை குறிக்கும் எண், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 11.2 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த மாதத்தில் இது 4.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதுபோல, மொத்தவிலையை குறிக்கும் மொத்த விலை குறியீட்டு எண் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 7.5 சதவீதமாக இருந்தது, கடந்த மாதத்தில் 0 வாக அதாவது பூஜ்யமாக குறைந்துள்ளது. கடந்த 5½ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக ஒட்டுமொத்த இந்தியாவையே இது ஆச்சரியத்திலும், மகிழ்ச்சி பெருங்கடலிலும் ஆழ்த்தியுள்ளது. இதுபோல உணவுப்பொருள் பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 19.7 சதவீதமாக இருந்தது, இப்போது 0.6 சதவீதமாக சரிந்துள்ளது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவருவதுதான். விலைவாசியை நிர்ணயிப்பதில் பெட்ரோல், டீசல் விலை கணிசமான பங்கை வகிக்கிறது. ஆக, பணவீக்கம் குறைவு, விலைவாசி உயர்வு என்பதற்கெல்லாம் அடிப்படை பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உற்பத்தி செலவையும், போக்குவரத்து செலவையும் பெருமளவில் குறைப்பதால்தான். ஆனால், இதற்கு பொருளாதார நிபுணர்கள் மற்றொரு காரணத்தையும் கூடுதலாக கூறுகிறார்கள். கிராமங்களில் கிடைக்கும் ஊதியம் குறைந்துவிட்டதால், பொதுமக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. ஆனால், பொருட்களை வாங்குபவர்கள் குறைந்துவிட்டதாலும், விலைவாசி குறைந்துவிட்டது என்கிறார்கள். ஆக, இங்கும் ‘டிமாண்டு அண்டு சப்ளை’ தத்துவம்தான் காரணமாக வருகிறது. ஆனால், இந்த அளவுக்கு பணவீக்கம் குறைந்தாலும், அதன் முழு பலன் இன்னும் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். தானியங்கள், அரிசி, கோதுமை, காய்கறிகள், வெங்காயம் விலை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. என்றாலும், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பால் உள்பட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மொத்த விலை குறியீட்டு எண் 0 ஆகிவிட்டது என்கிறார்கள். எனவே, மொத்த விலை குறைந்து இருக்க வேண்டும். மொத்தவிலையில் பொருட்கள் வாங்கி, சில்லறை விலைக்கு விற்கும்போது, அதன் தாக்கத்தால் சில்லறை விலையும் இப்போது அறிவித்ததற்கு ஏற்றவகையில் குறைந்து இருக்க வேண்டும். பொதுமக்கள் தாங்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது, ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு விலைவாசியோடு ஒப்பிட்டு கூறிய அளவுக்கு குறைந்த விலையில் கிடைத்தால்தான் அவர்களால் இதையெல்லாம் நம்பமுடியும். ஆனால், மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு குறையவில்லையே என்பதுதான் அவர்களின் ஆதங்கமாகும். இதுபோல, பணவீக்கம் குறையும் நேரத்தில் எல்லாம், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதா? என்பதை கண்காணிக்கும் கடமை மத்திய–மாநில அரசுகளுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அன்றாடம் வாங்கும் பொருட்களை குறைந்த விலையில் வாங்கமுடியாமல், விலைவாசி குறியீட்டு எண் குறைந்துவிட்டது என்று வெறும் அறிவிப்புகளை வெளியிடுவதால் எந்த பயனுமில்லை. ‘ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பதுதான் மக்களின் கருத்து.

2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது



2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.

கள்ள நோட்டு ஒழிக்க...

நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது.

அதாவது, 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால், அந்த நோட்டுகளை ஒழித்து விட்டால் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என கருதியது. இதனால், 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 22–ந் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

(ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்கும். இப்படி அச்சிடும் நடைமுறை 2005–ம் ஆண்டுக்கு பின்னர்தான் வந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்காது. இதை வைத்து 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.)

‘கெடு’ முடிகிறது

இந்த உத்தரவின்படி பொதுமக்கள் தங்களிடமுள்ள, 2005–ம் ஆண்டுக்கு முன்பாக அச்சிடப்பட்ட 500 ரூபாய், 1,000 ரூபாய் உள்ளிட்ட அனைத்து மதிப்பிலுமான ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளில் கொடுத்து மாற்ற தொடங்கினார்கள்.

இப்படி மாற்றுவதற்கான கால ‘கெடு’ வரும் ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.

எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கெடு முடிவதற்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதுவரை எவ்வளவு?

இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.52 ஆயிரத்து 855 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்துள்ளது.

இதே போன்று, ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் ரூ.73.2 கோடி மதிப்பிலான ரூ.100 நோட்டுகளையும், ரூ.51.85 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகளையும், ரூ.19.61 கோடி மதிப்பிலான ரூ.1,000 நோட்டுகளையும் மாற்றிக்கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Sunday, December 21, 2014

இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?

இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா?
இரா.ரூபாவதி

‘எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்தேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா?’’ என்று கேட்டு நாணயம் விகடனுக்கு வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவரது கேள்வியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

“வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. எனவே, ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பணத்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வாசகரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமாட்டோம்.



பொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினி மற்றும் வாரிசுதாரர்கள் அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்புச் சான்றிதழ், ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலை புத்தகம் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி தரவேண்டும். அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள்.

நாமினி பெயர் குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப் படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.



இது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.

இதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் - மனைவி, அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இருவருக்கும் அந்தப் பணம் உரிமையானது. என்றாலும், கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்’’ என்றார்.

இதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் சட்டப்படி யான செயல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.

மழைப் பிரசங்கம்

யாரங்கே?
வாருங்கள்...

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை மழை
மழை மழை மழை

மண்ணின் அதிசயம் மழை

பூமியை வானம்
புணரும் கலை மழை

சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை

மழைபாடும்
பள்ளியெழுச்சியில்
ஒவ்வொர் இலையிலும்
உயிர் சோம்பல்முறிக்கிறது

இது என்ன...?

மழையை இந்த மண்
வாசனையை அனுப்பி
வரவேற்கிறதா?

என்ன...?
என்ன சத்தம்...?
சாத்தாதீர் ஜன்னல்களை
அது மழைக்கெதிரான
கதவடைப்பு

குடையா?
குடை எதற்கு?
அது
மழைக்கெதிராய்
மனிதன் பிடிக்கும்
கறுப்புக் கொடி

ஏன்...?
ஏனந்த ஓட்டம்?
வரம் வரும் நேரம்
தபசி ஓடுவதா?

இதுவரை நீங்கள்
மழையைப் பார்த்தது
பாதிக் கண்ணால்

ஒலி கேட்டது
ஒரு காதால்

போதும் மனிதர்களே

பூட்டுப் போட்டுப்
பூட்டுப்போட்டுப்
புலன்களே பூட்டாயின

திறந்து விடுங்கள்

வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது

உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை

வாருங்கள்

மழையை
நம் வீட்டுத்
தேநீருக்கழைப்போம்


  • கவிஞர் : வைரமுத்து

மீத்தேன் திட்டமென்ற பூதம்

தஞ்சை மாவட்டத்தில், மீத்தேன் திட்டத்துக்கு எதிராகத் தினசரி ஒரு போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், திட்டத்துக்கு உரிமம் பெற்ற ‘கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ தன்னுடைய அலுவலகத்தைக் காலி செய்து கிளம்பிவிட்டதாக செய்தி ஒன்றை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது நிரந்தர வெளியேற்றமா, அல்லது பதுங்கித் தாக்குவதற்கான முன்னேற்பாடா என்று தெரியவில்லை. தமிழக அரசு அந்நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிதல் ஒப்பந்தம் இம்மாதத்துடன் முடிவடைந்தாலும், அதை மறுபடியும் புதுப்பிப்பார்களா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டம் கொண்டுவரப் போவதால் மக்கள் படப்போகும் பாடு பற்றி அச்சம் ஏற்பட்டுள்ளது. அச்சத்தினால் அடிபணிந்து ஐம்பூதங் களை வணங்கிய மனிதனின் பேராசை, அவற்றை அடக்கியாண்டு பொருள் சேர்க்க முற்பட்டதில், பெரும் சேதமடைந்தது தஞ்சைத் தரணியே. நெல் உற்பத்தியைப் பெருக்குவோமென்று வேதிப்பொருட்களினாலான உரத்தையும், பூச்சிக்கொல்லிகளையும் இட்டு மண்ணை விஷமாக்கியதோடு, குறுகிய காலப் பயிர்களால் நீரின் தேவையைப் பெருக்க வைத்து தஞ்சை விவசாயிகளைத் தரித்திரமாக்கியது மத்திய அரசின் விவசாயக் கொள்கைகளே. ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று பாடப்பட்ட காவிரியும் குறுகிய நீர்ப் பாசனக் கொள்கையினால் முடமாக்கப்பட்டாள்.

உள்நாட்டிலேயே இடப்பெயர்வு

நிலவளத்தைப் பெருக்கி உணவு உற்பத்தியை உயர்த்த முன்வராத அரசுகள், பெருவாரியான விளைநிலங்களைக் கட்டுமானத்துக்கும் இதர தொழில்களுக்கும் கபளீகரம் செய்ய முற்பட்டன. காவிரிப் படுகையில் எண்ணெய் வளம், இயற்கை வாயு கிடைக்கிறதா என்று மண்தோண்டும் ராட்சச இயந்திரங்களுடன் முதலில் களமிறங்கியது எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி) மாபெரும் குழாய்களைப் பதிக்கத் தோண்டிய முயற்சி களில் பல கிராமவாசிகளின் வீடுகள் இரண்டாகப் பிளந்தன. இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு ஏதும் கொடுக்கப்படவில்லை. வேலைவாய்ப்பு களை அதிகரிப்போமென்று விளம்பரப்படுத்திய அந்நிறுவனத்தில், மண்ணின் மைந்தர்கள் சிலர் மட்டுமே காவலர்களாகவும், கடைநிலை ஊழியர்களாகவும் அமர்த்தப்பட்டார்கள்.

தொழிற்பேட்டைகளும் தொழிற்பூங்காக்களும் தமிழகம் முழுதும் அமைக்கப்போகிறோமென்று 1997-ல் கொண்டுவரப்பட்ட ‘தமிழ்நாடு தொழில் காரணங் களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் சட்ட’த்தின்கீழ், ஆயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் அரசால் சொற்ப நஷ்டஈட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அடி மாட்டு விலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் வழங்கப்பட்டதும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாக ஆக்கப்பட்டதும் கொடுமையிலும் கொடுமை.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபின், ஒவ்வொரு புதிய மாவட்டத்திலும் ஆட்சியருக்கான நவீன அலுவலக வளாகங்கள் கட்டுவதற்காக நூற்றுக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. திருவாரூர் மாவட்ட அலுவலகம் அமைக்க முயன்றதில் விளமல் கிராமமே காணாமல் போய்விட்டது.

விளமலா, லண்டனா?

அந்தக் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியபோது முதல்வர் கருணாநிதி, 27.7.2010 ஆற்றிய உரையின் ஒரு பகுதி:-

“என்னுடைய நண்பன் தென்னனைப் பார்த்து, ‘என்னப்பா, திருவாரூரே மாறிப்போய்விட்டதே!’ என்று வியப்புடன் சொன்னேன். காரணம்? இந்த விளமல் கிராமத்துப் பகுதியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். இவ்வளவு பரவசமடைந்திருக்கும் அளவுக்கு விளமல் கிராமம் என்றைக்கும் காட்சியளித்த தில்லை. இன்றைக்கு விளமல் நாம் விளம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக, அவ்வளவு ரம்மியமாக இத்தனை கட்டிடங்களா? நான் திருவாரூரிலே ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா? இல்லை, தமிழ் நாட்டிலே உள்ள ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா? அல்லது இங்கிலாந்து நாட்டிலே லண்டன் நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்தைப் பார்க்கிறேனா? என்று ஐயப்படும் அளவுக்கு, இப்படி திரும்பி ஒருமுறை கண்ணைச் சுழற்றினால் கட்டிடங்களாக_- வரிசையாகத் தென்படும் அந்தக் காட்சியை நாம் காண்கிறோம். இந்தக் காட்சி எனக்கு எந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறதென்றால், இது திருவாரூரோடு நிற்காமல், தஞ்சாவூரோடு நிற்காமல், குடந்தையோடு நிற்காமல், மன்னார்குடியோடு நிற்காமல், எல்லா ஊரிலும் இத்தகைய கட்டிடங்கள், இத்தகைய வளர்ச்சிகள் தமிழகத்திலே வர வேண்டும், அந்தக் காட்சியைக் காண வேண்டும்.”

நிலக்கரிப் படுகை மீத்தேன்

அந்தப் பூமியில்தான் இன்று புதிதாக மீத்தேன் திட்டமென்ற பூதம் கிளம்பியுள்ளது. அது என்ன மீத்தேன் திட்டம்? தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியில் புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, முஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்குத் தெற்குப் பகுதிவரை காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும் அதனுடன் சேர்ந்த மீத்தேன் எரிவாயுவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இயற்கை எரிவாயுவின் மிக முக்கியமான ஆற்றல் தரும் வாயு மீத்தேன். நிலக்கரிப் படிமங்களில் காணப்படும் மீத்தேன் ‘நிலக்கரிப் படுகை மீத்தேன்’ என்றழைக்கப்படுகிறது. நிலக்கரி மீது நுண்ணுயிர்கள் செயல்புரிந்ததாலோ அல்லது அதி யாழத்தில் புதைந் துள்ள நிலக்கரிப் படிமங்கள்மீது உருவான கடும் வெப்ப உயர்வாலோ ‘நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு’ உருவாகியிருக்க வேண்டும். நீரில் மூழ்கியுள்ள நிலக்கரியோடு நீர் அழுத்தத்தால் மீத்தேன் வாயுவும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க ‘கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. நிலத்தைத் தோண்ட உரிமை வழங்கி, மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அனைத்து உதவிகளும் அளிக்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.01.2011 தேதியன்று அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் திடப்பட்டது.

நீராதாரத்தை அழிக்கும் திட்டம்

மீத்தேன் வாயுவை வணிகப் பயன்பாட்டுக்காக வெளியே கொண்டுவருவது எப்படி என்பது பற்றி தமிழ் நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் வெளியிட்டுள்ள மீத்தேன் எடுப்பு எதிர்ப்பு விளக்கக் கையேடு இவ்வாறு கூறுகிறது:

“மன்னார்குடிப் பகுதி நிலக்கரிப் படுகைகள் தரைமட்டத்துக்குக் கீழே 500 அடி முதல் 1,650 அடி ஆழம் வரை காணப்படுகின்றன. தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்தப் படுகைகளை அழுத்திக்கொண்டுள்ளது. இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப் பாறைகளிலிருந்து வெளியேற முடிவதில்லை. நிலக்கரிப் பாறைமீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே, மீத்தேன் வாயு வெளிவர முடியும். அடுத்த கட்டமாக, வெற்றிடம் உண்டாக்கும் கருவிகளைக் கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். அவ்வாறு நிலத்தடி நீர் 500 அடி முதல் 1,650 அடிவரை வெளியேற்றப்படும்போது காவிரிப் படுகையின் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிகளுக்குக் கீழே இறங்கிவிடுவதோடு மன்னார்குடி நிலக்கரிப் படுகையிலிருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்குத் தொடர்புள்ள நிலத்தடி நீர்த் தாரைகள் அனைத்தும் வறண்டுபோகும். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக அருகில் உள்ள வங்கக் கடலின் உப்பு நீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும்போது, காவிரிப் படுகையே உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், நிலம் உள்வாங்குதல் போன்ற அபாயங்களும் நிகழ வாய்ப்பு உண்டு.”

நவீன அடிமைத்தனம்

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அனைத்திலும் தங்கள் பிடிப்பை வலுப்படுத்திக் கொண்டுவரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் மத்திய - மாநில அரசுகளை என்ன சொல்வது? உலகமயமாக்கலிலும் தனியார்மயத்திலும் நமது வாழ்வாதாரங்களைப் பறித்து, மீண்டுமொரு நவீன அடிமைத்தனத்துக்கு நாம் உள்ளாக்கப்பட்டுவருவதன் அடுத்த அவதாரம்தான், தஞ்சை மாவட்டத்தில் தொடங்கப்போகும் மீத்தேன் வாயுத் திட்டம். பூமியில் புதையுண்டு கிடக்கும் மீத்தேனை வெளிக்கொண்டுவந்து, அதை வணிகரீதியில் பயன்படுத்த விழையும் பன்னாட்டு நிறுவனங்கள் பல. அந்த நிறுவனங்களை அழைத்து அனைத்துச் சலுகை களையும் வழங்கும் அதே சமயத்தில், விளைநிலங்களை வீணடித்து நமது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளைகள்பற்றி மக்களிடையே சரியான புரிதலை உருவாக்க வேண்டும்.

நிலமிழக்கப்போகும் விவசாயிகள் மட்டுமன்றி, அப்பகுதி மக்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள் என்பதுடன், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் தலித் மக்களையும் இணைத்து நடத்தப்போகும் எழுச்சிப் போராட்டங்கள் மட்டுமே மீத்தேன் திட்டமென்ற பூதத்திட மிருந்து தஞ்சைத் தரணியை மீட்கும்.

- கே. சந்துரு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...