Sunday, February 15, 2015

விற்கும் வீட்டுக்கு வரி உண்டா?



நாம் ஈட்டும் வருவாய்க்கு வருமான வரித் துறையிடம் கணக்கு காட்டும் காலம் இது. நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தாங்கள் ஈட்டிய வருவாய், முதலீடுகளுக்கெல்லாம் ஆவணங்களைத் தயார் செய்து கொண்டிருப்பார்கள்.

பொதுவாக வீட்டுக் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்கியிருந்தால், அந்தப் பணத்தைத் தவணை முறையில் கட்டி வரும் சூழ்நிலையில் அதற்கு வரிச் சலுகை கிடைக்கிறது. ஒரு வேளை வாங்கிய வீட்டை விற்று லாபம் கிடைத்திருந்தால் அப்போது வரிச்சலுகை கிடைக்குமா? அல்லது வரி கட்ட வேண்டுமா?

உண்மையில் ஒருவர் தன் வீட்டை விற்று அதன் மூலம் லாபம் சம்பாதித்தார் என்றால், அந்த லாபத்துக்கு நிச்சயமாக வரி செலுத்த வேண்டும் என்றே வருமான வரியின் நடைமுறைகள் கூறுகின்றன. இப்படிச் செலுத்தப்படும் வரியை மூலதன வரி என்று சொல்லுகிறார்கள். இந்த வரியை இரண்டு வகையாகவும் பிரித்து வைத்திருக்கிறார்கள். நீண்டகால மூலதன வரி, குறுகிய கால மூலதன வரி என்பதுதான் அந்த இரண்டு வகைகளும்.

ஒரு நபர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடு வாங்கி அந்த வீட்டை இப்போது விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி விற்பதன் மூலம் லாபம் கிடைத்தால் அதுதான் ‘நீண்டகால மூலதன லாபம்’. இந்த லாபத் தொகைக்கு 20.6 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான காலத்தில் வாங்கிய வீட்டை, இப்போது விற்றால் அதிலிருந்து கிடைக்கும் லாபத்தைக் குறுகிய கால மூலதன லாபம் என்கிறார்கள். சாதாரணமாக ஒருவர் வருமான வரி செலுத்தினால் எந்த விகிதத்தில் செலுத்துவாரோ, அந்த விகிதத்தில் குறுகிய கால மூலதன லாப வரியைச் செலுத்த வேண்டும்.

சாதாரணமாக வாங்கிய விலையில் இருந்து விற்கும் விலையைக் கழித்தால், மீதம் வருவது லாபம் இல்லையா? நீண்டகால மூலதன லாபத்தைக் கணக்கிட ‘இண்டக்ஸ்’ முறை கையாளப்படுகிறது. பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இண்டக்ஸ் குறியீடு அட்டவணை தயாரிக்கப் படுகிறது.

பணவீக்கம் உயர்ந்தால் விலையும் உயரும். இந்த இண்டக்ஸ் முறை 1981-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1981-1982-ம் நிதியாண்டில் இண்டக்ஸ் 100 புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்போது அது 1024 புள்ளிகளாக உள்ளது. இப்போது அது 10 மடங்கு உயர்ந்துவிட்டது.

சாதாரணமாக வாங்கிய விலையில் இருந்து விற்கும் விலையைக் கழித்தால், மீதம் வருவது லாபம் இல்லையா? நீண்டகால மூலதன லாபத்தைக் கணக்கிட ‘இண்டக்ஸ்’ முறை கையாளப்படுகிறது. பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இண்டக்ஸ் குறியீடு அட்டவணை தயாரிக்கப் படுகிறது.

பணவீக்கம் உயர்ந்தால் விலையும் உயரும். இந்த இண்டக்ஸ் முறை 1981-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1981-1982-ம் நிதியாண்டில் இண்டக்ஸ் 100 புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்போது அது 1024 புள்ளிகளாக உள்ளது. இப்போது அது 10 மடங்கு உயர்ந்துவிட்டது.

உதாரணத்துக்கு ஒருவர் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு வீடு வாங்கினார். அப்போது அதன் விலை ரூ.5 லட்சம். இப்போது அதை ரூ. 30 லட்சத்துக்கு விற்கிறார். அவருக்குக் கிடைக்கக்கூடிய நீண்ட கால மூலதன லாபம் என்ன தெரியுமா? 2000-ம் ஆண்டில் இண்டக்ஸ் புள்ளிகள் 406 ஆக இருந்தது.

அப்போது வீட்டை வாங்கிய விலை ரூ.5 லட்சம். தற்போதைய இண்டக்ஸ் புள்ளிகள் 1024 ஆக உள்ளது இல்லையா? ஆனால், இப்போது வீடு ரூ.30 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. அப்படியானால் கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா? 25 லட்ச ரூபாய் என்று எண்ணிவிடக் கூடாது. லாபத்தைக் கண்டறிய ஒரு சூத்திரம் உள்ளது. அது,

வீடு வாங்கிய விலை* இப்போதைய இண்டக்ஸ் குறியீடு/அப்போதைய இண்டக்ஸ் குறியீடு

ரூ.5,00,000 * 1024 / 406 = ரூ.12,61,083

நீண்ட கால மூலதன லாபம் என்பது (30,00,000 - 12,61,083) ரூ.17,38,917 ஆகும். இதுதான் நீங்கள் லாபமாக ஈட்டிய தொகை. இந்த லாப தொகைக்குத்தான் வரி செலுத்த வேண்டும்.

இந்த வரியைச் செலுத்தாமல் இருக்கவும் ஒரு வழி இருக்கிறது. கிடைத்த நீண்ட கால மூலதன லாபத்தைக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய வீடு ஒன்றை வாங்கினால் அதற்காகச் செலவு செய்யப்படும் தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. உதாரணத்துக்கு ரூ.17 லட்சம் நீண்டகால மூலதன லாபம் கிடைத்திருக்கிறது.

அதில் ரூ.16 லட்சத்துக்குப் புதிய வீடு வாங்குகிறோம் என்று வைத்துக் கொண்டால், மீதமுள்ள ரூ.1 லட்சத்துக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். இதில் ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. அப்படி வாங்கும் புதிய வீட்டை 3 ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது என்பதுதான் அது.

மூலநோய் வருவது ஏன்? by டாக்டர் கு. கணேசன்



நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

எது மூலநோய்?

சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்குச் செலுத்துகின்றன; ரத்தம் தேவையில்லாமல் சிரைக் குழாய்களில் தேங்கி நிற்பதைத் தவிர்க்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்தத் தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை.

இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள இரண்டு சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போலத் திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.

காரணங்கள்

மலச்சிக்கல் மூலநோய்க்கு முக்கியக் காரணம். மலச்சிக்கலின்போது மலத்தை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயைத் தோற்றுவிக்கும்.

ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி மூலநோய் உண்டாகிறது.

வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும்.

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக்குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

சிலருக்குப் பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாமிச உணவு வகைகளையும் விரைவு உணவு வகைகளையும் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு, மூலநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

புகைபிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருள்களை உபயோகிப்பதும் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.

மூலநோய் வகைகள்

மூலநோய் இரு இடங்களில் ஏற்படுகிறது. 1. ஆசனவாயின் வெளிப்புறத்தில் தோன்றுவது 'வெளிமூலம்' . 2. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாக புதைந்திருப்பது 'உள்மூலம்'.

சாதாரணமாக, நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதால், அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.

அறிகுறிகள்

ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றும், வலி இருக்காது. அடுத்த நிலையில் மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் கசியும். அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படும். சில வாரங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பின்னர் சொட்டுச் சொட்டாக ரத்தம் வெளிவரும். சிலருக்கு வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அடிக்கடி ஆசனவாயில் வலியை ஏற்படுத்தும்.

அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பு, வலி தொல்லை தரும். அதனால் மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும், மலச்சிக்கல் ஏற்படும். 'முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி' என்று சொல்வது, இதற்கு மிகவும் பொருந்தும். ஆசன வாயில் வெடிப்பு (Anal fissure) புண், சுருக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான வலி, தொல்லையைத் தரும்.

மூலநோய் அறிகுறிகளை நான்கு நிலைகளாக மருத்துவர்கள் பிரித்திருக்கிறார்கள். காரணம், இந்த நோய்க்குப் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் எந்தச் சிகிச்சை முறை குறிப்பிட்ட நோயாளிக்கு நல்ல பலனைத் தரும் என்று முடிவு செய்வதற்கு இது உதவும். மூலநோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை தரப்பட்டால் மட்டுமே, நோய் முழுவதுமாக குணமாகும். அப்படி இல்லாதபோது மூலநோய் மீண்டும் வந்துவிடும்.

மூலநோய் நிலைகள்

முதலாம் நிலையில், சிறிய அளவில் தடிப்பு அல்லது வீக்கம் தோன்றும். அந்த இடத்தில் லேசாக வலி இருக்கும். இரண்டாம் நிலையில், வீக்கம் பெரிதாக இருக்கும். மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறும். மலம் கழித்தபின் வீக்கம் உள்ளே சென்றுவிடும். மூன்றாம் நிலையில், வீக்கம் நிரந்தரமாக இருக்கும். ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். நான்காம் நிலையில், வீக்கத்தில் புண் ஏற்படலாம். வலி அதிகமாகலாம். அடிக்கடி ரத்தம் மிக அதிகமாக வெளியேறும்.

முக்கியக் குறிப்பு

பெருங்குடலில் ஏற்படும் புண், வீக்கம், புற்றுநோய், ஆசனவாயில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவற்றின் காரணமாகவும் மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம். ஆகவே, ஒருமுறை ஆசனவாயிலிருந்து ரத்த ஒழுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்து, காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம்.

இது மூலநோயாகத்தான் இருக்கும் என்று நீங்களாகவே முடிவு செய்துகொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்துவிடக் கூடாது.

சிகிச்சை முறைகள்

மூலநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் மருந்து, மாத்திரை, களிம்புகளில் குணப்படுத்திவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கலுக்கு சரியான சிகிச்சை பெற்றுவிட்டால் போதும். மூலநோயும் விடைபெற்று விடும். மூலநோய்க்குப் பல்வேறு சிகிச்சைமுறைகள் உள்ளன. அவை:

1. சுருங்க வைத்தல் 2. வளையம் இடுதல் 3. உறைய வைத்தல் 4. அறுவைச் சிகிச்சை 5. கதிர்வீச்சு சிகிச்சை 6. லேசர் சிகிச்சை 7. ஸ்டேப்ளர் சிகிச்சை. நோயாளியின் தேவைக்கேற்ப இவற்றில் ஒன்றை மருத்துவர் தேர்வு செய்வார்.

தடுப்பது எப்படி?

மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது. மலம் கழிப்பதற்கு முக்கவும் அவசரப்படவும் கூடாது.

அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், பொட்டுக்கடலை, அவரைக்காய், கொத்தவரங்க்காய், கீரைகள், முழு தானியங்கள், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம். தினமும் இரண்டு பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி. தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, பழச்சாறுகளை அருந்த வேண்டும். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும். உடற்பருமன் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, உடல் பருமனாக உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. இடுப்புக்குழித் தசைகளுக்குப் பயிற்சி தரலாம். இயலாதவர்கள் இதற்கென்றே உள்ள யோகாசனங்களைச் செய்யலாம். இவை எல்லாமே மூலநோய்க்குத் தடை போடும்.

சிகிச்சை முறைகள்

சுருங்க வைத்தல்:

ரத்தத்தை உறைய வைக்கும் மருந்தை ஊசிக்குழாயில் எடுத்துக்கொண்டு மூலநோய் ஏற்பட்டுள்ள இடத்தில் செலுத்தி, தடித்துள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது இந்த சிகிச்சையின் முக்கிய செயல்முறை. முதல்நிலை மூலநோயாளிக்கு இது உதவும்.

வளையம் இடுதல்:

இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள். இதனால் ரத்தக்குழாய் வீக்கத்துக்குள் ரத்தம் வருவது தடைப்பட்டுப்போகும். இதனால் வீக்கம் சுருங்கிவிடுகிறது. இரண்டாம் நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

உறைய வைத்தல்:

திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால், அதில் உள்ள ரத்தக்குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும். இரண்டாம் நிலை, மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

அறுவைச் சிகிச்சை:

நாள்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள். வெளிமூலம் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை சிறந்த பலன் தரும்.

கதிர்வீச்சு சிகிச்சை:

ஐ.ஆர்.சி. ( IRC Infra red Coagulation) என்ற கருவி மூலம் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக் கதிரை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு அனுப்புகிறது. அப்போது அக்கதிர்கள் மூலநோய்க்குச் செல்லும் ரத்தத்தை நிறுத்திவிடும். இதனால் மூலநோய் வீக்கம் சுருங்கிவிடும்.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க இயலாத நிலையில் உள்ள முதியவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

லேசர் சிகிச்சை:

லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள திசுக்களை அழிப்பது, இந்தச் சிகிச்சையின் செயல்முறை. ஆனால், இதற்கு ஆகும் பணச்செலவு சிறிது அதிகம்.

ஸ்டேப்ளர் சிகிச்சை:

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை முறை இது. இதற்கு ஆகும் பணச்செலவும் அதிகம்தான். என்றாலும், இதுதான் மிக எளிய சிகிச்சை முறை. நவீன ஸ்டேப்ளர் கருவியைக் கொண்டு மூலநோயின் மேல்பகுதியைத் தையலிட்டு இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள தசைப்பகுதியையும் வெட்டி எடுத்து தையலிட்டுவிடுகிறார்கள்.

இது மூலநோயை நிரந்தரமாக குணப்படுத்திவிடும். மூலநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்தச் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

திருமண செலவில் குரங்கு வாடகை ரூ.10,000: ஆக்ராவில் வினோதம்

திருமண செலவில் குரங்குகளை வாடகைக்கு அமர்த்துவதும் கட்டாய மாகி விட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில்தான் இந்த வினோதம் நடந்து வருகிறது.

ஆக்ராவில் குரங்குகளின் தொல்லை அதிகம். திருமண விசேஷங்கள் நடைபெறும் இடங்களுக்கு வந்து குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. அவற்றை விரட்ட சாம்பல் நிற லங்கூர் வகை குரங்குகளை திருமண வீட்டார் வாடகைக்கு அமர்த்தி வருகின்றனர்.

சாம்பல் நிற லங்கூர் குரங்கு களுக்கு மற்ற குரங்குகளைக் கண்டால் பிடிக்காது. அவற்றை துரத்தி விட்டுவிடும். எனவே, லங்கூர் குரங்களை வைத்திருக்கும் குரங்காட்டிகளுக்கு நல்ல தேவை உள்ளது. குறிப்பாக திருமண சமயங்களில் இவர்களுக்கான தேவை அதிகரித்து விடுகிறது. திருமண வீட்டார் இவர்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து விட்டால், அவர்களுக்கு ரூ.3,000 கொடுத்தால் போதுமானது. இல்லாவிட்டால், விசேஷத்தில் குரங்குகள் புகுந்து விட்டால் அவற்றை விரட்ட ரூ.10 ஆயிரம் வரை செலவிட வேண்டியிருக்கும்.

குறிப்பாக குளிர்காலங்களில் நடைபெறும் திருமணங்களில் இவர்களுக்கான தேவை அதிக மாகவே உள்ளது. இதனால், திருமணத்தில் மற்ற செலவுகளுடன் லங்கூர் குரங்குகளுக்கான வாடகைச் செலவும் கட்டாயம் இடம்பெறுகிறது.

ஆக்ராவில் கடந்த சில ஆண்டுகளில் குரங்குகளின் எண் ணிக்கை பல மடங்கு அதி கரித்து விட்டது. வட இந்தி யாவின் பெரும்பாலான நகரங் களில் குரங்குகளின் தொல்லை அதிகரித்திருக்கிறது. தோட்டங் களைச் சிதைத்தல், வீடு, அலுவலகங் களின் மேற்கூரையில் அமர்தல், உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்துதல், உணவுக்காக மனிதர்களைத் தாக்குதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றன.

எங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? by பாரதி ஆனந்த்

படங்கள்: க.ஸ்ரீபரத்.

ஒவ்வொரு ஆண்டும் வருகிறது இந்த காதலர் தினம். அந்த நாள் வருவதற்கு முன்னரே 'நாங்கள் எதிர்க்கிறோம்', 'நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்', 'நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்' என மிரட்டல், கண்டன அறிக்கைகள் வந்துவிடுகின்றன.

சிலர் (கலாச்சாரக் காவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள்) அறிக்கைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், களத்திலும் இறங்குகின்றனர்.

அன்றைய தினம் இவர்கள் கையில் கொடி, தடியுடன் புறப்பட்டுவிடுகிறார்கள். இவர்களது மெயின் டார்கெட் பஸ் ஸ்டாண்ட், பீச், பார்க், மல்டி பிளக்சுகள் இத்யாதி இத்யாதி இடங்கள். கண்ணில் ஏதேனும் ஜோடி சிக்கினால் போதும் நீங்கள் கணவன், மனைவியா என்ற கேள்வி தொடங்கி அறிவுரை என்ற பெயரில் நாராசமான வார்த்தைகளும் சொல்லப்படுகின்றன. இந்தக் கலாச்சாரக் காவலர்கள் காதலர்களை கையாளும் விதத்தை விட்டுவிடுவோம். அது இங்கு விவாதப் பொருளல்ல.

இந்த ஒட்டுமொத்த காதலர் தின எதிர்ப்பு நிகழ்ச்சியிலும் வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால், நாய்களுக்கு நடத்தப்படும் திருமணம். நாய்களுக்கு ஏன் திருமணம் நடத்த வேண்டும். காதலர் தினத்துக்கும் நாய்களுக்கும் என்ன சம்பந்தம். காதலர்களை இழிவுபடுத்த நாய்களுக்கு திருமணம் செய்வது காதலர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக பிராணிகள் ஆர்வலர்களுக்கு வேதனை அளிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நாய்கள், நாம் பழக்கப்படுத்தும் வகையில் வாழும் ஜீவன்கள். உயிருள்ளவரை எஜமானனுக்கு விசுவாசமாகவே இருக்கின்றன. தனிமையில் வாழும் எத்தனை, எத்தனையோ முதியவர்களுக்கு உற்ற தோழமையாக இருக்கின்றன. உள்ளூர் உதாரணம் ஒன்று சொல்ல வேண்டுமானால், சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த விபத்தின் போது ஆட்கள் புக முடியாத இடங்களுக்குள் எல்லாம் நுழைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்புக் குழுவினருக்கு அடையாளம் காட்டி உதவின சில நாய்கள்.

இறைவன் படைப்பில் எந்த ஒரு ஜீவராசியையும் தாழ்வாக நினைக்க யாருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது கலாச்சாரத்தை காக்க நாய்களுக்கு திருமணம் செய்வது மிகவும் அபத்தமானது. அலங்காரம் செய்து, சீர்வரிசை வைத்து, முடிந்தால் தாலி கட்டக்கூட வைத்து நீங்கள் செய்யும் அத்தனை அக்கிரமங்களுக்கும் எதுவும் அறியாமல் துணை போகின்றன என்பதற்காகவே அத்துமீறலாமா?

கலாச்சாரக் காவலர்களே, காதலர் தினத்தை எதிர்க்கும் உங்கள் கருத்துகளுக்கு பின்னணியில் நியாயமான காரணங்களே இருக்கலாம். ஆனால், அதற்காக நாய்களுக்கு திருமணம் செய்வதற்குப் பின்னணியில் எந்த நியாயமும் இருக்க முடியாது.

அடுத்த ஆண்டும் காதலர் தினம் வரும். அப்போது நாய்களை விட்டுவிடுங்கள். ஏனெனில், பூமாலை, அலங்காரத்துடன் காட்சியளிக்கும் நாய்களின் கண்கள் 'எங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்?' என்று கேட்பது போலவே உள்ளன.

குறிப்பு: எதற்கும், நாய்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

உலகக் கோப்பை: சென்னையில் 'கிரிக்கெட் காய்ச்சல்'


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் ரசிகர்களிடம் ஆர்வம் மேலோங்கியுள்ளது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று துவங்கிவிட்டாலும், இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை ஞாயிறன்றுதான் உண்மையிலேயே போட்டி துவங்குகிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஆடவிருக்கும் முதல் போட்டியே பாகிஸ்தானுடனான போட்டி என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஒளிபரப்பாகும் சில தனியார் தொலைக்காட்சிகள், இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு தமிழில் வர்ணனை அளிக்கும் ஏற்பாட்டையும் செய்துள்ளன.

காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களை விட்டுவிட்டால், ஒவ்வொரு அணியும் ஆறு ஆட்டங்களில் விளையாடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த முறை பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிகப் பலீவனமான அணியாகவே காட்சியளிக்கிறது.

ஏற்கனவே பலம்வாய்ந்த அணிகளாக இருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளின் சொந்த மண்ணில் இந்தப் போட்டிகள் நடப்பதால், இந்திய அணியின் வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள் விமர்சகர்கள்.

சென்னையில் உள்ள மைதானங்களில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் கேட்டால், இந்த முறை இந்தியாதான் வெற்றிபெறும் என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள்.

ஆனால், கிரிக்கெட் விமர்சகரான சுமந்த் சி ராமன், இந்த முறை இந்திய அணிக்கு வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்.

இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் நடந்த எந்த இந்திய - பாகிஸ்தான் ஆட்டத்திலும் இந்தியா தோற்றதில்லை என்பதால், இந்திய ரசிகர்கள் இந்திய- பாகிஸ்தான் போட்டிக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணி மிகப் பலவீனமாக இருப்பதால், இந்த ஆட்டத்தில் இந்தியா ஜெயிப்பது உறுதி என்கிறார் சுமந்த்.

தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பதற்காக விடுதிகளில் பெரிய திரைகளுடன் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

உலகக் கோப்பை சென்டிமென்ட்ஸ்: நாட்-அவுட் 'பால்'ய நினைவுகள்!



'ஏன்டா பரீட்சையை வைச்சுக்கிட்டு அழுக்கு சட்டையோட ஸ்கூலுக்குப் போற?' 'இல்லம்மா, நேத்து இந்த ட்ரெஸ்ல போனதாலதான் எக்ஸாம் ஈஸியா இருந்தது.'

'என்னடி எலுமிச்சை சாதமே கேக்கறே?' 'நேத்து காலைல அதுதான்மா சாப்டேன். இண்டர்வியூல கிளியர் பண்ணிட்டேன். இன்னைக்கு ரெண்டாவது ரவுண்ட கிளியர் பண்ணனும்.!'

நம்மில் எத்தனை பேர் இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம்? சென்டிமென்ட் என்பது விளையாட்டான விஷயம் சிலருக்கு; ஆனால் விளையாட்டிலேயே சென்டிமென்ட் பார்ப்பவர் பலர். முக்கியமாக கிரிக்கெட் ரசிகர்கள்.

விளையாடும் வீரர்களுக்கு அதுதான் தொழிலே. வாழ்க்கையும் கூட. அவர்களின் சென்டிமென்ட் வேறு. ஆனால் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் புரியும் சென்டிமென்ட் அதகளத்திற்கு அளவே இல்லை. இதோ, உலகக் கோப்பைக்கான அறிவிப்பு வந்துவிட்டது. சூதாட்டம் ஒரு பக்கம்; பரபரப்பைக் கிளப்பும் சர்ச்சைகள் மற்றொரு பக்கம் என இந்த முறையும் ரணகளத்திற்குப் பஞ்சமே இருக்காது.

இதற்கிடையில் கொஞ்சம் ரிலாக்ஸாக, கிரிக்கெட் வீரர்களின் சென்டிமென்டையும், ரசிகர்களின் நம்பிக்கைகளையும் பார்க்கலாமா?

வலது காலை எடுத்து வெச்சு:

இந்தியக் கிரிக்கெட்டின் சுவரான ராகுல் திராவிட், நம் பாரம்பரியத்தை கடைபிடிக்கத் தவறியதில்லை. மைதானத்தினுள் நுழையும்போது தனது வலது காலைத்தான் முதலில் எடுத்து வைப்பாராம்.

முதலில் இடது:

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் முதலில் தன்னுடைய இடது பேடைத்தான் அணிவாராம். நம் சுனில் கவாஸ்கர் பேட் செய்வதற்குப் பொசிஷனுக்கு வருவதற்கு முன்னர் மட்டையைத் தரையில் வைத்துவிட்டுத்தான் இடது காலைச் சரியான நிலையில் வைப்பாராம்.

கைக்குட்டையும் புகைப்படமும்:

இறந்து போன தன்னுடைய தாத்தாவின் நினைவாக அவர் கொடுத்த சிவப்பு நிறக் கைக்குட்டையை ஸ்டீவ் வாஹ் எப்போதும் தனது இடது பாக்கெட்டில் வைத்திருப்பாராம். ஆஸ்திரேலியாக்காரர் ஏன் நம் சவுரவ் கங்குலி கூட விளையாடும்போது தன்னுடைய ஆசானின் நினைவாக அவரின் படத்தைப் பாக்கெட்டில் வைத்திருப்பாராம்.

அணிபவை அதிர்ஷ்டத்துக்கா?

எளிதில் உணர்ச்சிவசப்படும் யுவராஜ் சிங், தான் வைத்திருக்கும் பெரிய கைக்குட்டை, தனக்கு விளையாட்டில் அதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்புவாராம்.

மொஹமத் அசாருதீன் அரங்கில் இருக்கும்போது, கழுத்தில் ஒரு வகையான தாயத்தை அணிந்திருப்பாராம்.

முத்தத்துடன்:

மகிள ஜெயவர்த்தனே தன்னுடைய மட்டையை முத்தமிட்டுத் தன் ஆட்டத்தைத் தொடங்குவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். விக்கெட் எப்போதெல்லாம் விழ வேண்டுமென்று தென் ஆப்பிரிக்காவின் ஹியூஜ் டேஃபீல்ட் நினைக்கிறாரோ அப்போதெல்லாம் தனது தொப்பியில் இருக்கும் துள்ளியோடும் சிறு மானின் படத்தை முத்தமிடுவாராம்.

தனிமையும் இசையும்:

இங்கிலாந்து ஆட்டக்காரரான ஜெஃப்ரி பாய்காட் விளையாடுவதற்கு முன் தன்னுடைய அறையில் சிறிது நேரம் தனியாக இருக்க விரும்புவார். அன்றைய ஆட்டத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்த பின்னரே வெளியே வருவாராம். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் பேட் செய்வதற்கு முன் சத்தமான இசையைக் கேட்டுவிட்டுத்தான் ஆடத் தொடங்குவாராம்.

சனத் ஜெயசூர்யா என்ன செய்வார் தெரியுமா? பேட் செய்யும்போது அடிக்கடி தன் பாக்கெட்டுக்குள் கைவிட்டு எதையாவது துழாவுவாராம்.

பார்க்கவே சென்டிமென்ட் :

ஸ்டார் ரசிகரான அமிதாப் பச்சன், நேரடியாக ஒளிபரப்பாகும் ஆட்டங்களைப் பார்ப்பதே அறவே தவிர்த்துவிடுவார்.

உலகமே ஆவலுடன் பார்த்து ரசித்த சச்சினின் ஆட்டத்தை, தான் பார்த்தால் விரைவில் அவுட்டாகி விடுவார் என்ற எண்ணத்தில் அவரின் அம்மா கடைசி ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களை மைதானத்திற்குச் சென்று பார்த்ததே இல்லை.

ரசிகர்களின் நம்பிக்கை

என்ன மாதிரியான விஷயங்களில் எல்லாம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கண்மூடித்தனமாக நம்பிக்கை இருந்தது தெரியுமா?

ஆட்டம் தொடங்கும் நாளன்று கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ சென்று பிரார்த்தனை செய்தவர்கள் அனேகம் பேர். முந்தைய தடவை இந்தியா ஜெயித்த போது அணிந்திருந்த உடையையே அணிந்தது, கடைசி ஓவரிலோ, முக்கியமான ஆட்ட நேரத்திலோ உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றாமல் அப்படியே இருந்தது.

நண்பர்களில் யாராவது நின்று கொண்டிருந்த போது எதிரணியில் யாராவது அவுட்டானால் ஆட்ட முடிவு வரை அப்படியே அவரை நிற்க வைப்பது, ஒரு தடவை எல்லாரும் பேசிக் கொண்டிருந்தபோது நம் அணி வீரர் விக்கெட் விழுந்ததால் கடைசி வரை மெளன விரதத்தையே அனுஷ்டித்தது.

இந்தியா ஜெயித்தால் இவ்வளவு தேங்காய் உடைக்கிறேன் என்று பிள்ளையாரை வேண்டிக் கொண்டது. குறிப்பிட்ட இடத்தில் டிவி இருந்தால்தான் அணி ஜெயிக்கும் என்று அதன் இடத்தை, திசையை மாற்றாமல் இருந்தது.

'ராசி'க்காக நாற்காலியில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கக்கூடாது; கீழேதான் உட்கார வேண்டும் என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தது. வீட்டில் இத்தனையாவது டைல்ஸில்தான் உட்கார்ந்துதான் ஆட்டத்தைக் காண வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களை டார்ச்சர் செய்தது.

நண்பனொருவன் சிறுநீர் கழிக்கப் போனபோது நம் அணி சிக்ஸர் அடித்ததால், அவனைக் கடைசி வரை பாத்ரூமே கதியென்று அங்கேயே இருக்கச் சொன்னது. இந்தியா பாகிஸ்தான் விளையாடும்போது எதாவது மந்திரங்கள் சொல்லிக் கொண்டே இருப்பது.

சமையலறையில் இருக்கும் அம்மாவை வெளியே ஹாலுக்கு வந்துவிடக் கூடாது என்று சொன்னது. சாமி படங்களை அருகிலேயே வைத்து அடிக்கடி தொட்டுக் கும்பிட்டுக் கொள்வது. இறுதி ஆட்டம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் என்றால் டிவிக்கு கற்பூரம் காட்டுவது. இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் நடந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஊருக்கு ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்த காலகட்டத்தில் கூட்டமாய் அமர்ந்து கிரிக்கெட்டைக் கண்டுகளித்த காலச் சித்திரங்கள் அனேகமாய் எல்லோரின் நினைவடுக்குகளில் அமிழ்த்தப்பட்டிருக்கும்.

ஆர்வத்தோடு ஆட்டத்தைப் பார்க்கும் அப்பாவை, ஆத்திரத்தோடு பார்க்கும் அம்மா, அப்பாவை நேரடியாகத் திட்டாமல், நம்மை 'பயன்படுத்தி' அவரைத் தாளித்த தருணங்களுக்கு கொஞ்சம் போய் வரலாமா?

குண்டாய் இருப்பவர்களை ரணதுங்கா, இன்சமாம் என்றும், ஒல்லியாய் முடிவெட்டாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை ஒலங்கா என்றும் கலாய்த்தோம். ஹிந்தி தெரிந்தது போல ஊருக்குள் பில்டப் கொடுத்து வர்ணனையாளர்களின் கமென்டுகளை குத்துமதிப்பாய் தமிழில் மொழிபெயர்த்தது இன்னொரு வரலாறு.

உள்ளூர் கிரிக்கெட் ஆட்டத்தில் தாண்டி தாண்டி கேட்ச் பிடிப்பவர்களை 'ஜான்டி ரோட்ஸ் மாதிரி வருவடா' என்று பாராட்டினோம். அண்ணனும் தம்பியும் ஒரே மேட்சில் ஆடினால், 'மனசுல பெரிய ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ்னு நினைப்பு' என்று எல்லையில்லாமல் 'வாஹ்'ரினோம்.

எப்பொழுதும் ஓப்பனிங் இறங்குபவரை 'சேவாக்கா நீ?' என்று கேட்டோம். சையது அன்வரின் ஒரு நாள் போட்டியில் 194 ரன்கள் சாதனையை சச்சின் ஒருநாள் ஆட்டத்தில் முறியடித்துவிடுவார் என்று பல நாள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அஜய் ஜடேஜா விளையாட வரும்போது பெண்கள் ஆர்வமாய் எட்டிப் பார்த்தது, வீட்டுக்கு மேட்ச் பார்க்க வருபவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு பார்க்க விட்டது, எல்லா நாட்டு வீரர்களின் தகவல்கள் இருக்கும் சீட்டுக்கட்டுகளைப் பார்த்து மனப்பாடம் செய்து வெளியில் பெருமையாக சொல்லித் திரிந்தது, இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுப்போன இரவுகளில் விடிய விடிய அழுது படுக்கையை நனைத்தது என இன்னும் எத்தனை எத்தனையோ அனுபவங்கள்.

பல்கிப் பெருகி விட்ட தொலைக்காட்சி சேனல்களும், மாறியவாழ்க்கை முறையும் எத்தனையோ விஷயங்களைத் தொலைத்துவிட்டாலும் இது போன்ற நினைவுக் கற்றைகள் தான் இன்னமும் நம்முள் ஒளிந்திருக்கும் கிரிக்கெட் 'பால்'யத்தை மீட்டெடுக்கும். எப்போதும் இத்தகைய நினைவுகள் - நாட் அவுட் தான்!

வாட்ஸ்ஆப் வறுவல்: விஜயகாந்த் ஒரு மாறுபட்ட பார்வை


‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் விஜயகாந்த்.

கேப்டன் பிரபாகரன்’ படத்தில் விஜயகாந்த்.

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இழிவுபடுத்தும் வகையில் செய்திகளையும், கிண்டல்களையும் வெளியிடுவதாக அக்கட்சியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். விஜயகாந்தை கிண்டல் செய்யும் அதே வாட்ஸ்ஆப்பில் அவரை போற்றும் பதிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. விஜயகாந்தின் அட்டகாசமான பிளாஷ்பேக்கை சொல்லி புருவம் உயர்த்த வைக்கிறது இந்த வாட்ஸ்ஆப் பதிவு.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ்தான் பின்னாளில் வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த்.

சிவப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும், கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம். நெடிய போராட்டத்துக்கு பின்பு ‘இனிக்கும் இளமை’ என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான ‘தூரத்து இடி முழக்கம்’ மாநில மொழி திரைப்படத்துக்கான தேசிய விருதினை பெற்றது.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பமானது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர், இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் என இந்த பட்டியல் நீளும்.

‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘சின்னக் கவுண்டர்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’ என சிறு தயாரிப்பாளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்.

இயக்குநர்கள் மட்டும் அல்ல; இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட, இவரால் வளர்ந்த இன்னும் பல சினிமா பிரபலங்கள் உண்டு. அ.செ.இப்ராகிம் ராவுத்தர், சரத்குமார், அருண் பாண்டியன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளும்.

இவ்வளவு ஏன்? கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அவருக்கு அறிமுகம் கொடுத்தது ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த் தான்.

இவரின் நிர்வாகத் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார்.

அனைத்து நடிகர்களையும் மலேசியாவுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமை யான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப் பட்டது.

‘அரசியலுக்கு வருவேன்’ என பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்காமல் அதிலும் காலூன்றி சாதித்தவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா, போன்றவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எவரு டனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது.

இவரின் தேர்தல் வாக்குறுதியான ‘கறவை மாடுகள் வழங்கப்படும்’ என்கிற திட்டம் அதிமுகவால் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. எங்கு துயர சம்பவங்கள் நடந்தாலும் முதலில் நிவாரண நிதி அறிவிப்பதும் அளிப்பதும் விஜயகாந்த்!

இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரரான இவருக்கு முன் கோபம் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச் சித்திரமானார். விஜயகாந்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இதனால் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை..

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை சிலர் காமெடியாக சித்தரித்து ஊடகங்களில் பரப்புகின்றனர். அவர்களை நாம் ஊக்குவிக்காமல் இருப்போம்.

NEWS TODAY 11.06.2026