Wednesday, April 6, 2016

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

ஆர்.ஷபிமுன்னா

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் அரசு வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்த வீடுகள் காலி செய்யப்படுவதற்கு மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கேடர்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணியில் இணைந்து பணி யாற்றுவது வழக்கம். இந்த கால கட்டத்தில் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் உள்ள அரசு வீடுகள் அல்லது பங்களாக்கள் அவர் களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த அதிகாரிகள் பணி ஓய்வு அல்லது பணியிட மாறுதலுக்குப் பின் தங்கள் வீடுகளை காலி செய்ய குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. இந்நிலையில் இந்த அவகாசம் முடிந்த பிறகும் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக கேஜ்ரிவால் அரசு அடையாளம் கண்டுள்ளது.

இவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கேஜ்ரிவால் அரசு, இவர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய நிர்ப்பந்திக்குமாறு கோரியுள்ளது. டெல்லியில் அரசு குடியிருப்புகள் பற்றாக்குறை நிலவுவது இதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது “மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்புகளே எங்களுக்கு தரப்படுகிறது.

இதில் பலரும் லட்சக்கணக்கில் செலவு செய்து குடியிருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செலவு செய்த அதிகாரிகள் சில மாதங்கள் கூடுதலாக தங்க விரும்புவது உண்டு. மேலும் குழந்தைகளின் கல்வி இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. என்றாலும் கேஜ்ரிவால் அரசு - மத்திய அரசு இடையிலான அரசியல் மோதலே இதன் பின்னணி காரணம். தங்கள் பேச்சை கேட்காதவர்களை குறிவைத்து கேஜ்ரிவால் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது” என்றார்.

முன்னதாக இந்த வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பை டெல்லி அரசு கடந்த சில மாதங்க ளாக தொகுத்து வந்தது. பிறகு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வீடு களை காலி செய்ய அதிகாரி களுக்கு நிர்ப்பந்தம் தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸும் அளிக்கப்பட்டது. என்றாலும் இதற்கு எந்தப் பலனும் இல்லாததால் தற்போது மத்திய அரசை கேஜ்ரிவால் அரசு அணுகியுள்ளது.

அரசு வீடுகளுக்காக ‘எஸ்டேட் ரூல்ஸ்’ என்ற விதிகள் உள்ளன. இதன்படி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய 3 மாதம் அவகாசம் தரப்படுகிறது. இதன் பிறகு 2 ஆண்டுகள் வரை சந்தை மதிப்பில் வாடகை வசூலிக்கலாம்.

இதன் பிறகும் காலி செய்யாதவர்களை சட்டப்பூர்வ மாக வெளியேற்றலாம். என்றாலும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட சில சிக்கலான மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவோ ருக்கு 3 மாதங்களுக்கு பதிலாக 2 ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

மருத்துவக் கவுன்சிலுக்குச் சிகிச்சை தேவை!

Published: April 6, 2016 08:35 ISTUpdated: April 6, 2016 08:57 IST

மருத்துவக் கவுன்சிலுக்குச் சிகிச்சை தேவை!


மருத்துவர்களுக்கும் இதர அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிகளை நிர்ணயிக்க வேண்டிய மருத்துவக் கவுன்சிலுக்குத் தலைவராக இருந்தவரே லஞ்சம் வாங்கியதற்காகக் கைது செய்யப்பட நேர்ந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று தனது அறிக்கையில் கண்டித்திருக்கிறது.

நாடாளுமன்ற நிலைக் குழு. 120 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் சுகாதார சேவையும் மருத்துவக் கல்வியும் முறையான கட்டுப்பாடுகளின்றி நிர்வகிக்கப்படுவது அதிர்ச்சி தருகிறது. ஒருபுறம் மருத்துவக் கல்விக்காகும் செலவு மாணவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. மறுபுறம் மருத்துவக் கல்வி நிர்வாகமும் வெளிப்படையாக இல்லாமல் திரைமறைவிலேயே நடக்கிறது.

தரமான மருத்துவக் கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் நேரடிப் பொறுப்பாளரான ‘இந்திய மருத்துவக் கவுன்சில்’ (எம்.சி.ஐ.) அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட உயர் அமைப்பாகும். உயர் கல்வி நிறுவனங் களை ஆய்வுசெய்து அங்கீகாரம் வழங்கும் பொறுப்பும் அதிகாரமும் அதற்குத் தரப்பட்டிருக்கிறது. மருத்துவர்களைப் பதிவு செய்யும் உயர் அமைப்பும் இதுதான். இப்படிப்பட்ட மருத்துவக் கவுன்சில் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்யத் தவறியதல்லாமல் ஊழலிலும் திளைத்தது மன்னிக்க முடியாத தவறு. லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் 2010-ல் கைது செய்யப்பட்டார். அந்தக் கவுன்சிலே தாற்காலிகமாகப் புதிதாக மாற்றியமைக்கப்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரியின் உயர் கல்வி இடங்கள் ரூ.50 லட்சம் வரை நன்கொடை பெற்றுக்கொண்டு விற்கப்படுவதாக வரும் செய்திகளைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்றக் குழு, அதைத் தடுக்கத் தவறியதற்காக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்திருக்கிறது. தனியார் பெருநிறுவனங்களைப் போன்ற பெரிய மருத்துவமனைகளைத் தர ஆய்வு செய்வதிலும், புதிய மருத்துவப் படிப்புகளைத் தொடங்க அனுமதிப்பதிலும் ஒரேயொரு முகமையை அனுமதிப்பதில் உள்ள ஆபத்தையும் அறிக்கை உணர்த்துகிறது.

மருத்துவக் கல்வி அமைப்பையும் மருத்துவமனைகளின் நிர்வாகத்தையும் நீண்ட காலமாகச் சீரமைக்காமல் அப்படியே நீடிக்கவிட்டது தவறு. இனியும் இதில் சமரசத்துக்கு இடமில்லை. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் நல்ல தரத்தில் நிர்வகிக்கப்பட வேண்டும். அதற்கான நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மக்களுடைய நலனையும் பொது நலனையும் மட்டுமே கருதிச் செயல்பட வேண்டும். இதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் மருத்துவ சேவை தனிப் பிரிவாகவும் மருத்துவக் கல்வி தனிப் பிரிவாகவும் பிரிக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம், மாணவர்களுக்கான குறைந்தபட்சத் தகுதிகள், பாடத்திட்டம், பயிற்சிகள் போன்றவை நல்ல தரத்தில் முறையாக நிர்ணயிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு நியமித்த ரஞ்சித் ராய் சவுத்ரி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி 2 தனித்தனி வாரியங்களை இதற்காக ஏற்படுத்த வேண்டும். பட்ட வகுப்பு, முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சிகளை மேற்பார்வையிடுவது, நிறுவனங்களை மதிப்பிடுவது போன்றவற்றை அந்த வாரியங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று சவுத்ரி குழு பரிந்துரை செய்திருந்தது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஊழலுக்கும் வழிவகுத்துவிட்ட இப்போதைய மருத்துவ உயர் கல்வி நிர்வாக அமைப்பை இனியும் இப்படியே நீடிக்கவிடுவது சரியல்ல. இது ஆதிக்க சக்திகள் பலனடைய மட்டுமே வழிவகுக்கும். ஒருபுறம் மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க உண்மையான ஆர்வத்தோடு காத்துக் கிடக்கும் தகுதியாளர்கள் ஏராளமாக இருக்க, ஒரு சில இடங்களை மட்டுமே வைத்துக்கொண்டு நல்ல விலைக்கு விற்கும் இந்த வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மருத்துவக் கவுன்சிலுக்கே இப்போது சிகிச்சை தேவைப்படுகிறது. அரசு தயங்கக் கூடாது!

7-வது சம்பள கமிஷனால் உணவு பொருள் விலை உயரும்: ரகுராம் ராஜன் கருத்து

7-வது சம்பள கமிஷனால் உணவு பொருள் விலை உயரும்: ரகுராம் ராஜன் கருத்து


7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 0.40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில் சில்லரை பணவீக்க விகிதம் 5 சதவீதத்துக்குள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2016-17 நிதியாண்டின் இரண் டாவது காலாண்டில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜிடிபி அதிகரிக்க வாய்ப்பு
இதன் காரணமாக நுகர்வோர் விலை குறியீடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் பிரதிபலிப்பு அடுத்த 24 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக ரகுராம் ராஜன் கூறினார்.
நடப்பு கணக்கிலிருந்து சுமார் 0.40 சதவீதம்வரை ஜிடிபி அதிகரிக்கும் வாய்ப்புள் ளது.
இதன் விளைவாக உணவுப் பொருட்கள் விலை உயரும் வாய்ப்புள்ளது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
அரசின் உணவு கையிருப்பு கொள்கைகள் மற்றும் கொள் முதல் விலை, குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் என்றும் இந்த அறிக்கை கணித் துள்ளது.
5 மாநில தேர்தல் பணப்புழக்கம் ரூ.60 ஆயிரம் கோடி
சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களின் பணப்புழக்கம் சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று குறிப்பிட்டார். தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் கையில் சாதாரணமாக பணப் புழக்கம் அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களிடம் ராஜன் குறிப்பிட்டார். மக்களிடம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி வரை புழங்குகிறது, இது சாதாரணமானதல்ல என்றும் கூறினார்.
இதன் பாதிப்பு தேர்தல் நடக்கும் மாநிலத்தில் மட்டுமல்ல, பக்கத்து மாநிலத்துக்கும் நீள்கிறது என்றார். தேர்தல் நேரத்தில் பணப் புழக்கம் எப்படி நிகழ்கிறது என்பது குறித்து ராஜன் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளி விவரங்கள்படி பணப்புழக்கம் 48 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 2 இடங்களில் பாஸ்போர்ட் ‘மேளா’ 9–ந் தேதி நடக்கிறது

சென்னையில் 2 இடங்களில் பாஸ்போர்ட் ‘மேளா’ 9–ந் தேதி நடக்கிறது

சென்னை,
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பாஸ்போர்ட் பெறுபவர்களின் வசதிக்காக கடந்த மாதம் 19–ந் தேதி தாம்பரம் சேவை மையத்தில் சிறப்பு மேளா நடத்தினோம். இதன் மூலம் 435 பேர் பலனடைந்தனர். இதன்தொடர்ச்சியாக 9–ந் தேதி (சனிக்கிழமை) அமைந்தகரை மற்றும் சாலிகிராமம் ஆகிய இடங்களில் உள்ள சேவைமையத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அமைந்தகரையில் 500 பேரும், சாலிகிராமத்தில் ஆயிரம் பேர் உள்பட 1,500 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதில் கலந்து கொண்டு பயன் அடைய விரும்புபவர்கள் பாஸ்போர்ட் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான பதிவு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்குகிறது. சிறப்பு மேளாவில் தட்கல் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காணும் இடங்களில் எல்லாம் தெரிய வேண்டும்

காணும் இடங்களில் எல்லாம் தெரிய வேண்டும்

வ்வொரு ஆட்சியின்போதும், பெயர் சொல்வதற்கு ஏதாவது திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்த ஆட்சியின் பெயர் காலம்காலமாக நிலைத்து நிற்கும். அந்த திட்டத்தை எத்தனை ஆண்டுகள் கழித்துப்பார்த்தாலும், அதை அறிமுகப்படுத்திய அரசாங்கம்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், 2004–ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு பெயர் வாங்கிக்கொடுத்த திட்டம் என்றால், அது 2006–ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டமாகும்’. பா.ஜ.க. அரசாங்கமும் இதை தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது. சாதாரண கிராம மக்களுக்கு இதை 100 நாள் வேலைத்திட்டம் என்றால்தான் தெரியும். கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மக்கள், திறன் பயிற்சிபெறாத மக்கள், தங்கள் உடல் உழைப்புகளைக்கொண்டு வேலைபார்க்க முன்வரும் ஆண், பெண் இருவருக்கும், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைதருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஆரம்பத்தில் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், இப்போது மாநில அரசுகளுக்கான நிரந்தர சொத்துகள் உருவாக்கப்பட்டால், மத்திய அரசாங்கம் 75 சதவீத தொகையையும், மாநில அரசு 25 சதவீத தொகையையும் ஏற்கும்.

தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒருநாள் சம்பளம் 64 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு இந்தத்தொகை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 183 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆண்டுக்கு இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த ஒருநாள் சம்பளம் 183 ரூபாயிலிருந்து 203 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் 229 ரூபாயிலிருந்து 240 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, கர்நாடகத்தில் 204 ரூபாயிலிருந்து 224 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த தொகையை கேரளா அளவுக்கு 240 ரூபாயாக உயர்த்த மத்திய அரசாங்கத்தை, தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில், 85 லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்கள் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான கார்டு வைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் கிராம மக்களுக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாகும்.

ஆனால், இந்த திட்டத்திலும் பல குறைபாடுகள் கூறப்படுகின்றன. இந்த திட்டம் வந்தபிறகு, கிராமப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு இதைவிட அதிக கூலி கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஏனெனில், விவசாய வேலைகளுக்குச்சென்றால் கொடுக்கும் கூலிக்கு வேலை வாங்கிவிடுவார்கள். ஆனால், 100 நாள் வேலைத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக வேலை செய்யாமலோ, அல்லது பெயருக்கு கொஞ்சம் வேலை பார்த்துவிட்டோ, நிர்ணயிக்கப்பட்ட கூலியில் ஒருபங்கை சம்பளமாக வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிவிடலாம். மீதித்தொகை வேலைவாங்கும் பொறுப்பில் உள்ளவர்கள் பைக்கு போய்விடும். இத்தகைய முறைகேடுகளால்தான் இந்த திட்டத்துக்கு இதுவரையில் ஒதுக்கப்பட்ட, செலவழிக்கப்பட்ட தொகைக்கான பலன்களைப்பார்க்க முடியவில்லை. இப்போது ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது. அனைவருக்கும் கூலியை இதன்மூலம் வங்கிக்கணக்கில் செலுத்துவதை உறுதி செய்யவேண்டும். மொத்த வேலைகளையும் நிரந்தர சொத்துகளாக்கவேண்டும். பார்த்த இடமெல்லாம் இது 100 நாள் வேலைத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள், கட்டிடங்கள், கழிப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், வளர்க்கப்பட்ட மரங்கள், கட்டப்பட்ட பாலங்கள் என்று பெயர் சொல்லவேண்டும். இதற்கு பொறுப்பான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் எங்கள் பஞ்சாயத்தில் இவ்வளவு தொகை செலவழித்தோம், அதன் பயனாக இவ்வளவு நிரந்தர சொத்துகளை உருவாக்கினோம் என்று கணக்குகாட்டவேண்டும். அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும். குறிப்பாக, இந்த வேலைகளை விவசாய வேலை இல்லாத நாட்களில் மேற்கொள்ளவேண்டும்.

மூடுவிழாவுக்கு தயாராகும் பி.எட்., கல்லூரிகள்:மாணவர் சேர்க்கை சரிவால் தடாலடி முடிவு

Posted: 04 Apr 2016 06:58 AM PDT

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு குறைந்ததாலும், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டாக மாற்றியதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது. மாணவர் சேர்க்கை நடத்த முடியாத பல பி.எட்., கல்லுாரிகள் நடப்பு கல்வியாண்டுடன் மூடுவிழா நடத்தவும் தயாராகி வருகின்றன.தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 726 பி.எட்., கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு பள்ளிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., முடித்தவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட்., படிப்பதில் மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகமாக இருந்தது. அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விடவும் அதிகம் கொடுத்து, படிக்கவும் போட்டிகள் இருந்தது.ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆண்டுக்காண்டு உபரி
ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால், கடந்த இரு ஆண்டுகளாக புதிதாக ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படவில்லை. மேலும் எதிர்காலத்தில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கே வேலை உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில், கடந்த கல்வியாண்டில், பி.எட்., படிப்பு ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கூடுதல் பாடங்கள், கூடுதல் கல்விக்கட்டணம் உள்ளிட்டவைகளால், மாணவர்களிடையே ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது. கடந்த கல்வியாண்டிலேயே, 60 சதவீத இடங்களே நிரம்பின. வரும் கல்வியாண்டில், 40 சதவீத இடங்கள் கூட நிரப்ப முடியாத நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பி.எட்., கல்லுாரிகளை லாபகரமாக நடத்துவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால், பல கல்லுாரி நிறுவனங்கள் பி.எட்., கல்லுாரிகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, கலை அறிவியல் மற்றும் வேறு சில பாடங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.

Saturday, April 2, 2016

எம்ஜிஆர் 100 | 35 - எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்! தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்ஜிஆர் 100 | 35 - எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்தபடி இருப்பார். அவர் கவனிப்பது பிறருக்குத் தெரியாது. சில நேரங்களில் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவும் மாட்டார். ஆனால், தனக்குத் தெரியும் என்பதை பின்னர் பூடகமாக வெளிப்படுத்திவிடுவார். அவரது கூரிய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது.

திரையுலகில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் மிகவும் கண் டிப்பானவர். அவரிடம் பேசவே பிறர் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவரிடம் முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நடிகராக இருந்தபோதும் தனக்கு சரி என்று பட்டதை எம்.ஜி.ஆர். தயங்காமல் சொல்வார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயா ரித்த ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன். அந்தப் படம் ‘தி கேலன்ட் பிளேடு’ (The gallant blade) என்ற ஆங் கிலப் படத்தின் தழுவல். அதற்கு ‘வீர வாள்’ என்று முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை ‘சர்வாதிகாரி’ என்று மாற்றி யதே எம்.ஜி.ஆர்.தான். அதை டி.ஆர். சுந்தரமும் ஏற்றுக் கொண்டார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் அஞ்சலி தேவி நடித்தார். நடிகை அஞ்சலி தேவி மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவ ராக இருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலி தேவிக்கு உண்டு. அவர் தலை வராக வருவதற்கு எம்.ஜி.ஆர். முக்கிய காரணம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1959-ம் ஆண்டில் நடிகர் சங்கத் தலைவரானார் அஞ்சலி தேவி. ‘சர்வாதிகாரி’ படப்பிடிப் பின்போது ஒரு பாடல் காட்சியில் அஞ்சலி தேவி பம்பரமாக சுற்றிச் சுழன்று தரையில் விழ வேண்டும். அதன்படியே, நடித்து முடித்தார். எல்லாருக்கும் காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓ.கே.சொல்லிவிட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர். மட்டும் ‘‘மறுபடி யும் ஒரு ‘டேக்’ எடுங்க’’ என் றார். காட்சி நன்றாகத் தானே வந்திருக் கிறது, எதற்காக மறுமுறை எடுக்கச் சொல்கிறார்? என்று யாருக்கும் புரிய வில்லை. எம்.ஜி.ஆரின் வற்புறுத்த லால் காட்சி மீண்டும் படமாக்கப்பட் டது. மறுபடியும் அஞ்சலி தேவி அதேபோல நன்றாகவே நடித்தார். இம் முறை எம்.ஜி.ஆருக்கும் திருப்தி. காட்சிக்கு அவரும் ஓ.கே. சொன்னார். இரண்டு ‘டேக்’கிலும் ஒரே மாதிரிதானே அஞ்சலி தேவி நடித்தார்? எதற்காக மறுபடியும் ‘ரீ டேக்’ எடுக்கச் சொன் னார்? என்று எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்தனர்.

எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘முதல் முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றி வரும்போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் விரசமாகத் தெரியும் என்பதால்தான் காட்சியை மறுமுறை எடுக் கச் சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்தார். எம்.ஜி.ஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலி தேவி நெகிழ்ந்து போனார். ஒரு காட்சி படமாக்கப்படும்போது நடிகர்களின் நடிப்பு மட்டுமின்றி, கேமரா கோணம், ஒளி அமைப்பு, ஒப்பனை, உடை அமைப்பு என எல்லாவற்றையும் எம்.ஜி.ஆர். நுட்பமாக கவனிப்பார்.

‘மீனவ நண்பன்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆரின் ஒப்பனையாளர் பீதாம்பரத்தின் மகனும் பிரபல இயக்கு நருமான பி.வாசு உதவி இயக்குநராக பணியாற்றினார். படத்தில் எம்.ஜி.ஆருக் கும் நடிகை லதாவுக்கும் டூயட் பாடலான ‘கண்ணழகு சிங்காரிக்கு விழியிரண்டில் கண்ணி வைத்தேன்...’ பாடல் காட்சி கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்கரை யில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது பாடலில் ஒரு வரிக்கு எம்.ஜி.ஆர். சரியாக வாயசைக்கவில்லை என்று உதவி இயக்குநர் பி.வாசுவுக்கு தோன்றி யது. இயக்குநரான ஸ்ரீதர் அதை கவனிக்க வில்லை. காட்சியை எடுத்து முடித்ததும் ஸ்ரீதர் ஓ.கே.சொல்லிவிட்டார். ஆனால், பி.வாசுவுக்கு இதில் திருப்தி இல்லை.

எம்.ஜி.ஆருக்கு பின்னே நின்றிருந்த அவர், இயக்குநர் ஸ்ரீதருக்கு ஜாடை காண்பித்து ‘பாடல் வரிகளுக்கு எம்.ஜி.ஆரின் உதட்டசைவு சரியில்லை’ என்று சைகையில் விளக்கினார். ஸ்ரீதர் புரிந்துகொண்டார். எம்.ஜி.ஆரிடம் வந்து, ‘‘அந்தக் காட்சியை மீண்டும் ஒருமுறை படமாக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். ‘‘எதற்காக?’’ என்று விளக்கம் கேட்டார் எம்.ஜி.ஆர்.!

பலர் முன்னிலையில் மிகப் பெரிய நடிகரான எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘உங் கள் வாயசைப்பு சரியில்லை என்று தோன்றுகிறது. அதனால் மீண்டும் ஒரு முறை...’ என்று சொன்னால் நாகரிகமாக இருக்காது. எம்.ஜி.ஆரும் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது? என்று தயங்கிய ஸ்ரீதர், ‘‘கேமரா ரிப்பேர், காட்சி சரியாக பதிவாகவில்லை’’ என்று சொல்லி சமாளித்தார்.

மீண்டும் குறிப்பிட்ட அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்தார். ஸ்ரீதர், பி.வாசு உட்பட அனைவருக்கும் திருப்தி. அப்போதுதான் எதிர்பாராமல் அந்தக் கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டார்.

பி.வாசுவைப் பார்த்து ‘‘என்ன வாசு? காட்சி ஓ.கே.வா? திருப்தியா?’’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வெலவெலத்துப் போய்விட்டார் வாசு. தான் ஸ்ரீதரிடம் ஜாடை காண் பித்தது எம்.ஜி.ஆருக்கு எப்படியோ தெரிந்துவிட்டதே என்று வாசுவுக்கு தர்மசங்கடம். ஸ்ரீதருக்கு வாசு ஜாடை காட் டியதை பக்கவாட்டில் திரும்பியபடி ஓரக்கண்ணால் எம்.ஜி.ஆர். கவனித் திருக்கிறார். அவரது கேள்விக்கு ‘‘ஓ.கே. சார்’’ என்று வாசுவும் வெட்கப் புன்னகையுடன் பதிலளிக்க, அவரைப் பார்த்து மீண்டும் சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

காட்சி ஏன் மீண்டும் படமாக்கப்படு கிறது என்ற நிலைமையைப் புரிந்து கொண்டு, இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கு திருப்தி அளிக்கும் வகையில் முழு ஒத்துழைப்பு அளித்து மீண்டும் நடித்துக் கொடுத்ததுடன், நடந்தது தனக்கும் தெரியும் என்பதை சூசகமாக பி.வாசுவுக்கு எம்.ஜி.ஆர். உணர்த்திவிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!

- தொடரும்...

NEWS TODAY 08.06.2026