Sunday, September 11, 2016

மாலை நேரத்திற்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை


வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலோர், மாலை நேரத்துக்குப் பிறகு பாதுகாப்பு இல்லை என உணர்வதாக தொழில்துறை அமைப்பான அசோசெம் 

ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் தகவல் தொழில் நுட்பம், ஹோட்டல் வரவேற்பு, விமான போக்குவரத்து மற்றும் செவிலியர் துறைகளில் பணியாற்றுபவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. என்.சி.ஆர்.,(NCR) எனப்படும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளைக் கொண்ட தேசிய தலைநகர் மண்டலம், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் 5 ஆயிரம் பெண்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

பணியிடங்களில் பெண்களுக்கு பொதுவாகவே பாதுகாப்பு குறைவு என்று அவர்களில் பலர் தெரிவித்தனர். எனினும், மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பில்லை என உணர்வதாக 92 சதவீதம் பேர் தெரிவித்தனர். பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திக்கும் இடங்கள் குறித்த கேள்விக்கு, பொதுப்போக்குவரத்தான பஸ், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை பெரும்பாலோர் தெரிவித்தனர். பஸ் நிறுத்தங்கள், கூட்டம் நிறைந்த சந்தைகள் ஆகியவற்றிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகம் என்றும் ஆய்வில் பலர் கூறினர். 

டெல்லியில் இந்த பிரச்னை அதிகம் என்று கூறியுள்ள அசோசெம், ஒவ்வொரு 40 நிமிடத்துக்கும் ஒரு பெண் வன்முறைக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது. நகரச் சாலைகளில் 25 நிமிடத்துக்கு ஒரு பெண் பணியாளர் ஈவ்டீசிங் செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகளை அரசு உடனடியாக கொண்டு வர அசோசெம் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் வேலையில், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு சூப்பரான ஐடியாவை மகாராஷ்டிரா காவல்துறை ஆணைய‌ர் கொடு‌த்துள்ளா‌ர்.

டெல்லியில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை இனி வேறு எந்த பெண்ணிற்கும் நடைபெறக் கூடாது என்பதற்காக, பெண்கள் வெளியே செல்லும் போது ஒரு பாக்கெட் மிளகாய் பொடியை உடன் எடுத்து செல்ல மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே நகரில் காவல்துறை ஆணையர் ரகு வன்ஷி அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராட வேண்டும் என வலியுறுத்திய அவர்,பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சுதந்திரம் பெற்று 64 ஆ‌‌ண்டுகள் முடிந்த பிறகும், நமது தாய் திருநாட்டில் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள மிளகாய் பொடியை எங்கு சென்றாலும் உடன் எடுத்து செல்ல வேண்டும் என்னும் நிலைமை துரதிஷ்டவசமானது. 
நன்றி குங்குமம் டாக்டர்

மது... மயக்கம் என்ன? டாக்டர் ஷாம்




எளிதாகக் கிடைப்பதே எல்லோரையும் குடிக்கத் தூண்டுகிறது!


தற்கொலை செய்து கொள்ள தைரியம் அற்றவர்கள் மரணமடைய தேர்ந்தெடுக்கும் எளிய வழி மது அடிமையாக மாறுவதே! எப்படித் தொடங்குகிறார்கள்? இன்றைய குடிமக்களில் பலர் வேடிக்கையாகக் குடிக்கத் தொடங்கியவர்களே. இந்தத் தொடக்கத்துக்கு முதல் முக்கியமான காரணம் என்ன? எளிதாகக் கிடைப்பதே பலரையும் குடிக்கத் தூண்டுகிறது. உலக அளவில் செய்யப்பட்ட பல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெளிவாகத் தெரிய வரும் உண்மை இது. ஆம்... தமிழ்நாட்டில் வசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளாமலே இந்த உண்மை பளிச்சென விளங்கும். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் இருப்பதாலேயே, குடிக்கிற பழக்கத்துக்கு ஆட்படுகிற ஏராளமானோரை நாள்தோறும் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். 


குடிநோயாளி ஆவதற்கு முன்போ, குடிப்பழக்கம் இல்லாத வரையோ, யாரும் குடிப்பதற்காக ஏழு கடல் ஏழு மலை தாண்டுவது போன்ற பிரயத்தனங்கள் எதையும் செய்வதில்லை. அந்தப் பழக்கம் ‘விடாது கருப்பு’ போலத் தொற்றிய பின்புதான், அவர்கள் குடிக்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்கத் துணிவார்கள். பூட்டிய கடையை திறக்க வைப்பார்கள்... அண்டை மாநிலத்துக்குப் படை எடுப்பார்கள்... ‘அந்தச் சரக்கு இல்லாவிட்டாலும், எந்தச் சரக்காவது ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று இறைஞ்சுவார்கள்... பணம் இல்லையெனில் அதற்காக எதையேனும் விற்கவும், அடமானம் வைக்கவும் அல்லது கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். குழந்தையின் உண்டியல் சேமிப்பை எடுத்து வருவது கூட குடியின் பொருட்டு அவர்களுக்குத் தவறாகாது. இதற்கு அடுத்த செயல்தான் மதுவுக்காக மானம் கருதாது கை ஏந்துவது.

இதற்கு வலு சேர்க்கும்  சமூக அரசியல் காரணங்களும் உண்டு. தேவைக்கேற்ப சப்ளை என்கிற வணிக இயல்பு மாற்றப்பட்டு, சப்ளைக்கேற்ப குடிப்பவர்களை அதிகப்படுத்தும் பணியாகி விட்டது இங்கு. இதுவும் ஒருவித தேவைதான். குடிக்கிறவர்களுக்கான  தேவை அல்ல... குடிக்க வைக்கிறவர்களுக்கான தேவை. வணிக, அரசியல் ரீதியான தேவை. ஆனால், இதற்குப் பலியாகிறவர்கள் யார்? எளிதாகக் கிடைப்பது என்கிற விஷயத்தைத் தாண்டி, ஒருவரை மதுவின் பால் ஈர்ப்பது எது? நண்பர்கள், உறவினர்களின் தூண்டு தல். சில நேரம் வீட்டில் மற்றவர்கள் குடிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் கூட, மறைமுகமாக மதுவின் பக்கம் 
தூண்டப்படுவது உண்டு. இதுவும் சமீபகாலமாக அதிகமாகி இருக்கிறது. இப்போதெல்லாம் டீன் ஏஜ் காலகட்டத்தில் சோதனை முயற்சியாக மது அருந்தி பார்ப்போரில் பாதிக்கும் அதிகமானோர் தொடர்ந்து குடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அதனால்தான் அபாயத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

அடுத்த காரணி?

டீன் ஏஜில் மதுவைத் தொடாமல் தாண்டி வந்தவர்கள் கூட, பின்னாளில் அதற்கு அடிமையாவதும் உண்டு. நடுத்தர வயதில் ஏற்படும் மன அழுத்தம் இதற்கு ஒரு காரணம். குடும்பக் குழப்பம், வேலையில் கஷ்டம், பொருளாதாரச் சிக்கல் போன்றவை காரணமாக, தங்கள் கவலையை மறக்கடிக்கலாம் என்று எண்ணி மதுவுக்குள் வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் கூடுதல் கஷ்டமாக மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். ஒருகட்டத்தில் உடல் மற்றும் மனம் இரண்டுமே அவர்களை குடிக்க வைப்பதாகி விடுகிறது. குடித்தே தீர வேண்டும் என்கிற நிலைக்குள் வந்து விழுகிறார்கள். குடிக்க இயலாமல் போனாலோ, உடல்நலம் குன்றியதாக உணர்கிறார்கள். மது அருந்தினாலோ, தற்காலிகமாக அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் மீண்டதாக எண்ணுவார்கள். போதை ஓரளவு தெளிந்ததும் மீண்டும் பிரச்னைகள்... மீண்டும் குடி... எங்கே போகும் இந்தப் பாதை? மருத்துவரும் அறிய மாட்டார்!

உடல்நிலை மோசமாகும் வரையோ, பணம் இல்லாத நிலை வரும் வரையோ, மது அருந்துவோர் யாரிடமும் உதவி வேண்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை மதுவே சர்வரோக நிவாரணி! உடல்நலமற்ற பொழுதில் மருத்துவரைச் சந்திக்கையிலும், அவர்கள் மது அருந்தும் விஷயத்தையும், மதுவினால்தான் உடல்நலம் குன்றிய உண்மையையும் வெளிப்படுத்துவதில்லை. மருத்துவரே அறிந்தால்தான் உண்டு. இதனால், அவர்களுக்கு முறையான சிகிச்சையும் கிட்டாமல் போகிறது. பிரச்னையும் நீண்டு கொண்டே செல்கிறது. இனி எந்தப் பிரச்னைக்காக நோயாளி வந்தாலும், அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதா என மருத்துவர்களே ஆய்ந்து அறியும் நிலைமை இப்போது உருவாகிவிட்டது.

அறிவது எப்படி?

நம் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் அல்லது நண்பருக்கு தீவிரமான குடிப்பழக்கம் இருப்பதை நாம் அறியாமலே கூட இருக்கலாம். இருப்பினும் சிலபல அறிகுறிகளைக் கொண்டு, நாம் அதன் தீவிரத்தை அறிந்து உதவ முடியும். உதாரணமாக... 

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் உறவுச் சிக்கல்கள்

அடிக்கடி அல்லது தொடர்ச்சியான உடல்நலப் பிரச்னைகள் 

கை கால் நடுக்கம், வாய் குழறுதல், காலையில் கூட ஆல்கஹால் வாசனை

சோர்வு, பதற்றம் உள்பட பலவித மனவியல் சிக்கல்கள்

அலுவலகம் அல்லது தொழிலில் ஈடுபாடின்மை... அளவுக்கு மீறிய விடுப்புகள்

வயிற்றுக்கோளாறுகள் (சில நேரங்களில் ரத்த வாந்தி)

தூக்கம் இன்மை

பாலியல் சார்ந்த பிரச்னைகள்

விபத்துகளில் சிக்குதல் அல்லது காரணம் அறியாமலே காயம் அடைதல். 

இதுபோன்ற அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ ஒருவரிடம் அடிக்கடி உணர முடிந்தால், அவர் மது அடிமை ஆகிக்கொண்டிருக்கிறார் என்றே பொருள். 
அப்படியானால், அவர் சமீபகாலமாகத்தான் மதுவின் பிடிக்குள் அகப்பட்டிருக்கிறாரா? அவர் குடிப்பது உங்களுக்கோ, குடும்பத்துக்கோ கவலைக்கு உரிய செயலாகத் தோன்றுகிறதா? இரவில் மட்டுமல்லாது காலையிலும் குடிக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறியுங்கள். விடைகள் இல்லை என்று தெரிந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ‘ஆம்’ என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்கள் உதவியே அவருக்கு உடனே தேவை. அவரை மீட்க முடியுமா?
ஆம்... உங்களால் முடியும்! 
ரயில் பெட்டியை தாழிட்டு இளம்பெண்ணிடம் பலாத்காரம்: ரயில்வே ஊழியர் அதிரடி கைது


திருச்சி: திருச்சி ஜங்ஷன் எடமலைப்பட்டிபுதூர் யார்டில் ரயில்வே பெட்டிகளை பராமரிப்பு பணி நடப்பது வழக்கம். இங்கு புதுக்கோட்ைட ஆலங்குடியை சேர்ந்த மரியச்செல்வம் (40) என்பவர் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் ஊழியராக கடந்த 10 ஆண்டாக பணியில் உள்ளார். 3 மாதங்களுக்கு முன் துப்புரவு பணிக்காக 23 வயது இளம்பெண் புதிதாக பணியில் சேர்ந்தார். இவருக்கு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. கடந்த 5ம் தேதி ரயில் பெட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அந்த பெட்டியில் ஏறிய மரியசெல்வம், ரயில் பெட்டியின் கதவை தாழிட்டு, அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கத்தி கூச்சல் போட்ட இளம்பெண், மரியசெல்வத்திடமிருந்து தப்பி ரயில் பெட்டி கதவை திறந்து வெளியே ஓடிவந்தார். யார்டில் பணியில் இருந்த சூப்பர்வைசரிடம் புகார் அளித்தார். பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இளம்பெண்ணின் புகாரை பெற்றும் சூப்பர்வைசர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று திருச்சி ஜங்ஷன் வந்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

இதையடுத்து அத்துமீறி கதவை தாழிட்டல்(342), அடித்து காயப்படுத்துதல்(322) மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிந்தனர். தலைமறைவாக இருந்த மரியசெல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ரயில் பெட்டியில் சகபெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

20,000 கிமீ நீளத்துக்கு உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை : சீனா நிறைவு செய்தது


பீஜிங்: 20 ஆயிரம் கிமீ நீளத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைத்து, உலகின் மிக நீளமான புல்லட் ரயில் நெட்வொர்க்கை சீனா நிறைவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் சீனா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் மத்திய ஹெனான் மாநிலத்தில் உள்ள ஜெங்சோ என்ற இடத்தில் இருந்து கிழக்கு ஜியாங்சூ மாநிலம் சூஜோ என்ற இடம் வரையில் 362 கிமீ தூரத்துக்கு புல்லட் ரயில் போக்குவரத்தை சீனா நேற்று தொடங்கியது. இதன் மூலம் சீனாவின் புல்லட் ரயில் பாதைகளின் மொத்த தூரம் 20,000 கிமீ தூரத்தை தாண்டிவிட்டது. இவ்வளவு தூரத்துக்கு உலகில் வேறு எங்கும் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படவில்லை.

இதன் மூலம் ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையோன பயண நேரம் 11 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையேயுள்ள உள்ள 9 ரயில் நிலையங்களை மணிக்கு 300 கிமீ வேகத்தில் புல்லட் ரயில் கடக்கிறது. இந்த புல்லட் ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

கடந்த ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடந்தது. சீனாவில் தற்போது 20 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பானுடன் சீனா போட்டி போட்டு வருகிறது. இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் பாதை ஒப்பந்தத்தை ஜப்பான் பெற்றுள்ள நிலையில், சென்னை-டெல்லி இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் ஆய்வு பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
தாம்பத்ய உறவுக்கு மறுத்த பெண்ணுக்கு மருத்துவ சோதனை

மும்பை: மும்பையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2010 டிசம்பரில் திருமணம் நடந்தது. அப்போது கணவனுக்கு வயது 38. மனைவிக்கு 33. இருவருக்குமே இது 2வது திருமணம். திருமணத்திற்கு பின் தாம்பத்ய உறவுக்கு மனைவி தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால் 2011ல் விவாகரத்து கேட்டு கணவன் குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘மனைவி குடும்பம் நடத்த தகுதி இல்லாதவர். எனவே விவகாரத்து வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த பெண்ணை சோதிக்கும்படி குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. அவர் தாம்பத்திய உறவுக்கு தகுதியானவர் தானா அல்லது குறைபாடு உடையவரா என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மும்பை ஜெ ஜெ மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த பெண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘குடும்ப நல கோர்ட் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.தத் விசாரித்தார். அப்போது கணவர் சார்பில் ஆஜரான வக்கீல் ரமேஷ்லால்வானி வாதாடுகையில், ‘‘திருமணமானபின் 3 மாதங்களாக மனைவி தாம்பத்ய உறவுக்கு அனுமதிக்கவில்லை. எனவே அவர் திருமண உறவுக்கு தகுதியானவர் அல்ல. இதற்கு மருத்துவ பரிசோதனை தேவை’’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெண்ணை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த குடும்ப நல கோர்ட் வழங்கிய உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.
பத்தரை மாற்று தங்கம்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாரியப்பன் தங்கவேலு. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை. ஆண்கள் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்திருக்கிறார் மாரியப்பன். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் வெண்கலம் வென்றிருக்கிறார். ஊனம், ஏழ்மை, ஏளனம் போன்ற தடைக்கற்களை தகர்த்தெறிந்து சிகரத்தை எட்டியிருக்கும் இந்த வீரர்களின் சாதனை, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது. பாராலிம்பிக் போட்டியில் கிடைத்த தங்கம் என்று இதை குறைத்து மதிப்பிடுவது கூடாது. உலக அளவில் மிகச் சிறந்த வீரர்களின் கடுமையான போட்டியை சமாளித்து மாற்றுத் திறனாளியான மாரியப்பன் வென்றுள்ளது பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது மகத்தான வெற்றி, அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும்.

காதல் என்ற பெயரில் பெண்களை வெட்டிச் சாய்த்து, அமிலம் ஊற்றி சிதைத்து, பின்னர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அளித்த நிலையில், இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஆக்கசக்தியாக, குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாரியப்பனின் வெற்றி உணர்த்துகிறது. சாதனை வீரருக்கு பாராட்டு, வாழ்த்துகளுடன் கோடிக் கணக்கில் ரொக்கப் பரிசுகளும் குவிகின்றன. வென்றவர்களை பாராட்டுவதும், கவுரவிப்பதும் நமது கடமை. அப்போது தான் மாரியப்பன், வருண் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களை கடுமையாக முயற்சிக்கத் தூண்டும். நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திறமையான சிறுவர் சிறுமியரை தேர்வு செய்து உணவு, உடை, கல்வி, பயிற்சி என அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும்.

அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்து, எதிர்காலம் பற்றிய கவலையை போக்க வேண்டியதும் அவசியம். வெற்றியாளர்களை தோளில் தூக்கிக் கொண்டாடும் அதே சமயம், தோற்றவர்கள் துவண்டு விடாமல் முனைப்புடன் தங்கள் முயற்சியை தொடர ஆதரியுங்கள். ஒலிம்பிக்ஸ் முடிந்து பரபரப்பு ஓய்ந்ததும் விளையாட்டுத் துறை அமைச்சகம், அதிகாரிகள், நிர்வாகிகள் வழக்கம் போல தூக்கத்தில் ஆழ்ந்துவிடாமல், 2020ஐ மனதில் வைத்து ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

வெறி கொலைகளுக்குப் பின்னே மறைந்து கிடக்கும் மனசு!



நன்றி குங்குமம் டாக்டர்

ஏன் இந்த கொடூரம்?

திரும்பிய திசையெல்லாம் ரத்தம் தெறித்த இந்த ஜூன் மாதத்தை இனி எப்போதும் மறக்க முடியாது. மாடியிலிருந்து நாய்க்குட்டியைத் தூக்கிப் போடுவதிலிருந்து, ரயில்நிலையத்தில் ஒரு பெண்ணை வெட்டிக் கொல்வது வரை நாம் பார்த்தவை அனைத்தும் பதற வைக்கும் பயங்கரங்கள். சட்டம் ஒழுங்கு் குறைபாடு, மதுப்பழக்கம், ஆணாதிக்கம் என்று இந்த அசம்பாவிதங்களுக்கு எல்லாம் பல காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால், அவை எல்லாமே கிளைக் காரணங்கள்தான். இவற்றின் ஆதாரமான, ஆணிவேரான காரணம் ஒன்று உண்டு. அது… மனசு! அதிர்ஷ்டவசமாக மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது நமக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக அதை நாம் பின்பற்றுவதில்லை. மனிதர்களின் மனம் ஏன் இத்தனை வன்மமாக மாறுகிறது?

இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? உளவியல் மருத்துவரான கார்த்திக்கிடம் பேசினோம்…‘‘கோபம், காதல், சோகம் போன்ற நம் உணர்ச்சிகள் எல்லாம் மூளையில் Limbic system என்ற பகுதியில்தான் உருவாகிறது. இந்த உணர்ச்சிகளைக்கட்டுப்படுத்தும் வேலையைச் செய்வது Frontal lobe என்ற மூளையின் முன்பகுதி. இந்த ஃப்ராண்டல் லோப் செயல்படவில்லை என்றால்தான், அது வெறியாக மாறுகிறது. அதற்கு வடிகால் வேண்டும் என்று தவிக்கும்போது குற்றங்கள் நடக்கின்றன. காதலனுடன் சேர்ந்து தந்தையையே ஒரு பெண் கொன்ற செய்தியைப் பார்த்திருப்பீர்கள். அப்பாவைக் கொல்லலாமா, ஜெயிலுக்குப் போவோமே, மற்றவர்கள் தவறாகப் பேசுவார்களே என்பதையெல்லாம் யோசிக்கும் அளவு அந்தப் பெண்ணின் ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையவில்லை.

பல கள்ளக்காதல் கொலைகளின் அடிப்படைக் காரணம் இதுதான். கணவனையோ, மனைவியையோ கொலை செய்துவிட்டால் சந்தோஷமாக வாழ முடியும் என்று நம்புகிறார்கள். ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் என்கிற பின்விளைவை மறந்துவிடுகிறார்கள். எதிர்காலத்தை மறந்து செய்யப்படும் இந்த எல்லாக் குற்றங்களும் ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையாதவர்களால்தான் நடக்கிறது.’’ஃப்ராண்டல் லோப் வளர்ச்சி எதனால் பாதிக்கப்படுகிறது? ‘‘மரபியல் ரீதியாக சிலருக்குப் பாதிக்கப்பட்டாலும், Micro environment என்கிற குடும்ப, சுற்றுப்புறச்சூழல்தான் பெரிய காரணமாக இருக்கிறது. அதனால், குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தை திருடும்போது கண்டிக்க வேண்டும்.

அப்போது திருடுவது தவறு என்று அந்தக் குழந்தை புரிந்துகொள்ளும். முக்கியமாக, ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையும் காலம் 18 வயது முதல் 24 வயது வரை என்பதால் குழந்தைகளை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு நிறைய இருக்கிறது.’’சினிமாக்களால் குற்றங்கள் அதிகமாகிறதா? ‘‘இது தவறான கருத்து. சமூகத்தில் நடப்பதைப் பிரதிபலிக்கும் ஓர் ஊடகம்தான் சினிமா. அடிப்படையிலேயே வன்முறை எண்ணம் கொண்ட ஒருவன், சினிமா பார்க்காவிட்டாலும் கொலை செய்வான். பட்டப்பகலில் ஒரு கொலை நடக்கிறது. சுற்றியிருக்கிறவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சியை மறைக்க யார் மீதாவது பழி போடுகிறோம். பொறுப்பேற்றுக் கொள்ளும் நேர்மை இல்லாதவர்கள்தான் இதுபோல மற்றவர்களைக் குறை சொல்கிறார்கள். அதிலும் சினிமா எப்போதும் எளிதான இலக்காக இருக்கிறது.

அரசியல்வாதிகளையோ, போலீசையோ நம்மால் பகிரங்கமாக குற்றம் சொல்ல முடியாது. அதற்குப் பின்விளைவுகள் உண்டு. சினிமா பிரபலங்களை விமர்சிக்கலாம். அதில் விளம்பரமும் கிடைக்கும். அவர்களிடமிருந்து நமக்கு பிரச்னையும் வராது. திரைப்படக் கலைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஆக்கப்பூர்வமான மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறவர்கள், சினிமாதான் காரணம் என்று சொல்லிவிட்டுத் தப்பிக்கக்கூடாது. தவறுக்கு நானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதுதான் மாற்றத்துக்கு வழி.’’கோபம் எப்போது ஆபத்தாக மாறுகிறது? ‘‘கோபம் ஓர் இயல்பான உணர்ச்சி. அதைக் கையாளும் விதத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண மனிதர்கள் கோபப்பட்டாலும் அதன்பிறகு அதை நினைத்து வருந்துவார்கள். அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள்.

ஃப்ராண்டல் லோப் வளர்ச்சி குறைந்தவர்களின் உணர்ச்சிகள் வேறு வகை. இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர மாட்டார்கள். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும் Mirror neurons இவர்களுக்கு செயல்படாது. ஒருவன் மாடியில் இருந்து நாய்க்குட்டியைத் தூக்கிப் போடுவதற்குப் பின்னால் இருப்பது இந்த மிரர் நியூரான்கள்தான். நாய்க்குட்டியின் உணர்வைப் புரிந்துகொள்ளாதவன் மனிதர்களையும் அதேபோலத்தான், மாடியிலிருந்து தூக்கிப்போடுவான்.’’மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாகிவிடுவார்களா? ‘‘தானாகப் பேசுவது, சிரிப்பது போன்ற கோளாறுகள் எல்லாம் உடல்ரீதியான குறைபாட்டால் வரும் பிரச்னை. அதில் ஆபத்து இல்லை. மருந்துகள் கொடுத்தால் குணமாகிவிடுவார்கள்.

இவர்கள் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க மாட்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் கிட்டத்தட்ட குழந்தைகளைப் போன்றவர்கள். ஆனால், Personality disorder கொண்டவர்கள்தான் குற்றவாளிகளாகிறார்கள்.’’கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்…‘‘Personality disorder என்ற குணக்கோளாறில் இரண்டு வகை இருக்கிறது. Anti social personality என்ற முதல் வகையைச் சேர்ந்தவர்கள் சமூகத்துக்கு எதிரான குற்றங்களை விருப்பத்துடன் செய்வார்கள். ‘நோ பார்க்கிங்’ என்றால் அங்கேதான் வண்டியை நிறுத்துவார்கள். பணம் என்பதைத் தாண்டி குற்றச்செயல்களைச் செய்வதில் அலாதியான விருப்பம் இருக்கும். கூலிப்படையினர், தீவிரவாதிகள் எல்லாம் இந்த வகையினர்தான். இந்தப் பிரச்னை ஆண்களுக்கு அதிகம் ஏற்படும்.

இதில் இரண்டாவது வகை Border line personality. காதலுக்காகக் கொலை செய்கிறவர்கள் இந்த பார்டர் லைன் பர்சனாலிட்டியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு சுயமதிப்பு இருக்காது. இவர்கள் மற்றவர்களைச் சார்ந்தே இருப்பார்கள். உணர்வுரீதியாக வாழ்க்கையைக் கையாள்கிற பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படும்.’’காதல் கொலைகள் பற்றி...‘‘ ‘நீயில்லாமல் நானில்லை’, ‘நீயில்லாவிட்டால் நான் செத்துருவேன்’ என்பதையெல்லாம் ஆரோக்கியமான மனநிலையில் இருப்பவர்கள் சொல்வது இல்லை. இது பார்டர் லைன் பர்சனாலிட்டியின் அறிகுறி. ஆனால், இதை காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குக் காதல் சம்மதம் கிடைத்தாலும் அமைதியாக இருக்க மாட்டார்கள்.

அதன் பிறகுதான் பிரச்னையே ஆரம்பிக்கும். வேறு யாராவது நம் காதலுக்குக் குறுக்கே வந்து விடுவார்களோ என்கிற பயம் வந்துவிடும். இதன் எதிரொலியாக ‘எங்கே இருக்கிறாய்’, ‘யாருடன் இருக்கிறாய்’ என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சண்டை, சச்சரவு வந்துகொண்டே இருக்கும். கடைசியில் வாழ்க்கையே நரகமாகி விடும்...’’காதல் தோல்வியை இளைஞர்கள் எப்படிக் கையாள வேண்டும்?‘‘ஓர் உறவு முறியும்போது இழப்பு இருவருக்கும்தான். அதனால் விலகலாம் என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால் அதற்கு மற்றவர் மரியாதை கொடுக்க வேண்டும். அந்த உறவை இறுக்கிப் பிடிக்க முயற்சித்தாலே, நம் மீது நமக்கு மதிப்பு குறைவாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் கொண்டவர்கள் காதல் தோல்வியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்தப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்குத்தான் இழப்பு என்று நினைப்பார்கள். சுயமதிப்பு இல்லாதவர்களால் இந்த நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதான் கொலையாகவோ, தற்கொலையாகவோ மாறுகிறது. ’’நாம் ஆபத்தான உறவில் இருக்கிறோம் என்பதை உணர முடியுமா?‘‘சுயநலத்துக்காக ஒருவர் உங்களை நிர்பந்தப்படுத்திக் கொண்டே இருந்தால் அவர் ஆபத்தானவர். ‘என் கூடவே இருக்க வேண்டும்’, ‘என்னுடன் இந்த இடத்துக்கு வர வேண்டும்’ என ஒருவரிடமிருந்து டிமாண்ட் வந்துகொண்டே இருந்தால், நீங்கள் ஆபத்தான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறவரும் பிரச்னைக்கு உரியவரே. இதேபோல, சிறிய பிரச்னைக்குக் கூட 4 நாட்கள் பேசாமல் இருக்கிறவர்கள், ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறவர்களிடமும் கவனம் அவசியம்.

இன்னொரு வகையும் உண்டு. ரொம்பவும் அமைதியாக, யாரிடமும் பேசாமல் சிலர் ஒதுங்கியே இருப்பார்கள். இவர்களை நல்லவர் என்று சமூகம் நினைக்கும். ஆனால், நல்லவர்களின் அடையாளமே சமூகத்தோடு நன்றாகக் கலந்து பழகுவதில்தான் இருக்கிறது. அதனால், இவர்களிடமும் விலகி இருப்பதே நல்லது.
சுதந்திரம் கொடுத்து, தேவைப்படும்போது உதவி செய்கிற, நம்மைப் புரிந்துகொள்கிறவர்களுடனே நட்பு பாராட்ட வேண்டும்.’’காதல் தொந்தரவுகளை சமாளிக்க வழிகள் என்ன?‘‘ஆண்பெண் உறவு கண்ணாடிப் பொருட்களைக் கையாள்வது போலத்தான். ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவருக்கு மனதில் அந்த அபிப்பிராயம் வந்துவிடும் என்பதால் கவனமாகவே கையாள வேண்டும்.

ஒருவேளை, அந்த உறவு சரிவராது என்று நினைத்தால் எதிராளியின் ஈகோவை சீண்டுகிற மாதிரி அவமானப்படுத்துவதோ, மிரட்டுவதோ தவறு. அது மோசமான பின்விளைவுகளையே உண்டாக்கும். காதல் இம்சை செய்கிறவர்களைத் தனியாக சமாளிக்க முடியும் என்று நம்புவதும் தவறு. மற்றவர்களின் உதவியோடு பக்குவமாகவே அந்தப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும்.நன்றாகப் பழகிய பின்னர், காதலைச் சொல்லும் நிலைக்கு வந்தபிறகு, ஒருவரை மறுக்கும்போதுதான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதனால், ஆரம்பத்திலேயே போதுமான இடைவெளியுடன் பழகுவது நல்லது. ஒருவரின் குணம் முழுமையாகத் தெரியாமல் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

சமூக வலைத்தளங்களில் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக் கொள்வதி லிருந்து, அவருடைய மெசேஜுக்கு பதில் தருவதிலிருந்து எல்லாவற்றையும் கவனமாகக் கையாள வேண்டும். நேரில் பேசி, பழகியவரை முகநூலில் நண்பர்களாக வைத்துக் கொள்வதே நல்லது.’’மனநலம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?‘‘உடல்நலத்துக்காக உணவில் கவனம் செலுத்துகிறோம், உடற்பயிற்சிகள் செய்கிறோம். ஆனால், மனதை நாம் பொருட்படுத்துவதில்லை. மன ஆரோக்கியத்துக்காக எந்த முயற்சிகளும் செய்வதில்லை. நம் கல்வித் திட்டத்திலும் மனம் என்ற விஷயமே இல்லை. மருத்துவம் படிக்கிறவர்களுக்கே உளவியல் பற்றித் தெரியாது. அதனால்தான் உணர்வு ரீதியான பிரச்னைகளை சமாளிக்கத் தெரிவதில்லை. ஒருவர் தானாகப் பேசினாலோ, சிரித்தாலோதான் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், நமக்குள் இதுபோல நீறுபூத்த நெருப்பாக இருக்கும் குணக்கோளாறுகளை உணர்வதில்லை.’’ஆரோக்கியமான மனநிலை கொண்ட குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

‘‘ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க முடியாத சூழல் என்று சொன்னால், அதை குழந்தை புரிந்துகொள்ள வேண்டும். அழுது, அடம்பிடித்தால் அந்தக் குழந்தை ஆபத்தாக வளர்கிறது என்று அர்த்தம். தொடர்ந்து அதே பிடிவாதத்தை எல்லா விஷயத்திலும் கடைபிடித்தால் மனநல ஆலோசகரிடம் அழைத்துப் போவதுதான் சரி. ஆர்ப்பாட்டம் பண்ணினால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வளர்கிற ஒருவன், வளர்ந்த பிறகு ஒரு பெண்ணிடமும் அதே ரீதியில் காதலை எளிதாக எதிர்பார்ப்பான். அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவனால் தாங்கிக் கொள்ளாமல் விபரீதம் நடக்கும். ஐஸ்கிரீம் என்ற சின்ன விஷயத்தில் ஆரம்பிப்பதுதான் ஒரு பெண்ணைக் கொலை செய்வதில் முடியும். அதனால், உடனுக்குடனே கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி குழந்தைகளை வளர்க்கக் கூடாது. சைக்கிள் கேட்டால், ‘நல்ல மார்க் எடுத்தால் வாங்கித்தருகிறேன்’ என்று சொல்ல வேண்டும். அப்போது கஷ்டப்பட்டால்தான் பலன் கிடைக்கும் என்கிற பக்குவம் வரும்.’’மன ஆரோக்கியத்தை அளவிட எதுவும் வழிகள் இருக்கிறதா?

‘‘ஒரு பிரச்னை வருகிற போது தனக்கும் மற்றவர்களுக்கும் பாதகம் வராமல் எப்படி அந்த சூழலைக் கையாள்கிறார்கள் என்ற பக்குவத்தைப் பொறுத்தே ஒருவரின் மன ஆரோக்கியத்தைச் சொல்ல முடியும். Intelligence quotient என்ற அறிவுத்திறனை விட Emotional quotient என்ற உணர்வுகளைக் கையாளும் திறன்தான், இப்போது நாம் எல்லோருக்கும் தேவை.’’மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைச் சொல்லுங்கள்…‘‘யோகாவும் தியானமும் மனநலத்தை மேம்படுத்தும். தியானத்தின் மூலம் நம் உணர்வுகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்போது எண்ணங்கள் மட்டுப்படும். அதன்பிறகு, எந்தச் சூழலையும் எளிதாகக் கையாள முடியும். உணர்ச்சிகளைக் கையாளும் திறனை ஃப்ராண்டல் லோப் தானாகவே பெற்றுவிடும்.

சிறந்த புத்தகம் படிப்பது, நல்ல பாடல்கள் கேட்பது, நல்ல நண்பர்களுடன் பழகுவது, இயற்கையான இடங்களுக்குச் சென்று வரும்போது ஃப்ராண்டல் லோப் நல்லவிதமாகத் தயாராகும். முடிந்தவரை இயற்கையோடு தொடர்பில் இருக்க வேண்டும். சக மனிதர்களோடு பேசிப் பழகவேண்டும். தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதுவும் மனநலப் பாதிப்பை உண்டாக்கும். முக்கியமாக, நம் உணர்வுகளை நாமே கவனிக்கிற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் திட்டினால் நம்மிடம் இருந்து நாமே கொஞ்சம் விலகி நின்று யோசிக்க வேண்டும். என்ன காரணம், இந்தப் பிரச்னை சரியாக என்ன வழி என்று ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும். ‘தேவாங்கு’ என்று திட்டினால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால்தான் மனது பாதிக்கப்படும். அதற்கு எதிர்வினை ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்னை இல்லை!’’

ஞானதேசிகன்

NEWS TODAY 08.06.2026