Saturday, November 19, 2016

வலையில் சிக்கிய கறுப்பு பண முதலைகள் வருமானவரித்துறையின் அடுத்த டார்க்கெட்


யானை வரும்பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதை போல வங்கிகளில் வருமான வரி உச்ச வரம்பைத் தாண்டி பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் மாற்றி வருகின்றனர். கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கால்கடுக்க காத்திருந்து மக்கள் பணத்தை மாற்றினர். ஒரே நபர் பலமுறை பணம் மாற்றுவதாக ஆர்.பி.ஐக்கு தகவல் கிடைத்ததும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுப்பதில் செக் வைத்தது.
அதாவது, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று அறிவித்தது. அடுத்து 4,500 ரூபாய் வரை பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற உச்சவரம்பு தொகை 2000 ரூபாய்எ ன்று குறைக்கப்பட்டது.

மேலும், வங்கிகள், மை இல்லாமல் யாருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கொடுக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் பல வங்கிகளுக்கு மை வராததால் அவர்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கவில்லை.இதன்காரணமாக வங்கிக்கு சென்று மக்கள் ஏமாந்தனர்.
இதையடுத்து வங்கி கணக்கில் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்களை வங்கி அறிவுறுத்தியது. அதன்பேரில் மக்கள், கடந்த மூன்று தினங்களாக வங்கியில் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்து வருகின்றனர். இதில் வருமானவரி உச்சவரம்பிற்கு மேல் டெபாசிட் செய்பவர்களை வருமானவரித்துறை கண்காணித்து வருகிறது. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் பட்டியலை தயாரித்த வருமானவரித்துறை அவர்களுக்கு வருமானத்துக்கான ஆதாரத்தையும் அதன் விளக்கத்தையும் சமர்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், '49 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் பணம் செலுத்தினால் கட்டாயம் பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். அதன்படி பழைய ரூபாய் நோட்டுக்களில் 49 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டுகளை ஆய்வு செய்தோம். இந்த மாதத்தில் வருமான வரி உச்ச வரம்பிற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களை கண்டறிந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. நோட்டீஸில் அவர்கள் டெபாசிட் செய்த பண விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கு அவர்கள் உரிய வருமான ஆதாரங்களையும், கடந்த 2 ஆண்டுகளாக வருமானவரி தாக்கல் செய்த விவரங்களையும் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்கவில்லை என்றால் டெபாசிட் செய்த பணத்துக்கு 200 சதவிகிதம் அபராதமும் பிடிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்பு பணத்தை மீட்கவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என்றனர்.
இந்த மாதத்தில் மட்டும் அதிகளவில் பணம் டெபாசிட் செய்த விவரங்களையும் வருமானவரித்துறை சேகரித்து வருகிறது. அவர்களுக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது என்றார் வருமானவரித்துறை உயரதிகாரி ஒருவர். வருமானவரித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

- எஸ்.மகேஷ்
Dailyhunt

இந்த வெள்ளிக்கிழமையை யாருக்கு டெடிகேட் பண்ணப் போறீங்க? #MorningMotivation #FridayFeeling


வெள்ளிக்கிழமை என்றாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், விடுமுறை தினம் அருகில் என்பதே முதன்மையாக இருக்கும். பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கு விடுமுறை தினங்களில் நண்பர்களோடு கூடிக் கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். அலுவலகம் செல்வோருக்கு 'அப்பாடா... ரெண்டு நாள் (அ) ஒருநாள் வீட்ல ஹாயா இருக்கலாம்' என்று எண்ணம் இருக்கும். ஆனால் எந்த வெள்ளிக்கிழமையையாவது யாருக்காவது டெடிகேட் செய்ததுண்டா நீங்கள்?
அதென்ன சம்பிரதாயம் என்கிறீர்களா? சொல்கிறேன்.
ஒரு வாரத் துவக்கத்தில், மனது உற்சாகமாய் உணரும்போது இந்த வாரத்தில் இதை இதை செய்வேன் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

அதையெல்லாம் செய்தீர்களா.. இல்லையா என்று எந்த வாரமாவது அலசியிருக்கிறீர்களா? ஆம் என்றால்.. சபாஷ்.. நீங்கள் அல்ரெடி லீடர். இல்லையென்றால்.. டோண்ட் வொர்ரி.. இதோ சில டிப்ஸ்.
ஒரு பேப்பரையும் பேனாவையும்.. சரி விடுங்கள்.. சிஸ்டத்தில் புதிய Blank Document ஒன்றை திறந்துகொள்ளுங்கள். இந்த வாரத்தில் நீங்கள் எதெதற்கெல்லாம் பாராட்டு வாங்கினீர்கள் என்று குட்டி லிஸ்ட் ஒன்று போடுங்கள். ரொம்ப சின்ன விஷயமாக இருக்கலாம்... பெரியதாகவும் இருக்கலாம். வாய் வார்த்தையாக இல்லாமல் செய்கை மூலமாகவும் அந்தப் பாராட்டு இருக்கலாம். சில உதாரணங்கள் பார்ப்போமா?
1. ப்ளூ கட்டம் போட்ட சட்டையும், ஜீன்ஸும் எனக்கு நன்றாக இருப்பதாக வினோத் சொன்னான்.
2 ஃபைலை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்ததாக மீட்டிங்கில் மேனேஜர் என் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
3. மகளுக்கு ஹோம்வொர்க்கில் சந்தேகம் நிவர்த்தி செய்தபோது அவள் கட்டிப்பிடித்து தேங்க்ஸ்பா என்றாள்.
4. ரோட்டில் ஒருவர் குறுக்கே வர, பைக்கை நிறுத்தியபோது அவர் நன்றி சொல்லும் விதமாய் புன்னகைத்துச் சென்றார்.
இப்படி நடந்ததையெல்லாம் மனசுக்குள் ரீவைண்ட் செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது பிரியுங்கள். மேலே உள்ள உதாரணங்களில் இருந்தே பார்க்கலாம்;
நம்பர் 1-ல் நீங்கள் பெர்சனலாக, பெர்சனாலட்டியில் சிறப்பாக இருந்திருக்கிறீர்கள்.
நம்பர் 2-ல்: ஒரு அலுவலக ஊழியராக சிறப்பாக செயல்பட்டிருக்கிறீர்கள்.
நம்பர் 3-ல் குடும்பஸ்தராக, குடும்ப உறுப்பினராக நல்ல பெயர் எடுத்திருக்கிறீர்கள்.
நம்பர்4-ல் சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக யாரோ ஒருவரால் ஒருநொடி அடையாளம் காணப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் ஒருவர்... ஒவ்வொரு சூழலிலும் அந்தச் சூழலுக்கு தகுந்த மாதிரி செயல்பட்டு பெயரெடுத்திருக்கிறீர்கள்.
இதில் எந்தப் பாராட்டு உங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது என்று கொஞ்சம் பின்னோக்கிச் சென்று யோசித்துப் பாருங்கள். அந்த விஷயம்தான் உங்களுக்குப் பிடித்த - உங்களின் உள்ளுணர்வு சொல்லும் - நீங்கள். அதற்காக மற்றவை உங்களுக்கு விருப்பமில்லை என்றோ.. தேவையில்லை என்றோ அர்த்தமில்லை. அவை உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். நான்குமே கூடப் பிடித்திருக்கலாம் தப்பில்லை. அப்படி நீங்கள் விரும்பி செய்த, அல்லது செய்து பிறரால் பாராட்டுப் பெற்று நீங்கள் மகிழ்ந்த விஷயத்துக்காக இந்த வெள்ளிக்கிழமை நீங்களே உங்களை தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக, இந்த வாரம் செய்யலாம் என்று நினைத்து செய்யாமல் விட்ட விஷயங்களை எழுதுங்கள். அடுத்த வாரம் இதை முடிப்பேன் என்று சபதமெல்லாம் தேவையில்லை. எழுதி முடித்தபிறகு பார்த்தால், தேவையில்லாமல் நாமாக சில விஷயங்களை செய்வதாக கமிட் ஆகிக்கொண்டிருப்போம். அதெல்லாம் வேஸ்ட்.. செய்யவே போவதில்லை... செய்யவும் கூடாது என்று தோன்றும். அதை மனதிலிருந்து CTRL+ALT+DELசெய்யுங்கள். அதன்பிறகு எஞ்சியிருப்பதை அடுத்த வாரம் செய்கிறீர்களா.. இல்லையா என்று சும்மா நினைத்துக் கொள்ளுங்கள்.'கண்டிசனா செய்வேனாக்கும்' என்றெல்லாம் நிர்பந்தித்துக் கொள்ளாதீர்கள்.

ஓகேவா? Done? இனி என்ன என்கிறீர்களா? இனி என்ன... திங்கட்கிழமையை உற்சாகமா எதிர்கொள்ளணும்னா...வார இறுதியை எப்படி மாத்தலாம்னு சில யோசனைகள் இருக்கே.. அதுபடி எதாவது பண்ணுங்க. மேல டாகுமெண்ட்ல எழுதினது / டைப்பினதை சும்மா சேமிச்சு வெச்சு அடுத்த வெள்ளி எடுத்துப் பார்த்துக்கோங்க.
விஷயம் என்னன்னா, ரொம்ப சிம்பிள். ரீவைண்ட் பண்ணிப் பார்க்காததால நிறைய விஷயங்களை நாம கவனிக்கறதில்லை. தேவையில்லாம சில கமிட்மெண்ட்கள்ல மாட்டிக்கறது, முடிக்கணும்னு நினைச்சு ஈஸியா முடிக்காம இருக்கற சில விஷயங்கள், நாம சிறப்பா சில செயல்களை செஞ்சிருந்தாலும், அதை நாமளேகூட உணராம இருக்கறது இப்படி. இந்த மாதிரியான ரீவைண்ட் மெக்கானிசம் பெரிய மாற்றங்களை நிச்சயம் கொண்டுவரும். வெள்ளிக்கிழமையின் உற்சாகத்தை அது பன்மடங்கு அதிகரிக்கும்.
ஆக.. இதையெல்லாம் பண்ணினா, இந்த வெள்ளிக்கிழமையை யாருக்கு டெடிகேட் பண்ணணும்னு ஒரு தெளிவு கிடைக்கும். கிடைச்சுதா? யாருக்குன்னு தெரிஞ்சதா?

என்னது.. இவ்ளோ யோசனை சொல்ற எனக்கா? அட.. போங்க பாஸு.. அந்த மாதிரி ரீவைண்ட் லிஸ்ட் போட்டா, உங்களுக்கு நீங்களே டெடிகேட் பண்ணிப்பீங்க. Yes.. You Are The Best! 
-பரிசல் கிருஷ்ணா
Dailyhunt

டாஸ்மாக் பரிமாற்றத்துக்கும் அதிரடி செக்! -வலையில் சிக்கிய அதிகாரிகள்



பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக, விசாரணை வளைத்துக்குள் சிக்கியுள்ளனர் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சிலர். ' வங்கிகளில் பணத்தை மாற்றியது குறித்து ஆதாரபூர்வமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன' என அதிர வைக்கின்றனர் ஊழியர்கள்.

மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பழைய நோட்டுகளை 100, 50 ரூபாய்களாக மாற்றுவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அதிலும், அரசு நிறுவனங்களில் பணம் புழங்கும் இடங்களில், அதிகாரிகளே தங்களது கள்ளப் பணத்தை மாற்றிக் கொள்வதாக புகார் எழுந்தது. அண்மையில், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட டிப்போக்களில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள், தேர்தல் செலவுகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்களை மாற்றியதாக புகார் எழுந்தது.

இதன்பேரில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

அதேபோல், ஆவின், அமுதம் அங்காடிகள், கருவூலம் ஆகியவற்றில் பணம் மாற்றிக் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக, விருதுநகர் உள்பட சில மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் உயர் அதிகாரிகள் நாளொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் பழைய நோட்டுகளைத் திணித்துவிடுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில், 'இனி ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் கடைகளில் இருந்து வங்கிளுக்குச் செலுத்தப்படும் பணத்தைப் பற்றிய டினாமினேஷன்களை நகல் எடுத்து அனுப்ப வேண்டும்' என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார் ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்பார்க்காத டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

"தமிழ்நாடு முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கடைகளிலும் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இப்படி வசூலாகும் தொகைகள் மட்டும் இரண்டாயிரம் கோடியைத் தாண்டும். இந்தப் பணத்தில் பெரும்பகுதி மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்குச் சென்று சேருகிறது" என விவரித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர், "இந்தப் பணத்தை சிலர் ரியல் எஸ்டேட் உள்பட சில தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். சில அதிகாரிகள் பெரும் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை நல்ல நோட்டுகளாக மாற்றுவதற்கு டாஸ்மாக் சூப்பர்வைசர்களைப் பயன்படுத்தி வந்தனர். விருதுநகர், வேலூர் உள்பட பல மாவட்டங்களில் நாளொன்றுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையில் சில்லறை நோட்டுகளாக மாற்றப்பட்டு வந்தன.

மத்திய அரசின் அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குள் பல கோடி ரூபாய்கள், நல்ல நோட்டுகளாக மாறிவிட்டன. சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கள்ளப் பணமும் மாற்றப்படுவதாக புகார் எழுந்தது. இதில் சூப்பர்வைசர்களுக்கும் கணிசமான அளவுக்குக் கமிஷன் கிடைத்தது. இதுதவிர, பார் எடுத்து நடத்தும் அரசியல் புள்ளிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு, 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் சம்பவங்களும் நடந்தன. ' இந்தச் செயலில் யார் யார் ஈடுபடுகிறார்கள்' என அனைத்து விவரங்களும் டாஸ்மாக் எம்.டி.யின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, 'வங்கிகளில் செலுத்தப்படும் டினாமினேஷன் நகல்கள், செலான்களோடு இணைத்து அனுப்ப வேண்டும்' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் வருமானமும் கண்காணிப்பிற்குள் வர இருக்கின்றன. எந்தக்கடையில் இருந்து அதிகப்படியான 500, 1000 வெளியில் சென்றுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிந்துவிடும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது" என்றார் விரிவாக.

'ஒவ்வொரு அரசுத் துறைகளிலும் எவ்வளவு ரூபாய்கள் மாற்றப்படுகின்றன என்பது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் நடவடிக்கை பாய்வதற்கு முன், எச்சரிக்கை நடவடிக்கையாகவே டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என்கின்றனர் அதிகாரிகள் சிலர்.

- ஆ.விஜயானந்த்

Dailyhunt

"சாதாரண மனிதர்களால் குருசாமியாக முடியாது"- நம்பியார்சாமியின் வாக்கு! (நம்பியார் நினைவு தின பகிர்வு)

 '

வில்லன்...' என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருபவர் நம்பியார். தமிழ் சினிமாவில் அவருடைய வில்லன் பாத்திரம் வேறு யாராலும் ஈடுசெய்ய முடியாதது. கட்டான உடல்வாகு, கர்ஜிக்கும் குரலில் அனல் பறக்கும் வசனங்கள், ஹீரோக்களுடன் போடும் சண்டைக் காட்சிகள், வில்லத்தனமான சிரிப்புடன் அவர் கைகளைப் பிசைந்தபடி தலையைச் சாய்த்துப்பேசும் பாடிலாங்வேஜ்...

நினைத்த மாத்திரத்தில் நம் மனக்கண்ணில் தோன்றுபவை.

சினிமாவில் அவர் காட்டிய முகம் வில்லன், கொடுமைக்காரன், பணத்துக்காக எதையும் செய்பவன், ஏழைகளையும் பெண்களையும் துன்புறுத்துபவன்... `அப்படிப்பட்டவர், நிஜ வாழ்க்கையிலும் மோசமான ஆளாகத்தானே இருப்பார்?' என்று ரசிகர்களை எண்ணவைத்தன அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்.

நம்பியார் அடிவாங்குகிறாரா? அதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று கொப்பளிக்கும். ஏதோ ஒரு பழி உணர்வைத் தீர்த்துக்கொண்ட திருப்தி ஏற்படும். ஒரு காலத்தில் பெண்களாலும் ரசிகர்களாலும் திரையரங்குகளில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என்.நம்பியாராகத்தான் இருக்க முடியும்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, `நம்பியார்' என்ற பெயர் உருவாக்கிய பிம்பம் இதுதான். ஆனால், திரைப்படங்கள் உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைப்பிடித்தவர் என்பதுதான் பலரும் அறியாத அச்சு அசல் உண்மை.
நம்பியாரின் ஆன்மிக முகம் பிரசித்தமானது. மிகச்சிறந்த ஐயப்ப பக்தர். அவரை அறிந்தவர்கள், நெருங்கியவர்கள் பக்தி கலந்த மரியாதையுடன் அவரை `குருசாமி' என்றோ, `நம்பியார்சாமி' என்றோதான் அழைப்பார்கள்.

அவரது 65 ஆண்டுகால ஆன்மிகப் பாதையில் அவருடன் பல பிரபலங்கள் பயணத்திருந்தாலும், அவரது உள்ளம் கவர்ந்த ஐயப்ப பக்திப் பாடகர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வீரமணி ராஜு. இவர், பிரபல ஐயப்ப பக்திப்பாடல் புகழ் கே.வீரமணியின் அண்ணன் மகன். இவர், நம்பியாரின் மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர் நம்பியார் நினைவாக நடத்தும் பிறந்தநாள் விழாவில் தவறாமல் பங்கேற்று, பாடி வருபவர்.

அவர், நம்பியாருடன் சென்ற சபரிமலை யாத்திரை... குருசாமியாக நம்பியார் கூறிய ஆலோசனைகள்... அவருடனான தனது அனுபவங்கள்... அத்தனையையும் நம்பியாரின் நினைவு நாளான இன்று (நவம்பர் 19) நினைவுகூர்கிறார். அவர் பகிர்ந்துகொண்ட நம்பியார்சாமி குறித்த நீங்காத நினைவுகள்...

சபரிமலையைப் பிரபலமாக்கியவர்!

``சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான். இவர்தான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர். அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும்.

இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே. எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி!
யார் குருசாமி?
60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர். நீண்ட காலமாக `குருசாமி'யாக பக்தர்களை ஐயப்பன் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றவர். இவரது நீண்ட ஐயப்பன் கோயில் பயணம், `மகா குருசாமி' என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், அவரே தன்னை `குருசாமி' என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்' என்பார்.
அதேபோல குருசாமி யார்? என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார். `18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி' என்று கூறி அதிரவைப்பார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில் உணர்த்தினார்.

ஐயப்பனுக்கு சீசனா?
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்' என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்... இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா?' என்பார் அவர் பாணியில்.
`அந்த 41 விரத நாட்கள், நம்மை தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி' என்பார்.
மாதா, பிதா, குரு...
`சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்' என்பார்.
புனித யாத்திரையில் கண்டிப்பு
`எந்த இடத்தில் மாலையை போட்டுக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே திரும்ப வந்து கழற்றினால்தான் உனது புனித யாத்திரை நிறைவுபெறும். பம்பையில் கழற்றினாலும், வழியில் கழற்றினாலும் விரதப் பயணம் நிறைவுறாது' என்பார். அதை அவருமே கடைப்பிடித்தார். அவருடன் வரும் சிவாஜி போன்ற மாபெரும் பிரபலங்களைக்கூட இடையிலேயே மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா சூட்டிங்குக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. இப்படி அனைவரிடமும் அன்புடன் கூடிய கண்டிப்போடு நடந்துகொள்வார் நம்பியார்சாமி.
எம்.ஜி.ஆரின் மரியாதை
நம்பியார் இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும்போது, அவரது மனைவி ருக்மணிதான் நெய்த் தேங்காயில் நெய் ஊற்றி பயணத்தைத் தொடங்கி வைப்பார். அதேபோல எம்.ஜி.ஆர் உயிரோடு வாழ்ந்த காலம் வரை, அவர் அனுப்பிவைக்கும் மாலைதான் முதல் மாலையாக நம்பியாருக்கு அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தது.

ஊருக்கு உபதேசம்!
'ஊருக்குத்தான் உபதேசம்' என்றில்லாமல் அவர் போதித்த விஷயங்களுக்கு அவரே முன்னுதாரணமாக அவற்றைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். விரத காலங்களில் மட்டுமல்லாமல், தன் வாழ்நாள் இறுதி வரை குடிப்பழக்கம், புகைப் பழக்கம் என எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாத மாமனிதர் அவர். கறுப்பு வெள்ளைக் (சினிமா) காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. ஆனால், அதற்கான எந்த தலைக்கனமும் அவரிடம் இருந்ததில்லை. திரையில் வில்லனாகத் தோன்றினாலும், நிஜத்தில் எந்த கெட்டப் பழக்க வழக்கங்களும் இல்லாத கதாநாயகனாகத்தான் வாழ்ந்தார். இவரிடம் நடிகர்கள் மட்டுமல்ல, அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.

2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் நம்பியார்சாமி. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால், ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் நம்புகிறோம்.''

- ஜி.லட்சுமணன்
Dailyhunt
இது இல்லாததால்தான்... இவை அரங்கேறின

'கோயில்களைக் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட நாட்டில், கழிவறை வசதியை ஏற்படுத்துவற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது கூறியிருந்தார். பிரதமர் ஆனபிறகு 'தூய்மை இந்தியா' திட்டத்தைக் கொண்டுவந்தார். பிரதமராகப் பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் காண நினைத்த, 'தூய்மை இந்தியா' இன்னும் நனவாகாத நிலையில், தற்போது கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிக்க 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளில் (நவம்பர்-19), 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல பகுதிகளில்... கழிப்பறை வசதி இல்லாமல் ஆற்றங்கரைகளையும், ஏரிக்கரைகளையும் தேடிச்செல்வோர் அதிகமிருக்கிறார்கள் என்பது அவரது கவனத்துக்குச் சென்றிருக்குமா எனத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்.

இருட்டிய பின்பு... இல்லையேல் விடியலுக்கு முன்பு. இப்படித்தான் பல கிராமப்புறப் பெண்களின் நிலை இருக்கிறது. 'அருகில், பொதுக் கழிப்பிடம் எங்கே இருக்கிறது' எனத் தெரியாமலேயே (அது நிறைய இடங்களில் இல்லாததால்) அவசரத்துக்குக்கூட இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் நகரப் பெண்களின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு எல்லையே இல்லை. பாலியல் துன்புறுத்தல், கல்வி பாதிப்பு, விஷப் பூச்சிகளால் உயிரிழப்பு, மாதவிலக்கால் ஏற்படும் நோய்த்தொற்று... இன்னும் எத்தனையோ? இவை ஒருபுறமிருக்க, 'கழிப்பறை' என்கிற ஒரே ஒரு வசதியில்லாமல் கீழ்க்கண்ட பெண்கள் அடைந்த நிலையை நீங்களும் கொஞ்சம் படியுங்களேன்...

தற்கொலை செய்துகொண்டனர்!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், குண்டலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. கல்லூரி மாணவியான இவர், தொடர்ந்து தன் பெற்றோரிடம் வீட்டில் கழிப்பறை கட்டித் தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவர்களுக்கோ வறுமை காரணமாக கழிப்பறை கட்டித் தர முடியாத நிலை. இதனால் மனமுடைந்த ரேகா, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன்பு அவர் எழுதிய கடிதத்தில், ''அப்பா எனக்கு வெட்கமாக இருக்கிறது... நான், ஒரு கல்லூரி மாணவி. எனது உணர்வுகளை புரிந்துகொள்ளுங்களேன்'' என்று உருக்கமாக அதில் எழுதியிருந்தார்.





ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பு குமாரி. கல்லூரி மாணவியான இவர், தன் வீட்டில் கழிப்பறை அமைத்துத் தருமாறு பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார். இதை அவர்கள் பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த குஷ்பு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ''தன் மகளின் திருமணத்துக்காகப் பணம் சேர்த்து வந்ததாகவும், கழிப்பறை கட்டினால் பணம் செலவாகிவிடும் என்ற காரணத்தால் குஷ்புவின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை'' என்று அவரின் தந்தை ஸ்ரீபதி கூறியிருந்தார்.

பாலியலுக்கு இரையாகி கொலை செய்யப்பட்டார்!

தஞ்சை மாவட்டம் சாலியமங்கத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர், இரவு நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக, வீட்டுக்குப் பின்புறமுள்ள கருவேலங்காட்டுக்குச் சென்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த வாலிபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்தார். ''எங்கள் குடியிருப்பில் டாய்லெட் வசதி கிடையாது. இருந்திருந்தால் என் பொண்ணு செத்திருக்க மாட்டாள்'' என்று அப்போது அழுது புலம்பினார் அவரது தந்தை ராஜேந்திரன்.

திருமணத்தை நிறுத்தி மற்றொருவரை மணந்தார்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் நேகா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்து வந்தனர். இந்தநிலையில், மணமகன் வீட்டில் கழிவறை கட்டவேண்டும் என்று மணமகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.





உலக கழிப்பறை தினத்தின் சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண இங்கே க்ளிக் செய்யவும்..

ஆனால், திருமண தேதி நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படவில்லை. இதனால் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை உடனடியாக நிறுத்திய நேகா, பலதரப்பட்டவர்களால் பாராட்டப்பட்டார். அத்துடன், கழிப்பறை வசதிகொண்ட வேறொரு மணமகனைத் திருமணம் செய்து கொண்டார்.

கணவரைப் பிரிந்த பெண்!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா தேவி. இவர், தன் கணவரிடம் கழிப்பறை கட்டித் தருமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர் சொன்னதைப் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் அவரது கணவர். இதனால் பொறுமையிழந்த சுனிதா தேவி, தன் கணவரை விட்டுப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

நாட்டில் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணம், 'கழிப்பறை' என்கிற அத்தியாவசியத் தேவை ஒன்று இல்லாததுதான்.

கழிப்பறை இல்லாத அனைத்து வீடுகளிலும் கழிவறைகளை அமைப்போம்... களிப்புடன் வாழ்வோம்!

- ஜெ.பிரகாஷ்
Dailyhunt

ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தில் வருமானவரித்துறை 8 கோடி பறிமுதல்! பின்னணி தகவல்கள்



சென்னையில் உள்ள ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இன்று ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் சமீபத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களாகும்.
எதற்காக இந்த சோதனை என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "நாடு முழுவதும் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் ஒழிக்கவே 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் கணக்கில் காட்டப்பட்ட 500, 1000 ரூபாயை மக்கள் தைரியமாக வங்கிகளில் மாற்றியும் டெபாசிட் செய்தும் வருகின்றனர். ஆனால் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களால் அதை மாற்ற முடியவில்லை. இதனால்,சிலர் குறுக்கு வழியில் பணத்தை மாற்றுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த குழுமத்துக்குச் சொந்தமான கல்லூரிகளில் சோதனை நடத்தினோம். சென்னை ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் அந்த குழுமத்துக்கு சொந்தமான கல்லூரியில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்துள்ளோம். அந்தப் பணத்துக்கு உரிய கணக்கு காட்டினால் அதை திரும்ப கொடுத்து விடுவோம். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.



செல்லாத என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்களை கல்லூரி ஊழியர்கள் மூலம் மாற்றவும் முயற்சிகள் நடந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதற்காகவே அங்கு 8 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகிறது. ஆனால் அதற்கு முன்பே வருமானவரித்துறை அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளது.இது போல கறுப்புப் பண முதலைகள் தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தங்களுக்கு தெரிந்த நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் வங்கிகளில் வருமானவரி உச்சவரம்பிற்கு ஏற்ப டெபாசிட் செய்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

"ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனை மற்ற கல்வி குழுமத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பே தகவல் கிடைத்த சென்னையை சேர்ந்த பிரபல கல்வி குழுமம் குறிப்பிட்ட பெரிய தொகையை கை மாற்றிவிட்டுள்ளது. அதுபோல இன்னொரு தனியார் மருத்துவ கல்லூரியும் இதை செய்துள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு எந்தவகையில் அந்த கல்வி குழுமங்களுக்கு சென்றது என்பது விவரம் தெரிந்தவர்களின் கேள்வியாக உள்ளது. இதில் பிரபல கல்வி குழுமத்துக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருக்கும்" என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

ஜே.பி.ஆர் கல்வி குழுமம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கணக்கு காட்டப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடங்களிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை தயாராகி விட்டது. பான் கார்டு, ரகசிய தகவல்கள் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் பதுக்கி வைத்த கறுப்புப் பணத்தை மாற்ற சிலர் குறுக்கு வழிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்த கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கென தனி நெட்வோர்க் செயல்படுகிறது. சென்னையில் கைமாறும் கறுப்புப் பணத்துக்கு மதுரையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அடுத்து திருச்சியில் கை மாறும் கறுப்புப் பணத்துக்கு சென்னையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இவ்வாறு தமிழகம் முழுவதும் செயல்படும் இந்த கும்பல், போனிலேயே பேரம் பேசி கறுப்புப் பணத்தை கை மாற்றி விடுகின்றனர். கடைசியில் கறுப்பு பணமாக இருக்கும் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் செலுத்தப்படுவது புரியாத புதிராக உள்ளது. இந்த நெட்வோர்க்கில் தனிநபர் முதல் சில வங்கி அதிகாரிகள் வரை உள்ளனர். அரசியல்வாதிகள் முதல் தொழிலபதிபர்கள் வரை தங்களால் முடிந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை செல்லும் கரன்சியாக மாற்றி வருகின்றனர். இதைத் தடுக்க வருமானவரித் துறை கிடுக்குப்பிடி போட்டாலும் அதிலிருந்து கறுப்பு பண முதலைகள் தப்பி விடுவது வேதனை அளிக்கிறது, எனவே இந்த காலக்கட்டத்தில் வருமானவரித்துறையின் அதிரடி நடவடிக்கையே கறுப்பு பணத்துக்கு போடப்படும் கடிவாளமாக அமையும்.


எஸ்.மகேஷ்

மதிப்புமிகு ஆசிரியர்கள்

By த. ஸ்டாலின் குணசேகரன்  |   Published on : 19th November 2016 12:54 AM  

அறிஞர்கள் பாராட்டப்படாத நாட்டில் அறிஞர்கள் தோன்ற மாட்டார்கள். கவிஞர்கள் போற்றப்படாத தேசத்தில் கவிஞர்கள் முகிழ்க்க மாட்டார்கள். அறிவியல் மேதைகள் ஊக்கப்படுத்தப்படாத மண்ணில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அரிதாகவே நிகழும் என்பது உலகப் பெரும் அறிஞர்கள் பலராலும் அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும்.
இதன் அடிப்படையிலேயே மிகச்சிறந்த ஆசிரியர்கள் உருவாக அடித்தளமிடும் சிந்தனையோடு ஆசிரியர் பாராட்டு விழா ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அரசு மேல் நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெறுகிறபோது பள்ளித் தலைமையாசியர்கள் அந்தந்தப்பள்ளியின் தேர்வு அதிகாரிகளாகச் செயல்படுகின்றனர். வேறுபள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இவரின் பள்ளிக்கு தேர்வு நடைபெறுகிற வகுப்பறைகளில் மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் பணிக்கப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடக்கும் சூழலில் தேர்வு நடைபெறும் ஓர் அரசு மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் காலை தேர்வு தொடங்கியதும்மாணவர்கள் தேர்வெழுதுகிற வகுப்பறைகள் ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். அப்போது தேர்வு தொடங்கி சில நிமிடங்களானபின்பும் ஒரு மாணவன் இடம் காலியாக இருந்தது.அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசித் தேர்வு. அதற்கு முன்பு நடைபெற்ற நான்கு தேர்வுகளுக்கும் அம்மாணவன் வந்து தேர்வு எழுதியதையும் அன்று மட்டும் கடைசித் தேர்வுவெழுத அம்மாணவன் வரவில்லை என்பதையும் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியரைக்கேட்டுத் தெரிந்து கொண்டார்.
உடனே அம்மாணவனின் முகவரியை அவரிடமிருந்த ஆவணங்கள் மூலம் தேடியெடுத்து தேர்வுக் கண்காணிப்பில் ஈடுபடாத இரண்டு ஆசிரியர்களை அழைத்து அம்மாணவன் வீட்டுக்குச் சென்று அம்மாணவன் தேர்வுக்கு வராத காரணத்தை அறிந்து வருவதோடு இயன்றால் அழைத்து வரவும் கூறினார். அந்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் உதவித் தலைமையாசிரியர்.
இப்பள்ளி ஒரு கிராமத்தில் உள்ளது. அம்மாணவனின் வீடு பக்கத்து ஊரில் இருக்கிறது. பொறுப்பளிக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் தங்களின் இரு சக்கர வாகனத்தில் அம்மாணவன் வீடு உள்ள பகுதிக்குச் சென்றனர். ஊரே காலியாக இருந்தது. விசாரித்ததில் ஊர்க்காரர்களெல்லாம் உள்ளூர் திருவிழாவுக்காக பக்கத்திலுள்ள ஆற்றுக்குச் சென்றவிட்டதாக அறிந்து இரண்டு ஆசிரியர்களும் ஆற்றை நோக்கிச் சென்றனர்.
எதிரில் திருவிழாக் குழுவினருடன் இவர்கள் தேடிவந்த மாணவனும் தலையில் தண்ணீர்க் குடம் வைத்து ஆடிக்கொண்டு வந்துள்ளான். மாணவன் எழுத வேண்டிய தேர்வு குறித்தும் அன்று அவன் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் ஏதுமே அறியாத அம்மாணவனின் பெற்றோரும் அவனைப் போலவே தண்ணீர்க் குடம் எடுத்து அக்கூட்டத்தோடு வந்தனர்.
ஆசிரியர்கள் அவசர அவசரமாக அம்மாணவனை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஈரமாக இருந்த தலையைத் துவட்டிவிட்டு, அவனை சீருடையுடன் பள்ளிக்கு அழைத்து வந்து தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர்.
ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அம்மாணவனை தேர்வெழுதும் அறைக்கு அழைத்துச் சென்று அவனது இருக்கையில் அமர வைத்துத் தேர்வெழுத வைத்தார் தலைமையாசிரியர்.
தேர்வெழுதத் தொடங்கும் நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்கும் மேல்தாமதமாக வரும் மாணவனை தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது என்று விதி இருப்பினும் இத்தலைமையாசிரியர் 30 நிமிடங்களுக்கும் மேல் தாமதமாக வந்த அம்மாணவனை அனுமதித்ததோடு, "விதிகளெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர அந்த விதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஒருவனின் வாழ்க்கையை வீணடிப்பதற்காக அல்ல' என்று அவ்வகுப்பில் கண்காணிப்புப்பணி செய்து கொண்டிருந்த ஆசிரியரிடம் விளக்கமளித்துவிட்டு "வேண்டுமானால் உங்கள் பாதுகாப்புக்கு அம்மாணவன் 15 நிமிடங்களுக்குள் வந்து விட்டதாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்' என்றும் கூறியுள்ளார்.
அம்மாணவன் அப்பாடத்தில் மட்டுமல்லாது ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று அதே பள்ளியில் மேல் நிலை வகுப்பில் படித்து, அதனையும் முடித்து கல்லூரியில் பட்ட வகுப்பையும் முடித்துதற்போது பட்டதாரியாக உருவெடுத்துள்ளான்.
அரசுப் பள்ளித் தலைமையாசிரியரின் உதவியால், கல்வியின் சுவடேயில்லாத குடும்பத்தில் பிறந்த அந்த மாணவன் தற்போது ஒரு பட்டதாரி.
மின் விளக்குக்கூட இல்லாத குக்கிராமக் குடிசை வீட்டில் வாழும் மிக நன்றாகப் படிக்கக் கூடிய அரசுப் பள்ளி மாணவியின் சூழலையறிந்த அப்பள்ளி ஆசிரியர்கள் அம்மாணவிக்கு உதவிட முன் வந்தனர். மாணவியின் வீட்டுக்கு மின் இணைப்பைத் தங்களது பொறுப்பில் பெற்றுக் கொடுத்துவிட எண்ணி மின்சாரத் துறையை ஆசிரியர்களே அணுகினர்.
புதிய கம்பங்கள் போட வேண்டியுள்ளதோடு மற்ற தேவைகளையும் சேர்த்து பெரும் தொகை செலவாகும் என்பதையறிந்து, அம்மாணவியின் வீட்டிற்கு ரூ.20,000 செலவிட்டு சோலார் முறை மூலம் மின்னொளி கிடைக்க அம்மாணவியின் ஆசிரியர்களே ஏற்பாடு செய்தனர்.
ஆசிரியர்களின் இவ்வுதவியைப் பெற்ற அம்மாணவி மிகச் சிறப்பாகப் படித்துத் தேர்ச்சி பெற்றதோடு நல்ல மதிப்பெண்களையும் பெற்றார். ஆசிரியர்கள் தங்கள் கடமைஅத்தோடு முடிந்தது என்று கருதிவிடாமல் ஊக்கத்துடன் உழைக்கும் அம்மாணவிக்கு சென்னையிலுள்ள ஓர் அறக்கட்டளையின் உதவியைப் பெற வழிவகை செய்தனர்.
ஆசிரியர்களின் உதவியால் அந்த அறக்கட்டளையினர் அம்மாணவியின் வீட்டிற்கே வந்து ஆய்வு செய்து மேற்படிப்பை புகழ்மிக்க சென்னைக் கல்லூரியில் தொடர ஆவன செய்ய, தற்போது எவ்விதச் செலவுமில்லாமல் அம்மாணவி சென்னையில் பட்டப் படிப்பைச் சிறப்பாகப் படித்து வருகிறார்.
பவானியைச் சேர்ந்த அரசுப் பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் ஒருவர் தனது நீண்ட காலக் கல்வி அனுபவத்தை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்த முடிவு செய்தார். ஈரோடு அருகில் பெரிய அக்ரஹாரம் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரப் பாட ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுவதையறிந்து அப்பள்ளித் தலைமையாசிரியரை அணுகி மாணவர்களுக்குப் பொருளாதாரப் பாடத்தைத் தான் எடுக்க விரும்புவதாகக் கூற தலைமையாசிரியரும் மகிழ்வோடு சம்மதித்தார்.
தினசரி இரு சக்கர வாகனம் மூலம் சென்று பாடம் எடுத்தார். பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் படித்ததும், ஆய்வுகள் மேற்கொண்டதும் பொருளாதாரம்தான். பொருளாதாரப் பாட ஆசிரியராகத்தான் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். ஆசிரியர் இல்லாமல் சிரமப்பட்ட மாணவர்களின் குறை முற்றிலும் நீங்கியது மட்டுமல்லாமல் அக்கல்வியாண்டுப் பொதுத் தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் அப்பள்ளி மாணவர்கள் நூறு சதவிகிதத் தேர்ச்சியும் பெற்றனர்.
பெரிய அரசுப் பள்ளியின் தலைமையாசிரியராக செல்வாக்கோடு விளங்கிய ஒருவர் அதைவிட இளையவருக்குக் கீழ் ஒரு ஆசிரியராக மட்டும் இருந்து வேலை செய்வதற்கு பெரிய மனதும், சமூக நோக்கும் வேண்டும்.
போக வர இரண்டு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் செலவையாவது தாங்கள் ஏற்பதே மரியாதை என்று தலைமையாசிரியர் சொன்னபோது அதைக்கூட வாங்க மறுத்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழுக்க சேவை மனப்பான்மையோடும் ஏழை எளிய மாணவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்ற பெருநோக்கோடும் அவர் பணியாற்றியுள்ளார்.
இவையெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கிற நிகழ்வுகள் என்று இவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட இயலாது. இவையாவும், இத்தகைய சிந்தனையும் எண்ணமும் பல அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் உதாரணங்களேயாகும்.
அத்தகைய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் இனம் கண்டு அவர்களின் உழைப்பையும், சமூக உணர்வினையும் அங்கீகரிப்பதும் அவர்களை ஒருங்கிணைப்பதும் அரசின் கடமையாகும்.
இவர்களைப் போலவே அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் செயல்பட அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
அவ்வாறு அவர்கள் செயல்பட்டேயாக வேண்டிய காலச்சூழல் நிலவுகிறது. அவர்களைச் செயல்படுத்துவது குறித்து வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் கலந்து பேசி திட்டங்களைத் தீட்டவும் அவற்றை செயல்படுத்தவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.
இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சமூக நல ஆர்வலர்களுக்கும் அமைப்புகளுக்கும் உண்டு.
இப்பணி அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர் -
தலைவர்,
மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு.


Ads by ZINC




NEWS TODAY 10.06.2026