Friday, January 19, 2018

விவாதக் களம்: ஆண்கள் திருந்தும் நாளே பெண்ணுக்குத் திருநாள்

Published : 14 Jan 2018 11:03 IST



கடந்த வாரம் வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுத்தளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய, ‘பெண்களைத் துரத்தும் நெருப்பு’ கட்டுரையையொட்டி, பெண்களைப் பார்த்ததுமே விழித்துக்கொள்கிற ஆண் மனம் குறித்துக் கேட்டிருந்தோம். பெண்களை எப்போதும் துரத்தும் இந்த நெருப்பில் இருந்து பெண்கள் எப்படி மீள்வது என்றும் கேட்டிருந்தோம். ஆண்களாகத் திருந்தினால்தான் உண்டு எனப் பலரும் சொல்லியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு...

பல நேரங்களில் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை என்பதே வேதனையான உண்மை. ஆண் எப்படி விரும்பினாலும் இசைந்து போக வேண்டும் எனத் தமது மகளுக்கு அறிவுரை சொல்லும் தாய்மார்களே இன்றும் நம் சமூகத்தில் நிறைந்திருக்கிறார்கள். பெண்களுக்குரிய இடம் அவர்களுக்கு இன்னமும் முழுதாகத் தரப்படவில்லை. பெண்களின் விருப்பத்தை அறிந்து அணுகுவதே ஆண்மைக்கு அழகு என்பதை ஆண்கள் உணர வேண்டும். ஒரு பெண்ணுக்குத் தன் விருப்பத்தை மீறி ஆட்கொள்ளப்படுவது போன்ற கொடுமை வேறில்லை. திரையரங்கின் இருளில் இடுப்பில் தடவிய கைகளால் அருவருப்பு கொண்டு வீட்டுக்கு வந்த கையோடு குளித்துப் பல நாட்கள் மன உளைச்சலோடு அலைந்த தோழியின் நினைவு இன்றும் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

- இரா.பொன்னரசி, வேலூர்.

ஆணின் காமம் ஒரு பெண்ணின் மீது முதலில் பார்வையின் வழியே பாய்கிறது. வக்கிர எண்ணம் கொண்ட ஆணின் கண்களாலேயே பெண் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதும் உண்டு. ஒரு பெண்ணைப் பார்க்கும்போது காமம் மறைந்து சகோதரியாகவும் தாயாகவும் பார்க்கும் நிலை என்று வருகிறதோ அன்றுதான் பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படும். சுதந்திரமாக வெளியே வரும் பெண் எதற்கும் துணிந்து சம்மதிப்பாள் எனும் எண்ணம் கொண்டிருக்கும் ஆண்களே இங்கு அதிகம். திருமணப் பந்தத்தில் இணைந்து வாழும் ஆண், பெண்ணின் காமம் வரைமுறையுடன் இருக்கும்வரை பிரச்சினையில்லை. எல்லையற்ற காமமே அப்பாவிப் பெண்களை விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.

ஆண்களின் பாலியல் உணர்வைத் தூண்ட உதவும் வலைத்தளங்கள் இங்கு ஏராளம். இவற்றை மீறி ஒரு ஆண் வளர்க்கப்படும் முறையே அவனைப் பெண்களைப் புரிந்துகொள்ள வைக்கிறது.

பெற்றோர் பெரும்பாலான நேரத்தைத் தங்கள் மகனுடன் கழிக்க வேண்டும். பார்க்கும் பெண்களின் மீதான மதிப்பை அதிகரிக்க அவர்களைத் தங்கள் தாயின் இடத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் மகனுக்கு நல்ல வழிகாட்டியாகவும் பெண்ணின் வலிகளை உணர்த்தி நல்ல ஆசானாகவும் மாற வேண்டும். பொதுவெளிகளில் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டுப் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஆண்களைத் தகுந்த தண்டனைகள் மூலம் எச்சரிக்கலாம்.

- சுபா, சேலம்.

பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இரவு, பகல், நேரம், காலம் போன்றவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எப்போது ஓர் ஆண் ஒரு பெண்ணால் தன்னை எதிர்க்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறானோ அப்போதுதான் அவன் இந்த வக்கிரத்தைச் செய்யத் துணிகிறான். பெண்ணைப் போகப் பொருளாக நினைப்பது, அவளைப் பலவீனமானவளாக எண்ணுவது ஆகியவற்றின் விளைவுதான் இது. அதனால் பெண்கள் உடலளவிலும் பலமானவர்கள் என்று புரியவைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சில ஆண்டுகளுக்கு முன் என் நெருங்கிய தோழி ஒருவர் இரவு எட்டு மணியளவில் ஒன்றிரண்டு ஆட்கள் மட்டுமே இருந்த பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவன் ஒரு ஐநூறு ரூபாய்த்தாளை தோழியிடம் நீட்டி தவறாகப் பேசியிருக்கிறான். அவ்வளவுதான். என் தோழி பதறிப்போய் அருகில் நின்றிருந்த ஆட்டோவில் தாவி ஏறி, கை கால்கள் நடுங்க வீட்டுக்குப் போயிருக்கிறார். பல நாட்கள் காய்ச்சலுக்குப் பிறகு உடம்பு தேறினாலும் மனம் தேறப் பல மாதங்கள் பிடித்தன. எத்தனையோ பேர் அங்கு நின்றிருக்கத் தன்னிடம் அவன் அப்படிக் கேட்டதால் தன்னிடம்தான் ஏதோ குறை உள்ளதைப் போல் அவர் குமைந்ததைத்தான் தாங்கவே முடியவில்லை. குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதையும் அப்பாவிகள் அவதிப்படுவதையும் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. பெண்ணின் உடல் வலிமையைப் புரியவைப்பதுடன் ஊடகங்களும் தைரியமான பெண்களை அடிக்கடி வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் நிலை வந்தால் இத்தகைய கொடூரங்கள் குறையக்கூடும்.

- ஜே.லூர்து, மதுரை.

தலை குனிந்து நட, அதுதான் பெண்ணுக்கு அழகு என்று சொல்லிச் சொல்லியே பெண்ணினத்துக்குத் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டோம். அதனால்தான் பிரச்சினையெனும் வெயிலைத் தாங்க முடியாத முதுகெலும்பற்ற புழுவாகப் பெண் துடித்துப்போகிறாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அனைத்தும் புனைகதைகளுக்கு மட்டுமே சாத்தியப்படும். எதையும் எதிர்த்து நிற்கச் சொல்லிப் பெண்களைத் துணிச்சலோடு வளர்க்க வேண்டும்.

- எஸ். சரோஜா சங்கரலிங்கம், காமாட்சிபுரம்.

பெண்களைத் தகாத வார்த்தைகளால் புண்படுத்தும் கூட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தி சொன்ன காலத்துக்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ? ஆண் குழந்தைகளை நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.

- ப. பீர் இலாஹி, உத்தமபாளையம்.

பெண்கள் எந்த அளவுக்குத் துணிச்சலோடு எதிர்க்கிறார்களோ அப்போதுதான் அந்த நெருப்பு விலகி மட்டுமல்லே விட்டே ஓடிவிடும். சட்டப் பாதுகாப்பைவிட சுய பாதுகாப்பும் சில வேளைகளில் அவசியம்.


- பொன்.கருணாநிதி, கோட்டூர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒவ்வொரு வீட்டிலும் இருந்துதான் தொடங்க வேண்டும். பெண்ணுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்து வளர்க்கும் சமூகம், ஆண்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதில்லை. எப்போதும் பெண்களின் கட்டுப்பாடு குறித்தும் சுய பாதுகாப்பு குறித்தும் பேசும் நாம், ஆண்களிடம் இருக்க வேண்டிய நல்லொழுக்கம் குறித்து வாயே திறப்பதில்லை. ஆணின் தேவைக்காகப் பிறந்தவள் அல்ல பெண் என்பது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் புரிகிற நாளில்தான் இந்த நெருப்பு அணையும்.

- பிரதீபா.

ஆண், பெண் உறவு இன்று எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனால், சில ஆண்கள் பெண்கள் மீது நடத்தும் அருவருக்கத்தக்கச் செயல்பாடுகளை மன்னிக்கவே முடியாது. கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் உறவுசார் ஆலோசனைகள் வழங்கலாம். வளர்ந்தவர்களுக்கு மனநல ஆலோசனைகள் அளிக்கலாம்.

- மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

தாய்வழிச் சமூக அமைப்பு உடையாமல் இருக்கிற இடங்களில் பெண்ணுக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ராகுல சாங்கிருத்யாயன் போன்றோரின் எழுத்துகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன. உடையிலும் பெயரிலும்கூட ஆண், பெண் வேறுபாடு இருக்கக் கூடாதெனப் பெரியார் சொன்னார். இதெல்லாம் நடக்கிற நாள்தான் பெண்களுக்கான திருநாளாக அமையும்.

- சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.

பெண் சமூகத்தையே எரிக்கும் நெருப்பாக ஆண் மனம் செயல்பட ஊடகங்களும் தொலைக்காட்சியும் காரணமாக இருக்கின்றன. போதுமான புரிதல் இல்லாமல் விதைக்கப்படுகிற சிறுபொறிதான் நாளடைவில் பெருந்தீயாகக் கொழுந்துவிட்டு எரிகிறது.

- உஷா முத்துராமன், திருநகர்.

வாய்ப்பு கிடைக்கும்வரை எல்லா ஆண்களும் ராமன்தான் என்ற சொலவடை, ஆண்களின் மனோபாவத்துக்குச் சான்று. இந்தப் பழமொழி ஆண்களுக்கு அவமானமாக இல்லையா? தன் ரத்த உறவுகளைப் பார்த்து விழித்துக்கொள்ளாத ஆண் மனம், பிற பெண்களைப் பார்த்ததும் விழித்துக்கொள்ளுமா? பெண்களைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும் மனோபாவத்தை யார் மாற்ற வேண்டும்?

பெண்ணை உடலாக, சதையாக மட்டுமே நினைக்கும் கேவலமான மனப்போக்கை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். கணவன் என்ற ஒரே காரணத்துக்காக வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மனோபாவத்தைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட பெண்களைத் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லாமல் இந்தச் சமுதாயம் திருந்த வேண்டும். பெண் இரண்டாம் பாலினம் என்ற கருத்து மாற வேண்டும். பாலியல் சார்ந்த ஆரோக்கியமான விவாதங்கள் ஊடகங்களில் நடத்தப்பட வேண்டும். இதைக் கேலிச்சிரிப்புடன் பார்க்காமல் அறிவுபூர்வமாக அணுகித் தீர்வு காண வேண்டும்.

சிறுவயது முதலே பெண் என்பவள் சக உயிர், என்ற உணர்வை உணவோடு ஊட்டி ஆண்களை வளர்க்க வேண்டும். குடும்பத்திலுள்ள பெண்களை ஓர் ஆண் எவ்வாறு நடத்துகிறான் என்பதைப் பார்த்துத்தான் அந்த வீட்டு ஆண் குழந்தை கற்றுக்கொள்கிறான். முதலில் குடும்பத்தைச் சீர்திருத்துவோம். மெல்ல மெல்லச் சமுதாய மாற்றம் தானே நிகழும்.

- தேஜஸ், கோவை.

ஆண், பெண் இருவரும் மனிதப் பிறவி என்றாலும் ஆண், பெண்ணைச் சீண்டுவதையும் தீண்டுவதையுமே விரும்புகிறான். மனைவி என்றாலும் மனம் விரும்பிய போதெல்லாம் அவளை இச்சைக்கு ஆட்படுத்திக்கொள்கிறான். வெளியில் பிற பெண்களைக் கண்டாலும் அவன் சபலப்படாமல் இருப்பதில்லை. பேச வாய்ப்பில்லாத பெண்களை உரசிப் பார்க்க முயல்கிறான். பேச வாய்ப்புள்ள பெண்களிடம் உரையாடலிலேயே உறவாடிவிடுகிறான். பெண்கள் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது.

- பொன். குமார், சேலம்.

பெண்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது இயல்பானது. பாலியல் ஈர்ப்பின் தன்மை ஆணுக்கு ஆண் வேறுபடுகிறது. அது வரம்பைத் தாண்டும்போது தவறான செயல்களில் ஈடுபடவைக்கிறது. எல்லா ஆண்களையும் நல்லவர்களாகப் பார்ப்பதைத் தவிர்த்து ஆண்களின் இயல்பு அறிந்து எச்சரிக்கை உணர்வுடன் கையாள்வதே புத்திசாலித்தனம்.

- கே.ராமனாதன், மதுரை.

எல்லா ஆண்களிடமும் அந்த நெருப்பு இல்லை. சில ஆண்கள் பொதுவெளியில் கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள். இன்னும் மிகச் சொற்பமான ஆண்கள் பெண்ணோடு தனித்திருக்கும்போதும் பண்பாடு தவறுவதில்லை. ஆனால், பெரும்பாலான ஆண்களின் காமப்பார்வையும் ஆக்டோபஸ் கரங்களும் பெண்ணைச் சுற்றுகின்றன. எத்தனை வயதானாலும் ஆணின் கீழ்த்தர வக்கிரம் குறைவதே இல்லை. இந்தப் பிரச்சினையைச் சட்டம் சார்ந்து பார்க்காமல் உளவியல்ரீதியாகப் பார்த்தால் இணை தேடும் மிருக உணர்வின் நீட்சி எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், கல்வியாலும் வளர்ப்பாலும் போதனையாலும் இந்த உணர்வைக் கட்டுக்குள் வைக்கவும் கண்ணியம் காக்கவும் முடியும். பாதிப்புக்குள்ளாகும் பெண்ணின் மௌனமே அத்துமீறும் ஆண்களுக்கு வசதியாகிவிடுகிறது. முதல் தொடுதலின்போதே எச்சரிப்பது அல்லது பெற்றோரிடமோ உரிய இடத்திலோ புகார் செய்வது பாதுகாப்பு.

திரைப்படங்கள் காலம் காலமாகப் பெண்ணைக் கிண்டல் செய்வதே காதலுக்கு அடித்தளம் என்று காட்சிப்படுத்தி இளைஞர்களின் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டன. பெண்களைக் கிண்டல் செய்தல், பின்தொடர்தல் இவற்றுக்கெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், கடுந்தண்டனையும் உண்டு. ஆண்களின் வக்கிரப் போக்கு மாறாதவரை, மாற்றப்படாதவரை இதுவே தீர்வு.

- ஜி. அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

அடக்கிவைக்கப்பட்ட காமம் ஒரு சிலரிடம் அடங்காமல் போய்விடுகிறது. பார்த்தவுடன் காமம் என்று சொல்வதைவிட அதை அப்போதே அடைய வேண்டும் என்ற வெறிதான் சில ஆண்களிடம் கூடவே பிறந்துவிடுகிறது. அதுதான் இதுபோன்ற செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. பெண் எதிர்த்துப் பேசமாட்டாள் என்ற தைரியம்தான் இவர்களுக்கான முதலீடு. இந்த நெருப்பைப் பகிரங்கமாகப் பொதுத்தளங்களில் போட்டுடைத்துச் சீர் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. பெண்கள் துணிய வேண்டும்.

- பி.கே. ஜீவன், கும்பகோணம்.
டிஜிட்டல் போதை 17: சூது ஒரு மனக்கோளாறு!

Published : 13 Jan 2018 09:39 IST

வினோத் ஆறுமுகம்



சூதாட்டம் ஆடுவது வெறும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டதல்ல. சட்டவிரோதமானது என்று தடை செய்யப்பட்டிருக்கும் இந்த விளையாட்டை ஆடி, சொத்தை அழித்துக்கொண்டவர்களும் உயிரை இழந்தவர்களும் அதிகம். அந்த ஆபத்தெல்லாம் தெரிந்தும் ஏன் ஒருவர் சூதாடுகிறார்?

1986-ல் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, மனநலக் கோளாறு காரணமாகத்தான் ஒருவர் மிக அதிகமாக சூதாட்டம் ஆடுகிறார் என சர்வதேச மனநலக் கழகம் அறிவித்தது. அந்த சூதாட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அப்படிச் சேர்ப்பது சரியா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மனநலக் கோளாறுக்கான அறிகுறிகள்

ஒருவர் சூதாட ஆரம்பித்து, ஓர் ஆண்டுக்குள் கீழ்க்காணும் அறிகுறிகள் அவரிடம் தென்பட்டால், அதிக அளவில் சூதாடும் மனநலக் கோளாறால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தலாம்.

சூதாட்டம் ஆடுவதை நிறுத்தச் சொன்னால் எரிச்சலடைவார்கள், கோபப்படுவார்கள்.

சூதாட்டத்தை நிறுத்த முயன்று பலமுறை தோற்றிருப்பார்கள்.

சூதாட்டம் சம்பந்தமாகவே பேசுவார்கள், யோசிப்பார்கள்.

சோகமானாலோ மனச்சோர்விலிருந்தாலோ சூதாட்டம் விளையாடுவார்கள்.

சூதாட்டத்தில் எவ்வளவு பணம் தோற்றாலும், ‘மீண்டும் பணத்தை வென்று காட்டுகிறேன் பார்’ என்று மீண்டும் மீண்டும் விளையாடுவார்கள்.

சூதாட்டம் பற்றிக் கேட்டால் பொய் சொல்வார்கள்.

குடும்ப உறவுகள், நண்பர்கள், வேலை என எல்லாவற்றையும் இழந்தாலும் சூதாட்டத்தைத் தொடர்வார்கள்.

மிகவும் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் இருப்பார்கள். எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருக்கத் தொடங்குவார்கள்.

இவற்றில் ஏதேனும் நான்கு அறிகுறிகள் தெரிந்தாலும் ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையாகிவிட்டார் என உறுதியாகச் சொல்லலாம்.

ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரை இதே அளவுகோல்களைப் பின்பற்றலாம் என இதைப் பற்றி ஆராய்ந்துவரும் நிபுணர் கிம்பர்லி யூங் குறிப்பிடுகிறார்.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய பொது சூதாட்டத் தடைச் சட்டம் 1867-ன்படி, இந்தியாவில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் எல்லா வகையான சூதாட்டங்களும் தடைசெய்யப்பட்டுவிட்டன. சிக்கிமும் கோவாவும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்ப்பதற்காகத்தான் சூதாட்டத்துக்கு அனுமதி வாங்கியுள்ளன. ஆனால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எப்படிக் கடிவாளம் போடுவது என்று தெரியாமல் திணறுகிறது அரசு. இதுகுறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை.

அமெரிக்காவில் இருப்பது போன்ற இணைய சூதாட்டத் தடைச் சட்டம் இங்கு இல்லை. அந்தச் சட்டத்தின் மூலம் இணைய சேவை புரியும் நிறுவனங்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட வலைத்தளங்களைத் தடைசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை அவ்வளவு சீக்கிரம் தடைசெய்ய முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்தை கிரெடிட் கார்ட், ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்டவை மூலமாக விளையாடலாம். வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைச் சட்டப்படி இந்த விளையாட்டுகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன. எப்போது வேண்டுமானாலும் சட்டப்படி பணம் முடக்கப்படலாம் என்பது கொஞ்சம் ரிஸ்க்தான். எனினும், அப்படியான நிகழ்வுகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. தொலைக்காட்சிகளில் பகிரங்கமாக ஆன்லைன் சீட்டாட்டம் பற்றிய விளம்பரங்கள் வரும்போது, சட்டத்தால் என்ன செய்ய முடியும்?

(அடுத்த வாரம்: வீடியோ கேம்… நன்மைகளும் உண்டு!)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com

நலம்தரும் நான்கெழுத்து 17: உடலே மந்திரம்... இணையம் தந்திரம்!

நலம்தரும் நான்கெழுத்து 17: உடலே மந்திரம்... இணையம் தந்திரம்!

Published : 13 Jan 2018 09:40 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்


‘பெரும்பாலான நேரம் நாம் பயப்படுவதைவிட மிகக் குறைவாகவே பாதிப்படைந்திருப்போம். நிஜத்தைவிடக் கற்பனையே மனிதனை அதிகம் வதைக்கிறது’

- லூயி செனெகா, ரோமானியத் தத்துவ ஞானி

உடல்நலனைப் பற்றி அக்கறையே இல்லாமல் இருப்பது ஒரு துருவம் என்றால் அளவுக்கு அதிகமாக உடலைப் பற்றிக் கவலைப்படுவதும் ஒரு நோய்தான். இல்லாத நோய்களெல்லாம் நமக்கு இருக்கின்றனவோ எனக் கவலைப்படுவதும் ஒரு நோயே. இதை ‘ஹைப்போகோண்டிரியாசிஸ்’ என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

சிலர், நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளைக்கூடப் பார்க்காமல் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை முதலில் வரிவிடாமல் படிப்பார்கள். நல்ல விஷயம்தான். ஆனால், அந்தக் கட்டுரைகளில் இருக்கும் நோய்கள் எல்லாம் தனக்கும் இருப்பதாகப் பயப்படுவார்கள். ‘இடது கையில் வலியா? இதய நோயாக இருக்கலாம்!’ எனப் படித்தவுடன் எங்கேயாவது இடித்துக்கொண்டு இடதுகை வலித்தாலும்கூட மாரடைப்புதான் வந்திருக்கிறது எனப் பதைபதைப்பார்கள். அடிக்கடி நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் எனச் சொல்லி தெரு முனையிலேயே ஆட்டோக்களோடு ஒரு ஆம்புலன்ஸையும் நிரந்தரமாக நிற்க வைத்துவிடுவார்கள்.

இணையம், டாக்டர் அல்ல..!

பதற்றப்படும்போது நமது உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கை நடுங்கும். மூச்சு முட்டும். இவற்றையெல்லாம் கவனிக்க ஆரம்பித்துவிட்டால், அவை இன்னும் பல மடங்கு அதிகமாகும்.

அதிலும் இணைய வசதிகள் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் இணையத்தில் மருத்துவம் தொடர்பான தகவல்களை மிக எளிதில் பெற முடிகிறது. மருத்துவத் தகவல்கள் பரவலாக அனைவரையும் சென்று சேர்ந்தால்தான் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் சிகிச்சை முறைகளையும் பக்க விளைவுகளையும் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். ஒரு காலத்தில் மருத்துவர்கள் மட்டுமே அறியக்கூடிய தகவல்கள் பலவற்றை, இப்போது ஸ்மார்ட்ஃபோன் உள்ள யார் வேண்டுமானாலும் அறிய முடியும். இது விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்ற வகையில் வரவேற்கத்தக்கதே.

மருத்துவர்கள்கூட நகைச்சுவையாகச் சொல்வதுண்டு ‘எல்லா நோயாளிகளும் முதலில் டாக்டர் கூகுளிடம் காட்டிவிட்டுப் பின் இரண்டாவது ஆலோசனை கேட்கத்தான் மருத்துவர்களிடம் வருகிறார்கள்’ என. ஏனென்றால், ‘டாக்டர் கூகுள்’ நம்மைக் காக்க வைப்பதில்லை. அதைவிட மிக முக்கியம் நம்மிடம் ஃபீஸ் வாங்குவதில்லை.

இருப்பதைக் கொண்டு திருப்தி

சிலருக்கு இதுவே தொந்தரவு கொடுப்பதாக அமைந்துவிடுகிறது. இணையதளங்களில் தரமான மருத்துவப் பக்கங்கள் உள்ளன. ஆனால், பல தளங்கள் ‘அவசியம் பகிர்ந்துகொள்ளுங்கள்’, ‘மானமுள்ள தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணுங்கள்’ என நமக்கு வாட்ஸ் அப்பில் வருவது போன்ற தகவல்களைத் தரும் தளங்களாகவே இருக்கின்றன. விளைவு? மருத்துவப் புத்தகங்களில் மட்டுமே இருக்கக்கூடிய அபூர்வமான நோய்களெல்லாம் தமக்கு இருப்பதாகப் பலரும் கற்பனை செய்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த வகை இணைய நோயர்களுக்கு ‘சைபர்கோண்டிரியாக்’ என்று பெயர்.

இன்னும் சிலருக்கு வேறு வகையான தொந்தரவு இருக்கும். தங்கள் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்வார்கள். மூக்கு வளைந்திருக்கிறது, முகம் கோணலாக இருக்கிறது என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு பிளாஸ்டிக் சர்ஜன்களிடம் சென்று தங்கள் உடல் உறுப்பைத் திருத்தி அமைக்குமாறு சொல்வார்கள். அதற்கு உலகப் புகழ்பெற்ற உதாரணம்... மைக்கேல் ஜாக்சன்! ‘அனாரக்ஸியா’ என்ற பாதிப்புக்கு உள்ளாகும் சிலர் ஒல்லியாக இருந்தும் உடல் எடை அதிகமாக இருக்கிறது என சைஸ் ஜீரோவை நோக்கிக் கடும் தவமிருந்து விரதமிருப்பார்கள். இப்படிப் பல உதாரணங்களை அடுக்கலாம்.

குட்டையான கால்கள் உள்ள ஒருவரிடம் நண்பர் ஒருவர் கிண்டலாகக் கேட்டாராம் “ஒரு மனிதனின் கால்கள் சராசரியாக எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?” என. அதற்கு அவர் நிதானமாகப் பதிலளித்தாராம் “தரையைத் தொடுமளவுக்கு நீளமாக இருந்தால்போதும்” என. இதுபோல் நமக்குக் கிடைத்துள்ள உடலமைப்பைத் திருப்தியுடன் ஏற்காததன் விளைவே, இதுபோன்ற மனச்சிக்கல்கள்.

உடலைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதற்கும் அளவுக்கு மீறிக் கவனித்துப் பதற்றப்படுவதற்கும் இடையேயான சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
வாட்ஸ் அப்பில் இனி யூ டியூப் வீடியோக்களை பார்க்கலாம்: ஐ போன் பயனாளர்களுக்கு புது வசதி

Published : 18 Jan 2018 16:10 IST

ஐஏஎன்எஸ்




ஐ போன் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியிடன் யூ டியூப் ஒருங்கிணைப்பு வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி, ஐ போன் பயனாளர்கள், வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிக் கொண்டே யூ டியூப் வீடியோக்களை காண முடியும்.

வாட்ஸ் அப் நிறுவனம் முன்னதாகவே ஐபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியுடன் யூடியூப்பை ஒருங்கிணைக்கும் வசதி விரைவில் செய்து தரப்படும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வசதியை ஐ போன் வாசகர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி மூலம் வாட்ஸ் அப்பின் ஒரு ஓரத்தில் யூ டியூப் பாடல்களை நீங்கள் தொடர்ந்து கேட்டு மகிழலாம்.இந்த புதிய வாட்ஸ் அப் வசதியை 2.18.11 என்ற பதிப்பில் அப்டேட் செய்தால் மட்டும் போதுமானது.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு இவ்வசதி வழங்கப்படவில்லை. வருங்காலங்களில் இவ்வசதி ஆண்ட்ராய்டு போன்களுக்கும் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாதாளத்தில் மர்மக் கட்டுமானப் பணிகள்: போலீஸார் அதிர்ச்சி

Published : 18 Jan 2018 20:35 IST

வாரணாசி



வாரனாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் நுழைவாயில். - படம். | ஆர்.வி.மூர்த்தி.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே பழைய கட்டிடங்களுக்கு கீழே பாதாளத்தில் சட்ட விரோதமாக கட்டுமானப் பணிகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

வாரணாசியில் உள்ள இந்துக்களின் புனித தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதை மீறி கோயிலுக்கு அருகிலேயே பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள டல்மாண்டி பகுதியில் பழைய கட்டிடங்களுக்கு கீழே பாதாளத்தில் வணிக வளாக கட்டுமானப் பணிகள் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் அதிகாரி ஆர்.கே. பரத்வாஜ் கடந்த செவ்வாய்கிழமை இரவு விஸ்வநாதர் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தின் கீழ் தளத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பரத்வாஜூம் அவருடன் சென்ற போலீஸாரும் அதிர்ச்சி அடைந்தனர். பழைய கட்டிடத்தின் கீழ் பகுதியில் சட்ட விரோதமாக கட்டுமானப் பணிகள் நடந்து வருவது தெரிந்தது.

பரத்வாஜ் கூறுகையில், ‘‘பழைய கட்டிடங்களுக்கு கீழே சட்ட விரோதமாக 8 ஆயிரம் சதுர அடியில் வணிக வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருவது ரோந்துப் பணியின்போது தெரியவந்தது. அந்த இடத்துக்கு செல்ல நீண்ட பாதை அமைக்கப்பட்டிருந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி வழிகாட்டியபடி அந்தப் பாதை வழியாக சென்றேன். ரகசியமாக பாதாளத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளது. கோயில் வளாகத்துக்கு அருகிலேயே இதுபோன்று ரகசிய கட்டிடம் கட்டுவதற்கான காரணம் குறித்து விசாரணையில் முக்கிய கவனம் செலுத்தப்படும்’’ என்றார்.

இதனிடையே, ரகசிய கட்டுமானத்துக்கும் அந்த பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற கட்டிடங்களுக்கும் வாரணாசி வளர்ச்சி ஆணையம் சீல் வைத்தது. மேலும், ஆணையத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய 3 இன்ஜினீயர்களை இடைநீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், போலீஸார், சட்ட விரோத கட்டிடங்கள் கட்டிய கிரிமினல் கும்பல் இவர்களுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றியும், இதில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயில் அருகிலேயே பாதாளத்தில் சட்ட விரோதமாக ரகசிய கட்டிடம் கட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைவாசிகளே.. இந்த கோடையில் குடிநீர் பஞ்சம் வராது! நம்பலாம்!!

By DIN | Published on : 18th January 2018 06:19 PM |

சென்னை: 2016ம் ஆண்டைப் போலவே 2017ம் ஆண்டும் தமிழகத்தை வடகிழக்குப் பருவ மழை ஏமாற்றினாலும், இப்போதிருக்கும் குடிநீரைக் கொண்டு கோடைக்காலத்தை சமாளித்து விடலாம் என்கிறது புள்ளி விவரம்.

நெல்லை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களைத் தவிர, 2017ம் ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனது. ஒரு சில மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக அதன் அக்கம் பக்கத்து மாவட்ட ஏரிகளும், நீர் ஆதாரங்களும் நிரம்பி, மக்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கைத் தந்தன.

இந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள நீர் ஆதாரங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீர், எத்தனை மாதங்கள் தாக்கு பிடிக்கும் என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முருகேஷ் என்ற சமூக ஆர்வலர் கேட்டிருந்தார்.

அதற்கு, சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் பதிலில், சென்னை மாநகராட்சிக்கு பூண்டி, சோழவரம், புழலேரி, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஆதாரங்களில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது.

குடிதண்ணீர் நீர்நிலை இருப்பு விவரம்
(மில்லியன் கன அடியில்)
பூண்டி 1070.00
சோழவரம் 495.00
புழலேரி 1522.00
செம்பரம்பாக்கம் 1810.00
வீராணம் 564.40

இந்த ஏரிகளில் தற்போதிருக்கும் நீர் இருப்பு 30.09.2018ம் தேதி வரை சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னையில் இந்த ஆண்டு கோடைக் காலத்தை குடிநீர் பஞ்சம் இல்லாமல் சந்திக்கலாம் என்கிறது இந்த தகவல். இதனால் மழை இல்லையே.. இந்த ஆண்டு கோடையை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று வருந்தியவர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடையலாம்.

இன்றைய நிலவரப்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 1,110 மில்லியன் லிட்டர் நல்ல தண்ணீர் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


ரயில் டிக்கெட்டை முன்னதாக பதிவு செய்பவர்களுக்கு கட்டணச் சலுகை: பரிந்துரை ஏற்பு

By DIN | Published on : 19th January 2018 12:55 AM |

 விமானத்தில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தால் குறைந்த விலையில் கிடைப்பதுபோல, ரயில் டிக்கெட் முன்பதிவிலும் இதே திட்டம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. ரயில்வே கட்டண சீராய்வுக் குழு அளித்த இந்தப் பரிந்துரையை ரயில்வே வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, பதிவு செய்யப்படாமல் இருக்கும் இருக்கைகளுக்கு ஏற்ப 20 முதல் 50 சதவீதம் வரை கட்டணச் சலுகை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்தால் கூட, அப்போது அதிக அளவு இருக்கைகள் முன்பதிவு செய்யப்படாமல் இருந்தாலும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், கீழ்நிலை படுக்கை வசதி (லோயர் பெர்த்) டிக்கெட்டை முன்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதுதவிர, ரயில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரிக்கும்போது கட்டணத்தை உயர்த்தவும், தேவை குறைவாக இருக்கும்போது கட்டணத்தைக் குறைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகளை அந்தந்த ரயில்வே வாரியங்களே எடுக்கலாம். பயணிகள் அதிகம் ரயிலைப் பயன்படுத்தும் பண்டிகை காலங்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, அதிகம் பயன்படுத்தாக காலகட்டத்தில் கட்டணத்தை குறைக்கலாம்.

பயணிகளுக்கு வசதியான நேரத்தில் இயங்கும் ரயில்களுக்கு, உதாரணமாக இரவில் புறப்பட்டு காலையில் குறிப்பிட்ட ஊரைச் சென்றடையும் ரயில்களுக்கு சற்று கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளையும் ரயில்வே கட்டண சீராய்வுக் குழு அளித்துள்ளது.

NEWS TODAY 11.06.2026