Friday, January 19, 2018

டிஜிட்டல் போதை 17: சூது ஒரு மனக்கோளாறு!

Published : 13 Jan 2018 09:39 IST

வினோத் ஆறுமுகம்



சூதாட்டம் ஆடுவது வெறும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டதல்ல. சட்டவிரோதமானது என்று தடை செய்யப்பட்டிருக்கும் இந்த விளையாட்டை ஆடி, சொத்தை அழித்துக்கொண்டவர்களும் உயிரை இழந்தவர்களும் அதிகம். அந்த ஆபத்தெல்லாம் தெரிந்தும் ஏன் ஒருவர் சூதாடுகிறார்?

1986-ல் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, மனநலக் கோளாறு காரணமாகத்தான் ஒருவர் மிக அதிகமாக சூதாட்டம் ஆடுகிறார் என சர்வதேச மனநலக் கழகம் அறிவித்தது. அந்த சூதாட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அப்படிச் சேர்ப்பது சரியா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மனநலக் கோளாறுக்கான அறிகுறிகள்

ஒருவர் சூதாட ஆரம்பித்து, ஓர் ஆண்டுக்குள் கீழ்க்காணும் அறிகுறிகள் அவரிடம் தென்பட்டால், அதிக அளவில் சூதாடும் மனநலக் கோளாறால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தலாம்.

சூதாட்டம் ஆடுவதை நிறுத்தச் சொன்னால் எரிச்சலடைவார்கள், கோபப்படுவார்கள்.

சூதாட்டத்தை நிறுத்த முயன்று பலமுறை தோற்றிருப்பார்கள்.

சூதாட்டம் சம்பந்தமாகவே பேசுவார்கள், யோசிப்பார்கள்.

சோகமானாலோ மனச்சோர்விலிருந்தாலோ சூதாட்டம் விளையாடுவார்கள்.

சூதாட்டத்தில் எவ்வளவு பணம் தோற்றாலும், ‘மீண்டும் பணத்தை வென்று காட்டுகிறேன் பார்’ என்று மீண்டும் மீண்டும் விளையாடுவார்கள்.

சூதாட்டம் பற்றிக் கேட்டால் பொய் சொல்வார்கள்.

குடும்ப உறவுகள், நண்பர்கள், வேலை என எல்லாவற்றையும் இழந்தாலும் சூதாட்டத்தைத் தொடர்வார்கள்.

மிகவும் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் இருப்பார்கள். எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருக்கத் தொடங்குவார்கள்.

இவற்றில் ஏதேனும் நான்கு அறிகுறிகள் தெரிந்தாலும் ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையாகிவிட்டார் என உறுதியாகச் சொல்லலாம்.

ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரை இதே அளவுகோல்களைப் பின்பற்றலாம் என இதைப் பற்றி ஆராய்ந்துவரும் நிபுணர் கிம்பர்லி யூங் குறிப்பிடுகிறார்.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய பொது சூதாட்டத் தடைச் சட்டம் 1867-ன்படி, இந்தியாவில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் எல்லா வகையான சூதாட்டங்களும் தடைசெய்யப்பட்டுவிட்டன. சிக்கிமும் கோவாவும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்ப்பதற்காகத்தான் சூதாட்டத்துக்கு அனுமதி வாங்கியுள்ளன. ஆனால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எப்படிக் கடிவாளம் போடுவது என்று தெரியாமல் திணறுகிறது அரசு. இதுகுறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை.

அமெரிக்காவில் இருப்பது போன்ற இணைய சூதாட்டத் தடைச் சட்டம் இங்கு இல்லை. அந்தச் சட்டத்தின் மூலம் இணைய சேவை புரியும் நிறுவனங்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட வலைத்தளங்களைத் தடைசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை அவ்வளவு சீக்கிரம் தடைசெய்ய முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்தை கிரெடிட் கார்ட், ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்டவை மூலமாக விளையாடலாம். வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைச் சட்டப்படி இந்த விளையாட்டுகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன. எப்போது வேண்டுமானாலும் சட்டப்படி பணம் முடக்கப்படலாம் என்பது கொஞ்சம் ரிஸ்க்தான். எனினும், அப்படியான நிகழ்வுகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. தொலைக்காட்சிகளில் பகிரங்கமாக ஆன்லைன் சீட்டாட்டம் பற்றிய விளம்பரங்கள் வரும்போது, சட்டத்தால் என்ன செய்ய முடியும்?

(அடுத்த வாரம்: வீடியோ கேம்… நன்மைகளும் உண்டு!)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...