Friday, January 19, 2018

காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாதாளத்தில் மர்மக் கட்டுமானப் பணிகள்: போலீஸார் அதிர்ச்சி

Published : 18 Jan 2018 20:35 IST

வாரணாசி



வாரனாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் நுழைவாயில். - படம். | ஆர்.வி.மூர்த்தி.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே பழைய கட்டிடங்களுக்கு கீழே பாதாளத்தில் சட்ட விரோதமாக கட்டுமானப் பணிகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

வாரணாசியில் உள்ள இந்துக்களின் புனித தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கோயிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதை மீறி கோயிலுக்கு அருகிலேயே பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள டல்மாண்டி பகுதியில் பழைய கட்டிடங்களுக்கு கீழே பாதாளத்தில் வணிக வளாக கட்டுமானப் பணிகள் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் அதிகாரி ஆர்.கே. பரத்வாஜ் கடந்த செவ்வாய்கிழமை இரவு விஸ்வநாதர் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தின் கீழ் தளத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பரத்வாஜூம் அவருடன் சென்ற போலீஸாரும் அதிர்ச்சி அடைந்தனர். பழைய கட்டிடத்தின் கீழ் பகுதியில் சட்ட விரோதமாக கட்டுமானப் பணிகள் நடந்து வருவது தெரிந்தது.

பரத்வாஜ் கூறுகையில், ‘‘பழைய கட்டிடங்களுக்கு கீழே சட்ட விரோதமாக 8 ஆயிரம் சதுர அடியில் வணிக வளாகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருவது ரோந்துப் பணியின்போது தெரியவந்தது. அந்த இடத்துக்கு செல்ல நீண்ட பாதை அமைக்கப்பட்டிருந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி வழிகாட்டியபடி அந்தப் பாதை வழியாக சென்றேன். ரகசியமாக பாதாளத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளது. கோயில் வளாகத்துக்கு அருகிலேயே இதுபோன்று ரகசிய கட்டிடம் கட்டுவதற்கான காரணம் குறித்து விசாரணையில் முக்கிய கவனம் செலுத்தப்படும்’’ என்றார்.

இதனிடையே, ரகசிய கட்டுமானத்துக்கும் அந்த பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற கட்டிடங்களுக்கும் வாரணாசி வளர்ச்சி ஆணையம் சீல் வைத்தது. மேலும், ஆணையத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய 3 இன்ஜினீயர்களை இடைநீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், போலீஸார், சட்ட விரோத கட்டிடங்கள் கட்டிய கிரிமினல் கும்பல் இவர்களுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றியும், இதில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயில் அருகிலேயே பாதாளத்தில் சட்ட விரோதமாக ரகசிய கட்டிடம் கட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...