Monday, January 29, 2018

எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் கருவியில் சிக்கிய வாலிபர் பரிதாப மரணம்

Added : ஜன 28, 2018 23:09



மும்பை:மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் இயந்திரம் அருகே, ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற நபரை, அந்த இயந்திரம், உள் இழுத்ததில், படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தலைநகர், மும்பையில், பி.ஒய்.எல். நாயர் அறக்கட்டளை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு பெண் நோயாளியின் உறவினர், ராஜேஷ் மாரு, 32. அந்த பெண்ணுக்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் முறையில், எலும்பு, மென் திசுக்களை படம் எடுக்க வேண்டும் என, டாக்டர் கூறியிருந்தார்.அதற்காக, பெண்ணுக்கு உதவியாக, ராஜேஷ் மாரு, ஸ்கேனிங் அறைக்கு சென்றார்.அங்கிருந்த வார்டு பாய், ஆக்சிஜன் சிலிண்டரை உள்ளே எடுத்து வரும்படி, ராஜேஷ் மாருவிடம் கூறியுள்ளார். தயங்கிய ராஜேஷ் மாருவிடம், 'ஸ்கேனிங் கருவியின் சுவிட்ச் அணைக்கப்பட்டுள்ளது; பயப்படாமல் உள்ளே வாருங்கள்; இது, தினமும் நடக்கும் வேலைதான்' என, வார்டு பாய் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆக்சிஜன் சிலிண்டரை ஸ்கேனிங் கருவி அருகே, ராஜேஷ் மாரு எடுத்துச் சென்றார். ஆனால், அந்த சமயத்தில் ஸ்கேனிங் கருவி, 'சுவிட்ச் ஆன்' நிலையில் இருந்ததால், ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்த உலோகம், ஸ்கேனிங் கருவியின் ராட்சத, காந்த சக்தியை துாண்டி விட்டது.இதனால், சிலிண்டரையும், அதை கையில் பிடித்திருந்த ராஜேஷ் மாருவையும், ஸ்கேனிங் கருவி பலமாக உறிஞ்சி உள் இழுத்தது; அதனால், ஸ்கேனிங் கருவியின் உள்ளே, சிலிண்டருடன், ராஜேஷ் மாருவின் கையும் சிக்கியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வார்டு பாயும், ஸ்கேனிங் டெக்னீஷியனும், ராஜேஷ் மாருவை, ஸ்கேனிங் இயந்திரத்தின் பிடியில் இருந்து, வெளியே இழுத்தனர். இருப்பினும், சிலிண்டரில் இருந்து, ஆக்சிஜன் அதிகளவில் வெளியேறியது. இதனால், ராஜேஷின் உடல், அதிகளவில் வீங்கி இருந்தது. அவர் உடலில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
அவசர சிகிச்சை பிரிவில் ராஜேஷ் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், 10 நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, டாக்டர் சித்தார்த் ஷா, வார்டு பாய் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் கருவி அருகே, நகைகள் உட்பட எவ்வித உலோகப் பொருளையும் எடுத்துச் செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரஹணம், தைப்பூசம் 31ல் ராமேஸ்வரத்தில் நடை அடைப்பு

Added : ஜன 29, 2018 00:11

ராமேஸ்வரம்:வரும், 31ல், தைப்பூசத்தன்று சந்திர கிரஹணம் வருவதை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் நடை சாத்தப்படுகிறது.வரும், 31ல், மாலை, 5:16 முதல் இரவு, 8:42 மணி வரை சந்திரகிரஹணம் ஏற்படுவதால், அன்று தைப்பூசத்தை ஒட்டி, ராமேஸ்வரம் கோவிலில் அதிகாலை, 2:30 மணிக்கு நடை திறந்து ஸ்படிகலிங்கம், கால பூஜைகள் நடக்கும்.பின், காலை, 7:00 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் லெட்சுமனேஸ்வர் கோவிலுக்கு புறப்பாடானதும், நடை சாத்தப்படும். 

பகல், 11:00 மணிக்கு லெட்சுமனேஸ்வர் தீர்த்த குளத்தில், அலங்கார தைப்பூச தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வருவர்.பின், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி, கோவிலுக்கு வந்ததும் நடை திறந்து, மாலை, 3:00 முதல், 5:00 மணி வரை பக்தர்கள், தரிசிக்கலாம். மாலை, 5:05 முதல் நடை சாத்தப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு கோவிலில் இருந்து தீர்த்தவாரி சுவாமி புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, இரவு, 7:00 மணிக்கு தீர்த்தவாரி கொடுப்பார்.இரவு, 9:00 மணிக்கு கோவிலில், சந்திர கிரஹண அபிஷேகமும், பள்ளியறை பூஜையும் நடக்கும் என, கோயில் இணை ஆணையர், மங்கையர்கரசி தெரிவித்தார்.தற்போது, 60 ஆண்டு களுக்கு பின், சந்திர கிரஹணம், தைப்பூசம் ஒரே நாளில் வருவதால், பகலில் தைப்பூச தேரோட்டம் நடக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என கோவில் குருக்கள் தெரிவித்தனர்.





எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் கரூர் வரை நீட்டிக்க திட்டம்

Added : ஜன 28, 2018 21:30


கரூர்:''சென்னை எழும்பூரில் இருந்து, சேலம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை, கரூர் வரை நீட்டிக்க, மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நாமக்கல் அ.தி.மு.க., - எம்.பி., சுந்தரம் கூறினார்.

கோரிக்கை

கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அவர் அளித்த பேட்டி:சேலம் - கரூர் புதிய ரயில்வே வழித்தடத்தில், கூடுதல் ரயில்களை இயக்க, ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னை எழும்பூரில் இருந்து, சேலம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை, கரூர் வரை நீட்டிக்க கேட்டுஉள்ளோம். 

இது தொடர்பாக, சென்னையில் நடந்த, ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.சென்னை எழும்பூர் ரயில், கரூர் வரை நீட்டிக்கப்பட்டால், நாமக்கல், கரூர் நகர வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்னும் மூன்று மாதங்களில், இந்த ரயில், கரூர் வரை நீட்டிக்க வாய்ப்புண்டு.

எதிர்பார்ப்பு

அதே போல், சேலத்தில் இருந்து கரூர் வரை செல்லும் பாசஞ்சர் ரயிலை, திருச்சி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், பாசஞ்சர் ரயில், திருச்சி வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, January 28, 2018

2 arrested after CCTV camera captures judge’s daughter being robbed
TIMES NEWS NETWORK

Chennai: Hours after a judge’s daughter became the latest victim of chain-snatching in the city, police tracked down the culprits with the help of CCTV camera footage on Friday.

The woman was targeted while she was walking down Sri Nagar Colony Road in Saidapet.

Police said two men on a bike snatched a gold chain from Apoorva, 26, a resident of Saidapet and daughter of a woman judge in the Madras high court, when she was walking down the road behind the magistrate court complex in Saidapet.

She screamed for help and tried to chase the robbers. Later, she returned home and informed her parents. On information, the Kotturpuram police registered a case and launched a hunt for the suspects. They collected the CCTV camera footage from a residential building at the spot of the crime and also got video footage from a shop on the road side.

Police traced the suspects with the help of bike’s registration number. They registered a case and arrested Sudarshanam, 20, of Royapettah and Purushothaman, 19, of Triplicane.

Preliminary inquiries revealed that the two men had taken to robbery to make easy money. Police also recovered the stolen gold chain from them and returned to Apoorva.

The Kotturpuram police registered a case.

Sudarshanam and Purushothaman were remanded in judicial custody after being produced before a magistrate court in Saidapet. Police also made inquiries if the two were involved in similar robbery cases earlier in the city.


இராமன் ஆண்டாலும்... இராவணன் ஆண்டாலும்...

By தி. இராசகோபாலன் | Published on : 27th January 2018 02:39 AM |


கறையான் கட்டுகின்ற அழகான புற்றினைப் பார்த்து, தானும் அதுபோல் கட்ட வேண்டும் என்று தூக்கணாங்குருவி ஆசைப்படுவதில்லை. தூக்கணாங்குருவி கட்டுகின்ற அடுக்குமாடிக்கூடுகளைப் பார்த்து, நாமும் அதுபோல் கட்ட வேண்டுமென்று கறையான்கள் ஆசைப்படுவதில்லை. தேனீக்கள் கட்டுகின்ற தேன்கூட்டைப் பார்த்து, புறாக்கள் ஆசைப்படுவதில்லை. ஆனால், மனிதன் மட்டும் பார்க்கின்ற அனைத்தையும் அடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறான்.

தெருக்கூத்தில் ராஜாவாக வேடம் தரித்து நடித்தவன், பொழுது விடிந்ததும் மேக்கப்பைக் கலைத்துவிட்டு, டவுன் பஸ்ஸில் ஏறி தன் வீட்டுக்குப் போகின்றான். ஆனால், சினிமாவில் ராஜாவாக வேடம் தரித்து தர்பார் நடத்தியவன், மறுநாள் காலையில் நேரே கோட்டைக்குச் சென்று கொடியேற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

யார் யாருக்கு எந்தத் தொழிலில் பயிற்சியும் முயற்சியும் இருக்கின்றதோ, அந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று கீதை சொல்லுகின்றது. அதற்கு "சுதர்மம் என்று பெயர். பகவத்கீதை 18-ஆவது அத்தியாயத்தில் 45-ஆவது சுலோகமும் 47-ஆவது சுலோகமும் இதனை அற்புதமாகச் சொல்லுகின்றன. 

"தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறான் என்பதைச் சொல்லுகிறேன் கேள். பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும், தனக்குரிய தர்மத்தைக் குறையின்றிச் செய்தலும் நன்று. இயற்கையில் ஏற்பட்ட தொழிலைச் செய்வதானால், ஒருவன் பாவமடைய மாட்டான்' என்பதுதான் அவ்வேத வாக்கியம்.
ஒரு தொழிலில் பயிற்சியும் முயற்சியும் இல்லாதவன், அத்தொழிலில் ஈடுபடுவதால் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்வதோடு சமூகத்திற்கும் கேடு விளைவிப்பான். 

அவரவர் தொழிலை அவரவர் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சுவையான நிகழ்ச்சி - இங்கிலாந்தில் ஜனநாயக சோசலிசத்தைப் பற்றி முதன்முதலில் சிந்தித்தவர்கள் "ஃபேபியன் சொசைட்டி' என்னும் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, பியாட்ரிஸ் மற்றும் சிட்னி வெப் போன்ற அறிவுஜீவிகள் ஆவர்.

பெர்னார்ட் ஷாவுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் - வயலின் வித்வான் ஒருவர், பெர்னார்ட் ஷாவுக்கு நண்பராகவும் இருந்தார். அவர் ஒருநாள் ஃபேபியன் சொசைட்டிக்கு வந்து, மாமேதைகள் கூடியிருக்கும் சபையில் சனநாயக சோசலிசத்தைப் பற்றிக் கருத்துச் சொல்லலானார். அவரை எப்படித் தடுத்து நிறுத்துவதென்று தெரியாமல் அறிஞர்கள் சங்கடத்தில் நெளிந்து வளைந்தனர். பெர்னார்ட் ஷா அந்த வயலின் வித்வானைச் சாதுர்யமாக வெளியே அழைத்து வந்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலையில் அந்த வயலின் வித்வானுக்குப் பாடம் புகட்ட நினைத்த பெர்னார்ட் ஷா ஒரு வயலினை எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போய் வயலினை மீட்டி, "டர்புர்' என்று வயலின் வாசிக்கலானார். தன் வீட்டில் ஒருவர் இசையைக் கொலை செய்வதைக் கேட்டு ஓடிவந்த வயலின் வித்வான், "என்னப்பா! பெர்னார்ட் ஷா, காலங்காத்தாலே என் வீட்டிலேயே அமர்ந்து இசையைக் கொலை செய்கிறாயே, இது நியாயமா?' எனக் கேட்டார்.

அதற்குப் பெர்னார்ட் ஷா, "என்னப்பா! நேற்று எங்கள் சங்கத்துக்கு வந்து நீ மட்டும் சனநாயக சோசலிசத்தைக் கொலை செய்யலாமா? அதற்குப் பழி வாங்கத்தான் நான் உன் வயலின் இசையைக் கொலை செய்கிறேன்' என்றார். இதிலிருந்து தனக்குத் தெரியாத தொழிலில், ஒருவர் தலையிடுவது ஆபத்து என்பது தெளிவாகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து, இருபது ஆண்டுகள் வரை இந்த நாட்டு மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் செய்த அநியாயங்களும் அட்டகாசங்களும் தெரியாமல் இருந்தன. ஆனால், 1967-க்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் செய்த அத்தனை அட்டூழியங்களும் அநியாயங்களும், எப்படியிருந்திருக்கும் என்று உணருமாறு, ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் செய்து வருகின்றனர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் சர்வோபரி தியாகம் செய்த தியாகிகள், ஆட்சிக்கு வந்து ஒப்பற்ற அப்பழுக்கற்ற ஆட்சிக் கலையைத் தந்தனர். அதற்கு இரண்டு சான்றுகளைச் சுட்டலாம்.

ஆச்சார்ய கிருபளானியும் சுசேதாவும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும், இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்த பிறகுதான் திருமணம் என்பதில் உறுதியாக நின்றனர். சுதந்திரம் வந்தபிறகு தங்களுடைய திருமணத்தை நடத்தி வைக்குமாறு காந்தியடிகளை வேண்டினர்.

"கிருபளானிக்கு வயது 50; சுசேதாவுக்கு வயது 28. இவ்வளவு வயது வேறுபாடு உடையவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்குச் சம்மதமில்லை' என்றார் காந்திஜி. அதையடுத்து அவர்கள் இருவரும் ஒரு விரதத்தை-உறுதியை ஏற்றபின் காந்தியடிகள் சம்மதித்தார். என்ன உறுதி தெரியுமா? அவர்களுக்குத் திருமணம் ஆனதில் இருந்து வாழ்நாள் முடிய ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில்லை என்ற உறுதியைத் தந்தவுடன்தான் அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தார் காந்திஜி.
அப்படித் தழும்பேறிய தியாகங்களோடு திருமதி சுசேதா கிருபளானி 1963-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபளானிதான். அவர் பதவியேற்றவுடன், 62 நாட்கள் தொடர்ந்து நடந்து வந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தைச் சாமர்த்தியமாகச் சிக்கெடுத்துச் செம்மைப்படுத்தினார். உத்தரப்பிரதேச வரலாற்றில் ஒரு பொற்காலம் உண்டென்றால், அது சுசேதா கிருபளானி ஆண்ட காலம்தான்! லால் பகதூர் சாஸ்திரியே அவருடைய எளிமையைக் கண்டு அதிசயித்து நின்றார்.

1971-ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற சுசேதா கிருபளானி, தம்முடைய சொத்துகள் அனைத்தையும் ஏழை மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் "லோக் கல்யாண் சமிதி' எனும் தொண்டு நிறுவனத்திற்கு ஒப்படைத்தார். இந்த ஆட்சிக்கலையை இன்றைய வேடதாரிகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

அமெரிக்காவில் குடியரசுத் தலைவராக இருந்த ரொனால்டு ரீகன், நடிகர் என்பதற்காக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இடதுசாரி பொருளாதாரத்தில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பிடிப்பைக் கண்டுதான் மக்கள் வாக்களித்தனர். ரீகனுக்கு முன்பிருந்த ஜிம்மி கார்டர் காலத்துக் குளறுபடிகளைச் செம்மையாகச் செப்பனிட்டவர் ரீகன். வியத்நாம் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்கர்களை, முற்றாகத் திரும்பப் பெற்றார். வியத்நாம் போரில் மாண்ட அமெரிக்க வீரர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களைத் தேடித் தந்தார்.
முதிர்ச்சியும் ஆட்சிக்கலையும் வாய்க்கப் பெற்றவர்கள், அடுத்த துறையில் கால் ஊன்றுவதில் தவறில்லை.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த என்.டி. ராமராவ் ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரி. அவர் திரைத்துறைக்கு வந்ததனால், கலையும் செழித்தது; நாட்டு மக்களும் மகிழ்ந்தனர். அவரை இராமர் வேடத்திலும், கிருஷ்ணர் வேடத்திலும் பார்த்து மகிழ்ந்த மக்கள் நாளடைவில், அவரை இராமராகவும் கிருஷ்ணராகவும் எண்ணித் தொழ ஆரம்பித்தனர். கனவுலகத்தில் மிதந்த மக்கள் அவரை மாநில முதலமைச்சராகவும் ஆக்கினர். ஆனால், என்.டி.ஆரோ தெலுங்கு தேசக் கட்சியைக் குடும்பச் சொத்தாக்கினார். பிறகு அவருடைய மருமகனே ஆட்சிக் கலைப்பிற்கு நாள் குறித்தார்.
பேராசிரியர் லட்சுமி பார்வதி என்ற மாற்றான் தோட்டத்து மல்லிகை, என்.டி.ஆருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வந்தார். அந்த மல்லிகையின் மணத்திலே மயங்கிய என்.டி.ஆர்., அவரை இரண்டாவது மனைவியாகவும் ஆக்கிக் கொண்டார். தம்முடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வந்த லட்சுமி பார்வதியின் வரலாற்றை, என்.டி.ஆரே எழுத லேண்டிய துர்பாக்கியத்திற்குத் தள்ளப்பட்டார். கடைசியில் சோதிடர்களின் பேச்சை நம்பி, ஒரு காதில் குண்டலம் தரித்தார்; சேலையை வேட்டியாகவே அணிய ஆரம்பித்தார். என்.டி.ஆரின் அரசியல் பிரவேசத்தால் கலையுலகம் ஒரு சிற்பியை இழந்தது; ஆனால், அரசியல் உலகத்தில் அவர் அப்பிய அழுக்குத் துடைக்கப்படாமலேயே போயிற்று.

கனவுலகத்தில் இருப்பவர்கள் நனவுலகத்திற்கு வருவது, இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டிக்கொண்டு கடலில் குதிப்பது போன்றதாகும். அரிதாரங்கள் அரசியலுக்கு வந்தால், ஆட்சிகள் மாறலாமே தவிர, காட்சிகள்...?

தமிழகத்தில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரும், ஆந்திரத்தில் என்.டி.ஆரும் அரசியலுக்கு வந்ததைப் பார்த்து, கேரளத்து நடிகர் பிரேம் நசீருக்கும் சபலம் ஏற்பட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினர் ஆனார். ஒரு கலை நிகழ்ச்சியில் பேசும்போது அரசியலைப் பற்றிப் பேசத் தொடங்கினார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த கேரளத்து மக்கள் கொதித்தெழுந்து, "கலையைப் பற்றி பேசுவதாக இருந்தால் பேசுங்கள்; எங்களுக்கு உங்களைக் காட்டிலும் அரசியல் நன்றாகவே தெரியும்' எனக் கண்டனக் குரல் எழுப்பினர்.
சுனாமியும் பூகம்பமும் ஒரு காலத்தில் இயற்கையால் மட்டுமே எழுந்து கொண்டிருந்தன. ஆனால், இன்று தனி மனிதர்களும் சுனாமி ஏற்படுத்தக் கூடிய அழிவை, ஒரு பூகம்பம் ஏற்படுத்தக் கூடிய கோர விளைவுகளை உருவாக்கத் தயாராகிவிட்டார்கள். நாட்டு மக்கள் இனியும் சொப்பன உலகத்தை நம்பாது, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று வாழைப்பழத்திற்கு ஆசைப்படும் குரங்குகள், கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், வாக்காளர்கள் அப்படியிருக்க முடியுமா?
மரணமான ஊழியரின் மனைவிக்கு குடும்ப பென்ஷன் வழங்க உத்தரவு

Added : ஜன 28, 2018 01:48

சென்னை, 'ராணுவத்தில் பணியாற்றியதற்கான பென்ஷன் பெற்றாலும், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றியதற்கான பென்ஷனும் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம், தர்மபுரி மண்டலத்தில், கேப்ரியல் என்பவர், டிரைவராக பணியாற்றி வந்தார். அதற்கு முன், இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றார். 

பின், போக்குவரத்து கழகத்தில், டிரைவராக சேர்ந்து, ௨௦௦௩ல், ஓய்வு பெற்றார். பாதுகாப்பு துறையின் பென்ஷன், போக்குவரத்து கழகத்தின் பென்ஷன், இரண்டையும் பெற்று வந்தார். ௨௦௧௨ல், கேப்ரியல் மரணம் அடைந்தார்.

இதையடுத்து, குடும்ப பென்ஷன் வழங்க, போக்கு வரத்து கழக நிர்வாகம் மறுத்து விட்டது. கேப்ரியலின் மனைவி, அமலோர்பவமேரி விசாரித்த போது, ஒரே நேரத்தில், இரண்டு பென்ஷன் பெற உரிமை  யில்லை என, பதில்
அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, குடும்ப பென்ஷன் வழங்க உத்தர விடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலோர்பவ மேரி மனு தாக்கல் செய்தார்.
மனுவை, நீதிபதி, டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், நிர்மலேஸ்வர் ஆஜரானார். நீதிபதி, பிறப்பித்த உத்தரவு:
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், முன்னாள் ராணுவத்தினர் என்ற முறையில், பென்ஷன் பெற்றுள்ளார். போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின், அதற்கான பென்ஷன் பெற்றுள்ளார்.
ராணுவத்தில் இருந்து பென்ஷன் பெற்று வரும் போது, போக்குவரத்து கழகத்தில் ஆற்றிய சேவைக்காக, அவரது மனைவி பென்ஷன் பெறுவதில், எந்த தடையும் இல்லை.

எனவே, போக்குவரத்து கழகத்திடம் இருந்து, குடும்ப பென்ஷன் பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. நான்கு வாரங்களில், பென்ஷன் தொகையை, போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும்.
கணவர் இறந்த தினத்தில் இருந்து, பாக்கி தொகையை விடுவிக்க வேண்டும். தவறி னால், ௧௦ சதவீத வட்டியுடன் கணக்கிட்டு வழங்க வேண்டியது வரும்.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.
திருட்டு கும்பல் உலா ஸ்டான்லியில் பீதி

Added : ஜன 28, 2018 02:00

சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் உலா வரும் திருட்டு கும்பலால், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் பீதியில் உள்ளனர்.
சென்னை, ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி  மருத்துவமனையில் தோல், இதயம், சிறுநீரகம், கை ஒட்டுறுப்பு உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.

இங்கு, உள்நோயாளிகளாக 2,000க்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக 8,000க்கும் மேற்பட்டோரும், சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோருடன், உதவியாளர் ஒருவர் தங்குவது வழக்கம். இவர்கள் தங்குவதற்காக, மருத்துவமனை வளாகத்தில், விடுதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு நிலவும் இடப்பற்றாக்குறையால், ஆயிரக்கணக்கானோர், மருத்துவமனை வளாகத்தில் படுத்து உறங்குகின்றனர்.
இவர்களை குறிவைக்கும் திருட்டு கும்பல், துாங்குவோரின் மொபைல் போன், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் செல்கிறது.

சமீபத்தில், பெண்கள் மருத்துவ விடுதியில் புகுந்த மர்மநபர், இரண்டு மொபைல் போன்களை திருடிச் சென்றார். அதே போல், மாற்றுத்திறனாளி மருத்துவ மாணவியின் நகைகளை திருடிய மர்மநபர் ஒருவர், கூச்சலிட்டதால் தப்பிச் சென்றார்.

ஒரு வாரத்திற்கு முன், போதையில் இருந்த முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர், மருத்துவ  மனைக்கு வந்து, ஊழியர் மற்றும் நோயாளிகளிடம் தகராறில் ஈடுபட்டார். பின், மொபைல் போன்
திருடர்களை பிடிக்க, ரோந்து வந்ததாகக் கூறி தப்பித்தார்.
திருட்டு கும்பல் உலா வருவதால், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள், பீதியில் உள்ளனர்.

இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில், 24 மணி நேரமும் போலீசார் காண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, மருத்துவர்கள்
மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NEWS TODAY 14.06.2026