Sunday, April 15, 2018

தி.மலையில் சித்ரா பவுர்ணமியன்று அன்னதானம் வழங்க கட்டுப்பாடு

Added : ஏப் 15, 2018 00:47

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தினத்தன்று, அன்னதானம் வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை யொட்டி, 29 இரவு கிரிவலம் செல்ல, 15 லட்சம் பக்தர்கள் வருவர். சித்ரா பவுர்ணமியன்று அன்னதானம் வழங்குவோர், 16 முதல், 25ம் தேதி வரை, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், முறையாக விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.

அன்னதானம் வழங்க விரும்புவோர், கிரிவலப்பாதையில் உணவு சமைக்க அனுமதியில்லை. சுகாதாரமான முறையில், வெளியிலிருந்து சமைத்து, எடுத்து வரப்படும் உணவுகளை மட்டுமே, பக்தர்களுக்கு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

உணவு வழங்குவதற்கு இலைகள், பாக்கு மட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காஸ் சிலிண்டர், விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்புகளை, கிரிவலப்பாதை யில் பயன்படுத்தக்கூடாது. அன்னதானம் வழங்கி முடித்ததும், அதற்கான அனுமதி பெற்றவர்கள், முறையாக அந்த பகுதியை, துாய்மைப்படுத்த வேண்டும். அனுமதியின்றி, அன்னதானம் வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகம்



வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15, 2018, 03:30 AM

வண்டலூர்,

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகிறார்கள்.

20 விலங்குகள்

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகை புரிகிறார்கள். வர வாய்ப்புகளற்ற பார்வையாளர்களும் உள்ளனர். இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Str-e-a-m-i-ng என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, வெள்ளைபுலி, வங்கபுலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம். இந்த வசதி பூங்காவின் www.aazp.in இணையதளத்தில் காணமுடியும்.

இரவு தங்க வசதி

மேலும் பூங்காவில் இரவில் தங்கி பகலில் பூங்காவை சுற்றிப்பார்க்கும் புதிய வசதி நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவுகளை பூங்காவின் இணையதளம் (www.aazp.in) மற்றும் https://www.aazp.in/ro-om_sea-r-ch/ என்ற இணைப்பின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இங்கு இரவு தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தி மூலம் பூங்காவை சிறப்பான முறையில் கண்டுகளிக்கலாம் பின்னர் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தை காணவும் முடியும். (மொத்தம் நேரம் 90 நிமிடங்கள்) இந்த வசதி மூலம் அவர்கள் சுலபமாக பூங்காவையும் அதில் உள்ள விலங்குகளையும் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பாக அமையும்.

இரு பெரியவர்கள் தங்க ரூ.2,000 மற்றும் வரியும், கூடுதலாக தங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 மற்றும் வரியும் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு நவீன வசதியுடன் சிறப்பு ரெயில்





தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு நவீன வசதியுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

ஏப்ரல் 15, 2018, 02:15 AM

தாம்பரம்,

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு நவீன வசதியுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

சிறப்பு ரெயில்

தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ஒரு முறை மட்டும் சென்று வரும் ‘அந்தியோதயா’ சிறப்பு ரெயில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் பெட்டிகள் முழுவதும் துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டதாகும். ரெயிலில் பயணிகளுக்கு செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, எல்.இ.டி. விளக்கு வசதி, நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

120 கிலோ மீட்டர் வேகம்

ரெயிலின் ஒரு பெட்டியில் ஏறினால், அனைத்து பெட்டிகளுக்கும் தொடர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு வசதி மற்றும் 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் ஆகியவை இந்த ரெயிலில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 16 லட்சமாகும்.


இந்த சிறப்பு ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று நேற்று மாலை 3.30 மணிக்கு நெல்லையை சென்றடைந்தது.

தினமும் இயக்க கோரிக்கை

பின்னர் நெல்லையில் இருந்து இன்று(ஞாற்றுக் கிழமை) மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு அதே ரெயில் நிலையங்களில் நின்று நாளை(திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்பதிவு இல்லாத பயணிகளுக்கு 6 பெட்டிகள் இருப்பதால் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு இந்த ரெயில் வசதியாக உள்ளது.

ஆனால் இந்த ரெயில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த ரெயில் சேவை தினமும் இயக்கப்பட்டால் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்பதால் தினமும் இந்த ரெயில் சேவையை தொடரவேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday, April 14, 2018


`எல்லாம் எனக்குத் தெரியும்; ஆனாலும் வருவேன்' - தமிழிசைக்கு மோடியின் பதில்! 

மலையரசு  

vikatan 

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால், உலக அளவில் காங்கிரஸ், தி.மு.க-வின் மீதான மரியாதை குறைந்துள்ளது என தமிழிசை தெரிவித்துள்ளார்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று முன்தினம் சென்னை வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி மூலம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் தமிழ் ஆர்வலர்கள், மக்கள் அமைப்புக்கள் என மிகப்பெரிய அளவில் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இதேபோல், #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் உலக அளவில் ட்ரெண்டானது. இந்த எதிர்ப்புக்கு பா.ஜ.க தலைவர்கள் தற்போது எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் பேசிய, பாஜக, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ``பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால், உலக அளவில் காங்கிரஸ், திமுகவின் மீதான மரியாதை குறைந்துள்ளது.


ரூ.500 கோடி செலவில் நடந்த ராணுவ கண்காட்சியின் பெருமையைக் குறைந்துவிட்டனர். இந்தியாவை எந்த அளவுக்கு முன்னேற்ற வேண்டும் என நவீன விமானம், ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வெற்று பலூனை பறக்கவிடுகிறீர்கள். இந்தியாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வது யார் என மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்த தகவல்களை பிரதமரிடம் கூறினோம். ஆனால் `எல்லாம் எனக்குத் தெரியும்' எனக் கூறி தமிழகத்துக்குப் பிரதமர் வந்தார். அதற்குக் காரணம் தமிழக மக்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை தான். கறுப்புக்கொடி போராட்டத்தில் மக்கள் ஈடுபடவில்லை. காவிரி விவகாரத்தைத் தீர்க்க வைக்காதவர்கள் தான் தற்போது நடைப்பயணம் செல்கிறார்கள்" என்றார்.


நாளை எனதே!


By டி.எஸ். ரமேஷ் | Published on : 14th April 2018 01:15 AM

 'நாளை நமதே' என்பது ஒரு எம்.ஜி.ஆர். படத்தின் பெயர். அது அசல் தமிழ்க் கதை அல்ல. மிகப் பிரபலமான ஹிந்தி திரைப்படமொன்றின் தழுவல். ஆனால் முறைப்படி தமிழ் பதிப்புக்கான உரிமை பெற்று எடுக்கப்பட்ட படம் அது. ஹிந்திப் படம் வெளியான ஆண்டு 1973. தழுவல் வெளியான ஆண்டு 1975. பல திரைப்படங்கள் போலவே, அந்தப் படத்தின் பெயருக்கும் கதைக்கும் சம்பந்தம் கிடையாது.
நாளை நமதே என்பது எம்.ஜி.ஆரின் அரசியல் கோஷமும் கூட. அந்தக் காலகட்ட அரசியல் சூழலையொட்டி எம்.ஜி.ஆரால் எழுப்பப்பட்ட கோஷம். அந்த கோஷ சொற்களுடன் ஆவேசமான கோஷ்டிப் பாடலும் படத்தில் இடம்பெற்றது. இப்போது அந்த கோஷம் வேறொருவர் கையில் சிக்கியிருக்கிறது. எம்.ஜி.ஆர். இல்லாததால், எம்.ஜி.ஆரின் வாரிசும் இல்லாததால், அந்த கோஷத்துக்கு உரிமை கொண்டாடி எவரும் ஆட்சேபிக்கவில்லை என்று தோன்றுகிறது. அது ஒரு புறமிருக்கட்டும்.
தனது திரையுல வாழ்வில் பல தழுவல்களைக் கடந்து வந்துள்ள கமல்ஹாசன் இப்போது எம்.ஜி.ஆரின் படப் பெயரைத் தழுவியுள்ளார். நிரூபிக்கப்பட்ட வெற்றி என்பதால் தழுவலில் இறங்குகிறார்கள். ஆனால் எல்லா தழுவல்களும் வெற்றியடைய வேண்டுமென்பதில்லையே!

அரசியல் உலக, திரையுலகத் தழுவல்களைக் கடந்து 'நாளை' என்பது பற்றி சிந்திக்கத் தலைப்பட்டால் பெரும் ஞானப்புதையல் கிடைக்கும். 'நமது - எனது' என்னும்போது ஒரு சொந்தம் கொண்டாடல் - உரிமை- ஒலிக்கிறது. 'சுயநலமல்ல, சுயநலமின்மையே மேன்மைக்கான தீர்வு' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பாரதிய சிந்தனை மரபில் 'இன்று' என்பது இப்போதைய பிறவியையும் நாளை என்பது அடுத்த பிறவியையும் குறிப்பதாக வைத்துக்கொள்ளலாம். 'இன்னொரு பிறவி வேண்டாம்' என்பது ஞானியரின் வேண்டுதல். எனவே, நாளை நமதே என்ற கோஷத்துக்கு ஞானியரின் பொருளையொட்டிய உபதேசத்தை வழங்க முடியாது.
நாளை - அதாவது, அடுத்த பிறவி- வேண்டாம் என்று பொருள் சொல்வோர் நாளை நமதே என்று கூற மாட்டார்கள். ஆனால் இங்கு ஒரு குழுவின் மேம்பாடு - முன்னேற்றம்- ஆகியவற்றை லட்சியமிட்டு இந்த வாசகம் முன்வைக்கப்படுகிறது.

'நிச்சயமற்ற நாளையை நம்பாதே. இன்று மட்டுமே நிஜம். அதை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கழித்துவிடு' என்பது மேற்கில் தோன்றிய ஒரு சித்தாந்தம்.

நாளை நமதே என்று கூறும்போது, இன்று நம்முடையதாக இல்லை என்கிற பொருளும் வருகிறது. ஆனால் அது உண்மையா? இன்று என்பதை யாராவது நம்மிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டார்களா அல்லது பறி கொடுத்துவிட்டோமா? நாளை நமதே என உத்தரவாதம் அளிக்க என்ன அவசியம் வந்துள்ளது?

அக்கறையின்மையால், உழைப்பின்மையால் இன்றைப் பறி கொடுத்தவர்களிடம், 'நாளை நமதே' என்று சொல்லி உசுப்பிவிட வேண்டியுள்ளது! இந்த நிலை எப்படி நேர்ந்தது? முதிர்ச்சியடைந்த நாகரிக சமூகத்தில், ஜனநாயகத்தில் இந்தப் புலம்பலுக்கு இடமுள்ளதா?
நாளை நமதே, நாளை எனதே என்ற இரு கோஷங்களில் எது பேராசை, சுயநலம் மிக்கது என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது என்று எளிதில் தள்ளிவிட முடியாது! எதற்காக அந்த கோஷங்களை முன்வைக்கிறோம் என்பதைப் பொருத்து பொருள்கொள்ளலாம்.

'நாளை எனதே' எனக் கூறுவதில் பொதுநலன் இல்லையே, சுயநலம்போல் உள்ளதே என்ற ஐயம் வேண்டாம். 'நாளை நமதே' என்பதில் பொதுநலன் இருப்பது போல இருந்தாலும், அந்தத் தழுவல் கோஷம் ஒரு குழுவின் வெற்றிக்காகவும் அதிகாரத்துக்காகவும் முன்வைக்கப்படுவது.
நம் நாட்டை அடிமைப்படுத்தியவர்களை அமைதி வழியில் எதிர்த்து, விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கிய மகாத்மா காந்தி பல கோஷங்களை முன்வைத்தார். எல்லோரையும் அறப்போரில் ஈடுபட அழைப்புவிடுத்தார். ஆனால், 'நாட்டை நான்தான் காப்பாற்றப் போகிறேன்' என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் 1910-லேயே எச்சரிக்கை செய்துவிட்டார். காந்திஜி தன் உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் அந்த எச்சரிக்கையை விடுக்கிறார்:

'இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தரப் போகிறேன் என்ற சுமையை அநாவசியமாக உன் தலையில் சுமந்து கொள்ளாதே. முதலில் உன்னையே நீ விடுவித்துக் கொள். அதுவே ஒரு பெரிய சுமை. நீ செய்ய வேண்டிய காரியங்களை உன்னை முன்னிறுத்திச் செய். உன்னை உணர்வதில்தான் உன் ஆன்மா மேன்மை அடைகிறது. உன்னுடைய விடுதலை, மேன்மையில் இந்தியாவின் மேன்மை இருக்கிறது' என்று காந்திஜி குறிப்பிடுகிறார்.
நாளை நமதே என்ற கோஷம், நாட்டைக் காக்கும் பெரும் சுமையை நமது தலையில் ஏற்றிக் கொள்வதாகும். எனவே, 'நாளை எனதே' எனக் கூறுவோம்! 'நாளை எனதே' என்பது சுய முன்னேற்றத்துக்கான முழக்கம். அது தன்னம்பிக்கையின் அறைகூவல்!


உங்களுக்கு கத்தரிக்காய் சாப்பிடப் பிடிக்காதா? இதைப் படிச்சப்புறம், நிச்சயம் சாப்பிடுவீங்க! 



இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடைகளில் ஒன்று காய்கறிகள். தினமும் நாம் சமைப்பதற்கு காய்கறிகளை பயன்படுத்துகிறோம். அந்த காய்கறிகளில் என்ன சத்துகள் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து சாப்பிடுகிறோமா என்றால் இல்லை, எத்தனை பேருக்கு தெரியும் நாம் சாப்பிடும் காய்கறியில் என்ன சத்துகள் இருக்கிறது என்று. கேரட், கறிவேப்பிலை கண்களுக்கு உகந்தது என பொதுவாக நாம் அறிந்திருப்போம். நாம் சாப்பிடும் காய்கறிகளின் பயன்கள் மற்றும் சத்துகளை அறிந்து சாப்பிட்டலாமே. காய்கறிகளில் நாம் முதலில் கத்தரிக்காய் பற்றி பார்ப்போம்.

கத்தரிக்காய்...

என்ன சத்துகள் இருக்கு? தினமும் கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.

யாருக்கு நல்லது?

ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல?

சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.

பலன்கள்...

கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர். நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். ஊதாநிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image courtesy: archanaskitchen.com
Dailyhunt

வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்! 

dinamani-dailyhunt 



இப்படி யோசித்து பாருங்களேன் நன்றாகவே இருக்கிறது... கூடவே சுவாரஸ்யமும் கூட... அப்புறம் சின்ன திருப்தி கூட உண்டு.

வயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார், எதோ ஒரு கணத்தில் பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது, பாட்டி அதை அமைதியாக புன்னகையுடன் எடுத்து பந்தை உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.

அதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக் குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளத் தயாராக நிற்பதாக கற்பனை செய்து பாருங்கள். பாட்டிகளுக்கும் ஏதோவொரு நொடியில் கால் பந்து விளையாடிப் பார்க்க ஆசை வராதா என்ன? அந்த ஆசையை அடக்கி வைக்காமல் இந்தக் காலத்துப் பேரன், பேத்திகளோடு ஆடிப் பார்த்து விட்டார் என்றால் பிறகு அவருக்கு ஜென்ம சாபல்யம் கிட்டிவிட்டதாகத் தான் அர்த்தம்.

நடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ, சித்திகளோ பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்... அருகில் சறுக்கு மரத்தில் குழந்தைகள் சறுக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்... அவர்களைக் கண்காணித்தவாறே பேசிக் கொண்டிருக்கும் அத்தையோ ...அம்மாவோ, சித்தியோ பேச்சின் ஏதோவொரு கணத்தில் முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் அந்த சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு வந்து மறுபடியும் பேச அமர்ந்தால் அப்போது அவர்களது முகத்தைப் பார்க்க வேண்டுமே... அந்த சந்தோசத்துக்கு ஈடு இணையே கிடையாது.

பழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு மொத்த குடும்பத்தினர் முன்னும் தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா... அதை ரசித்துக் கொண்டே கூட ஆடும் பாட்டி.

மழை வந்ததும் குதூகலமாகப் பிள்ளைகளை ஓடி வரச்சொல்லி முற்றத்திலோ, மொட்டை மாடி வெற்று வெளியிலோ ரெயின் டான்ஸ் ஆடும் அப்பாக்கள்... அதை தடுக்காமல் கூட நனையும் அம்மாக்கள்.

வயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் தெருவில் செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்... மாமாக்களும்.

கண்ணா மூச்சோ, குலை குலையாம் முந்திரிக்காயோ எந்த விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள், ஒரே ஒரு நாளேனும் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு... பிரியம் சமைக்கிற கூடு.

வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.

நம்புங்கள்...

மேலே சொன்ன எல்லாவற்றையும் விட பலருக்கும் மிகப் பிடித்த விஷயம் ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது. எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.

வேகம் கூடக் கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது. அதனால் தானோ தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம் குளிர்விக்கிறோமோ என்னவோ?! மீனாட்சி அம்மையின் ஊஞ்சல் விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.

வீட்டில் நீளமான பலகை ஊஞ்சலோ அல்லது பிரம்புக் கூடை ஊஞ்சலோ வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள்... டென்சன் குறையும்.

அப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம்... அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான். கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்... சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ குண்டு குழி நிரடல் இல்லா தார்ச்சாலை, எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில் குளிர்... எல்லாம் கிடைத்தால் 80 வயதிலும் சைக்கிள் விடலாம். அது ஒரு பரவசம் மட்டுமல்ல ஆனந்தம்... பேரானந்த அனுபவம்!

வாழ்க்கை இப்படிப்பட்ட சுவாரஸ்யங்களால் நிரம்பியதாகத் தான் இருக்க வேண்டுமே தவிர; நீருக்குள் இருந்து தரையில் தூக்கி எறியப்பட்ட மீனின் போராட்டம் போலாகி விடக்கூடாது.

எனவே ரசித்து வாழுங்கள்... என்றென்றைக்குமாய் ரசித்து... வாழ்வை ருசித்து வாழ்ந்தால் கடும் மன உளைச்சலையும் கூட 'ஃபூ' என ஊதித்தள்ளி விடலாம்.
Dailyhunt

NEWS TODAY 27.06.2026