Saturday, April 14, 2018


வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்! 

dinamani-dailyhunt 



இப்படி யோசித்து பாருங்களேன் நன்றாகவே இருக்கிறது... கூடவே சுவாரஸ்யமும் கூட... அப்புறம் சின்ன திருப்தி கூட உண்டு.

வயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார், எதோ ஒரு கணத்தில் பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது, பாட்டி அதை அமைதியாக புன்னகையுடன் எடுத்து பந்தை உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.

அதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக் குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளத் தயாராக நிற்பதாக கற்பனை செய்து பாருங்கள். பாட்டிகளுக்கும் ஏதோவொரு நொடியில் கால் பந்து விளையாடிப் பார்க்க ஆசை வராதா என்ன? அந்த ஆசையை அடக்கி வைக்காமல் இந்தக் காலத்துப் பேரன், பேத்திகளோடு ஆடிப் பார்த்து விட்டார் என்றால் பிறகு அவருக்கு ஜென்ம சாபல்யம் கிட்டிவிட்டதாகத் தான் அர்த்தம்.

நடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ, சித்திகளோ பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்... அருகில் சறுக்கு மரத்தில் குழந்தைகள் சறுக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்... அவர்களைக் கண்காணித்தவாறே பேசிக் கொண்டிருக்கும் அத்தையோ ...அம்மாவோ, சித்தியோ பேச்சின் ஏதோவொரு கணத்தில் முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் அந்த சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு வந்து மறுபடியும் பேச அமர்ந்தால் அப்போது அவர்களது முகத்தைப் பார்க்க வேண்டுமே... அந்த சந்தோசத்துக்கு ஈடு இணையே கிடையாது.

பழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு மொத்த குடும்பத்தினர் முன்னும் தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா... அதை ரசித்துக் கொண்டே கூட ஆடும் பாட்டி.

மழை வந்ததும் குதூகலமாகப் பிள்ளைகளை ஓடி வரச்சொல்லி முற்றத்திலோ, மொட்டை மாடி வெற்று வெளியிலோ ரெயின் டான்ஸ் ஆடும் அப்பாக்கள்... அதை தடுக்காமல் கூட நனையும் அம்மாக்கள்.

வயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் தெருவில் செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்... மாமாக்களும்.

கண்ணா மூச்சோ, குலை குலையாம் முந்திரிக்காயோ எந்த விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள், ஒரே ஒரு நாளேனும் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு... பிரியம் சமைக்கிற கூடு.

வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.

நம்புங்கள்...

மேலே சொன்ன எல்லாவற்றையும் விட பலருக்கும் மிகப் பிடித்த விஷயம் ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது. எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.

வேகம் கூடக் கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது. அதனால் தானோ தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம் குளிர்விக்கிறோமோ என்னவோ?! மீனாட்சி அம்மையின் ஊஞ்சல் விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.

வீட்டில் நீளமான பலகை ஊஞ்சலோ அல்லது பிரம்புக் கூடை ஊஞ்சலோ வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள்... டென்சன் குறையும்.

அப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம்... அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான். கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்... சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ குண்டு குழி நிரடல் இல்லா தார்ச்சாலை, எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில் குளிர்... எல்லாம் கிடைத்தால் 80 வயதிலும் சைக்கிள் விடலாம். அது ஒரு பரவசம் மட்டுமல்ல ஆனந்தம்... பேரானந்த அனுபவம்!

வாழ்க்கை இப்படிப்பட்ட சுவாரஸ்யங்களால் நிரம்பியதாகத் தான் இருக்க வேண்டுமே தவிர; நீருக்குள் இருந்து தரையில் தூக்கி எறியப்பட்ட மீனின் போராட்டம் போலாகி விடக்கூடாது.

எனவே ரசித்து வாழுங்கள்... என்றென்றைக்குமாய் ரசித்து... வாழ்வை ருசித்து வாழ்ந்தால் கடும் மன உளைச்சலையும் கூட 'ஃபூ' என ஊதித்தள்ளி விடலாம்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024