'காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்'
காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு புகழாரம் சூட்டினார்.
பட்டுக்கோட்டையிலுள்ள கவிஞர் கல்யாணசுந்தரம் நினைவு மணிமண்டபத்தில் அவரது 89-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக அரசு சார்பில், மணிமண்டபத்திலுள்ள கவிஞர் கல்யாணசுந்தரம் சிலைக்கு அமைச்சர் இரா.துரைக்கண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசியதாவது:
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடியவை. அவருடைய தத்துவப் பாடல்களின் வரிகள் எளிய நடையில் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. காலத்தால் அழியாத பாடல்களை தந்த அவரது எழுத்தாற்றலுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவருடைய பிறந்த நாளை தமிழக முதல்வரின் ஆணைப்படி அரசு விழாவாக இங்கே நடத்தி சிறப்பு செய்கிறோம் என்றார். அமைச்சரைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சாவூர் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆகியோரும் கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவையொட்டி, 10 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகை, 2 பேருக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, ஒருவருக்கு விபத்து காப்பீட்டுக்கான நிதியுதவி என மொத்தம் ரூ.1லட்சத்து 36 ஆயிரத்து 500 மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை எம்.பி.
ஆர்.கே. பாரதிமோகன், எம்எல்ஏக்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் துரை.திருஞானம், தஞ்சை மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் இரா.கோவிந்தராசு, வட்டாட்சியர் ஜி.சாந்தக்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Dailyhunt
No comments:
Post a Comment