Saturday, April 14, 2018


சித்திரை மாத முக்கியப் பண்டிகைகள், விசேஷ தினங்கள்! #VikatanPhotoStory 



த மிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை. சித்திரை என்றால் 'ஒளி பொருந்திய' அல்லது 'அழகிய' என்று பொருள். ஆண்டின் தொடக்கமாக வந்து நல்ல நல்ல மாற்றங்களைத் தரும் மாதம். கடுமையான கோடைக்காலமாக சித்திரை இருந்தாலும், காய்-கனிகளில் பல இந்தக் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியவை. ஆலயம்தோறும் திருவிழாக்கள் நடைபெறும் மாதமும் இதுதான். சித்திரை மாதத்தில் வரும் விழாக்கள், பண்டிகைகள், விசேஷங்களையும் இங்கே காண்போம்.

ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு

`ஹே விளம்பி' ஆண்டு முடிவடைந்து, 'விளம்பி' ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது. 'மக்களுக்கு மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக இந்த ஆண்டு அமையும்' என ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

ஏப்ரல் 15 - சித்திரை அமாவாசை


சித்திரை அமாவாசை 'பித்ரு பூஜை' சிறப்பான வாழ்வைத் தரும். கடுமையான கோடைக்கால அமாவாசை என்பதால், அம்மன் ஆலயங்களில் 'பால்குட திருவிழா' நடைபெறுவது வழக்கம். சித்தர்களுக்கு உகந்த இந்த அமாவாசையில் சதுரகிரி, திருவண்ணாமலை, வெள்ளியங்கிரி போன்ற தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

ஏப்ரல் 18 - அட்சய திருதியை

அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாளில் வரும் இந்தப் புனித நாள் எப்போதும் குறையாத செல்வ வளங்களைத் தரும் திருநாள். பரசுராமர் ஜனித்த திருநாளும் இதுவே. பாஞ்சாலிக்கு, கிருஷ்ணர் துகில் அளித்ததும் இந்த நாளில்தான். இந்த நாளில் லட்சுமி மற்றும் குபேரரை வணங்கினால் ஐஸ்வர்ய யோகம் பெறலாம்.



ஏப்ரல் 20 - ஆதிசங்கரர் ஜயந்தி



சிவபெருமானின் அம்சமாகத் தோன்றி, புவியில் சாந்தியும் சமாதானமும் தழைக்கப் பாடுபட்ட மகாஞானி ஆதிசங்கரர். அத்வைத தத்துவத்தின் பிதாமகரான ஆதிசங்கரர், கேரள மாநிலத்தின் 'காலடி' என்ற ஊரில் இதே நாளில்தான் பிறந்தார். எட்டு வயதில் துறவியாகி மக்களை முறையான வழிபாட்டுக்குக் கொண்டு சென்ற அவதாரப் புருஷரின் ஜன்ம நாளின்று.

ஏப்ரல் 21 - ஸ்ரீராமாநுஜர் ஜயந்தி



தான் அறிந்துகொண்ட திருமந்திரத்தை உலகமும் அறிந்துகொள்ளட்டும் என்று குருவின் கட்டளையையும் மீறி ஓதிய திருவடிவத்தின் பெயர்தான் ஸ்ரீராமானுஜர். எந்த உயிரிலும் பேதம் பார்க்காமல், நாராயணனை மட்டுமே பார்த்து மகிழ்ந்த உடையவர் ஸ்ரீராமாநுஜரின் அவதார தினம் இன்று.

ஏப்ரல் 23 - வாஸ்து தினம்



பூமியின் இயல்புக்கேற்றவாறு வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாள்களில் வாஸ்து வழிபாடு செய்தால், எந்தத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை மாதம் 10-ம் நாளில் பூமி பூஜை செய்து வேலையைத் தொடங்கலாம்.

ஏப்ரல் 24 - சத்ய சாய்பாபா ஸித்தி தினம்

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று. பல கோடி பக்தர்களின் வழிபாட்டுக்குரிய பகவான் ஸ்ரீபாபா ஆன்மிகப் பணிகளோடு பல சமூக நலப்பணிகளும் செய்தவர்.

ஏப்ரல் 25 - பட்டாபிஷேகம்



மதுரை நகராளும் அன்னை மீனாட்சிக்கு நடைபெறும் 'சித்திரைத் திருவிழா'வில் இன்று ஸ்ரீமீனாட்சிக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். அரியணை ஏறிய அன்னை மீனாட்சியின் அழகுக் கோலம் காண்பதற்கரியது.

ஏப்ரல் 27 - மீனாட்சித் திருக்கல்யாணம்



மலையத்துவஜ பாண்டியனின் திருமகளாகப் பிறந்து பாண்டியப் பேரரசின் வீர இளவரசியாக வளர்ந்த மீனாட்சியை, சௌந்திர பாண்டியனாக வந்து ஈசன் கரம் பிடிக்கும் திருநாள் இன்று.

ஏப்ரல் 29 - சித்ரா பௌர்ணமி, அழகர் ஆற்றில் இறங்குதல்.



தங்கை மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் நடந்த திருமணத்துக்கு சீர்வரிசையளிக்க, அண்ணனான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி வரும் வைபவம் நடைபெறும் நாள் இன்று. சித்ரா பௌர்ணமி நாளில் கண்ணகிக்கான வழிபாடும் நடைபெறும்.

மே 04 - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

சூரியன், பரணி 4-ம் பாதத்தில் தொடங்கி, கார்த்திகை, ரோகிணி முதல் பாதம் வரை சஞ்சரிக்கும் காலம்தான் அக்னி நட்சத்திரக் காலம். பொதுவாக, `இந்தக் காலத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக் கூடாது' என்பார்கள். அர்ஜுனன் 'காண்டவ வனம்' எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.

மே 7 - சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம்



நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள். அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் இன்று நடைபெறும். உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால், பிறப்பிலா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது ஐதீகம்.

மே 10 - தத்தாத்ரேயர் ஜயந்தி



பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக வணங்கப்படும் ஸ்ரீ தத்தாத்ரேயர் நித்ய சஞ்சீவிகளில் முதன்மையானவர். இவர் அத்திரி மகரிஷிக்கும் அகல்யாவுக்கும் இதே நாளில் பிறந்தார். இவர் பிறந்த தலம் சுசீந்திரம். 'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனநிம்மதியை அளிக்கக்கூடியது.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024