`எல்லாம் எனக்குத் தெரியும்; ஆனாலும் வருவேன்' - தமிழிசைக்கு மோடியின் பதில்!
மலையரசு
vikatan
மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால், உலக அளவில் காங்கிரஸ், தி.மு.க-வின் மீதான மரியாதை குறைந்துள்ளது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று முன்தினம் சென்னை வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி மூலம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் தமிழ் ஆர்வலர்கள், மக்கள் அமைப்புக்கள் என மிகப்பெரிய அளவில் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இதேபோல், #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் உலக அளவில் ட்ரெண்டானது. இந்த எதிர்ப்புக்கு பா.ஜ.க தலைவர்கள் தற்போது எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் பேசிய, பாஜக, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ``பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால், உலக அளவில் காங்கிரஸ், திமுகவின் மீதான மரியாதை குறைந்துள்ளது.
ரூ.500 கோடி செலவில் நடந்த ராணுவ கண்காட்சியின் பெருமையைக் குறைந்துவிட்டனர். இந்தியாவை எந்த அளவுக்கு முன்னேற்ற வேண்டும் என நவீன விமானம், ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வெற்று பலூனை பறக்கவிடுகிறீர்கள். இந்தியாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வது யார் என மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்த தகவல்களை பிரதமரிடம் கூறினோம். ஆனால் `எல்லாம் எனக்குத் தெரியும்' எனக் கூறி தமிழகத்துக்குப் பிரதமர் வந்தார். அதற்குக் காரணம் தமிழக மக்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை தான். கறுப்புக்கொடி போராட்டத்தில் மக்கள் ஈடுபடவில்லை. காவிரி விவகாரத்தைத் தீர்க்க வைக்காதவர்கள் தான் தற்போது நடைப்பயணம் செல்கிறார்கள்" என்றார்.
No comments:
Post a Comment