Saturday, April 14, 2018



நாளை எனதே!


By டி.எஸ். ரமேஷ் | Published on : 14th April 2018 01:15 AM

 'நாளை நமதே' என்பது ஒரு எம்.ஜி.ஆர். படத்தின் பெயர். அது அசல் தமிழ்க் கதை அல்ல. மிகப் பிரபலமான ஹிந்தி திரைப்படமொன்றின் தழுவல். ஆனால் முறைப்படி தமிழ் பதிப்புக்கான உரிமை பெற்று எடுக்கப்பட்ட படம் அது. ஹிந்திப் படம் வெளியான ஆண்டு 1973. தழுவல் வெளியான ஆண்டு 1975. பல திரைப்படங்கள் போலவே, அந்தப் படத்தின் பெயருக்கும் கதைக்கும் சம்பந்தம் கிடையாது.
நாளை நமதே என்பது எம்.ஜி.ஆரின் அரசியல் கோஷமும் கூட. அந்தக் காலகட்ட அரசியல் சூழலையொட்டி எம்.ஜி.ஆரால் எழுப்பப்பட்ட கோஷம். அந்த கோஷ சொற்களுடன் ஆவேசமான கோஷ்டிப் பாடலும் படத்தில் இடம்பெற்றது. இப்போது அந்த கோஷம் வேறொருவர் கையில் சிக்கியிருக்கிறது. எம்.ஜி.ஆர். இல்லாததால், எம்.ஜி.ஆரின் வாரிசும் இல்லாததால், அந்த கோஷத்துக்கு உரிமை கொண்டாடி எவரும் ஆட்சேபிக்கவில்லை என்று தோன்றுகிறது. அது ஒரு புறமிருக்கட்டும்.
தனது திரையுல வாழ்வில் பல தழுவல்களைக் கடந்து வந்துள்ள கமல்ஹாசன் இப்போது எம்.ஜி.ஆரின் படப் பெயரைத் தழுவியுள்ளார். நிரூபிக்கப்பட்ட வெற்றி என்பதால் தழுவலில் இறங்குகிறார்கள். ஆனால் எல்லா தழுவல்களும் வெற்றியடைய வேண்டுமென்பதில்லையே!

அரசியல் உலக, திரையுலகத் தழுவல்களைக் கடந்து 'நாளை' என்பது பற்றி சிந்திக்கத் தலைப்பட்டால் பெரும் ஞானப்புதையல் கிடைக்கும். 'நமது - எனது' என்னும்போது ஒரு சொந்தம் கொண்டாடல் - உரிமை- ஒலிக்கிறது. 'சுயநலமல்ல, சுயநலமின்மையே மேன்மைக்கான தீர்வு' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பாரதிய சிந்தனை மரபில் 'இன்று' என்பது இப்போதைய பிறவியையும் நாளை என்பது அடுத்த பிறவியையும் குறிப்பதாக வைத்துக்கொள்ளலாம். 'இன்னொரு பிறவி வேண்டாம்' என்பது ஞானியரின் வேண்டுதல். எனவே, நாளை நமதே என்ற கோஷத்துக்கு ஞானியரின் பொருளையொட்டிய உபதேசத்தை வழங்க முடியாது.
நாளை - அதாவது, அடுத்த பிறவி- வேண்டாம் என்று பொருள் சொல்வோர் நாளை நமதே என்று கூற மாட்டார்கள். ஆனால் இங்கு ஒரு குழுவின் மேம்பாடு - முன்னேற்றம்- ஆகியவற்றை லட்சியமிட்டு இந்த வாசகம் முன்வைக்கப்படுகிறது.

'நிச்சயமற்ற நாளையை நம்பாதே. இன்று மட்டுமே நிஜம். அதை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கழித்துவிடு' என்பது மேற்கில் தோன்றிய ஒரு சித்தாந்தம்.

நாளை நமதே என்று கூறும்போது, இன்று நம்முடையதாக இல்லை என்கிற பொருளும் வருகிறது. ஆனால் அது உண்மையா? இன்று என்பதை யாராவது நம்மிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டார்களா அல்லது பறி கொடுத்துவிட்டோமா? நாளை நமதே என உத்தரவாதம் அளிக்க என்ன அவசியம் வந்துள்ளது?

அக்கறையின்மையால், உழைப்பின்மையால் இன்றைப் பறி கொடுத்தவர்களிடம், 'நாளை நமதே' என்று சொல்லி உசுப்பிவிட வேண்டியுள்ளது! இந்த நிலை எப்படி நேர்ந்தது? முதிர்ச்சியடைந்த நாகரிக சமூகத்தில், ஜனநாயகத்தில் இந்தப் புலம்பலுக்கு இடமுள்ளதா?
நாளை நமதே, நாளை எனதே என்ற இரு கோஷங்களில் எது பேராசை, சுயநலம் மிக்கது என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது என்று எளிதில் தள்ளிவிட முடியாது! எதற்காக அந்த கோஷங்களை முன்வைக்கிறோம் என்பதைப் பொருத்து பொருள்கொள்ளலாம்.

'நாளை எனதே' எனக் கூறுவதில் பொதுநலன் இல்லையே, சுயநலம்போல் உள்ளதே என்ற ஐயம் வேண்டாம். 'நாளை நமதே' என்பதில் பொதுநலன் இருப்பது போல இருந்தாலும், அந்தத் தழுவல் கோஷம் ஒரு குழுவின் வெற்றிக்காகவும் அதிகாரத்துக்காகவும் முன்வைக்கப்படுவது.
நம் நாட்டை அடிமைப்படுத்தியவர்களை அமைதி வழியில் எதிர்த்து, விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கிய மகாத்மா காந்தி பல கோஷங்களை முன்வைத்தார். எல்லோரையும் அறப்போரில் ஈடுபட அழைப்புவிடுத்தார். ஆனால், 'நாட்டை நான்தான் காப்பாற்றப் போகிறேன்' என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் 1910-லேயே எச்சரிக்கை செய்துவிட்டார். காந்திஜி தன் உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் அந்த எச்சரிக்கையை விடுக்கிறார்:

'இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தரப் போகிறேன் என்ற சுமையை அநாவசியமாக உன் தலையில் சுமந்து கொள்ளாதே. முதலில் உன்னையே நீ விடுவித்துக் கொள். அதுவே ஒரு பெரிய சுமை. நீ செய்ய வேண்டிய காரியங்களை உன்னை முன்னிறுத்திச் செய். உன்னை உணர்வதில்தான் உன் ஆன்மா மேன்மை அடைகிறது. உன்னுடைய விடுதலை, மேன்மையில் இந்தியாவின் மேன்மை இருக்கிறது' என்று காந்திஜி குறிப்பிடுகிறார்.
நாளை நமதே என்ற கோஷம், நாட்டைக் காக்கும் பெரும் சுமையை நமது தலையில் ஏற்றிக் கொள்வதாகும். எனவே, 'நாளை எனதே' எனக் கூறுவோம்! 'நாளை எனதே' என்பது சுய முன்னேற்றத்துக்கான முழக்கம். அது தன்னம்பிக்கையின் அறைகூவல்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024