Sunday, April 15, 2018

மாநில செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு நவீன வசதியுடன் சிறப்பு ரெயில்





தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு நவீன வசதியுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

ஏப்ரல் 15, 2018, 02:15 AM

தாம்பரம்,

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு நவீன வசதியுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

சிறப்பு ரெயில்

தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ஒரு முறை மட்டும் சென்று வரும் ‘அந்தியோதயா’ சிறப்பு ரெயில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் பெட்டிகள் முழுவதும் துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டதாகும். ரெயிலில் பயணிகளுக்கு செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, எல்.இ.டி. விளக்கு வசதி, நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

120 கிலோ மீட்டர் வேகம்

ரெயிலின் ஒரு பெட்டியில் ஏறினால், அனைத்து பெட்டிகளுக்கும் தொடர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு வசதி மற்றும் 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் ஆகியவை இந்த ரெயிலில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 16 லட்சமாகும்.


இந்த சிறப்பு ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று நேற்று மாலை 3.30 மணிக்கு நெல்லையை சென்றடைந்தது.

தினமும் இயக்க கோரிக்கை

பின்னர் நெல்லையில் இருந்து இன்று(ஞாற்றுக் கிழமை) மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு அதே ரெயில் நிலையங்களில் நின்று நாளை(திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்பதிவு இல்லாத பயணிகளுக்கு 6 பெட்டிகள் இருப்பதால் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு இந்த ரெயில் வசதியாக உள்ளது.

ஆனால் இந்த ரெயில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த ரெயில் சேவை தினமும் இயக்கப்பட்டால் பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்பதால் தினமும் இந்த ரெயில் சேவையை தொடரவேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024