Friday, August 10, 2018

காமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்

Published : 09 Aug 2018 17:05 IST

மு.அப்துல் முத்தலீஃப் சென்னை
 



காமராஜர் இறுதிச்சடங்கில் கருணாநிதி, இந்திரா

முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி மறுத்ததாக வரும் செய்திகளை இளைய தலைமுறையினர் நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை என்ன என்று அப்போதைய காங்கிரஸ் செயலாளர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை பிரச்சினை, தமிழனப்பிரச்சினை முதல் அனைத்திலும் முன்னிற்கும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர் என்பது இன்றைய இளம் தலைமுறை அறியாத ஒன்று. காமராஜர்பால் பற்றுக்கொண்டு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர் பழ.நெடுமாறன். இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.

1973 முதல் 1979 வரை காமராஜர் மறைவின்போதும், இந்திரா தமிழகம் வந்தபோது மதுரையில் திமுக கருப்புக்கொடி காட்டி நடந்த கல்லெறி சம்பவத்திலும், கல்லெறியிலிருந்து இந்திரா காந்தியை தலையணையால் மூடி காத்தபோது மண்டை உடைந்து ரத்தம் ஆறாக பெருகிய நிலையிலும் அகலாது நின்றார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 1979-ல் காங்கிரசிலிருந்து விலகினார்.

கருணாநிதி மறைவின்போது அவருக்கு மெரினாவில் இடம் தர தமிழக அரசு மறுத்தபோது அதற்கு ஆதரவாக முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி, அதனால் இது சரிதான் என்று மீம்ஸ்களும், செய்திகளும் பரப்பப்பட்டது.

இதை பலரும் மறுத்தாலும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறனிடம் கேட்டறிந்தால்தான் சரியாக இருக்கும் என ஆங்கில நாளேடு ஒன்று பேட்டி கண்டுள்ளது.

அதில் பழ நெடுமாறன் கூறியதாக அந்த செய்தியில் வந்திருப்பதாவது:

“காமராஜர் மறைந்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று தானே முன்வந்து கூறினார்.

பின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை.

இப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைக்கிறார்கள். அதை பரப்புகிறார்கள். உண்மையை கண்டறிய அக்கறை காட்டுவதில்லை.” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் ஆவல் கணேசனிடம் கேட்டபோது நெடுமாறன் தெரிவித்தது உண்மைதான், கருணாநிதி காமராஜருக்கு உரிய மரியாதை அளித்தார், வலைதளங்களில் வரும் தகவல்கள் தவறானது என்று தெரிவித்தார்.
சித்தா, ஆயுர்வேத படிப்பு வரும் 14ல் விண்ணப்பம்

Added : ஆக 10, 2018 05:27

சென்னை:சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, வரும், 14 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, ஆறு அரசு கல்லுாரிகளில், 396 இடங்கள்; 23 சுயநிதி கல்லுாரிகளில், 916 இடங்கள் உள்ளன.இதற்கான விண்ணப்பங்கள், சென்னை, நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம் மற்றும் நாகர்கோவில் - கோட்டாரில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 14 முதல் செப்., 5 வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5 மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ படிப்பு நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

Added : ஆக 10, 2018 05:38

சென்னை:மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை துவங்குகிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மருத்துவ தேர்வு குழு செயலர் செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், அந்தந்த கல்லுாரிகளில் சேர நேற்று வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதில் நிரம்பாத இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வந்து விடும்.

எனவே தமிழகத்தில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் 13ம் தேதி வரை நடைபெறும். கவுன்சிலிங் தொடர்பான விரிவான அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் வெளியிடப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு பயணிகள் குளிக்க தடை

Added : ஆக 10, 2018 05:22

திருநெல்வேலி;கேரளாவில் பெய்துவரும் பலத்த மழையினால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அருமையான சீசன் நிலவுகிறது. வழக்கமாக ஆகஸ்டில் தண்ணீரின் அளவு குறைய துவங்கும்.ஆனால் தற்போது கேரளாவில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று மதியம் 12:00 மணிக்குப்பின் தண்ணீர் குறைந்ததால் குளிக்க அனுமதித்தனர். மாலை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 2.35 அடி உயர்ந்து 112.35 அடி ஆனது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 8.50 அடி உயர்ந்து 123.23 அடியாக உயர்ந்தது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெட்டிகள் மாற்றம்

Added : ஆக 10, 2018 05:06

சென்னை:பாண்டியன் எக்ஸ்பிரஸ் உட்பட, மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில், தலா, ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நீக்கப்பட்டு, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி இணைக்கப்படுகிறது.சென்னை, எழும்பூரில் இருந்து, மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன், திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களில், இருவழிகளிலும், தலா ஒரு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி இணைக்கப்படும்.

இவ்வசதி, பாண்டியனில், வரும், 20ல் இருந்தும், சோழன், ராக்போர்ட் ரயில்களில், வரும், 21ல் இருந்தும், அமல்படுத்தப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துஉள்ளது.

காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி:
ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில் 



dinamalar 10.08.2018

சென்னை : 'வழக்குகள் ஏதும் இல்லாத நிலையில், முதல்வராக இருந்து மரணமடைவோருக்கு தான், மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி அளிக்கப்படும் எனக்கூறி, காமராஜருக்கு இடம் தர மறுத்தவர் தான் கருணாநிதி' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.





அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் குற்றச்சாட்டு கண்டு, உள்ளம் பதைபதைக்கிறது. 'அண்ணாதுரை சமாதி அருகே, கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் கேட்டதாகவும், காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும், இடம் ஒதுக்க மறுத்து விட்டனர்' என்ற, நச்சுக்கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

கருணாநிதிக்கு உள்ளார்ந்த மரியாதையுடன், அ.தி.மு.க., அரசு செய்திருக்கும் சிறப்புக்களை, பட்டியலிட்டு கூறும் நிலைக்கு, ஸ்டாலின் நம்மை தள்ளியுள்ளார். கருணாநிதியின் இறுதி சடங்கு நாளன்று, அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு, பொதுமக்கள் அஞ்சலி
செலுத்துவதற்காக, ராஜாஜி ஹாலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

ராணுவ மரியாதையுடன் நல்லடக்கமும் செய்யப்பட்டது; இறுதி சடங்கின் போது, குண்டுகள் முழங்க, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மெரினா கடற்கரையில், புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக, ஐந்து பேர் தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. அவை, ஜெ., நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் இருந்து, அப்புறப்படுத்த துடித்தவர்கள் தொடுத்தவை.

அவற்றால், சட்ட சிக்கல்கள் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான், அண்ணா சதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போனது. காமராஜர் நினைவிடம் அருகே, கருணாநிதிக்கு, 2 ஏக்கர் நிலம் ஒதுக்க, அரசு முன் வந்தது. இதில், ஏதுகாழ்ப்புணர்ச்சி.

காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் மறைந்த போது, அவர்களுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

'முதல்வராக இருந்து மரணமடைவோருக்கு மட்டும் தான், மெரினாவில் நினைவிடம் அமைக்க, அனுமதி அளிக்கப்படும்' என,

வழக்குகள் எதுவும் இல்லாத நிலையிலும், மறுத்தவர் தான் கருணாநிதி. அவரை சந்தித்து கோரிக்கை வைத்து, ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள், இன்றும் நம்முடன் வாழ்கின்றனர்.

தாங்கள் அள்ளிக்குவித்து வைத்திருக்கும், ஆயிரம் தலைமுறைக்கான செல்வம், தங்கள் அயராத உழைப்பாலும், அறிவு திறத்தாலும் வந்தது போல, ஜெ., மீது எண்ணற்ற வழக்குகள் போட்டனர். அவரை சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து, அவருக்கு மன வேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த, தி.மு.க.,வினருக்கு, அ.தி.மு.க., அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது.

ஆனால், அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும், தமிழ் சமூகம் புரிந்து கொள்ளும். தி.மு.க., தலைமை பழைய பாதையில் பயணித்து, பழிச்சொல் வீசுவது கண்டு, நாங்கள் கலங்கப் போவதுமில்லை; கடமை தவறப் போவதுமில்லை. இவ்வாறு ஜெயகுமார் கூறியுள்ளார்.
'டிஜிட்டல்' ஆவணங்கள்: மத்திய அரசு உத்தரவு

Added : ஆக 09, 2018 23:09 |



புதுடில்லி : 'டிஜிட்டல்' வடிவில் உள்ள, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை ஏற்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை சரிபார்க்கும் போக்குவரத்து போலீசார், டிஜிட்டல் வடிவில் உள்ள ஆவணங்களை ஏற்க மறுப்பதாக, புகார் எழுந்தது. 'டிஜிலாக்கர்' மற்றும் 'எம்பரிவாஹன் ஆப்' களில், டிஜிட்டல் வடிவில், தாங்கள் வைத்துள்ள ஆவணங்களை, அசல் சான்றிதழுக்கு நிகராக ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதையடுத்து, டிஜிலாக்கர் அல்லது எம்பரிவாஹன் ஆப்களில், டிஜிட்டல் வடிவில் காண்பிக்கப்படும் ஓட்டுனர் உரிமம், ஆவணங்களை ஏற்கும்படி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க, இந்த சான்றிதழ்களை, மோட்டார் வாகன சட்டம், 1988ன் படி ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களாக கருத வேண்டும் என்றும், மத்திய அரசு, அதன் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

NEWS TODAY 28.06.2026