காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி:
ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்
dinamalar 10.08.2018
சென்னை : 'வழக்குகள் ஏதும் இல்லாத நிலையில், முதல்வராக இருந்து மரணமடைவோருக்கு தான், மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி அளிக்கப்படும் எனக்கூறி, காமராஜருக்கு இடம் தர மறுத்தவர் தான் கருணாநிதி' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் குற்றச்சாட்டு கண்டு, உள்ளம் பதைபதைக்கிறது. 'அண்ணாதுரை சமாதி அருகே, கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் கேட்டதாகவும், காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும், இடம் ஒதுக்க மறுத்து விட்டனர்' என்ற, நச்சுக்கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
கருணாநிதிக்கு உள்ளார்ந்த மரியாதையுடன், அ.தி.மு.க., அரசு செய்திருக்கும் சிறப்புக்களை, பட்டியலிட்டு கூறும் நிலைக்கு, ஸ்டாலின் நம்மை தள்ளியுள்ளார். கருணாநிதியின் இறுதி சடங்கு நாளன்று, அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு, பொதுமக்கள் அஞ்சலி
செலுத்துவதற்காக, ராஜாஜி ஹாலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
ராணுவ மரியாதையுடன் நல்லடக்கமும் செய்யப்பட்டது; இறுதி சடங்கின் போது, குண்டுகள் முழங்க, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மெரினா கடற்கரையில், புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக, ஐந்து பேர் தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. அவை, ஜெ., நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் இருந்து, அப்புறப்படுத்த துடித்தவர்கள் தொடுத்தவை.
அவற்றால், சட்ட சிக்கல்கள் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான், அண்ணா சதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போனது. காமராஜர் நினைவிடம் அருகே, கருணாநிதிக்கு, 2 ஏக்கர் நிலம் ஒதுக்க, அரசு முன் வந்தது. இதில், ஏதுகாழ்ப்புணர்ச்சி.
காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் மறைந்த போது, அவர்களுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
'முதல்வராக இருந்து மரணமடைவோருக்கு மட்டும் தான், மெரினாவில் நினைவிடம் அமைக்க, அனுமதி அளிக்கப்படும்' என,
வழக்குகள் எதுவும் இல்லாத நிலையிலும், மறுத்தவர் தான் கருணாநிதி. அவரை சந்தித்து கோரிக்கை வைத்து, ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள், இன்றும் நம்முடன் வாழ்கின்றனர்.
தாங்கள் அள்ளிக்குவித்து வைத்திருக்கும், ஆயிரம் தலைமுறைக்கான செல்வம், தங்கள் அயராத உழைப்பாலும், அறிவு திறத்தாலும் வந்தது போல, ஜெ., மீது எண்ணற்ற வழக்குகள் போட்டனர். அவரை சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து, அவருக்கு மன வேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த, தி.மு.க.,வினருக்கு, அ.தி.மு.க., அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது.
ஆனால், அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும், தமிழ் சமூகம் புரிந்து கொள்ளும். தி.மு.க., தலைமை பழைய பாதையில் பயணித்து, பழிச்சொல் வீசுவது கண்டு, நாங்கள் கலங்கப் போவதுமில்லை; கடமை தவறப் போவதுமில்லை. இவ்வாறு ஜெயகுமார் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment