Sunday, August 12, 2018

நெட்டிசன் நோட்ஸ்: விஸ்வரூபம் 2 - கமல் நடிப்பால் வென்றுவிட்டார்

Published : 11 Aug 2018 15:20 IST

 

விஸ்வரூபம் - 2 - BBC

கமல்ஹாசன் தயாரித்து, நடித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Thanaa seyan

‏இது என்ன எழுத்து?

ஆயுத எழுத்து

(புல்லட் எழுத்துக்களின் மேல் வீழ்கிறது)

என்ன மனுஷன்யா இப்டிலாம் யோசிக்கிறார்

Rineshraja

#Viswaroopam2 பார்த்தாச்சு ..

தலைவர் கமல்ஹாசன் எழுத்து இயக்கம் எப்பவும் கூர்மையாகவும் வசனம் ஒவ்வொன்றும் பட்டாசாகவும் உள்ளது.

விஸ்வரூபம் முதல் பாகம் பாத்தவங்களுக்கு மட்டும் தான் இரண்டாம் பாகம் புரியும் பிடிக்கும்.

Vanagiri Padaippugal

‏உண்மையாகவே கமல் என்ற கலைஞன் சினிமாவிற்கு, தவம் பெறாமல் கிடைத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்...!

என்னா நடிப்பு பாவனை, என்னா கலைத் திறமை

Sudhan

‏#Viswaroopam2 #விஸ்வரூபம்2 முதல் பாகத்தில் நமக்கு எழுந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.

பயிற்சி முகாமில் ஆரம்பித்து,

எப்படி தீவிரவாதி ஆகிறார்,

எந்த நாளில் தீவிரவாதிகளின் பகுதியில் குதிக்கிறார்,

வில்லனின் குடும்பம் என்ன ஆனது, என அனைத்திற்குமான பதிலும் உள்ளது.

Sonia Arunkumar

‏ஒரு தரம் பார்க்கலாம். ஸ்கிரிப்ட் & டயலாக்ஸ் ரொம்பப் பிடிச்சது. இசைலாம் சுமார் ஃபீல். மத்ததெல்லாம் இருந்தும் படத்துல ஏதோ மிஸ்ஸிங்

Runner

‏ஓவரால் ஒன்டைம் வாட்ச்சபிள்.

தமிழ்

"நானாகிய நதி மூலமே!"

பாட்டு வரும் முன்னே கண்ணில் கண்ணீர் வருது

கமல் படத்தில் இதுவரை வராத அம்மா சென்டிமென்ட்.

alamurugan

‏ சாமானியர்களுக்கு புரியுமா என்பது கேள்விக்குறி என ஏன் கேட்கிறீர்கள்? நீங்க சாமானியர் இல்லையா? உங்களுக்கே புரியும் போது எங்களுக்குப் புரியாதா? ஃ எழுத்தை காண்பித்து ஆயுத எழுத்து என்றதும் கைதட்டல் வருதே, அது யாரிடமிருந்து வருகிறது?

Balamurugan

‏#விஸ்வரூபம் 1 - நன்றாக இருந்தது

#விஸ்வரூபம் 2 - பாகம் 1 அளவிற்கு நன்றாக இல்லை. புரியவில்லை.

வெங்கிராம்

‏உலக அரங்கில் தமிழ்நாட்டுக்கு, இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் ஒரு படைப்பாக #விஸ்வரூபம் 2 ! கோடம்பாக்கத்தை எங்கேயோ தூக்கி நிறுத்தியிருக்கிறார் படைப்பாளி #கமல்ஹாசன். லட்சத்தில் ஒன்று. தரம்

Singaravelan

‏விஸ்வரூபம் 2 படம் பாத்துட்டு முஷாரப்போட ரியாக்ஷன்,

யாருய்யா அந்த கமல், எனக்கே அவரைப் பாக்கணும் போல இருக்கு.

கேப்டன் வேலு

‏நல்லால்லனு சொல்லல, ஆனா நல்லாருந்துருக்கலாம் #விஸ்வரூபம்2

Alex Anguraj

‏* நேர்த்தியான திரைக்கதை

* தேசபக்தி கொண்ட காட்சிகள்

* தெறிக்கும் வசனங்கள்

Sathish

'‏விஸ்வரூபம் 2' பார்த்தேன். ஆரம்பம் மக்கள் நீதி மய்யத்தின் விளம்பரம். அதிர்ச்சியடைந்தேன்! கமல்ஹாசனா இப்படி என்று? படத்தில் முதல் படத்தின் காட்சிகள் அதிகம். பல காட்சிகள் புரிய மறுக்கிறது. ஒரு இயக்குனராக கமல் தோற்றிருக்கிறார். சினிமா இனி தனக்கு ஆகாது என்பதை புரிந்திருக்கிறார். அரசியல்..?

தேவ. பழனியப்பன்

‏கமல் நடிப்பால் வென்றுவிட்டார். இந்த வயதிலும் காதல், சண்டை என மிரட்டுகிறார். ஆண்ட்ரியா அட்டகாச நடிப்பு. ஒளிப்பதிவு, ஜிப்ரானின் இசை என படத்தின் ஆக்கம் உயர் தரம் !!
முதல் பார்வை: விஸ்வரூபம் 2

Published : 10 Aug 2018 16:37 IST
 



எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’.

அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவிரவாதிகள் குழுத் தலைவன் ராகுல் போஸைத் தேடும் பயணத்தை மேற்கொள்கிறார் கமல். உடன் சேகர் கபூர், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் பயணிக்கின்றனர். லண்டனில் கமல் அண்ட் கோவைப் பழிதீர்க்க ராகுல் போஸ் சதித் தீட்டம் தீட்ட, அதை வெற்றிகரமாக முறியடிக்கிறார் கமல். 1500 டன் எடை கொண்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்படுகிறது. டபுள் கேம் ஆடும் உயர் அதிகாரி ஒருவரால் தன் உயிருக்கே ஆபத்து நேர்கிறது. ராகுல் போஸாலும் பேராபத்து தொடர்கிறது. இவற்றை கமல் எப்படி சந்திக்கிறார், அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதற்கு ’விஸ்வரூபம் 2’ விடை சொல்கிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் கமல் தன்னை மிகச் சரியாக நிறுவியிருக்கும் படம் என்று சொல்லலாம். நளினம் மிகுந்த கதக் நடன ஆசிரியராக இருக்கும் விஸ்வநாத்தின் நதிமூலம், ரிஷிமூலம் இதில் சரியாக வெளிப்படுகிறது. ராணுவ அதிகாரியாக இருந்து தீவிரவாதியாகக் கட்டமைக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து இந்திய உளவுத்துறை அதிகாரியாகும் பரிமாணம் அடையும் காட்சிகள் திரைக்கதை நகர்த்தலுக்கு வினையூக்கியாக வேகமுகம் காட்டுகிறது.

கமல் அசரடிக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுத்து நகைச்சுவைத் தரன்மையிலும் தெறிக்க விடுகிறார். நாட்டின் மீதான பற்று, சக பணியாளர் மீதான அன்பு, மனைவி மீதான அக்கறை, தொழில் மீதான பக்தி என்று எல்லா முகங்களிலும் மிகச் சரியாகப் பொருந்துகிறார். எதிரிக்கும் நல்லது செய்கிற அந்தப் பண்பிலும் கமலின் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.

கமல் மீதான காதலில் கிறங்குவதிலும், கணவனுக்காக ரிஸ்க் எடுத்து 1500 எடை கொண்ட வெடிகுண்டின் தன்மையைப் பரிசோதிப்பதிலும் பூஜாகுமார் கவனிக்க வைக்கிறார். பூஜாகுமார் மீதான பொறாமையை லேசுபாசாக வெளிப்படுத்துவது, கமல் மீதான அன்பை திடமாக உணர்த்துவது, ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துவது என ஆண்ட்ரியா ஆச்சர்யப்படுத்துகிறார்.

கமலின் மிகச் சிறந்த வழிகாட்டியாக தன்னை வடிவமைத்துக்கொண்ட சேகர் கபூர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குண்டுகள் பாய்ந்த நிலையில் கமலுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அக்காட்சி செம்ம.

நின்று நிதானித்து ஸ்கோர் செய்கிறார் ராகுல் போஸ். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சூழ்ச்சியில் சிக்கவைத்து நாடகமாடும் ஆனந்த மகாதேவனும், கமலின் அம்மாவாக அழுத்தமான நடிப்பைத் தந்த வகீதா ரஹ்மானும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஷாம்தத் சைனுதீன் லண்டன், ஆப்கானிஸ்தான், டெல்லியின் பரப்பைக் கண்களுக்குள் கடத்துகிறார். லால்குடி என்.இளையராஜாவின் ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் கும்பல் குறித்த செட், தண்ணீருக்குள் நிகழும் சண்டைக்காட்சி ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரானின் இசையில் நானாகிய நதிமூலமே ரசிக்க வைக்கிறது. நான் யாரென்று தெரிகிறதா பாடலை உல்டாவாக்கிய ஞாபகம் வருகிறதா பாடல் மெதுவான பீட்டாக இருப்பதால் வெறுமனே கடந்துபோகிறது. பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு பளிச்சிடுகிறது. இந்தக் காட்சி தேவையே இல்லை என்று சொல்லாத அளவுக்கு நறுக்கென்று காட்சிகளைக் கோத்த விதத்தில் மகேஷ் நாராயணனும், விஜய் சங்கரும் வியக்க வைக்கிறார்கள்.

முதல் பாகத்தை நினைவூட்டுவதற்காக இரண்டாம் பாகத்தில் கூறியது கூறல் இருக்கும். ஆனால், இப்படத்தில் அப்படி எந்த அம்சமும் இல்லை. திரைக்கதை எந்தக் குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாகச் செல்கிறது. ஆனால், படத்தில் சவால்கள் குறைவாக உள்ளதால் அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் நாயகனுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்கவில்லை. அதை முட்டுக்கொடுப்பதற்காக கமல் அம்மா போர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை. நாயகன் எந்த சாகசத்தையும் செய்யாமல், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தாமல் எதிரிகளை சாதாரணமாகவே அணுகுவது எடுபடவில்லை. 64 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது காட்சியாக இல்லாமல் வசனமாக நகர்வதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் பலவீனம்.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்துக் களமாடுவதோடு நில்லாமல், அஹிம்சை, அன்பை மட்டும் முன்னிறுத்தும் கமலின் நோக்கம் ராகுல் போஸ் வாரிசுகள் வழியாக இப்படத்தில் சரியாக நிறைவேறி இருக்கிறது.

மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது- உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 12 Aug 2018 08:47 IST

சென்னை 




மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர் கள் தங்களுக்கு கருணை மதிப் பெண்கள் வழங்கி மருத்துவ படிப்பை நிறைவு செய்ய அனு மதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப் பித்த உத்தரவில், ‘‘கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டு மென்பதை மாணவர்கள் உரிமை யாக கோர முடியாது. கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து பல்கலைக்கழகம்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், மனித உயிர்களை காப்பாற்றும் மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கருணை மதிப் பெண்கள் வழங்குவது என்பது அபத்தமானது.

எனவே கருணை மதிப் பெண்கள் வழங்கு வதை ரத்து செய் வது தொடர்பாக விதிகளில் திருத் தம் கொண்டு வர வேண்டும். ஏனெ னில் கருணை மதிப்பெண் பெற்று மருத்து வரானவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது.

அதுபோன்ற நபர்களிடம் தங்க ளது உயிரை பணயம் வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடுவதையும் தவிர்க்க வேண்டும்” எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.


மேட்டூர், நீர்திறப்பு, நீர்வரத்து

மேட்டூர் அணை, நடப்பாண்டில், இரண்டாம் முறையாக நிரம்பி உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும், உபரி நீர் தொடர்ந்து வருகிறது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து, நான்கு ஆண்டுகளுக்கு பின், 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக வந்ததால், நான்கு ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 23ல், மேட்டூர் அணை நிரம்பியது.பின், உபரி நீர் வரத்து குறைந்ததால், நேற்று முன்தினம், அணை நீர்மட்டம், 116.85 அடியாக சரிந்தது.

நீர்வரத்து :

இந்நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், நீர் வரத்து அதிகரித்தது.அவற்றிலிருந்து, இரு நாட்களாக, வினாடிக்கு, 1.43 லட்சம் கன அடி உபரி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. அந்த நீர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, மேட்டூருக்கு



வந்தடைந்தது. இதையடுத்து, நடப்பாண்டில், இரண்டாம் முறையாக, மேட்டூர் அணை நிரம்பியது. நேற்று மாலை, அணைக்கு வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி நீர் வந்தது. நேற்று மாலை, அணை உபரி நீர் திறக்கும், 16 கண் மதகு வழியாக, வினாடிக்கு, 1.௨5 லட்சம் கன அடி நீர், வெளியேற்றப்பட்டது. அது, காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டூர் காவிரி கரையோரம் சாகுபடி செய்த வாழை, பருத்தி, மாஞ்செடிகளை மூழ்கடித்தபடி, வெள்ளம் சென்றது. அனல்மின் நிலையம் அருகே, உபரி நீர் போக்கி யில், தனியார் கட்டிய குடோன், அருகிலுள்ள காளியம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது. நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி; நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது.

ஆய்வு :

மேட்டூர், காவிரி கரையோரத்திலுள்ள,

தங்கமாபுரிபட்டணம், கோல்நாயக்கன்பட்டி பகுதி களில், சேலம் கலெக்டர் ரோகிணி, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து, 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றுவதால், காவிரி கரையோரத்திலுள்ள மாவட்டங்களில், தாழ்வான பகுதி களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து கொண்டிருப்பதால், இன்று முதல், வெள்ளப்பெருக்கு அதிகம் இருக்கும். இதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய, 10 மாவட்டங்களில், கரையோர பகுதிகளில் வெள்ள அபாய

எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மூதாட்டி மீட்பு :

தங்கமாபுரிபட்டணத்தில், 12 வீடுகள் அருகே வரை தண்ணீர் சென்றது. இதனால், அந்த குடும்பத்தினர் வெளியேறுமாறு, வருவாய் துறையினர் எச்சரித்தனர். பலர், வீடுகளை பூட்டி, உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். அப்பகுதியில் வசித்தவர்கள், அங்குள்ள நகராட்சி துவக்கப்பள்ளியிலுள்ள, தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், 16 கண் மதகு, காவிரி கரையோரத்தில், தனியாக வசித்த, 70 வயது மூதாட்டி வீட்டின் அருகே தண்ணீர் சென்றது. நேற்று மாலை அவரை, வருவாய் துறையினர் மீட்டு, உறவினர் வீட்டுக்கு அனுப்பினர்.

அதிகபட்ச நீர் வரத்து திறப்பு :

மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக, 1961ல், 3.01 லட்சம் கன அடி நீர்; 2005ல், 2.41 லட்சம்; 2013ல், 1.45 லட்சம் கன அடி நீர் வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று மேட்டூர் அணைக்கு, அதிகபட்சமாக வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி நீர் வந்தது. மேட்டூர் அணையிலிருந்து, 1961ல் அதிகபட்சமாக, 2.84 லட்சம் கன அடி நீர்; 2005ல், 2.31 லட்சம்; 2013ல், 1.35 லட்சம் கன அடி நீர், காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. அதன்பின், நேற்று, காவிரியாற்றில் அதிகபட்சமாக, 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.- நமது நிருபர் -
வேளாண் நுழைவுத்தேர்வு அனுமதி அட்டை வெளியீடு

Added : ஆக 12, 2018 03:32

கோவை:தேசிய வேளாண் நுழைவுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கான, மின்னணு அனுமதி அட்டையை, ஐ.சி.ஏ.ஆர்., வெளியிட்டுள்ளது.
ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைகள் மற்றும் நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன.இவற்றில், இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வுகள் மூலம், இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன.

ஜூன் 22, 23ம் தேதிகளில் நடந்த தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டன. மறுதேர்வுகள், ஓ.எம். ஆர்., வினாத்தாள்கள் மூலம், 'ஆப் - லைன்' முறையில், நடக்கிறது.முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான தேர்வுகள், ஆக., 18; இளநிலை படிப்புகளுக்கான தேர்வுகள், ஆக., 19ல் நடக்கின்றன.

நாடு முழுவதும், 54 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழக மாணவர்களின் வசதிக்காக, கோவை, சென்னை ஆகிய நகரங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான, மின்னணு அனுமதி அட்டையை, ஐ.சி.ஏ.ஆர்., வெளியிட்டுள்ளது. மாணவர்கள், www.icarexam.net என்ற இணையதளத்தில், தங்கள், 'லாகின் ஐடி' மற்றும் 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி, 'அப்ளிகன்ட் லாகின்' பகுதியில்,'கிளிக்' செய்து, 'இ - அட்மிட்' அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒரு நாள் மழைக்கே மின் தடை சீசனை சமாளிக்குமா வாரியம்?

Added : ஆக 12, 2018 01:48


ஒரு நாள் மழைக்கே, பல இடங்களில், மின் வினியோகம் பாதித்ததால், வடகிழக்கு பருவமழை சீசனை, மின் வாரியம் சமாளிக்குமா என்ற சந்தேகம், மக்களிடம் எழுந்துள்ளது.

சென்னையில், குறிப்பிட்ட சில இடங்களில் கேபிள்; மற்ற இடங்களில், மின் கம்பம் வாயிலாக, மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது. அக்டோபரில், வடகிழக்கு பருவமழைக் காலம் துவங்குகிறது. அப்போது, மின் விபத்து, மின் தடை ஏற்படாமல் இருக்க, மின் வினியோக பெட்டி, 'டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட சாதனங்களில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி, உதவி பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பலர், அந்த பணிகளை துரித கதியில் மேற்கொள்ளாமல், அலட்சியமாக உள்ளனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சில தினங்களாக, இரவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று வரை தொடர்ந்தது. இதனால், பல இடங்களில், மின் தடை ஏற்பட்டது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி கூறியதாவது:கன மழையால், வேகமாக காற்று வீசிய இடங்களில், மரக் கிளைகள், அருகில் இருந்த மின் கம்பிகள் மேல் விழுந்தன. மழை தண்ணீர் பட்டதும், அதிக வெப்பத்துடன் இருந்த, மின் கம்பியை ஒட்டியிருந்த, 'இன்சுலேட்டர்' என்ற கருவிகளும் பழுதாகின. இதுபோன்ற காரணங்களால், மின் வினியோகம் பாதித்தது.

பழுது, உடனடியாக சரி செய்யப்பட்டு, மின் சப்ளை வழங்கப்பட்டது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில், முன்னெச்சரிக்கையாக, தற்காலிகமாக, மின் சப்ளை நிறுத்தப்பட்டது. மழை சீசனின் போது, எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.பணம் தர மறுப்பு!மழைநீரில் மூழ்குவதை தடுக்க, தரையை ஒட்டி உள்ள, பெரிய மின் வினியோக பெட்டியின் உயரத்தை அதிகரிக்க, 4,500 ரூபாய்; சிறிய பெட்டிக்கு, 2,500 ரூபாய்; மின் வினியோக பெட்டிக்கு கதவு போடுவதற்கு, 600 ரூபாய் என, பிரிவு அலுவலகங்களுக்கு வழங்க, மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பணம் தராததால், மின் வினியோக பெட்டியை சீரமைப்பது தாமதமாவதாக, உதவி பொறியாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன பயன்?'

Added : ஆக 12, 2018 00:54 |



  கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக, விஜயகாந்த் வீடியோ பதிவு வெளியிட்டதால், தி.மு.க.,வினர் மட்டுமின்றி, தே.மு.தி.க., வினரும் கடுப்படைந்துஉள்ளனர்.

சினிமாவில் கதாநாயகனாகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்த காலத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, விஜயகாந்த் மிக நெருக்கமானவராக இருந்தார். எப்போது வேண்டுமானாலும், கருணாநிதியை சந்திக்கும் செல்வாக்கு பெற்றவராக விளங்கினார்.

நடிகர் சங்கம் சார்பில், கருணாநிதிக்கு, சென்னை யில் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தி, தங்க பேனாவையும், விஜயகாந்த் பரிசளித்தார்.

விஜயகாந்த் செயல்பாடுகளை பார்த்து வியந்த கருணாநிதி, அரசியலில், தனக்கு அருகில் வைத்துக் கொள்ளலாம் என, கணக்கு போட்டார்.ஆனால், 2005ல், தே.மு.தி.க.,வை, விஜயகாந்த் துவங்கினார். 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு எதிராக, விஜயகாந்த் தீவிர பிரசாரம் செய்தார். இருப்பினும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

அதேநேரத்தில், சென்னை, கோயம்பேடு மேம்பால கட்டுமானப் பணிக்காக, விஜயகாந்துக்கு சொந்தமான, திருமண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இதற்காக, எட்டு கோடி ரூபாய்க்கு மேல், விஜயகாந்திற்கு இழப்பீடு கிடைத்தது.விஜயகாந்தின் வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில், வருமான வரி சோதனை நடந்தது. இத்தனைக்கும் கருணாநிதி தான் காரணம் என்ற ரீதியில், விஜயகாந்த் பேச துவங்கினார்.

கடந்த, 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, எதிர்க்கட்சி தலைவராக, விஜயகாந்த் பதவி ஏற்றார்.

வீடியோ பதிவு

கட்சியின் மாநில நிர்வாகிகள் உசுப்பேற்றியதால், முதல்வர் கனவில் மிதந்த விஜயகாந்த், தி.மு.க., - அ.தி.மு.க., எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தார். ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால், 2014 லோக்சபா மற்றும், 2016 சட்டசபை தேர்தல்களில், தே.மு.தி.க.,விற்கு படுதோல்விகள் தான் பரிசாக கிடைத்தன.

இரண்டு பெரிய தலைவர்களை எதிர்த்து, அரசியல் செய்தது, தே.மு.தி.க.,வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் களில், தி.மு.க., வின் தோல்விகளுக்கு காரணமாக இருந்த விஜயகாந்தும், பிரேமலதாவும், கருணாநிதி மறைவிற்கு கண்ணீர் மல்க, வீடியோ பதிவு வெளியிட்டுஉள்ளனர்.

சட்ட போராட்டம்

அமெரிக்காவில் இருந்து இரங்கல் கடிதமும், விஜயகாந்த் எழுதி உள்ளார். இவர்களின் நடவடிக்கை, தி.மு.க., மட்டுமின்றி, தே.மு.தி.க., வினர் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:விஜயகாந்திற்கும், பிரேமலதாவிற்கும், தன் தலைமையில் திருமணம் செய்து வைத்தவர், கருணாநிதி. அந்த நன்றி விசுவாசத்தை காட்டுவதற்கு, 2016ல், தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைத்திருக்கலாம். கூட்டணி உறுதியாகும் என, நம்பிய கருணாநிதி, 'பழம் நழுவி, பாலில் விழுந்து விட்டது' என்றார். ஆனால், மனைவி பேச்சை கேட்டு, விஜயகாந்த், தி.மு.க., கூட்டணியை அலட்சியப்படுத்தினார்.

தே.மு.தி.க., கூட்டணியில் இருந்திருந்தால், கருணாநிதி முதல்வராக இருந்து, இன்றைக்கு இறந்திருப்பார். அவருக்கு, மெரினாவில் இடம் கிடைக்க, சட்ட போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது.

'கிங் மேக்கர்'

தேர்தல் பிரசாரங்களில், கருணாநிதியை ஊழலுக்கு பொறுப்பாளி என்ற ரீதியில் விஜயகாந்தும், பிரேமலதாவும் கடுமையாக விமர்சித்தனர். ஒரு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், 'இனி கருணாநிதியை, 'கலைஞர்' என்று அழைக்க மாட்டேன்' என்று, ஆவேசமாக கூறினார். இப்போது, அரசியலுக்காக, கருணாநிதிக்கு இரங்கல் கடிதமும், வீடியோவும் வெளியிட்டு உள்ளார்.

அப்போதே, கட்சியினர் பேச்சை கேட்டு இருந்தால், இன்றைக்கு ஜெயலலிதாவையும், கருணாநிதியையும், முதல்வர் ஆக்கிய, 'கிங் மேக்கர்' என்ற பெயர், விஜயகாந்திற்கு கிடைத்திருக்கும். அரசியலில் செல்வாக்கு மிக்கவராக, விஜயகாந்த் இருந்திருப்பார்.கூட்டணி சேர மறுத்து விட்டு, இப்போது குலுங்கி அழுது என்ன பயன்?இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

NEWS TODAY 28.06.2026