Sunday, August 12, 2018


மேட்டூர், நீர்திறப்பு, நீர்வரத்து

மேட்டூர் அணை, நடப்பாண்டில், இரண்டாம் முறையாக நிரம்பி உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும், உபரி நீர் தொடர்ந்து வருகிறது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து, நான்கு ஆண்டுகளுக்கு பின், 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக வந்ததால், நான்கு ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 23ல், மேட்டூர் அணை நிரம்பியது.பின், உபரி நீர் வரத்து குறைந்ததால், நேற்று முன்தினம், அணை நீர்மட்டம், 116.85 அடியாக சரிந்தது.

நீர்வரத்து :

இந்நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், நீர் வரத்து அதிகரித்தது.அவற்றிலிருந்து, இரு நாட்களாக, வினாடிக்கு, 1.43 லட்சம் கன அடி உபரி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. அந்த நீர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, மேட்டூருக்கு



வந்தடைந்தது. இதையடுத்து, நடப்பாண்டில், இரண்டாம் முறையாக, மேட்டூர் அணை நிரம்பியது. நேற்று மாலை, அணைக்கு வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி நீர் வந்தது. நேற்று மாலை, அணை உபரி நீர் திறக்கும், 16 கண் மதகு வழியாக, வினாடிக்கு, 1.௨5 லட்சம் கன அடி நீர், வெளியேற்றப்பட்டது. அது, காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டூர் காவிரி கரையோரம் சாகுபடி செய்த வாழை, பருத்தி, மாஞ்செடிகளை மூழ்கடித்தபடி, வெள்ளம் சென்றது. அனல்மின் நிலையம் அருகே, உபரி நீர் போக்கி யில், தனியார் கட்டிய குடோன், அருகிலுள்ள காளியம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது. நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி; நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது.

ஆய்வு :

மேட்டூர், காவிரி கரையோரத்திலுள்ள,

தங்கமாபுரிபட்டணம், கோல்நாயக்கன்பட்டி பகுதி களில், சேலம் கலெக்டர் ரோகிணி, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து, 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றுவதால், காவிரி கரையோரத்திலுள்ள மாவட்டங்களில், தாழ்வான பகுதி களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து கொண்டிருப்பதால், இன்று முதல், வெள்ளப்பெருக்கு அதிகம் இருக்கும். இதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய, 10 மாவட்டங்களில், கரையோர பகுதிகளில் வெள்ள அபாய

எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மூதாட்டி மீட்பு :

தங்கமாபுரிபட்டணத்தில், 12 வீடுகள் அருகே வரை தண்ணீர் சென்றது. இதனால், அந்த குடும்பத்தினர் வெளியேறுமாறு, வருவாய் துறையினர் எச்சரித்தனர். பலர், வீடுகளை பூட்டி, உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். அப்பகுதியில் வசித்தவர்கள், அங்குள்ள நகராட்சி துவக்கப்பள்ளியிலுள்ள, தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், 16 கண் மதகு, காவிரி கரையோரத்தில், தனியாக வசித்த, 70 வயது மூதாட்டி வீட்டின் அருகே தண்ணீர் சென்றது. நேற்று மாலை அவரை, வருவாய் துறையினர் மீட்டு, உறவினர் வீட்டுக்கு அனுப்பினர்.

அதிகபட்ச நீர் வரத்து திறப்பு :

மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக, 1961ல், 3.01 லட்சம் கன அடி நீர்; 2005ல், 2.41 லட்சம்; 2013ல், 1.45 லட்சம் கன அடி நீர் வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று மேட்டூர் அணைக்கு, அதிகபட்சமாக வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி நீர் வந்தது. மேட்டூர் அணையிலிருந்து, 1961ல் அதிகபட்சமாக, 2.84 லட்சம் கன அடி நீர்; 2005ல், 2.31 லட்சம்; 2013ல், 1.35 லட்சம் கன அடி நீர், காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. அதன்பின், நேற்று, காவிரியாற்றில் அதிகபட்சமாக, 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024