Sunday, August 12, 2018

முதல் பார்வை: விஸ்வரூபம் 2

Published : 10 Aug 2018 16:37 IST
 



எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’.

அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவிரவாதிகள் குழுத் தலைவன் ராகுல் போஸைத் தேடும் பயணத்தை மேற்கொள்கிறார் கமல். உடன் சேகர் கபூர், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் பயணிக்கின்றனர். லண்டனில் கமல் அண்ட் கோவைப் பழிதீர்க்க ராகுல் போஸ் சதித் தீட்டம் தீட்ட, அதை வெற்றிகரமாக முறியடிக்கிறார் கமல். 1500 டன் எடை கொண்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்படுகிறது. டபுள் கேம் ஆடும் உயர் அதிகாரி ஒருவரால் தன் உயிருக்கே ஆபத்து நேர்கிறது. ராகுல் போஸாலும் பேராபத்து தொடர்கிறது. இவற்றை கமல் எப்படி சந்திக்கிறார், அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதற்கு ’விஸ்வரூபம் 2’ விடை சொல்கிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் கமல் தன்னை மிகச் சரியாக நிறுவியிருக்கும் படம் என்று சொல்லலாம். நளினம் மிகுந்த கதக் நடன ஆசிரியராக இருக்கும் விஸ்வநாத்தின் நதிமூலம், ரிஷிமூலம் இதில் சரியாக வெளிப்படுகிறது. ராணுவ அதிகாரியாக இருந்து தீவிரவாதியாகக் கட்டமைக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து இந்திய உளவுத்துறை அதிகாரியாகும் பரிமாணம் அடையும் காட்சிகள் திரைக்கதை நகர்த்தலுக்கு வினையூக்கியாக வேகமுகம் காட்டுகிறது.

கமல் அசரடிக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுத்து நகைச்சுவைத் தரன்மையிலும் தெறிக்க விடுகிறார். நாட்டின் மீதான பற்று, சக பணியாளர் மீதான அன்பு, மனைவி மீதான அக்கறை, தொழில் மீதான பக்தி என்று எல்லா முகங்களிலும் மிகச் சரியாகப் பொருந்துகிறார். எதிரிக்கும் நல்லது செய்கிற அந்தப் பண்பிலும் கமலின் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.

கமல் மீதான காதலில் கிறங்குவதிலும், கணவனுக்காக ரிஸ்க் எடுத்து 1500 எடை கொண்ட வெடிகுண்டின் தன்மையைப் பரிசோதிப்பதிலும் பூஜாகுமார் கவனிக்க வைக்கிறார். பூஜாகுமார் மீதான பொறாமையை லேசுபாசாக வெளிப்படுத்துவது, கமல் மீதான அன்பை திடமாக உணர்த்துவது, ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துவது என ஆண்ட்ரியா ஆச்சர்யப்படுத்துகிறார்.

கமலின் மிகச் சிறந்த வழிகாட்டியாக தன்னை வடிவமைத்துக்கொண்ட சேகர் கபூர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குண்டுகள் பாய்ந்த நிலையில் கமலுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அக்காட்சி செம்ம.

நின்று நிதானித்து ஸ்கோர் செய்கிறார் ராகுல் போஸ். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சூழ்ச்சியில் சிக்கவைத்து நாடகமாடும் ஆனந்த மகாதேவனும், கமலின் அம்மாவாக அழுத்தமான நடிப்பைத் தந்த வகீதா ரஹ்மானும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஷாம்தத் சைனுதீன் லண்டன், ஆப்கானிஸ்தான், டெல்லியின் பரப்பைக் கண்களுக்குள் கடத்துகிறார். லால்குடி என்.இளையராஜாவின் ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் கும்பல் குறித்த செட், தண்ணீருக்குள் நிகழும் சண்டைக்காட்சி ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரானின் இசையில் நானாகிய நதிமூலமே ரசிக்க வைக்கிறது. நான் யாரென்று தெரிகிறதா பாடலை உல்டாவாக்கிய ஞாபகம் வருகிறதா பாடல் மெதுவான பீட்டாக இருப்பதால் வெறுமனே கடந்துபோகிறது. பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு பளிச்சிடுகிறது. இந்தக் காட்சி தேவையே இல்லை என்று சொல்லாத அளவுக்கு நறுக்கென்று காட்சிகளைக் கோத்த விதத்தில் மகேஷ் நாராயணனும், விஜய் சங்கரும் வியக்க வைக்கிறார்கள்.

முதல் பாகத்தை நினைவூட்டுவதற்காக இரண்டாம் பாகத்தில் கூறியது கூறல் இருக்கும். ஆனால், இப்படத்தில் அப்படி எந்த அம்சமும் இல்லை. திரைக்கதை எந்தக் குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாகச் செல்கிறது. ஆனால், படத்தில் சவால்கள் குறைவாக உள்ளதால் அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் நாயகனுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்கவில்லை. அதை முட்டுக்கொடுப்பதற்காக கமல் அம்மா போர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை. நாயகன் எந்த சாகசத்தையும் செய்யாமல், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தாமல் எதிரிகளை சாதாரணமாகவே அணுகுவது எடுபடவில்லை. 64 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது காட்சியாக இல்லாமல் வசனமாக நகர்வதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் பலவீனம்.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்துக் களமாடுவதோடு நில்லாமல், அஹிம்சை, அன்பை மட்டும் முன்னிறுத்தும் கமலின் நோக்கம் ராகுல் போஸ் வாரிசுகள் வழியாக இப்படத்தில் சரியாக நிறைவேறி இருக்கிறது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...