Sunday, August 12, 2018

கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன பயன்?'

Added : ஆக 12, 2018 00:54 |



  கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக, விஜயகாந்த் வீடியோ பதிவு வெளியிட்டதால், தி.மு.க.,வினர் மட்டுமின்றி, தே.மு.தி.க., வினரும் கடுப்படைந்துஉள்ளனர்.

சினிமாவில் கதாநாயகனாகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்த காலத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, விஜயகாந்த் மிக நெருக்கமானவராக இருந்தார். எப்போது வேண்டுமானாலும், கருணாநிதியை சந்திக்கும் செல்வாக்கு பெற்றவராக விளங்கினார்.

நடிகர் சங்கம் சார்பில், கருணாநிதிக்கு, சென்னை யில் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தி, தங்க பேனாவையும், விஜயகாந்த் பரிசளித்தார்.

விஜயகாந்த் செயல்பாடுகளை பார்த்து வியந்த கருணாநிதி, அரசியலில், தனக்கு அருகில் வைத்துக் கொள்ளலாம் என, கணக்கு போட்டார்.ஆனால், 2005ல், தே.மு.தி.க.,வை, விஜயகாந்த் துவங்கினார். 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு எதிராக, விஜயகாந்த் தீவிர பிரசாரம் செய்தார். இருப்பினும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

அதேநேரத்தில், சென்னை, கோயம்பேடு மேம்பால கட்டுமானப் பணிக்காக, விஜயகாந்துக்கு சொந்தமான, திருமண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இதற்காக, எட்டு கோடி ரூபாய்க்கு மேல், விஜயகாந்திற்கு இழப்பீடு கிடைத்தது.விஜயகாந்தின் வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில், வருமான வரி சோதனை நடந்தது. இத்தனைக்கும் கருணாநிதி தான் காரணம் என்ற ரீதியில், விஜயகாந்த் பேச துவங்கினார்.

கடந்த, 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, எதிர்க்கட்சி தலைவராக, விஜயகாந்த் பதவி ஏற்றார்.

வீடியோ பதிவு

கட்சியின் மாநில நிர்வாகிகள் உசுப்பேற்றியதால், முதல்வர் கனவில் மிதந்த விஜயகாந்த், தி.மு.க., - அ.தி.மு.க., எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தார். ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால், 2014 லோக்சபா மற்றும், 2016 சட்டசபை தேர்தல்களில், தே.மு.தி.க.,விற்கு படுதோல்விகள் தான் பரிசாக கிடைத்தன.

இரண்டு பெரிய தலைவர்களை எதிர்த்து, அரசியல் செய்தது, தே.மு.தி.க.,வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் களில், தி.மு.க., வின் தோல்விகளுக்கு காரணமாக இருந்த விஜயகாந்தும், பிரேமலதாவும், கருணாநிதி மறைவிற்கு கண்ணீர் மல்க, வீடியோ பதிவு வெளியிட்டுஉள்ளனர்.

சட்ட போராட்டம்

அமெரிக்காவில் இருந்து இரங்கல் கடிதமும், விஜயகாந்த் எழுதி உள்ளார். இவர்களின் நடவடிக்கை, தி.மு.க., மட்டுமின்றி, தே.மு.தி.க., வினர் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:விஜயகாந்திற்கும், பிரேமலதாவிற்கும், தன் தலைமையில் திருமணம் செய்து வைத்தவர், கருணாநிதி. அந்த நன்றி விசுவாசத்தை காட்டுவதற்கு, 2016ல், தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைத்திருக்கலாம். கூட்டணி உறுதியாகும் என, நம்பிய கருணாநிதி, 'பழம் நழுவி, பாலில் விழுந்து விட்டது' என்றார். ஆனால், மனைவி பேச்சை கேட்டு, விஜயகாந்த், தி.மு.க., கூட்டணியை அலட்சியப்படுத்தினார்.

தே.மு.தி.க., கூட்டணியில் இருந்திருந்தால், கருணாநிதி முதல்வராக இருந்து, இன்றைக்கு இறந்திருப்பார். அவருக்கு, மெரினாவில் இடம் கிடைக்க, சட்ட போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது.

'கிங் மேக்கர்'

தேர்தல் பிரசாரங்களில், கருணாநிதியை ஊழலுக்கு பொறுப்பாளி என்ற ரீதியில் விஜயகாந்தும், பிரேமலதாவும் கடுமையாக விமர்சித்தனர். ஒரு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், 'இனி கருணாநிதியை, 'கலைஞர்' என்று அழைக்க மாட்டேன்' என்று, ஆவேசமாக கூறினார். இப்போது, அரசியலுக்காக, கருணாநிதிக்கு இரங்கல் கடிதமும், வீடியோவும் வெளியிட்டு உள்ளார்.

அப்போதே, கட்சியினர் பேச்சை கேட்டு இருந்தால், இன்றைக்கு ஜெயலலிதாவையும், கருணாநிதியையும், முதல்வர் ஆக்கிய, 'கிங் மேக்கர்' என்ற பெயர், விஜயகாந்திற்கு கிடைத்திருக்கும். அரசியலில் செல்வாக்கு மிக்கவராக, விஜயகாந்த் இருந்திருப்பார்.கூட்டணி சேர மறுத்து விட்டு, இப்போது குலுங்கி அழுது என்ன பயன்?இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Driverless metro to begin trials at Madhavaram by '28

Driverless metro to begin trials at Madhavaram by '28  24.12.2024 Chennai : Chennai Metro Rail Limited (CMRL) will begin testing its fir...