Sunday, August 12, 2018

ஜெ., நினைவிடத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ்
முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி 

 

dinamalar 12.08.2018

மெரினாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது, ஜெ., நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் தொடர்ந்த வழக்குகளை, வாபஸ் பெற வைத்தது போன்ற நடவடிக்கைகளால், முதல்வர் பழனிசாமிக்கு, அ.தி.மு.க.,வினரிடம் ஆதரவு கிடைத்துள்ளது.




காமராஜர் நினைவிடம் :

தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆக., 7ம் தேதி மாலை இறந்தார். 'அவரது உடலை, சென்னை, மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிட வளாகத்தில், அடக்கம் செய்ய, அனுமதி அளிக்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், மெரினா கடற் கரையை ஒதுக்க முடியாது. அதற்கு பதிலாக, கிண்டியில், காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்குவதாக, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்து, மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி, நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். மெரினாவில், ஜெ., நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே, தி.மு.க., - பா.ம.க., வழக்கறிஞர்கள் தொடுத்திருந்த வழக்குகளை, திடீரென அவர்கள் வாபஸ் பெற்றனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய, மெரினாவில் இடம் ஒதுக்கும்படி உத்தரவிட்டது. கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் கொடுக்க, அரசு மறுத்த தகவல் வெளியானதும், தி.மு.க.,வினர், முதல்வர் பழனிசாமியை வசைபாடினர். அ.தி.மு.க.,விலும்
பெரும்பாலானோர், 'அவர்கள் கேட்ட இடத்தை கொடுத்திருக்கலாம். தேவையில்லாமல் இடத்தை மறுத்து, கெட்டப் பெயர் வாங்க வேண்டியதில்லை' என, கருத்து தெரிவித்தனர்.

வழக்கு விசாரணை :

'துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களும், முதல்வரிடம் இடத்தை வழங்கி விடலாம்' என, தெரிவித்துள்ளனர்.ஆனால், முதல்வர் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். அவர் ஏன், அத்தகைய முடிவெடுத்தார் என்பதை, வழக்கு விசாரணைதெளிவுபடுத்தியது. மெரினா கடற்கரையில், ஜெ.,க்கு நினைவிடம் கட்டினால், சுற்றுச்சூழல் பாதிக்கும் எனக்கூறி, வழக்கு தொடர்ந்தவர்கள், வழக்குகளை வாபஸ் பெற்றதன் வாயிலாக, அவர்களுடைய நோக்கம், சுற்றுச்சூழல் அல்ல; ஜெ., தான் என்பது தெளிவானது.ஜெ.,க்கு நினைவிடம் கட்ட, முட்டுக்கட்டையாக இருந்த வழக்குகள், வாபஸ் பெறப்பட்டதால், நினைவிடத்திற்கான தடைகள் நீங்கின. நெடுஞ்செழியன், ஜானகி போன்றோர் மறைந்தபோது, அவர்கள் உடலை அடக்கம் செய்ய, மெரினாவில் இடம் ஒதுக்கும்படி, அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கேட்டபோது, அவர் மறுத்துள்ளார். இதற்கான ஆதாரங்கள், அரசு தரப்பில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.காமராஜருக்கு, கடற்கரையில் இடம் தர, கருணாநிதி மறுத்தாரா என்பதும், விவாதப் பொருளாகி உள்ளது. அப்போது, காங்கிரசில் முக்கிய தலைவர்களாக இருந்த, சிலர் மறுத்துள்ளனர்; வேறு சிலரோ உண்மை என, தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் தர மறுத்த, முதல்வர் பழனிசாமி மீது கோபப்பட்ட அ.தி.மு.க.,வினர், தற்போது, அவரை பாராட்ட துவங்கி உள்ளனர். அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஜெ., வழியில் :

இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கருணாநிதி எதிர்ப்பே, அ.தி.மு.க., துவங்க காரணம். கட்சியை துவக்கிய, எம்.ஜி.ஆர்., அவருக்கு பின், கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோர், கருணாநிதியை எதிர்த்தே, அரசியல் செய்தனர்.கருணாநிதி குடும்பத்தினர் கேட்டதும், மெரினாவில் இடம் ஒதுக்கி


இருந்தால், முதல்வர் பழனிசாமிக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும் என, சிலர் கூறுகின்றனர். நல்ல பெயர், தி.மு.க.,வினரிடம் கிடைத்திருக்கும். அதனால், அ.தி.மு.க.,விற்கு என்ன பயன்?கருணாநிதி உத்தரவை எடுத்துக்காட்டி, இடம் தர மறுத்ததால், தற்போது, ஜெ., வழியில் முதல்வர் செயல்படுகிறார் என்ற உணர்வு, கட்சிக்காரர்களிடம் ஏற்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும், ஜெ.,வை, நீதிமன்ற படியேற வைத்தவர்களை, இறுதி அஞ்சலிக்காக, நீதிமன்றம் செல்ல வைத்துவிட்டார். கடற்கரையில் நினைவிடம் கட்ட, எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டதும், அவர்கள். வாபஸ் பெற்றதும் அவர்களே. தற்போது, ஸ்டாலினுக்கு வெற்றி என்கின்றனர். இது, எப்படி நியாயமாகும்; எட்டு மணி நேரம், தி.மு.க.,வினரை அலைய வைத்து, முதல்வர் பழனி சாமி வெற்றி பெற்றுள்ளார்.

ஜெ., படத்தை, சட்டசபையில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றம் சென்றனர். எங்கள் தலை வியை இழிவுப்படுத்த, எல்லா வகையிலும் முயற்சித்தனர். நாங்கள், அந்த அளவுக்கு கீழிறங்கவில்லை. அவர்கள் போட்ட வழக்குகளையும், உத்தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டே, இடம் மறுக்கப்பட்டது.ஜெ.,க்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் தொடர்ந்த வழக்குகளை, அவர்களாகவே வாபஸ் பெற வைத்து, அ.தி.மு.க.,விற்கு மிகப்பெரிய வெற்றியை, பழனிசாமி தேடி தந்துள்ளார். உண்மையில் இது, முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024