Tuesday, February 5, 2019

‘ரஹ்மான் எங்கிட்ட 500 படத்துல ஒர்க் பண்ணிருக்கார்’- இளையராஜா; ‘உங்களோட ஒருபடம் பண்றதே பெருமை சார்’ – ஏ.ஆர்.ரஹ்மான்

Published : 03 Feb 2019 19:52 IST

வி.ராம்ஜி




ஏ.ஆர்.ரஹ்மான், எங்கிட்ட 500 படத்துல ஒர்க் பண்ணிருக்கார்’ என்று இளையராஜா, ரஹ்மானை வைத்துக்கொண்டு சொல்ல, 'உங்களோட ஒரு படம் பண்றதே பெருமை சார்’ என்று நெகிழ்ந்து போனார் ரஹ்மான்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நேற்றும் இன்றுமாக நடைபெற்று வருகிறது. இளையராஜாவின் கலை நிகழ்ச்சி மற்றும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா என இரண்டு நாள் விழாவாக நடைபெற்று வருகிறது.

முதல் நாள் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார்.

விழாவின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, ரஹ்மான் கீபோர்டு வாசிக்க, ராஜா சார் பாடவேண்டும் என்றார்.

இதையடுத்து, இளையராஜா, மணிரத்னம் இயக்கிய ‘மெளனராகம்’ படத்தின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைப் பாடினார். உடனே ரஹ்மான் கீபோர்டு வாசித்தார்.

அப்போது இசையில் ஏதோ விட்டுவிட்டார் ரஹ்மான். உடனே இளையராஜா, ‘ஏன் இப்படி வாசிக்கிறே? உனக்குத்தான் இந்த டியூன் தெரியுமே?’ என்றார்.

பின்னர், ‘மூன்றாம் பிறை படத்திலிருந்து ரஹ்மான் என்னிடம் வேலை பார்த்தார். கிட்டத்தட்ட ஒரு 500 படமாவது என்னிடம் வேலை பார்த்திருப்பார்’ என்று சொன்னார் இளையராஜா.

உடனே ரஹ்மான், ‘உங்களிடம் ஒரு படத்துக்கு வேலை பார்ப்பதே பெரியவிஷயம் சார்’ என்று ரஹ்மான் நெகிழ்ந்து சொன்னார்.

மொத்தக் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது

’ராஜா சார்கிட்ட இருக்கிற கெட்டபழக்கம்!’ – ஏஆர்.ரஹ்மான் ஓபன் டாக்

Published : 03 Feb 2019 20:32 IST

வி.ராம்ஜி





இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நேற்று 2ம் தேதியும் இன்று 3ம் தேதியும் என இரண்டு நாள் விழா இது. நேற்றைய விழாவை, நடிகைகள் சுஹாசினியும் கஸ்தூரியும் தொகுத்து வழங்கினார்கள்.

அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேடைக்கு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நான் ராஜா சாரிடம் பணியாற்றிய காலங்களை மறக்கவே முடியாது. அவரிடம் நான் மூன்றாம் பிறை படத்தில் இருந்துதான் பணிக்குச் சேர்ந்தேன். அவருடைய ரிக்கார்டிங் ரூமிற்குச் செல்லும் போது, ஒரு ஹெட்மாஸ்டர் அறைக்குள் செல்வது போல் நான் உணர்ந்திருக்கிறேன்.

அவ்வளவு விஷயங்களை நான் அவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ராஜா சாரிடம் நான் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம்… பொதுவாகவே இசைமைப்பாளர்கள் என்றாலோ திரையுலகினர் என்றாலோ கெட்டபழக்கங்கள் இருக்கும். ஆனால் ராஜா சாரிடம் எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. இதில் நான் ரொம்பவே இன்ஸ்பையர் ஆனேன். இந்த நல்லப் பழக்கத்தை ராஜா சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். ராஜா சாருக்கும் எனக்கும் இருக்கிற ஒரே கெட்டப்பழக்கம் இசைதான்!

அதேபோல் இன்னொன்றையும் சொல்லவேண்டும். நான் விருது பெற்றதும் ராஜா சார் எனும் மேதை என்னைப் பாராட்டினார். அதில் நான் ரொம்பவே நெகிழ்ந்து போனேன். யார் வேண்டுமானாலும் பாராட்டிவிடலாம். பாராட்டுக்கா இங்கு பஞ்சம். ஆனால் ஒரு இசைமேதையிடம் இருந்து வருகிற பாராட்டு, ஆத்மார்த்தமானது. ஆகவே ராஜா சார் பாராட்டியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இவ்வாறு ரஹ்மான் தெரிவித்தார்.

அப்போது சுஹாசினி, ‘சின்னப்பையனா பாத்த ரஹ்மான் பத்தி சொல்லுங்க சார்’ என்று இளையராஜாவிடம் கேட்டார்.

அதற்கு இளையராஜா, ‘அவரோட அப்பாகிட்ட இருந்த நேரத்தைவிட, எங்கூட இருந்த நேரம்தான் அதிகம். என்ன, சரியா?’ என்று ரஹ்மானிடம் கேட்டார். ‘ஆமாம் சார்’ என்றார் ரஹ்மான். ‘இதெல்லாம் நீதான் சொல்லணும். நீ சொல்லவேண்டியதையெல்லாம் நான் சொல்லிக்கிட்டிருக்கேன்’ என்று இளையராஜா சிரித்துக்கொண்டே சொல்ல, ரஹ்மான் உட்பட மேடையில் இருந்தவர்களும் அரங்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் கரவொலி எழுப்பினார்கள்.
விஜய் மல்லையாவை இந்தியா வசம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை செயலர் உத்தரவு

Published : 04 Feb 2019 22:03 IST

பிடிஐ  லண்டன்



வங்கிக்கடன் மோசடி உள்ளிட்ட நிதிமோசடிகள் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறைச் செயலர் சாஜித் ஜாவித் உத்தரவிட்டுள்ளார்.

இப்போது இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா அங்கு உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய 14 நாட்கள் அவகாசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு பதில் அளிப்பதற்கான போதிய விவகாரங்கள் அவர் மீது எழுப்பப்பட்டுள்ளதை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 10. 2018-ல் ஏற்றுக் கொண்டது.

நாடுகடத்தல் ஒப்பந்த நடைமுறைகளின் படி தலைமைநீதிபதியின் உத்தரவு உள்துறை செயலருக்கு அனுப்பப்பட வேண்டும், அவர்தான் இது குறித்த உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் உடையவர்.

இந்நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கையெழுத்திட பிரிட்டனின் மூத்த பாகிஸ்தான் வம்சாவளி அமைச்சர் சாஜித் ஜாவித் கையெழுத்திட 2 மாத கால அவகாசம் இருந்தது.

பிரிட்டன் உள்துறை அலுவலகம் இன்று கூறும்போது பல விஷயங்களையும் பரிசீலித்த பிறகு அமைச்சர் இன்று மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அனுமதி அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

“இந்தியாவில் விஜய் மல்லையா மீது மோசடி சதி வழக்கு, மற்றும் நிதிமோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பிப்ரவரி 3ம் தேதி உள்துறை அலுவலகம் இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனமாகப் பரிசீலித்து விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க கையெழுத்திடப்பட்டது.

இப்போது விஜய் மல்லையா இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

என்னை விடவும் கமலுக்கு நல்ல பாடல்களை அளித்துள்ளீர்கள்: ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில்!


By எழில் | Published on : 04th February 2019 04:37 PM |




தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய 'இளையராஜா -75' விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமையன்று தொடங்கிவைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவைக் கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், 'இளையராஜா -75' என்ற விழா மலர் வெளியிடப்பட்டது. ரஜினி, கமல், ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பால்கி உள்ளிட்ட பிரபலங்களும் திரையுலகினரும் ராஜா ரசிகர்களும் பெரும்திரளாக இந்த இருநாள் விழாவில் கலந்துகொண்டார்கள்.


இந்த விழாவில் இளையராஜாவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் 15, 16 படங்கள் வெளியாகும். அதில் 12 படங்களுக்கு ராஜா தான் இசையமைத்திருப்பார். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்குப் பணம் வாங்காமல் இசையமைத்துள்ளார். இப்போது ஒரு படத்தின் பின்னணி இசைக்கு 30 நாள்கள் ஆகின்றன. ஆனால் இளையராஜா 3 நாள்களில் முடித்துவிடுவார்.

முதலில் அவரை ராஜா சார் என்றுதான் அழைப்பேன். பேண்ட் சட்டையிலிருந்து வேட்டி, ஜிப்பாவுக்கு மாறிய பிறகு சாமி என்றுதான் அழைக்கிறேன். இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் சாமி என்றுதான் அழைத்துக்கொள்கிறோம். மன்னன் படத்தில் 6 வரிகள் பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது. என்னை விட கமலுக்கு நல்ல பாடல்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள் என்றார் ரஜினி.

அதற்குப் பதில் அளித்த ராஜா, இதையே கமலிடம் கேட்டால், ரஜினிக்குத்தான் நல்ல பாடல்களை வழங்குகிறீர்கள் என்பார். ஏன் ராமராஜன், மோகனுக்கு நல்ல பாடல்களை நான் வழங்கவில்லையா? எந்த நடிகருக்கும் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவருடைய படங்களுக்கும் ஒன்றுபோலத்தான் நான் இசையமைத்தேன் என்றார்.
பிப்.9 இல் ஆந்திரத்துக்கு ஆன்மிக சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் ஏற்பாடு


By DIN | Published on : 31st January 2019 10:36 AM




ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் சார்பில், வரும் பிப்.9-ஆம் தேதி ஆந்திரத்துக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வேயின் ஒரு சுற்றுலா பிரிவாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், பாரத தரிசன சுற்றுலா ரயில் என்னும் தனி ரயிலில் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

அந்தவகையில், தற்போது, ஆந்திரத்தில் உள்ள சக்தி பீடங்கள் மற்றும் கோயில்களை தரிசிக்க சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு யாத்திரை பிப்ரவரி 9-ஆம்தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக துவாரக திருமலாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, பெனுகுண்டாவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீபீமேஸ்வர சுவாமி மாணிக்யம்பா தேவி சக்தி பீட தரிசனம், புருஹூதிகாதேவி சக்தி பீட தரிசனம், ஸ்ரீகூர்மத்திலுள்ள கூர்மநாத சுவாமி, சிம்மாச்சலத்தில் உள்ள வராக லஷ்மி நரசிம்ம சுவாமி, அரசவல்லியில் உள்ள சூரியநாராயண சுவாமி, அன்னாவரத்திலுள்ள ஸ்ரீ சத்யநாராயண சுவாமி மற்றும் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா ஆகிய கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் சென்று தரிசனம் செய்யலாம்.

5 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.6,160 கட்டணம். இதில், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரைச் சுற்றி பார்க்க வாகன வசதி, தங்கும் இடவசதி, சுற்றுலா மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி ஆகியவை அடங்கும்.

இது குறித்து கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவு செய்ய 9003140680/ 681 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். இந்தத்தகவல் ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதும் என்ற மனமே...

By எஸ்.ஏ. முத்துபாரதி | Published on : 05th February 2019 02:07 AM

"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழி படித்திருப்போம். இது இந்தக் காலத்துக்கும் பொருந்துமா என நினைக்கலாம். ஆனால், இப்படி அனைவரும் நினைத்தால் முன்னேற்றமே இருக்காது என்றும் சிலர் வாதிடுவார்கள்.

போதும் என்ற மனம் என்பது வளர்ச்சிக்கான தடை இல்லை. அநியாயமாகச் சம்பாதிப்பவர்களுக்குத்தான் இந்தப் பழமொழி. காரணம், தவறு செய்பவர்களை ஒருபோதும் இயற்கை அப்படியே விட்டுவிடாது. நாம் செய்யும் எதற்கும் விளைவு என்பது வந்தே தீரும். நல்லது செய்தால் நல்ல விளைவும், தீயவை செய்தால் தீய விளைவும் வருவது நிச்சயம். இதிலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில விதி
விலக்குகள் இருக்கலாம்.

எனவே, நமக்கான உழைப்புக்கு ஊதியம் என ஒன்று கொடுக்கப்படும்போதுஅதை மீறி முறையற்ற வழியில் சம்பாதிப்பது என்பது பிச்சை எடுப்பதைவிடக் கீழான செயலாகும். கூடுதலான நேரம் வேலை செய்து அதற்கான ஊதியம் பெறுவது என்பது ஏற்புடையதுதான்.
அதற்காக சில சலுகைகள் பெறுவதையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இயல்பாகச் செய்ய வேண்டிய வேலைக்கு கையூட்டு பெறுவதை எப்படி ஏற்க இயலும்? அவரவர் செயலை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், எது நியாயமோ, எது முறையோ, எது கடமையோஅதைச் செய்வதே சிறந்தது.

முறையான அரசுப் பணி மற்றும் நிரந்தரச் சம்பளம் கிடைக்கும் நிலையில், கடமையை சரியாகச் செய்யாமல் இருப்பது தவறு. அத்துடன் சமுதாயத்தின் நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர்? குறைந்த ஊதியத்தில் கடினமான பணிகளைச் செய்வோர் எத்தனை பேர்? கொத்தடிமைகளாக வேலை செய்வோர் எத்தனை பேர்? இப்படி எவ்வித கவலையும் இல்லாமல், அரசு வேலைக்காக பல வழிகளில் முயற்சி செய்து பெற்று, அதை சரியாகச் செய்யாமல் மாதந்தோறும் சம்பளம் மட்டும் பெறுவோரை என்னவென்று சொல்வது?
இங்கே குறிப்பிடுவது அரசு ஊழியர்களை மட்டுமல்ல; தனியார் ஊழியர்களும் தங்களால் வேறு எந்த மாதிரியான வழிகளில் கூடுதலாகச் சம்பாதிக்க முடியும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.
குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் அந்த நிறுவனத்துக்குத் தேவையான "ஸ்டேஷனரி' போன்ற பொருள்கள் அல்லது வேறு அத்தியாவசியமான மாதம் ஒரு முறை வாங்கவேண்டிய பொருள்களுக்கு விநியோகம் செய்பவரிடம் தனியாக "கமிஷன்' வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இப்படி எத்தனையோ துறைகளைச் சொல்லிக் கொண்டேபோகலாம். கல்வித் துறை ஒன்றுதான் இதற்கு விதிவிலக்காக இருந்தது. இருப்பினும், அங்கே வேறு விதமான நடவடிக்கை மூலம் அதனுடைய நேர்மையும் கேள்விக்குறியாகிவிட்டது. தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் விற்கப்
படுவதும், விடைத்தாள் திருத்தம் செய்வதில் குளறுபடிகள் நடப்பதையும் தொடர்ந்து கேள்விப்படுகிறோம்.

இவை அனைத்துக்கும் மேலாக உயர்கல்வித் துறையிலும் முறைகேடுகள் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனால், பல்கலைக்கழகங்கள் மீது இருந்த மதிப்பு போய்விட்டது.

குறிப்பாக, உயர் கல்வியான முனைவர் பட்டத்துக்கான வழிமுறைகளைக் கூற வேண்டியதில்லை; அதன் நிலை மிகவும் விபரீதமானது. இனிமேல் முனைவர் பட்டம் பெறுவோர் அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், உண்மையான கல்வியாளர்கள் மதிப்பிழந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்துக் கவலைப்பட யாருமில்லை. அவரவர் பட்டம், பதவி, சம்பளம், சொகுசான வாழ்க்கை என இருந்து விடுவதால், குற்றம் செய்பவரும் பலனடைபவரும் பரஸ்பரம் வெளியே சொல்வதில்லை. இதனால், பலவிதமான குற்றங்கள் வெளிவருவதில்லை. பிறகு எப்படி முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை வழி நடத்துவது? நாம் மட்டும் சம்பாதித்தால் போதும் என்றும், அதற்கு எந்தவிதமான குறுக்கு வழியைப் பயன்படுத்தினாலும் தவறில்லை என்ற மனோபாவமும் அதிகரித்துவிட்டது. ஒரு துளிக்கூட சஞ்சலப்படாமல் லஞ்சம் கேட்பவர்களை, முறையற்ற வழியில் செல்பவர்களைக் கண்டால் நமக்கு ஏற்படும் கோபம் விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடிகிறது.

காரணம், நாம் குறிப்பிட்ட நபரைப் பற்றி புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் அதற்கு என்று ஒரு தொகை பெற்றுக்கொண்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொள்ளும் உயரதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 
 
வாழ்வதற்குத் தகுதியான நாடுகளில் (சுற்றுச்சூழல், ஊழல் போன்ற காரணிகளால்) மிகவும் பின்தங்கியுள்ள நாம், லஞ்சம், ஊழல் பெருகியிருக்கும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறோம்.
பொருள் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வும், வாழ்க்கை குறித்த புரிதலும் இருந்தால்தான் பலருக்கும் இந்தப் பொருள் சேர்க்கும் போட்டியின் உண்மை நிலை புரியும். எவ்வளவு சேர்த்தாலும் ஒரு ரூபாய்கூட நம்மால் இறந்தவுடன் எங்கும் கொண்டு செல்ல முடியாது எனத் தெரிந்தும், கோடி கோடியாய் சம்பாதிக்க ஆசைப்பட்டு அதற்கான தேடுதல் வேட்டையில் நாம் சுயத்தை, நற்பெயரை, நிம்மதியை இழந்து, நியாய-தர்மங்களை மறந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நேர்மை, லஞ்சமற்ற ஊழலற்ற நிர்வாகம் எனப் பேசுபவர்களை பலரும் மதிப்பதில்லை என்பதுடன் நம்பிக்கையும் கொள்வதில்லை. காரணம், அந்த அளவுக்கு நேர்மையின்மையும், லஞ்சமும் இந்தச் சமுதாயத்தில் புரையோடிப்போய் உள்ளன. நேர்மையான வழியில் இந்தச் சமுதாயம் செல்வதற்கு இன்றைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும். நேர்மை, தர்மம், நீதி குறித்து குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, மாணவ சமுதாயத்தை நேர்மை வழியில் கட்டமைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் நாளைய சமுதாயத்தை நிர்ணயம் செய்பவர்கள்.
தலைமை செயலக பணிக்கு போலி நியமன ஆணை : லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

Added : பிப் 05, 2019 00:42

சென்னை: தலைமை செயலகத்தில் வேலை என, போலி பணி நியமன ஆணை வழங்கி, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ள கும்பல் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.தலைமை செயலகத்தில், வேலை வாங்கி தருவதாகக் கூறிய ஒரு கும்பல், லட்சக்கணக்கில் பணம் பெற்று, பலருக்கு, போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. பணியில் சேர ஆர்வமுடன் தலைமை செயலகம் சென்றதும், தாங்கள் ஏமாற்றப்பட்டது, அவர்களுக்கு தெரிய வந்தது.சட்டசபை செயலகத்தில், சித்திரக்கனி என்பவர், உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கான ஆணையுடன், பணியில் சேர வந்துள்ளார். அவர் வைத்திருந்தது போலி நியமன ஆணை என, சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் செய்துள்ளனர்.அதேபோல, தொழில் துறை உட்பட, பல்வேறு துறைகளில், 20க்கும் மேற்பட்டோர், போலி நியமன ஆணையுடன் பணியில் சேர வந்துள்ளனர். ஒவ்வொருவரும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். உதவிப்பிரிவு அலுவலர் பணிக்கு, 4 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.இம்மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதியின், உதவியாளர் மகன் ஒருவரும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். இது குறித்து, சம்பந்தப்பட்ட நீதிபதி, தலைமை செயலரிடம் புகார் செய்துள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

NEWS TODAY 10.06.2026