Tuesday, February 5, 2019


’ராஜா சார்கிட்ட இருக்கிற கெட்டபழக்கம்!’ – ஏஆர்.ரஹ்மான் ஓபன் டாக்

Published : 03 Feb 2019 20:32 IST

வி.ராம்ஜி





இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நேற்று 2ம் தேதியும் இன்று 3ம் தேதியும் என இரண்டு நாள் விழா இது. நேற்றைய விழாவை, நடிகைகள் சுஹாசினியும் கஸ்தூரியும் தொகுத்து வழங்கினார்கள்.

அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேடைக்கு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நான் ராஜா சாரிடம் பணியாற்றிய காலங்களை மறக்கவே முடியாது. அவரிடம் நான் மூன்றாம் பிறை படத்தில் இருந்துதான் பணிக்குச் சேர்ந்தேன். அவருடைய ரிக்கார்டிங் ரூமிற்குச் செல்லும் போது, ஒரு ஹெட்மாஸ்டர் அறைக்குள் செல்வது போல் நான் உணர்ந்திருக்கிறேன்.

அவ்வளவு விஷயங்களை நான் அவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ராஜா சாரிடம் நான் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம்… பொதுவாகவே இசைமைப்பாளர்கள் என்றாலோ திரையுலகினர் என்றாலோ கெட்டபழக்கங்கள் இருக்கும். ஆனால் ராஜா சாரிடம் எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. இதில் நான் ரொம்பவே இன்ஸ்பையர் ஆனேன். இந்த நல்லப் பழக்கத்தை ராஜா சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். ராஜா சாருக்கும் எனக்கும் இருக்கிற ஒரே கெட்டப்பழக்கம் இசைதான்!

அதேபோல் இன்னொன்றையும் சொல்லவேண்டும். நான் விருது பெற்றதும் ராஜா சார் எனும் மேதை என்னைப் பாராட்டினார். அதில் நான் ரொம்பவே நெகிழ்ந்து போனேன். யார் வேண்டுமானாலும் பாராட்டிவிடலாம். பாராட்டுக்கா இங்கு பஞ்சம். ஆனால் ஒரு இசைமேதையிடம் இருந்து வருகிற பாராட்டு, ஆத்மார்த்தமானது. ஆகவே ராஜா சார் பாராட்டியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இவ்வாறு ரஹ்மான் தெரிவித்தார்.

அப்போது சுஹாசினி, ‘சின்னப்பையனா பாத்த ரஹ்மான் பத்தி சொல்லுங்க சார்’ என்று இளையராஜாவிடம் கேட்டார்.

அதற்கு இளையராஜா, ‘அவரோட அப்பாகிட்ட இருந்த நேரத்தைவிட, எங்கூட இருந்த நேரம்தான் அதிகம். என்ன, சரியா?’ என்று ரஹ்மானிடம் கேட்டார். ‘ஆமாம் சார்’ என்றார் ரஹ்மான். ‘இதெல்லாம் நீதான் சொல்லணும். நீ சொல்லவேண்டியதையெல்லாம் நான் சொல்லிக்கிட்டிருக்கேன்’ என்று இளையராஜா சிரித்துக்கொண்டே சொல்ல, ரஹ்மான் உட்பட மேடையில் இருந்தவர்களும் அரங்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் கரவொலி எழுப்பினார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024