Tuesday, February 5, 2019

‘ரஹ்மான் எங்கிட்ட 500 படத்துல ஒர்க் பண்ணிருக்கார்’- இளையராஜா; ‘உங்களோட ஒருபடம் பண்றதே பெருமை சார்’ – ஏ.ஆர்.ரஹ்மான்

Published : 03 Feb 2019 19:52 IST

வி.ராம்ஜி




ஏ.ஆர்.ரஹ்மான், எங்கிட்ட 500 படத்துல ஒர்க் பண்ணிருக்கார்’ என்று இளையராஜா, ரஹ்மானை வைத்துக்கொண்டு சொல்ல, 'உங்களோட ஒரு படம் பண்றதே பெருமை சார்’ என்று நெகிழ்ந்து போனார் ரஹ்மான்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நேற்றும் இன்றுமாக நடைபெற்று வருகிறது. இளையராஜாவின் கலை நிகழ்ச்சி மற்றும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா என இரண்டு நாள் விழாவாக நடைபெற்று வருகிறது.

முதல் நாள் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார்.

விழாவின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, ரஹ்மான் கீபோர்டு வாசிக்க, ராஜா சார் பாடவேண்டும் என்றார்.

இதையடுத்து, இளையராஜா, மணிரத்னம் இயக்கிய ‘மெளனராகம்’ படத்தின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைப் பாடினார். உடனே ரஹ்மான் கீபோர்டு வாசித்தார்.

அப்போது இசையில் ஏதோ விட்டுவிட்டார் ரஹ்மான். உடனே இளையராஜா, ‘ஏன் இப்படி வாசிக்கிறே? உனக்குத்தான் இந்த டியூன் தெரியுமே?’ என்றார்.

பின்னர், ‘மூன்றாம் பிறை படத்திலிருந்து ரஹ்மான் என்னிடம் வேலை பார்த்தார். கிட்டத்தட்ட ஒரு 500 படமாவது என்னிடம் வேலை பார்த்திருப்பார்’ என்று சொன்னார் இளையராஜா.

உடனே ரஹ்மான், ‘உங்களிடம் ஒரு படத்துக்கு வேலை பார்ப்பதே பெரியவிஷயம் சார்’ என்று ரஹ்மான் நெகிழ்ந்து சொன்னார்.

மொத்தக் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024