என்னை விடவும் கமலுக்கு நல்ல பாடல்களை அளித்துள்ளீர்கள்: ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில்!
By எழில் | Published on : 04th February 2019 04:37 PM |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய 'இளையராஜா -75' விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமையன்று தொடங்கிவைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவைக் கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், 'இளையராஜா -75' என்ற விழா மலர் வெளியிடப்பட்டது. ரஜினி, கமல், ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பால்கி உள்ளிட்ட பிரபலங்களும் திரையுலகினரும் ராஜா ரசிகர்களும் பெரும்திரளாக இந்த இருநாள் விழாவில் கலந்துகொண்டார்கள்.
இந்த விழாவில் இளையராஜாவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:
முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் 15, 16 படங்கள் வெளியாகும். அதில் 12 படங்களுக்கு ராஜா தான் இசையமைத்திருப்பார். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்குப் பணம் வாங்காமல் இசையமைத்துள்ளார். இப்போது ஒரு படத்தின் பின்னணி இசைக்கு 30 நாள்கள் ஆகின்றன. ஆனால் இளையராஜா 3 நாள்களில் முடித்துவிடுவார்.
முதலில் அவரை ராஜா சார் என்றுதான் அழைப்பேன். பேண்ட் சட்டையிலிருந்து வேட்டி, ஜிப்பாவுக்கு மாறிய பிறகு சாமி என்றுதான் அழைக்கிறேன். இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் சாமி என்றுதான் அழைத்துக்கொள்கிறோம். மன்னன் படத்தில் 6 வரிகள் பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது. என்னை விட கமலுக்கு நல்ல பாடல்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள் என்றார் ரஜினி.
அதற்குப் பதில் அளித்த ராஜா, இதையே கமலிடம் கேட்டால், ரஜினிக்குத்தான் நல்ல பாடல்களை வழங்குகிறீர்கள் என்பார். ஏன் ராமராஜன், மோகனுக்கு நல்ல பாடல்களை நான் வழங்கவில்லையா? எந்த நடிகருக்கும் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவருடைய படங்களுக்கும் ஒன்றுபோலத்தான் நான் இசையமைத்தேன் என்றார்.
No comments:
Post a Comment