Wednesday, March 25, 2020

சிங்கப்பூருக்கு கரோனா வைரஸ் பரவியது எப்படி? துல்லியமாகக் கண்டறிந்த நிபுணர்கள்

By DIN | Published on : 24th March 2020 12:44 PM |



உலகளவில் சுமார் 16 ஆயிரம் உயிர்களை பலிகொண்டு, உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், பிப்ரவரி மாதத் துவக்கத்தில் சிங்கப்பூரில் வேகமாகப் பரவத் தொடங்கியது.

இதனால், மருத்துவத் துறை கடும் அதிர்ச்சி அடைந்தது. கரோனா பாதித்தவர்கள் அனைவருமே இரண்டு தேவாலயங்களோடு தொடர்புடையவர்களாகவே இருந்தனர். எனவே, அந்த வகையில், சிங்கப்பூரில் கரோனா எப்படி பரவியது என்பது குறித்து அதிகாரிகள் ஆராயத் தொடங்கினர்.

புள்ளி விவரங்களை சேகரித்து, பல்வேறு ஆய்வுகளை நடத்தி, கரோனாவின் ஆரம்பப் புள்ளியைக் கண்டறிந்தபோது அவர்களுக்குக் கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, சீனாவைச் சேர்ந்த ஒரு தம்பதி ஜனவரி 19ம் தேதி வூஹானில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ளனர். இவர்கள்தான் சிங்கப்பூருக்கு கரோனாவைக் கடத்தி வந்தவர்கள். சிங்கப்பூரில் உள்ள இரண்டு தேவாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இவ்விருவரும் பங்கேற்றுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஆறு பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த ஆறு பேரில் இரண்டு பேர் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 7 பேருக்கு கரோனா பரவியுள்ளது. அந்த 7 பேரில் ஒரே ஒருவர் தான் 28 வயதாகும் இளைஞர். இவர் நோயாளி 66 ஆகக் கருதப்படுகிறார்.

இந்த ஒரே ஒரு நபர் பங்கேற்ற மற்றொரு பிரார்த்தனைக் கூட்டத்தின் மூலம், ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை கிட்டத்தட்ட 16 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

உலக நாடுகளிலேயே சிங்கப்பூரைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு துல்லியமாக கரோனா பரவலைக் கண்டறிய முடியாது. 

ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்ததும், அவரிடம் கடந்த 24 மணி நேரத்தில், ஒவ்வொரு நிமிடத்தையும் எவ்வாறு செலவிட்டார் என்பதைக் கண்டறிந்து, துல்லியமாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், அவருடன் பழகியவர்கள் அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்தியுள்ளோம். அதாவது, அவரை இரண்டு அடிகளுக்குள் ஒருவர் சந்தித்திருப்பார் என்றால் அவரையும், சுமார் 30 நிமிடம் அவருடன் இருந்திருப்பார் என்றால் அவரையும் தனிமைப்படுத்தினோம். குடும்ப உறுப்பினர், உறவினர்கள் மட்டுமல்லாமல், உணவகத்தில் உணவு வழங்கியவர், கார் ஓட்டுநர்கள் போன்றவர்களையும் தனிமைப்படுத்தினோம். 

இவ்வாறு, கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று சுமார் 3000ம் பேர் கண்டறியப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தினோம். 

கடுமையான சட்டம் மற்றும் துரித கதியில் பரவலைக் கண்டறிதல் இரண்டுமே இணைந்து சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவல் என்ற நிலையைக் கையாண்டு வருவதால் நிலைமைக் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சிங்கப்பூருக்கு வந்த சீன தம்பதிகளுக்கு கடும் அபராதம் அல்லது சிறைத்தண்டனை வழங்கவும் அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கரோனா பரவத் தொடங்கியதுமே, அவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்ற உண்மையை மறைத்துவிட்டனர். அதனால்தான் இந்த அளவுக்கு நிலைமை விபரீதமானதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
அரசு துறைகளில் வருமா, 'இ - அலுவலகம்?' அவசர காலங்களில் கை கொடுக்கும் வசதி

Updated : மார் 25, 2020 00:55 | Added : மார் 24, 2020 21:03 |

சென்னை :அனைத்து அரசு துறைகளிலும், 'இ - அலுவலகம்'வசதியை நடைமுறைப்படுத்தி இருந்தால்,அவசர காலங்களில், வீட்டிலிருந்தே ஊழியர்கள்வேலை பார்க்க எளிதாக இருந்திருக்கும் என்ற, கருத்து எழுந்துள்ளது.

அரசு அலுவலகங்களில், மேலாண்மை பணிகள் அனைத்தும், மின்னணு வாயிலாக நடைபெறுவது, இ - அலுவலகம் என, அழைக்கப்படுகிறது.இதில், ஆவணங்கள் அனைத்தும், கம்ப்யூட்டரில்பதிவேற்றம் செய்யப்பட்டு, மேலதிகாரிகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.இதன் வாயிலாக, காகிதப் பயன்பாடு முற்றிலும் குறையும். ஆவணங்களில் மாற்றம் செய்தல், கடிதங்களில் திருத்தம் செய்தல் போன்ற பணிகளுக்காக, ஆவணங்களை திரும்ப அனுப்புவது குறையும். உயர் அதிகாரிகளே,

இந்தப் பணியை செய்ய நேரிடும்.ஒப்புதல் அளித்து, உயர் அதிகாரிகள், மின்னணு கையெழுத்து பதிவு செய்ததும், அரசுக்கு ஆவணங்கள் அனுப்பப்படும்.தற்போது, தமிழக மின்னணுவியல் கழகமான, எல்காட், தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், டி.ஜி.பி., அலுவலகம் போன்ற சில துறைகளில் மட்டும், இ - அலுவலக வசதிகள் நடைமுறையில் உள்ளன.

இதர அரசு அலுவலகங்களிலும், இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால், அவசர காலங்களில், இவை கை கொடுத்திருக்கும் என்ற, கருத்துஎழுந்துள்ளது.இது குறித்து, 'எல்காட்' நிறுவன நிர்வாக இயக்குனர், விஜயகுமார் கூறியதாவது:எல்காட் அலுவலகம்முற்றிலும், கம்ப்யூட்டரால் செயல்படக் கூடியது.

எங்கள் நிறுவனத்தில், 150 ஊழியர்கள்பணியாற்றுகின்றனர்.ஓராண்டுக்கு முன், இ - அலுவலக வசதி, இந்த நிறுவனத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுவிட்டது.இதனால், தற்போது ஊழியர்கள், வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.தேசிய தகவல் மையம், இ - அலுவலக மென்பொருளை வழங்குகிறது.அதன் வாயிலாக, ஒவ்வொரு ஊழியருக்கும், தனி பயனாளர் குறியீடு மற்றும் 'பாஸ்வேர்டு' கொடுத்தால், இ - அலுவலகம் வாயிலாக பணியாற்றலாம். இவ்வாறு, அவர்கூறினார்.
தயார் நிலையில் பல்கலை கல்லூரி விடுதிகள் தனிமை மையங்களாக்க திட்டம்

Added : மார் 25, 2020 00:01

மதுரை, தமிழகத்தில் பல்கலை மற்றும் கல்லுாரி விடுதிகளை தயார் நிலையில் வைக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து பல்கலை, கல்லுாரிகள், ஆராய்ச்சியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் சில உத்தரவுகளை உயர்கல்வி செயலாளர் அபூர்வா பிறப்பித்துள்ளார்.இதன்படி பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உள்ள அனைத்து விடுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும். 

பதிவாளர்கள், கல்லுாரி முதல்வர்கள், விடுதி காப்பாளர்களை எந்த நேரத்திலும் அழைத்தாலும் பதில் அளிக்கும் நிலையிலும், தேவை இருப்பின் அரை மணி நேரத்தில் கல்லுாரி, பல்கலைகளுக்கு வர தயாராக இருக்க வேண்டும். கல்லுாரி, பல்கலைக்கு மிக அருகில் உள்ளஆசிரியர் ஒருவரிடம் விடுதிகளின் சாவியை கொாடுத்து வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.பேராசிரியர்கள் கூறியதாவது: கொரோனா தாக்கம் அதிகரித்தால் பாதிக்கப்பட்டவர்களை இந்த விடுதிகளில் தனிமைப்படுத்தும் முயற்சியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரித்தால் மருத்துவமனை மற்றும் முகாம்களை மட்டும் நம்பியிருக்க முடியாது. பல்கலை சார்பில் இதுதொடர்பாக அனைத்து கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் சில ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தலாம், என்றனர்.
பாச கொஞ்சல்களுக்கெல்லாம் இடமில்லை மக்களே!

Added : மார் 24, 2020 21:41

தமிழகத்தில், நேற்று மாலை, 6:00 மணி முதல் அமலாகிய, 144 தடையுத்தரவு தொடர்பாக, மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியானதும், சென்னை, கோயம்பேட்டிலும், பெருங்களத்துாரிலும், சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பார்த்து, மருத்துவர்கள் அதிர்ந்து விட்டனர்.அவர்கள் கூறியதாவது:மக்கள், குறிப்பாக இளைஞர்கள், எதற்காக தடை உத்தரவு போடப்பட்டது என்பதற்கான காரணத்தை, உணர்ந்ததாகவே தெரியவில்லை. நம் உடலில் படும் ஒரே ஒரு கொரோனா வைரஸ், 'மளமள'வென பல்கி பெருகி, தொண்டை, நுரையீரலை தாக்கி, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, உயிரையே பறித்து விடும். இந்தக் கிருமி, உயிரற்ற பொருட்கள் மீது படிந்தாலும், குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் உயிருடன் இருக்கும்.

இப்படி நமக்கு உலை வைக்கும், வைரஸ் பரவுவதை தடுத்து, மக்களை காக்கவே, 144 அறிவிப்பு என்பதை, இளைஞர்கள் சிறிதும் அறிந்திருப்பதாய் தெரியவில்லை. தினமும், செய்தி தாள்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், கொரோனா கிருமி பற்றி ஏகப்பட்ட விழிப்புணர்வு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அவற்றில், முழு முதலாய் சொல்லப்பட்டிருப்பது, 'தனிமையில் இருங்கள்; அடிக்கடி கை கழுவுங்கள்' என்பதே. சரி... போனது போகட்டும்; ஊருக்குச் சென்றீர்களா... இனியாவது உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்!நண்பர்களை தேடி போவதும், பொது வெளியில் ஜாலியாக அரட்டை அடிப்பதும், அறவே கூடாது. அன்பு, பாசம், நட்பு என எதுவும், இந்த கோரமான கொரோனா முன் எடுபடாது. அதாவது, 'அம்மா... உனக்கு சளி இருக்கா... மூச்சு விட முடியலியா... இரு... 'விக்ஸ்' தடவி விடுறேன்...' என, அம்மாவின் நெஞ்சிலும், முதுகிலும் தடவி விடும் பாசத்தை எல்லாம், ஒதுக்கி வைக்க வேண்டும்.

அம்மாவை தனிமைப்படுத்தி, மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இப்படி செய்தால், அம்மாவையும் காப்பாற்றலாம்; நீங்களும் உயிருடன் தப்பலாம்.'சளி தானே... இருமல் தானே...' என, அலட்சியம் காட்டாமல், சர்வ கவனத்துடன், மருத்துவரிடம் சென்று, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சாப்பிடுங்கள். ஒரே வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் பலர் இருந்தாலும், ஒவ்வொருவரும் தனித் தனியாய் இருக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.
ஒவ்வொருவரும், அவரவர் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தையும், தனிமைப்படுத்தி வையுங்கள்; கிருமி நாசினி பயன்படுத்தி, உடமைகளையும், சுற்றுச்சூழலையும் சுத்தப்படுத்துங்கள். முக கவசம் அணியுங்கள்; தினமும் இரண்டு வேளை, அதை மாற்ற வேண்டும். உங்களின் அருகாமையில் இருப்பவர், அவரை அறியாமலேயே, கொரோனா தொற்றுடன் இருக்கலாம். அவரிடமிருந்து வெளிப்படும் தும்மல், இருமலில் இருந்து வெளிப்படும் நீர் திவலைகள், கொரோனாவுடன் உங்கள் மீது பட்டு பரவலாம்.

பொது வெளியில், முகம் தெரியாத நபர் சிறுநீர் கழித்து, அதை நீங்கள் மிதிக்கும் போது, அதன் மூலமும் உங்களுக்கு கிருமித் தொற்று ஏற்படலாம். பொது கழிப்பறைகளை பயன்படுத்தினால், இந்த ஆபத்துகள் மிக மிக அதிகம். எனவே, வெளியில் செல்வதைத் தவிருங்கள்; அவசியமாகச் சென்றாலும், வீடு திரும்பியதும், மிக மிகச் சுத்தமாய், கை, கால்களை கழுவிய பின், வீட்டினுள் செல்ல வேண்டும்; குளிக்க வேண்டும்.வீட்டினுள் இருக்கும் போதும், சிறுநீர், மலம் கழித்த பின், சுத்தம் பேண வேண்டும்; கழிப்பறை, குளியலறைகளை கிருமி நாசினியால், இரண்டு வேளையும் சுத்தம் செய்யுங்கள்.'நம்மூர்ல அடிக்கிற வெயிலுக்கு, கொரோனாவது... கிரோனாவாவது...' என, பெரும்பாலான மக்கள், 'கமென்ட்' அடிப்பதை கேட்க முடிகிறது. நம் உடல் வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியஸ். இந்த வெப்பநிலையிலேயே, சவுகரியமாய் குடித்தனம் நடத்தி, பல்கிப் பெருகும் வைரஸ், நம்மூர் வெயிலுக்குத் தாக்குப் பிடிக்காதா என்ன! ஆகவே, இந்தப் பேச்சை மக்கள் நிறுத்தினால் நல்லது.கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, சரியான மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. மலேரியா நோயை குணப்படுத்தக்கூடிய, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மாத்திரையை, இதற்கும் பயன்படுத்தலாம் என, மத்திய அரசு அறிவித்திருந்தாலும், அந்த மாத்திரை போதுமான அளவில் கையிருப்பில் இல்லை.இவ்வாறு, மருத்துவர்கள் கூறினர். - நமது சிறப்பு நிருபர் -
பாட்டில் பாட்டிலாக வாங்கி குவித்த 'குடி'மகன்கள்

Added : மார் 25, 2020 02:00

சென்னை :'டாஸ்மாக்' கடைகள், வரும், 31ம் தேதி வரை மூடப்படுவதால், 'குடி'மகன்கள், நேற்று மது பாட்டில்களை வாங்கி குவித்தனர்.

தமிழக அரசின், டாஸ்மாக் கடைகளில், தினமும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான, பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன. இது, வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், வழக்கத்தை விட அதிகரிக்கிறது.
மது கடைகளில், ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் இருப்பு வைக்கப்படும். தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, நேற்று மாலை, 6:00 மணி முதல், வரும், 31ம் தேதி வரை, மது கடைகள் மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், நேற்று காலை, 10:00 மணிக்கே, டாஸ்மாக் கடைகள் முன், மது வகைகளை வாங்க, ‛குடி'மகன்கள் படையெடுத்தனர். மதியம், 12:00 மணிக்கு கடைகள் திறந்ததும், தங்களுக்குள், ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு, மது வகைகளை வாங்கி குவித்தனர்.

இதனால், அனைத்து கடைகளிலும், கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில், இருப்பு வைக்கப்பட்டதில், 85 சதவீதத்திற்கு மேலான மது வகைகள் விற்பனையாகின. சிலர், மது வகைகளை, பெட்டி பெட்டியாக வாங்கி குவித்தனர். அவற்றை, இன்று முதல், கள்ளச் சந்தையில் விற்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு, சில டாஸ்மாக் ஊழியர்களும், மாவட்ட அதிகாரிகளும் உடந்தை.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், 'மது கடைகளில் வசூலான பணம், இருப்பு மற்றும் விற்பனை தொடர்பான பதிவேடுகள் அனைத்தையும், இன்று இரவுக்குள், மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது; இன்று, எவ்வளவு மது வகைகள் விற்பனையானது என்ற விபரம், நாளை காலை, 10:00 மணிக்கு மேல் தெரிய வரும்' என்றார்.
ஊரடங்கு:எவை இயங்கும்,இயங்காத பட்டியல் வெளியீடு

Updated : மார் 24, 2020 22:30 | Added : மார் 24, 2020 22:28

புதுடில்லி: 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது எவை இயங்கும், இயங்காது என மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவித்துள்ளது.

இதன்படி, இயங்கும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள், கேபிள் டி.வி, இன்டர்நெட், தொலைதொடர்பு, காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை இயங்கும்.

உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆன்லைனில் பெறலாம்

காய்கறிகள், நியாயவிலை கடைகள், இறைச்சிகடைகள், பால்,
காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள்

பெட்ரோல் நிலையங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி. அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும்.

சமையல் எரிவாயு நிறுவனங்கள் இவைகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கும்.

இயங்காதவை எவை
வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். பூஜைகள் மட்டும் நடக்கும்.

அனைத்து கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிலையங்கள் மூடப்படும்.

விமானம், ரயில், சாலை போக்குவரத்து நிறுத்தம்.

சமூகம், அரசியல், கேளிக்கை, விளையாட்டு, கலாச்சாரம் மதவிழாக்களுக்கு தடை.

இறுதி ஊர்வலங்களில் கலந்துகொள்ள 20 பேருக்கு மட்டுமே அனுமதி.
" வெளியே போகாதீ்ங்க "- மோடி வேண்டுகோள்

Updated : மார் 24, 2020 20:48 | Added : மார் 24, 2020 20:41 |

புதுடில்லி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று கொரோனா குறித்து மீண்டும் உரையாற்றியாதாவது: உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்கும் தெரியாமலே கொரோனா வீட்டில் உள்ளவர்களுக்கு பரவிவிடும்.


காட்டு தீ போல பரவும் கொரோனா

காட்டு தீ போல கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகக்கடினம். கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொள்கிறேன். நீங்கள் எங்கே இருக்கீறீர்களோ அங்கேயே இருங்கள். கெரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துவருகிறது.

அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தவது 100 சதவீதம் சாத்தியம். இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவைக்கொண்டு கொரோனாவை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 21 நாட்கள் மக்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் ஊரடங்கை விட தற்போது ஊரடங்கு மிக கடுமையானதாக இருக்கும்.

இக்கால கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறினால் கொரோனா வீட்டிற்குள் நுழைந்து விடும். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். கொரோனாவை வல்லரசு நாடுகளாலேயே கட்டுப்படுத்தமுடியவில்லை.

மக்களின் பாதுகாப்பே முக்கியம்

நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிரமங்களை உணருங்கள். மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தும் எடுத்து கொள்ள வேண்டாம். 24 மணி நேரம் பணியாற்றும் ஊடகத்துறையினர், காவல்துறையினருக்காக உள்ளிட்ட சேவைதுறையினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இரவு பகலும் பாடுபட்டுவருகின்றன.

உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். யாருக்கும் தெரியாமலே கொரோனா வீட்டில் உள்ளவர்களுக்கு பரவிவிடும். கொரோனாவை ஒழிக்க சமூக விலகலே சிறந்த வழி. 21 நாட்களுக்கு நாம் வீட்டிற்குள் இருக்கா விட்டால், 21 ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கி செல்ல நேரிடும்.

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்

பொருட்களை வாங்க ஒரே இடத்தில் குவிய வேண்டாம். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். சுகாதாரத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்தின் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் முழுமையான அளவில் தயாராக உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

NEWS TODAY 14.06.2026