Wednesday, March 25, 2020

பாட்டில் பாட்டிலாக வாங்கி குவித்த 'குடி'மகன்கள்

Added : மார் 25, 2020 02:00

சென்னை :'டாஸ்மாக்' கடைகள், வரும், 31ம் தேதி வரை மூடப்படுவதால், 'குடி'மகன்கள், நேற்று மது பாட்டில்களை வாங்கி குவித்தனர்.

தமிழக அரசின், டாஸ்மாக் கடைகளில், தினமும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான, பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன. இது, வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், வழக்கத்தை விட அதிகரிக்கிறது.
மது கடைகளில், ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் இருப்பு வைக்கப்படும். தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, நேற்று மாலை, 6:00 மணி முதல், வரும், 31ம் தேதி வரை, மது கடைகள் மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், நேற்று காலை, 10:00 மணிக்கே, டாஸ்மாக் கடைகள் முன், மது வகைகளை வாங்க, ‛குடி'மகன்கள் படையெடுத்தனர். மதியம், 12:00 மணிக்கு கடைகள் திறந்ததும், தங்களுக்குள், ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு, மது வகைகளை வாங்கி குவித்தனர்.

இதனால், அனைத்து கடைகளிலும், கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில், இருப்பு வைக்கப்பட்டதில், 85 சதவீதத்திற்கு மேலான மது வகைகள் விற்பனையாகின. சிலர், மது வகைகளை, பெட்டி பெட்டியாக வாங்கி குவித்தனர். அவற்றை, இன்று முதல், கள்ளச் சந்தையில் விற்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு, சில டாஸ்மாக் ஊழியர்களும், மாவட்ட அதிகாரிகளும் உடந்தை.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், 'மது கடைகளில் வசூலான பணம், இருப்பு மற்றும் விற்பனை தொடர்பான பதிவேடுகள் அனைத்தையும், இன்று இரவுக்குள், மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது; இன்று, எவ்வளவு மது வகைகள் விற்பனையானது என்ற விபரம், நாளை காலை, 10:00 மணிக்கு மேல் தெரிய வரும்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024