Wednesday, March 25, 2020

பாச கொஞ்சல்களுக்கெல்லாம் இடமில்லை மக்களே!

Added : மார் 24, 2020 21:41

தமிழகத்தில், நேற்று மாலை, 6:00 மணி முதல் அமலாகிய, 144 தடையுத்தரவு தொடர்பாக, மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியானதும், சென்னை, கோயம்பேட்டிலும், பெருங்களத்துாரிலும், சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பார்த்து, மருத்துவர்கள் அதிர்ந்து விட்டனர்.அவர்கள் கூறியதாவது:மக்கள், குறிப்பாக இளைஞர்கள், எதற்காக தடை உத்தரவு போடப்பட்டது என்பதற்கான காரணத்தை, உணர்ந்ததாகவே தெரியவில்லை. நம் உடலில் படும் ஒரே ஒரு கொரோனா வைரஸ், 'மளமள'வென பல்கி பெருகி, தொண்டை, நுரையீரலை தாக்கி, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, உயிரையே பறித்து விடும். இந்தக் கிருமி, உயிரற்ற பொருட்கள் மீது படிந்தாலும், குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் உயிருடன் இருக்கும்.

இப்படி நமக்கு உலை வைக்கும், வைரஸ் பரவுவதை தடுத்து, மக்களை காக்கவே, 144 அறிவிப்பு என்பதை, இளைஞர்கள் சிறிதும் அறிந்திருப்பதாய் தெரியவில்லை. தினமும், செய்தி தாள்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், கொரோனா கிருமி பற்றி ஏகப்பட்ட விழிப்புணர்வு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அவற்றில், முழு முதலாய் சொல்லப்பட்டிருப்பது, 'தனிமையில் இருங்கள்; அடிக்கடி கை கழுவுங்கள்' என்பதே. சரி... போனது போகட்டும்; ஊருக்குச் சென்றீர்களா... இனியாவது உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்!நண்பர்களை தேடி போவதும், பொது வெளியில் ஜாலியாக அரட்டை அடிப்பதும், அறவே கூடாது. அன்பு, பாசம், நட்பு என எதுவும், இந்த கோரமான கொரோனா முன் எடுபடாது. அதாவது, 'அம்மா... உனக்கு சளி இருக்கா... மூச்சு விட முடியலியா... இரு... 'விக்ஸ்' தடவி விடுறேன்...' என, அம்மாவின் நெஞ்சிலும், முதுகிலும் தடவி விடும் பாசத்தை எல்லாம், ஒதுக்கி வைக்க வேண்டும்.

அம்மாவை தனிமைப்படுத்தி, மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இப்படி செய்தால், அம்மாவையும் காப்பாற்றலாம்; நீங்களும் உயிருடன் தப்பலாம்.'சளி தானே... இருமல் தானே...' என, அலட்சியம் காட்டாமல், சர்வ கவனத்துடன், மருத்துவரிடம் சென்று, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சாப்பிடுங்கள். ஒரே வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் பலர் இருந்தாலும், ஒவ்வொருவரும் தனித் தனியாய் இருக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.
ஒவ்வொருவரும், அவரவர் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தையும், தனிமைப்படுத்தி வையுங்கள்; கிருமி நாசினி பயன்படுத்தி, உடமைகளையும், சுற்றுச்சூழலையும் சுத்தப்படுத்துங்கள். முக கவசம் அணியுங்கள்; தினமும் இரண்டு வேளை, அதை மாற்ற வேண்டும். உங்களின் அருகாமையில் இருப்பவர், அவரை அறியாமலேயே, கொரோனா தொற்றுடன் இருக்கலாம். அவரிடமிருந்து வெளிப்படும் தும்மல், இருமலில் இருந்து வெளிப்படும் நீர் திவலைகள், கொரோனாவுடன் உங்கள் மீது பட்டு பரவலாம்.

பொது வெளியில், முகம் தெரியாத நபர் சிறுநீர் கழித்து, அதை நீங்கள் மிதிக்கும் போது, அதன் மூலமும் உங்களுக்கு கிருமித் தொற்று ஏற்படலாம். பொது கழிப்பறைகளை பயன்படுத்தினால், இந்த ஆபத்துகள் மிக மிக அதிகம். எனவே, வெளியில் செல்வதைத் தவிருங்கள்; அவசியமாகச் சென்றாலும், வீடு திரும்பியதும், மிக மிகச் சுத்தமாய், கை, கால்களை கழுவிய பின், வீட்டினுள் செல்ல வேண்டும்; குளிக்க வேண்டும்.வீட்டினுள் இருக்கும் போதும், சிறுநீர், மலம் கழித்த பின், சுத்தம் பேண வேண்டும்; கழிப்பறை, குளியலறைகளை கிருமி நாசினியால், இரண்டு வேளையும் சுத்தம் செய்யுங்கள்.'நம்மூர்ல அடிக்கிற வெயிலுக்கு, கொரோனாவது... கிரோனாவாவது...' என, பெரும்பாலான மக்கள், 'கமென்ட்' அடிப்பதை கேட்க முடிகிறது. நம் உடல் வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியஸ். இந்த வெப்பநிலையிலேயே, சவுகரியமாய் குடித்தனம் நடத்தி, பல்கிப் பெருகும் வைரஸ், நம்மூர் வெயிலுக்குத் தாக்குப் பிடிக்காதா என்ன! ஆகவே, இந்தப் பேச்சை மக்கள் நிறுத்தினால் நல்லது.கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, சரியான மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. மலேரியா நோயை குணப்படுத்தக்கூடிய, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மாத்திரையை, இதற்கும் பயன்படுத்தலாம் என, மத்திய அரசு அறிவித்திருந்தாலும், அந்த மாத்திரை போதுமான அளவில் கையிருப்பில் இல்லை.இவ்வாறு, மருத்துவர்கள் கூறினர். - நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024