Wednesday, March 25, 2020

சிங்கப்பூருக்கு கரோனா வைரஸ் பரவியது எப்படி? துல்லியமாகக் கண்டறிந்த நிபுணர்கள்

By DIN | Published on : 24th March 2020 12:44 PM |



உலகளவில் சுமார் 16 ஆயிரம் உயிர்களை பலிகொண்டு, உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், பிப்ரவரி மாதத் துவக்கத்தில் சிங்கப்பூரில் வேகமாகப் பரவத் தொடங்கியது.

இதனால், மருத்துவத் துறை கடும் அதிர்ச்சி அடைந்தது. கரோனா பாதித்தவர்கள் அனைவருமே இரண்டு தேவாலயங்களோடு தொடர்புடையவர்களாகவே இருந்தனர். எனவே, அந்த வகையில், சிங்கப்பூரில் கரோனா எப்படி பரவியது என்பது குறித்து அதிகாரிகள் ஆராயத் தொடங்கினர்.

புள்ளி விவரங்களை சேகரித்து, பல்வேறு ஆய்வுகளை நடத்தி, கரோனாவின் ஆரம்பப் புள்ளியைக் கண்டறிந்தபோது அவர்களுக்குக் கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, சீனாவைச் சேர்ந்த ஒரு தம்பதி ஜனவரி 19ம் தேதி வூஹானில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ளனர். இவர்கள்தான் சிங்கப்பூருக்கு கரோனாவைக் கடத்தி வந்தவர்கள். சிங்கப்பூரில் உள்ள இரண்டு தேவாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இவ்விருவரும் பங்கேற்றுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஆறு பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த ஆறு பேரில் இரண்டு பேர் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 7 பேருக்கு கரோனா பரவியுள்ளது. அந்த 7 பேரில் ஒரே ஒருவர் தான் 28 வயதாகும் இளைஞர். இவர் நோயாளி 66 ஆகக் கருதப்படுகிறார்.

இந்த ஒரே ஒரு நபர் பங்கேற்ற மற்றொரு பிரார்த்தனைக் கூட்டத்தின் மூலம், ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை கிட்டத்தட்ட 16 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

உலக நாடுகளிலேயே சிங்கப்பூரைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு துல்லியமாக கரோனா பரவலைக் கண்டறிய முடியாது. 

ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்ததும், அவரிடம் கடந்த 24 மணி நேரத்தில், ஒவ்வொரு நிமிடத்தையும் எவ்வாறு செலவிட்டார் என்பதைக் கண்டறிந்து, துல்லியமாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், அவருடன் பழகியவர்கள் அனைவரையும் கண்டறிந்து, தனிமைப்படுத்தியுள்ளோம். அதாவது, அவரை இரண்டு அடிகளுக்குள் ஒருவர் சந்தித்திருப்பார் என்றால் அவரையும், சுமார் 30 நிமிடம் அவருடன் இருந்திருப்பார் என்றால் அவரையும் தனிமைப்படுத்தினோம். குடும்ப உறுப்பினர், உறவினர்கள் மட்டுமல்லாமல், உணவகத்தில் உணவு வழங்கியவர், கார் ஓட்டுநர்கள் போன்றவர்களையும் தனிமைப்படுத்தினோம். 

இவ்வாறு, கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று சுமார் 3000ம் பேர் கண்டறியப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தினோம். 

கடுமையான சட்டம் மற்றும் துரித கதியில் பரவலைக் கண்டறிதல் இரண்டுமே இணைந்து சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவல் என்ற நிலையைக் கையாண்டு வருவதால் நிலைமைக் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சிங்கப்பூருக்கு வந்த சீன தம்பதிகளுக்கு கடும் அபராதம் அல்லது சிறைத்தண்டனை வழங்கவும் அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கரோனா பரவத் தொடங்கியதுமே, அவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்ற உண்மையை மறைத்துவிட்டனர். அதனால்தான் இந்த அளவுக்கு நிலைமை விபரீதமானதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024